புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடு: திமுக மீது விசாரணை: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

சென்னையில் புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடு செய்தது தொடர்பாக திமுக மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் எடப்பாடி
சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற கண்டனப் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. 
சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற கண்டனப் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. 


சென்னையில் புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடு செய்தது தொடர்பாக திமுக மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
இலங்கைத் தமிழர் படுகொலையில் திமுக, காங்கிரஸ் கூட்டணிக் கட்சியினரை போர்க் குற்றவாளிகளாக அறிவிக்க வலியுறுத்தி சேலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கண்டனப் பொதுக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியது:
திமுக, காங்கிரஸ் கூட்டணிக் கட்சியினர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த போதுதான் இலங்கைத் தமிழர் படுகொலை நடந்தது. இந்தியா உதவி செய்ததன் காரணமாகத்தான், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் எளிதாக வெற்றி பெற்றோம் என இலங்கை முன்னாள் அதிபர் ராஜபட்ச தெரிவித்துள்ளார். 
அந்தக் கால கட்டத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணிதான் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தது. அந்தவகையில், இலங்கைத் தமிழர் படுகொலையில் தொடர்புடைய திமுக, காங்கிரஸ் கட்சியினர் குறித்து மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் வகையில் கூட்டம் நடத்தப்படுகிறது.
எனவே, இலங்கைத் தமிழர் படுகொலையில் தொடர்புடைய மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை சர்வதேச நீதிமன்றம் விசாரணை செய்ய வேண்டும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஆட்சியில் தவறு செய்தது போல தோற்றத்தை ஏற்படுத்துகிறார். திமுக ஒரு கட்சி அல்ல. அது ஒரு கம்பெனியாகச் செயல்படுகிறது. மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்குப் பல நெருக்கடிகளை கொடுத்துப் பார்த்தனர். மு.க.ஸ்டாலின் திமுக தலைவரானதும் முதல்வர் கனவு கண்டு வருகிறார். ஆனால் அவர் எப்போதும் முதல்வராக முடியாது. திமுகவில் எளிதாக நுழைந்து தற்போது கட்சித் தலைவராகிவிட்டார். ஆனால் நான் கீழ் மட்ட நிலையில் இருந்து ஒன்றியம், மாவட்டம், மாநில பொறுப்புக்கு வந்து அமைச்சராகி, அதன்பின்னர் முதல்வராகி உள்ளேன். அது விசுவாசத்துக்குக் கிடைத்த பரிசாகும்.
1989-இல் தான் நானும் சட்டப்பேரவை உறுப்பினர் ஆனேன். அதே ஆண்டில் தான் மு.க.ஸ்டாலினும் சட்டப்பேரவை உறுப்பினரானார். திமுகவில் குடும்ப ஆட்சி நடந்து வருகிறது. அதிமுகவில் குடும்ப ஆட்சி இல்லை. எனது உறவினர் அங்கம் வகிக்கும் நிறுவனமான ராமலிங்கம் அன்ட் கோ, கடந்த 2010 திமுக ஆட்சியில் 10 டெண்டர்கள் எடுத்து பணி செய்துள்ளது. இப்போது அதே நிறுவனம் இ டெண்டர் முறையில் பணிகளை எடுத்து செய்து வருகின்றது. ஆனால் இதில் எந்தவித ஊழலும் நடைபெறவில்லை. திமுக ஆட்சியில் பெட்டியில் டெண்டர் விண்ணப்பம் கோரப்பட்டது. அதிமுக ஆட்சியில் இ டெண்டர் முறை கொண்டு வரப்பட்டது. அதிமுக ஆட்சியில் விடப்பட்ட டெண்டரில் குற்றம் கண்டுபிடிக்க முடியாது. 
எனது உறவினர் என்ற ஒரே ஒரு காரணத்தை வைத்துக் கொண்டு தேவையில்லாமல் வீண் பழி சுமத்தி வருகிறார். ரத்த உறவுக்கும், நெருங்கிய உறவுக்கும் வித்தியாசம் தெரியாமல் பேசி வருகிறார். மு.கருணாநிதி முதல்வராக இருந்த போது, சென்னையில் புதிய தலைமைச்செயலகம் கட்டும் பணியில் 8 லட்சம் சதுர அடிக்கு ரூ.200 கோடி டெண்டர் விடப்பட்டது. தொடர்ந்து கூடுதலாக 1.30 லட்சம் சதுர அடியாக உயர்த்தப்பட்டு, ரூ.465 கோடிக்கு டெண்டர் விடப்பட்டு முறைகேடு நடந்தது.
