சர்க்காரியா கமிஷன் ஆவணப் பதிவுகள் சட்டப்பேரவையில் எதிரொலிக்கும்

திமுக தலைவர் ஸ்டாலின், சட்டப் பேரவையில் அதிமுக அரசு மீது புகார் தெரிவிக்க முயன்றால், அதற்குப் பதிலடியாக சர்க்காரியா கமிஷன் ஆவணங்களில் உள்ள திமுகவின் ஊழல்கள்
சர்க்காரியா கமிஷன் ஆவணப் பதிவுகள் சட்டப்பேரவையில் எதிரொலிக்கும்


திமுக தலைவர் ஸ்டாலின், சட்டப் பேரவையில் அதிமுக அரசு மீது புகார் தெரிவிக்க முயன்றால், அதற்குப் பதிலடியாக சர்க்காரியா கமிஷன் ஆவணங்களில் உள்ள திமுகவின் ஊழல்கள் அங்கு எதிரொலிக்கும் என்றார் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன்.
நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கண்டனப் பொதுக் கூட்டத்தில் அவர் பேசியது: 
இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான போரின்போது, பொய் தகவல்களைப் பரப்பி, கபட நாடகம் நடத்தி, இலங்கைத் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கானோர் இறப்பதற்குக் காரணமாக இருந்தவர் மறைந்த திமுக தலைவர் மு. கருணாநிதி. இலங்கையில் போர் உச்சம் அடைந்திருந்த நிலையில் அண்ணா சமாதி அருகே உண்ணாவிரதம் என்ற நாடகத்தை நடத்தி, இலங்கை அரசு போர் நிறுத்தம் அறிவித்திருப்பதாகத் தனக்குத் தகவல் கிடைத்துள்ளது எனக் கூறி, 3 மணி நேரத்தில் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்பினார். 
வயதில் மூத்தவர் பொய் உரைத்திருக்க மாட்டார் என்ற நம்பிக்கையில், கருணாநிதியின் பேச்சை நம்பி, பதுங்கு குழியிலிருந்து வெளியே வந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்கள், இலங்கை ராணுவத்தின் குண்டு மழையால் அழித்தொழிக்கப்பட்டனர். இதன்மூலம், அப்பாவி ஈழத் தமிழர்களின் மரணத்துக்கு முக்கிய காரணமாக விளங்கியவர் கருணாநிதி. ஈழத் தமிழர்கள் அழிக்கப்பட காரணமாக இருந்த கருணாநிதியும், துணை முதல்வர் ஸ்டாலினும் தண்டனைக்குரிய போர்க் குற்றவாளிகள்தான். 
ஈழத் தமிழர்கள் அழிக்கப்பட அப்போதைய திமுக- காங்கிரஸ் கூட்டணி அரசே காரணம் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போதே உறுதிப்படத் தெரிவித்திருந்தார். தற்போது, ராஜபட்சவும் அதே தகவலை உறுதி செய்துள்ளார். 
எந்தத் திட்டத்தைத் தொடங்கினாலும், தன் குடும்பத்துக்கு எவ்வளவு லாபம் எனக் கணக்குப் போட்டவர் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி. வீராணம் திட்டம் முதல் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வரை பல்வேறு திட்டங்களில் ஊழல் புரிந்த அரசு, திமுக அரசு. இவற்றையெல்லாம் மறந்து விட்டு, திமுக தலைவர் ஸ்டாலின் தற்போது, டெண்டர் விட்டதில் அதிமுக ஊழல் செய்துள்ளது என பேசி வருகிறார். 
சர்க்காரியா கமிஷனின் ஆவணங்கள் அனைத்தையும் கருணாநிதி திட்டமிட்டு அழித்து விட்டார். ஆனால், ஓரிடத்தில் அந்தப் பதிவு இருந்ததை அவர் அறியவில்லை. நான், தற்போது அந்தப் பதிவுகளின் 4 வால்யூம்களை நகல் எடுத்து பத்திரப்படுத்தி வைத்துள்ளேன். வரும் சட்டப் பேரவைக் கூட்டத்தில், டெண்டர் என்ற வார்த்தையை ஸ்டாலின் உச்சரித்தால்போதும், சர்க்காரியா கமிஷன் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள திமுகவின் ஊழல்கள் சட்டப் பேரவையிலேயே பட்டியலிடப்படும் என்றார் ஓ.எஸ். மணியன். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com