பைபிள் போதனைகளைப் பின்பற்றி வளர்ந்தவள் நான்: முதல்வர் ஜெயலலிதா

First Published : 11 December 2012 06:21 AM IST

"நான் பைபிள் போதனைகளைப் பின்பற்றி வளர்ந்தவள்' என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

அதிமுக சார்பில் சென்னையில் திங்கள்கிழமை கிறிஸ்துமஸ் பெருவிழா நடைபெற்றது. சென்னை-மயிலை உயர்மறை மாவட்ட பேராயர் ஏ.எம்.சின்னப்பா ஜெபம் செய்து விழாவைத் தொடங்கி வைத்தார். கிறிஸ்துமஸ் கேக்கை வெட்டிய முதல்வர் ஜெயலலிதா, அதை சின்னப்பாவுக்குக் கொடுத்தார். அதன்பின், அவர் ஆற்றிய உரை:

கிறிஸ்துமஸ் என்றவுடன் எனது நினைவுக்கு வருவது என் பள்ளிப் பருவம்தான். ஆரம்பக் கல்வியை பெங்களூரில் உள்ள பிஷப் காட்டன் பெண்கள் பள்ளியில் தொடங்கினேன். பின்னர், சென்னையிலுள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் ஓராண்டு கல்வி பயின்றேன். பின்னர், பெங்களூர் சென்று அங்குள்ள பிஷப் காட்டன் பள்ளியில் 4 ஆண்டுகள் பயின்றேன். சென்னை வந்தவுடன் சர்ச் பார்க் பள்ளியில் 1964-ல் எனது மெட்ரிக் படிப்பை முடித்தேன். கிறிஸ்தவப் பள்ளிகளில் நான் பெற்ற கல்வியும், நற்பண்புகளும்தான் எனது முன்னேற்றத்துக்குக் காரணம்.

அப்போது நான் கற்றுக் கொண்டவைதான் எனக்கு இன்றும் உறுதுணையாக இருக்கின்றன. எந்தப் பெரும் பொறுப்பையும் எளிதாக நிறைவேற்ற முடிகிறது. பெங்களூரில் பிஷப் காட்டன் பள்ளியில் படிக்கும்போது, அங்குள்ள சிறிய தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் பைபிள் வகுப்புகள் நடப்பது வழக்கம். அங்கு பெரும்பாலும் கிறிஸ்தவ மத மாணவியரே செல்வார்கள். எனினும், நானும் அந்த வகுப்புகளுக்குச் செல்வேன்.

அப்போது வண்ணமிகு படங்களுடன் கூடிய பைபிள் கதை புத்தகங்களை வழங்குவார்கள்.  அவற்றை வீட்டுக்குக் கொண்டு வந்து படிப்பேன். எனவே, பைபிளில் கூறப்பட்டுள்ள கதைகள் எல்லாம் நான் நன்கு அறிவேன்.

இந்தக் கதைகள் வாழ்வியலுக்குத் தேவையான நன்னெறிகளை போதிக்கின்றன. இந்தப் போதனைகளை பின்பற்றி வளர்ந்தவள். அன்பு பொறுமையுள்ளது, நன்மை செய்யும். பொறாமைப்படாது. தற்புகழ்ச்சி கொள்ளாது. இறுமாப்பு அடையாது. இழிவானதைச் செய்யாது. தன்னலம் நாடாது. சினமடையாது. தீங்கு நினையாது. தீவினையில் மகிழ்வுறாது.

எதையும் பொறுத்துக் கொள்ளும் என்று அன்பைப் பற்றி வேதாகமத்தில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளது.

அன்பால் வாழ்ந்து, அயலார்க்கு உதவி, பேரின்பத்தை நீங்கள் அனைவரும் பெற வேண்டும். இதுவே எனது விருப்பம் என்றார் முதல்வர் ஜெயலலிதா.

அதிமுக சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ஜே.சி.டி. பிரபாகரன் விழாவுக்கு வந்திருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

 

வேளாங்கண்ணி படத்தில் சம்பளம் வாங்கவில்லை

நான் நடித்த அன்னை வேளாங்கண்ணி படத்துக்காக சம்பளம் பெறவில்லை என்று முதல்வர் ஜெயலலிதா தனது பழைய ஞாபகங்களை நினைவுகூர்ந்தார். சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற கிறிஸ்தவப் பெருவிழாவில் அவர் பேசியது:

பேராயர் சின்னப்பா என்னிடம் மேடையில் பேசிக் கொண்டிருந்தபோது, பல ஆண்டுகளுக்கு முன்பு நான் நடித்த அன்னை வேளாங்கண்ணி படத்தைப் பார்த்ததாகத் தெரிவித்தார். இந்த மேடையில் சில அன்பர்கள் அன்னை வேளாங்கண்ணி மாதாவின் திருவுருவச் சிலையை எனக்குப் பரிசாக வழங்கினார்கள். அதைப் பார்த்து விட்டு அன்னை வேளாங்கண்ணி படம் நினைவுக்கு வருவதாகத் தெரிவித்தார் பேராயர் சின்னப்பா.

அந்தப் படத்தைத் தயாரித்தவர் மறைந்த திரைப்பட நடன ஆசிரியர் தங்கப்பன். அவர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். அவருக்காக அந்தப் படத்தில் நடித்த நானும் மற்ற நடிகர், நடிகையரும் சம்பளம் பெறவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆகவே அந்தக் காலம் தொட்டே கிறிஸ்தவர்கள் மீதும், கிறிஸ்தவ மதத்தின் மீதும் எனக்கு அவ்வளவு மதிப்பும், மரியாதையும் இருந்து இருக்கிறது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்வதில் பெருமைப்படுகிறேன் என்றார் முதல்வர் ஜெயலலிதா.

A+ A A-

இந்த பகுதியில் மேலும்

குறிப்பு: வாசகர்கள் இந்த கமெண்ட் பாக்ஸ் மூலம் பதிவு செய்யும் கருத்துகள், அவரவரின் பேஸ்புக், கூகுள், டிவிட்டர், லிங்க்ட்இன் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு கணக்கு மூலம் நுழைந்து அவரவர் அடையாளத்துடன் தாமாகவே பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த வித அடையாளக் கணக்குகளும் இன்றி, விருந்தினராக நுழைந்து வாசகர் பதிவு செய்யும் கருத்துகள், ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியாகும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு. இருப்பினும், நாகரீகமற்ற, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், கருத்து பதிவு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க தினமணிக்கு உரிமை உண்டு. அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும். எனவே நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம்.