இந்திய அளவில் 3-ஆவது பெரிய கட்சியாக மாறியுள்ள திமுக

மக்களவைத் தேர்தல் முடிவுகளின் மூலம் இந்திய அளவில் 3-ஆவது பெரிய கட்சியாக திமுக உருவெடுத்துள்ளது.
இந்திய அளவில் 3-ஆவது பெரிய கட்சியாக மாறியுள்ள திமுக

மக்களவைத் தேர்தல் முடிவுகளின் மூலம் இந்திய அளவில் 3-ஆவது பெரிய கட்சியாக திமுக உருவெடுத்துள்ளது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 542 தொகுதிகளில் நடைபெற்றது.  இதில், பாஜக மட்டும் 303 தொகுதிகளில் வெற்றிபெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சி 52 தொகுதிகளில் வெற்றிபெற்று, இரண்டாவது பெரிய கட்சியாக உள்ளது.
பாஜகவும், காங்கிரஸூம் தேசியக் கட்சிகளாகும். ஆனால், அதற்கு அடுத்த இடங்களை மாநிலக் கட்சிகளே பெற்றுள்ளன. மாநிலக் கட்சியான திமுக தமிழகத்தில் 23 தொகுதிகளில் வெற்றி பெற்று 3-ஆவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.
அதிமுகவின் சாதனை: 2014-மக்களவைத் தேர்தலில் 37 தொகுதிகளில் அதிமுக வெற்றிபெற்று இந்திய அளவில் 3-ஆவது பெரிய கட்சியாக இருந்தது. அதிமுகவின் இந்தச் சாதனை திமுகவுக்கு ஒருவகையில் வருத்தத்தை அளித்து வந்தது. தற்போது அந்த வருத்தத்தைப் போக்கும் வகையில் 3-ஆவது பெரிய கட்சி என்ற இடத்தை திமுக பிடித்துள்ளது.
திமுக அணியின் வெற்றி என்று கணக்கிட்டால் 2014-இல் அதிமுக 37 தொகுதிகளில் வெற்றிபெற்றதைப்போலவே இந்தத் தேர்தலில் திமுகவும் 37 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதிக்கு இன்னும் தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால், திமுகவின் சின்னமான உதயசூரியன் வெற்றி பெற்றதே கணக்கில் கொள்ளப்படும் என்பதால் 23 தொகுதிகளின் வெற்றி மட்டுமே கணக்கில் கொள்ளப்படுகிறது.
மேற்குவங்கத்தின் திரிணமூல் காங்கிரஸூம், ஆந்திரத்தின் ஒய்எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியும் தலா 22 தொகுதிகளைப் பெற்று இந்திய அளவில் 4, 5-ஆவது இடங்களில் வருகின்றன. மக்களவைத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, சென்னையில்  ஜூன் 3-ஆம் தேதி திமுக சார்பில் நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
ஜூன் 3-இல் நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம்
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி 37 தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றிபெற்றது.  அதைத் தொடர்ந்து திமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக கருணாநிதியின் பிறந்த தினமான ஜூன் 3-ஆம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்துக்குத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்க உள்ளார். திமுக கூட்டணித் தலைவர்களும் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com