மதுரையில் மக்களவைத் தேர்தல் தேதி மாற்றப்படுமா? நாளை தீர்ப்பு

மதுரையில் சித்திரைத் திருவிழா மற்றும் பெரிய வியாழன் காரணமாக மக்களவைத் தேர்தல் தேதியை மாற்றக் கோரிய வழக்கில் நாளை தீர்ப்பளிக்கப்பட உள்ளது.
மதுரையில் மக்களவைத் தேர்தல் தேதி மாற்றப்படுமா? நாளை தீர்ப்பு


மதுரை: மதுரையில் சித்திரைத் திருவிழா மற்றும் பெரிய வியாழன் காரணமாக மக்களவைத் தேர்தல் தேதியை மாற்றக் கோரிய வழக்கில் நாளை தீர்ப்பளிக்கப்பட உள்ளது.

மதுரையில் சித்திரைத் திருவிழா மற்றும் பெரிய வியாழன் நிகழ்வுகள் காரணமாக, ஏப்ரல் 18ம் தேதி நடைபெறும் மக்களவைத் தேர்தல் தேதியை மாற்றக் கோரிய வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த பதில் மனுவில், மதுரையில் மக்களவைத் தேர்தலை தள்ளி வைக்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துள்ள தேர்தல் ஆணையம், மதுரை மக்களின் வசதிக்காக இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று பதில் அளித்துள்ளது.

மேலும், பெரிய வியாழன் என்பதால் வாக்குச்சாவடி மையங்களை மாற்றக் கோரிய மனு மீது பதில் அளிக்கையில், வாக்குச்சாவடிகளை மாற்ற முடியாது என்றும், பிரார்த்தனைக்கு வருவோருக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை மக்களவைத் தொகுதி தேர்தல் தேதியை மாற்றக் கோரிய மனு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

 மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெறும் ஏப்ரல் 18-ஆம் தேதி, மக்களவைத் தொகுதியில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சித்திரைத் திருவிழாவுக்கு இடையூறு ஏற்படாத வகையில் தேர்தல் தேதியை ஒத்திவைக்க வேண்டும் என அரசியல் கட்சிகள், பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், பார்த்தசாரதி என்பவர், மதுரை மக்களவைத் தொகுதி தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனு மீதான விசாரணை, கடந்த சில நாள்களாக நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான அனைத்து  வழக்குகளும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மார்ச் 15-ஆம் தேதி முதல் விசாரிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. இதனையடுத்து, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்ற மதுரை மக்களவைத் தொகுதியின் தேர்தல் தேதி மாற்றம் குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், வழக்கு குறித்து சென்னையில் அணுகலாம் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர் தெரிவித்திருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com