சிலைகள் கடத்தல் வழக்கு: சிபிஐ விசாரிக்க மறுப்பு

தமிழகத்தில் சிலைகள் கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுப்பு தெரிவித்துள்ளது. 
சிலைகள் கடத்தல் வழக்கு: சிபிஐ விசாரிக்க மறுப்பு


தமிழகத்தில் சிலைகள் கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுப்பு தெரிவித்துள்ளது. 
தமிழகம் முழுவதும் கோயில் சிலைகள் மாயமானது தொடர்பாக ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை விசாரிக்கும் அளவுக்கு சிபிஐ வசம் போதுமான நபர்கள் இல்லை. எனவே, சிலை கடத்தல் வழக்கு விசாரணையை ஏற்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ கூறியுள்ளது.
சிலைகள் கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்குரைஞர் யானை ராஜேந்திரன் வழக்குத் தொடர்ந்தார். சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு சிபிஐ விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இதுதொடர்பாக தமிழக அரசு மற்றும் சிபிஐ இயக்குநர் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டிருந்தது.
சிபிஐ தரப்பு வழக்குரைஞர் வாதம்: இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் பி.டி.
ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. சிபிஐ தரப்பில் வழக்குரைஞர் கே.சீனிவாசன் ஆஜரானார். அவர் தனது வாதத்தில், தமிழகம் முழுவதும் ஏராளமான கோயில் சிலைகள் கடத்தப்பட்டுள்ளன. இந்தக் கடத்தல் தொடர்பாக ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிபிஐ கடிதம் தாக்கல்: இந்த வழக்குகள் அனைத்தையும் விசாரிக்கும் அளவுக்கு சிபிஐ வசம் போதுமான நபர்கள் இல்லை; எனவே, சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரிக்க முடியாது. மேலும் இதுதொடர்பாக தமிழக அரசுக்கு சிபிஐ இயக்குநர் கடிதம் அனுப்பியுள்ளார். மேலும், சிலை கடத்தல் விவகாரம் தொடர்பாக தமிழக போலீஸார் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களுக்குச் செல்லும் போது தேவையான உதவிகளை சிபிஐ செய்து கொடுக்கும் என அந்தக் கடிதத்தில் சிபிஐ இயக்குநர் உத்தரவாதம் அளித்துள்ளார் என்று தெரிவித்தார். அந்தக் கடிதத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். 
நீதிபதிகள் கேள்வி: அந்த கடிதத்தை படித்துப் பார்த்த நீதிபதிகள், தமிழக அரசு சிலை கடத்தல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதற்கு முன் சிபிஐயிடம் கருத்து கேட்கப்பட்டதா, இந்த விவகாரம் தொடர்பாக கடிதப் போக்குவரத்து ஏதாவது நடந்ததா, இதுபோன்ற நடைமுறைகளைக் கூட பின்பற்றாமல் சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு எப்படிப் பரிந்துரைத்தது, அரசாணை எப்படி பிறப்பிக்கப்பட்டது என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
கடிதம் கிடைக்கவில்லை-தமிழக அரசு தலைமை வழக்குரைஞர்: அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண், வழக்கை விசாரிக்க முடியாது என சிபிஐ அனுப்பிய கடிதம் தமிழக அரசுக்குக் கிடைக்கவில்லை. இது தொடர்பான தமிழக அரசின் கருத்தைக் கேட்டுத் தெரிவிக்க கால அவகாசம் வேண்டும் என கோரினார்.
இதைத் தொடர்ந்து வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்துக்கு நீதிபதிகள்ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com