இதுதொடர்பாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அதை செயல்படவிடாமல் திமுக தடையாணை பெற்றது. இந்தநிலையில், இதுதொடர்பான விவகாரத்தில் முகாந்திரம் இருக்கும்பட்சத்தில், விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. ஒரே ஒரு நபருக்கு ரூ.465 கோடிக்கு டெண்டர் வழங்கி விஞ்ஞான ஊழல் நடந்துள்ளது. திமுகவினர் செய்த ஊழல் குறித்து தோண்டி எடுக்க உள்ளோம். இன்னும் 10 நாளில் என்ன நடக்கப் போகிறது என்பது தெரியும். 
மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின் போது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.2.62 லட்சம் கோடி முதலீடு திரட்டப்பட்டது. அந்தவகையில் வரும் 2019 ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. முதற்கட்டமாக ரூ.74,000 கோடி முதலீடு செய்ய தொழிலதிபர்கள் முன்வந்துள்ளனர். இதில் ரூ.2.50 லட்சம் கோடி முதலீடு திரட்டப்பட்டு, தொழில்கள் ஆரம்பிக்கப்படும். 
மாநிலத் திட்டங்களை நிறைவேற்ற நிதி தேவை என்பதால் மத்திய அரசோடு இணக்கமாக இருந்து வருகிறோம். மாநில நலன்களுக்கு எதிராகச் செயல்பட்டால் எதிர்த்து வருகிறோம். அதேபோல காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான 2007-ஆம் ஆண்டு நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வந்தது. அதை மத்திய அரசிதழில் வெளியிட திமுக ஆதரித்து குரல் கொடுக்கவில்லை. இதனால் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய 192 டி.எம்.சி. நீர் பங்கீடு திமுகவால் கிடைக்காமல் போனது. அதைத்தொடர்ந்து 2007 முதல் 2018 வரை போராட்டம் நடத்தியதன் விளைவாக தற்போது 177.25 டி.எம்.சி. நீர்தான் கிடைத்துள்ளது. இந்த அளவுக்கு நீர் பங்கீடு குறைந்ததற்கு திமுக தான் காரணமாகும். டி.டி.வி.தினகரன் குடும்பத்தில் இருப்பவர்கள் ஆளுக்கொரு கட்சி தொடங்கி நடத்தி வருகின்றனர். அவரை கட்சியை விட்டு நீக்கி 10 ஆண்டுகள் ஆகிறது. இப்போது 10 ஆண்டுகள் கழித்து, கட்சிக்குள் புகுந்து அதிமுகவைப் பிரிக்க பார்க்கிறார். இது திமுக போட்டு கொடுத்த திட்டமாகும்.
ஆர்.கே.நகர் தொகுதியில் பெற்ற வெற்றி விபத்தில் வந்தது. அதிமுக என்ற ஒரு கட்சி இல்லையெனில், டி.டி.வி.தினகரன் யார் என்றே தெரியாது. நாடாளுமன்றத் தேர்தலோ, உள்ளாட்சித் தேர்தலோ எது வந்தாலும் வெற்றி பெறுவோம். தமிழக அரசு பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. சட்டத்தை மதிக்கிற கட்சியாக உள்ளோம். ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையின்பேரில் ரூ.14,719 கோடி அரசு ஊழியர்களுக்கு ஊதியமாக வழங்கப்படுகிறது. அரசு ஊழியர்களும், பொதுமக்களும் இரு சக்கரங்களை போன்றவர்கள் ஆவர் என்றார்.
கூட்டத்தில், எம்.பி. வி.பன்னீர்செல்வம், எம்எல்ஏ-க்கள் ஜி.வெங்கடாஜலம், ஏ.பி.சக்திவேல், எஸ்.வெற்றிவேல், ஜி.சித்ரா, மருதமுத்து, ராஜா, சின்னத்தம்பி, மனோன்மணி மற்றும் முன்னாள் மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com