மாதாந்திர பஸ் பாஸ் கட்டணத்தை உயர்த்தும் அரசின் முயற்சிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

மாதாந்திர பஸ் பாஸ் கட்டணத்தை ரூ.1000 இருந்து ரூ.1300 ஆக உயர்த்தும் முயற்சியை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

மாதாந்திர பஸ் பாஸ் கட்டணத்தை ரூ.1000 இருந்து ரூ.1300 ஆக உயர்த்தும் முயற்சியை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் மாதாந்திர பேருந்து பயண அட்டைக்கான கட்டணத்தை 1000 ரூபாயிலிருந்து 1300 ரூபாயாக உயர்த்த அ.தி.மு.க அரசு ஆலோசித்து வருவது கண்டனத்திற்குரியது. சாதாரண ஏழை, எளிய நடுத்தர மக்களின் அன்றாட பயணத்திற்கு மிகவும் பயனுள்ள இந்தப் பேருந்துப் பயண அட்டைக் கட்டணத்தை உயர்த்துவது, போக்குவரத்துக் கழகங்களுக்கு மேலும் இழப்புகளை ஏற்படுத்தி, அரசு போக்குவரத்துக் கழகங்களை திவாலாக்கிட அ.தி.மு.க அரசு மேற்கொள்ளும் முயற்சியாகவே தெரிகிறது.

பேருந்து வாங்குவதில் ஊழல், உதிரி பாகங்கள் வாங்குவதில் ஊழல், 2543 கோடி ரூபாய்க்கு பணிமனைகள் அடமானம் என்று முழுவதும் ஊதாரித்தனமான நிர்வாகத்தை நடத்தி வரும் அ.தி.மு.க அரசு, கட்டண உயர்வு ஒன்றே தங்களுக்குத் தெரிந்த நிர்வாகத் திறமை என்ற ரீதியில் செயல்பட்டு வருவது, அரசுப் போக்குவரத்தை மட்டுமே சார்ந்திருக்கும் நலிந்த பிரிவினரின் வாங்கும் சக்தியைப் பற்றிய உணர்வின்மையைக் காட்டுகிறது.

2011ல் ஆட்சிக்கு வந்தவுடன் 17.11.2011 அன்றே 50 சதவீத பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியதால் 2 கோடி பயணிகள் அரசுப் பேருந்துகளை பயன்படுத்தி வந்த நிலை, 1 கோடியே 80 லட்சம் பயணிகளாக குறைந்தது. பிறகு 19.01.2018 அன்று மேலும் 50 சதவீதம் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியதால், அரசுப் பேருந்துகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 1 கோடியே 50 லட்சமாகக் குறைந்து விட்டது. உரிய நேரத்திற்கு வராத பேருந்துகள், ஒரே நேரத்தில் அடுத்தடுத்து செல்லும் பேருந்துகள் என்று அ.தி.மு.க அரசின் பல்வேறு நிர்வாகக் குழப்பங்களால் அரசுப் பேருந்துகளை மக்கள் பயன்படுத்துவது அ.தி.மு.க ஆட்சியில் படிப்படியாகக் குறைந்து வருவதிலிருந்து ஏழை, எளியவர்களின் போக்குவரத்து வசதிகளை அ.தி.மு.க அரசு எப்படி சீர்குலைத்து வருகிறது என்பது தெரிகிறது.

மேலும், பேருந்துகளை நாட்டுடைமை ஆக்கிய சோஷலிச அடிப்படையைத் தகர்த்து, மீண்டும் பேருந்துகளை தனியார் வாசம் தாரை வார்த்திட வழி ஏற்படுத்திக் கொடுப்பதைப் போலவும் தெரிகிறது. இப்போதுகூட முதல்வர் கொடியசைத்து துவக்கி வைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, புதிதாக வாங்கப்பட்ட 448 பேருந்துகள் இன்னும் இயக்கப்படாமல் - “வாரண்டி” காலத்தையும் இழக்கும் அபாயத்தில் பணிமனைகளில் நின்று கொண்டிருக்கின்றன. ஆயிரம் ரூபாய் மாதாந்திரப் பேருந்து பயண அட்டையை 1300 ரூபாயாக உயர்த்தத் துடிக்கும் அரசு, தலா 30 லட்சம் செலவில் வாங்கப்பட்ட இந்த 448 பேருந்துகளை இயக்காமல் நிறுத்தி வைத்திருப்பது கேடு கெட்ட நிர்வாகத்திற்கு, கண்ணெதிரே காணக் கிடைத்த உதாரணமாக விளங்குகிறது.

போக்குவரத்துக் கழகங்களைச் சீரமைக்க, கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்ட குழு ஒரு அறிக்கையினைத் தயார் செய்து, அதன் பரிந்துரைகளை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நானே நேரில் சென்று முதல்வரிடம் கொடுத்தும், அந்த பரிந்துரைகளை எல்லாம் உரிய பரிசீலனைக்கு உட்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ள அ.தி.மு.க அரசு, ஊழலை எப்படி செய்வது, எப்படியெல்லாம் மக்களை வதைக்கும் கட்டண உயர்வுகளை அறிவிப்பது என்ற எண்ணத்துடனேயே எப்போதும் செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே, 100 சதவீதத்திற்கும் மேல் பேருந்து கட்டணங்களை உயர்த்தி ஏழை எளிய மக்களை, அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களை, வியாபாரிகளை, வணிகர்களை, தினக்கூலித் தொழிலாளர்களை தாங்க முடியாத துயரத்திலும், சுமையிலும் ஆழ்த்தி மகிழும் ஒரு “சேடிஸ்ட்” மனப்பான்மை கொண்ட அரசாக இருப்பது மிகவும் வேதனையளிக்கிறது.

போக்குவரத்துக் கழகங்களை லாபகரமாக இயக்குவதற்குத் தேவையான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்காமல், கட்டண உயர்வு மட்டுமே எங்களுக்குக் கைவந்த கலை என்று அ.தி.மு.க அரசு செயல்படுவதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஆகவே, மாதாந்திர பேருந்து பயண அட்டை கட்டணத்தை, தற்போதுள்ள 1000 ரூபாயிலிருந்து 1300 ரூபாயாக அதிகரிக்கும் முயற்சியை, அ.தி.மு.க அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com