ஸ்டெர்லைட் ஆலை பிரச்னை: சென்னையில் நீதிபதி தருண் அகர்வால் குழுவினர் கருத்துக் கேட்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை குறித்து சென்னை எழிலகத்தில் தேசிய பசுமைத் தீர்ப்பாயக் குழுவினர் திங்கள்கிழமை அனைத்து தரப்பினரிடமும் கருத்துகளை கேட்டறிந்தனர்.
ஸ்டெர்லைட் ஆலை பிரச்னை: சென்னையில் நீதிபதி தருண் அகர்வால் குழுவினர் கருத்துக் கேட்பு


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை குறித்து சென்னை எழிலகத்தில் தேசிய பசுமைத் தீர்ப்பாயக் குழுவினர் திங்கள்கிழமை அனைத்து தரப்பினரிடமும் கருத்துகளை கேட்டறிந்தனர்.
இதுதொடர்பாக வரும் அக்டோபர் 5-ஆம் தேதி சென்னை எழிலகத்தில் மீண்டும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்தனர். தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையால் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி, அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது. 
இதுதொடர்பாக ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்து, மக்களிடம் கருத்து கேட்க ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான மூவர் குழுவை பசுமைத் தீர்ப்பாயம் அமைத்தது. 
இந்தக் குழுவினர் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை, சுற்றுவட்டாரக் கிராமங்கள், ஆலையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பல்வேறு இடங்களில் கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (செப். 22, 23) ஆய்வு செய்தனர். மேலும், தூத்துக்குடியில் பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில், பெரும்பாலான மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி மனு அளித்ததாக நீதிபதி தருண் அகர்வால் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
சென்னையில் கருத்துக் கேட்புக் கூட்டம்: இதைத் தொடர்ந்து, சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ள பசுமைத் தீர்ப்பாயத்தில் தருண் அகர்வால் தலைமையில் திங்கள்கிழமை கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலர் வைகோ, பேராசிரியர் பாத்திமா, வேதாந்தா நிறுவனம் தரப்பில் வழக்குரைஞர்கள், பணியாளர்கள், ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக் குழுவினர், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் வாய்வழியாகவும், மனுவாகவும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.
அனைத்து தரப்பினரிடமும் கருத்து கேட்கவேண்டும்: இந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டியதன் அவசியம் குறித்து தனது கருத்தை வைகோ பதிவு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: பசுமைத் தீர்ப்பாயம் அமைத்துள்ள ஆய்வுக் குழுவினர் தற்போது ஸ்டெர்லைட் ஆலையின் கருத்தை முழுமையாகக் கேட்டுள்ளனர். இனிவரும் காலங்களில் ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட சுற்றுவட்டாரக் கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள், வியாபாரிகள், மீனவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களிடமும் முழுமையாகக் கருத்து கேட்க வேண்டும்.
ஸ்டெர்லைட் ஆலையால் எவ்வாறு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என்பது குறித்து எனது கருத்தை தெரிவித்தேன். இதுதொடர்பாக வரும் அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி எனது தரப்பு வாதத்தை முழுமையாக கேட்பதாக தருண் அகர்வால் தெரிவித்தார் என்றார் வைகோ.
45 ஆயிரம் பேர் கையெழுத்திட்ட மனு: இதைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ராமன், ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக சுமார் 45 ஆயிரம் பேர் கையெழுத்திட்ட மனுவை தருண் அகர்வால் குழுவினரிடம் தாக்கல் செய்தார். அதில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராடவில்லை என்றும் அதை விரிவாக்கம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அக்.5-இல் மீண்டும் கருத்துக் கேட்புக் கூட்டம்: இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டத்துக்கு வந்திருந்த அனைத்து தரப்பு மக்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்த குழுவினர், அக்டோபர் 5-ஆம் தேதி சென்னை எழிலகத்தில் மீண்டும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்தனர். இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டம் காரணமாக எழிலகம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கருத்துக் கேட்புக் கூட்டத்துக்கு வந்தவர்கள் பலத்த சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com