விஐபி தொகுதி - 18 - அம்பாசமுத்திரம் தொகுதி: கூட்டணி பலம்தான் நிர்ணயிக்கும்! - Dinamani - Tamil Daily News

விஐபி தொகுதி - 18 - அம்பாசமுத்திரம் தொகுதி: கூட்டணி பலம்தான் நிர்ணயிக்கும்!

First Published : 10 April 2011 02:57 AM IST


முன்பு ஐந்துமுறை காங்கிரஸýம், இரண்டுமுறை மார்க்சிஸ்ட் கட்சியும் வென்ற அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதியில் 1991 முதல் அதிமுகவும், திமுகவும் மாறி மாறி வெற்றிபெற்று வருகின்றன.

 இத் தொகுதி உருவாக்கப்பட்டு 1952-ல் நடைபெற்ற முதல் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவுடன் சுயேச்சையாகப் போட்டியிட்ட சொக்கலிங்கம் வென்றார். சென்னை மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு நடந்த 1957, 1962, 1967 தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தியாகி ஜி. கோமதிசங்கரதீட்சிதர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1971-ல் ஸ்தாபனக் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எஸ். சங்குமுத்துத்தேவர் வெற்றிபெற்றார்.

 கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களான ஏ. நல்லசிவன் 4 முறையும், ஆர். நல்லகண்ணு ஒருமுறையும் இங்கு போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவி இருக்கிறார்கள். 1977, 1980 தேர்தல்களில் அதிமுக கூட்டணி சார்பில் மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட ஈஸ்வரமூர்த்தி என்ற சொர்ணம் தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு செல்வாக்குள்ள இத் தொகுதியை முதன்முறையாக 1984-ல் போட்டியிட்டு அதிமுக கைப்பற்றியது. இந்திரா மரணம், எம்.ஜி.ஆர். உடல்நிலை ஆகியவற்றால் ஏற்பட்ட அனுதாப அலையும், இந்திரா காங்கிரஸýடனான கூட்டணியும் அதிமுக வேட்பாளர் பாலசுப்பிரமணியத்துக்குக் கை கொடுத்தது. 1989-ல் ஏற்பட்ட நான்குமுனைப் போட்டியில் தனியாகப் போட்டியிட்ட காங்கிரஸ் இந்தத் தொகுதியில் வெற்றிபெற்றது. இரண்டாவது இடத்தில் அதிமுக(ஜெ) வேட்பாளர் முருகையா பாண்டியன் இருந்தார். மீண்டும் இத் தொகுதியை காங்கிரஸ் கட்சி தக்கவைத்தது.

 1991-ல் அதிமுக வென்றது. 1996-ல்தான் இத் தொகுதியை திமுக முதன்முறையாகக் கைப்பற்றியது. 2001-ல் அதிமுக வென்றது. 2006-ல் இத் தொகுதியில் 3-ம் முறையாகப் போட்டியிட்ட இரா. ஆவுடையப்பன் (திமுக) வென்று பேரவைத் தலைவரானார்.

 இத் தொகுதியிலிருந்த கடையம் ஊராட்சி ஒன்றியம் மறுசீரமைப்புக்குப் பிறகு ஆலங்குளம் தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. சேரன்மகாதேவி தொகுதி குறைக்கப்பட்டு அத் தொகுதியிலிருந்த சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றியம் அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது.

 நடைபெற இருக்கும் தேர்தலில் திமுக சார்பில் பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப்பன் மீண்டும் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் இசக்கிசுப்பையா என்கிற புதியவர் போட்டியிடுகிறார்.

 தொகுதியில் இப்போது 96,157 ஆண் வாக்காளர்கள், 97,395 பெண் வாக்காளர்கள் என 1,93,552 வாக்காளர்கள் உள்ளனர். பாஜக சார்பில் ந. பாலச்சந்திரன், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் க. மாரியம்மாள் என்ற முத்துமாரி, இந்திய ஜனநாயக கட்சி சார்பில் ச. முருகன் உள்பட 14 பேர் களத்தில் உள்ளனர். எனினும் திமுக, அதிமுக இடையேதான் நேரடிப் போட்டி நிலவுகிறது.

 5 ஆண்டுகளில் அரசின் மூலம் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி ஆவுடையப்பன் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். முதன்முறையாகத் தேர்தலைச் சந்திக்கும் அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா, கூட்டணிக் கட்சிகளின் துணையுடன் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

 இத் தொகுதியில் தேவர், தாழ்த்தப்பட்டோர், நாடார் சமுதாயத்தினர் அதிகளவில் உள்ளனர். இதுதவிர, இல்லத்து பிள்ளைமார், முஸ்லிம், செட்டியார், முதலியார் சமூகத்தினரும் உள்ளனர். திமுக, அதிமுக வேட்பாளர்கள் இருவருமே தேவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஏனைய சமுதாய வாக்குகள்தா ன் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கக் கூடும்.

 தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரின் வாக்குகளைப் பெறுவோர் வெற்றிபெற வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. புதிய தமிழகம் கட்சி அதிமுக கூட்டணியில் இருப்பது அந்தக் கூட்டணிக்கு வலு சேர்க்கிறது. விடுதலைச்சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் இருந்தாலும் ஆதிதிராவிடர்கள் அதிகம் இல்லாத நிலையில், அந்தக் கட்சிக்கு இங்கு வாக்கு வங்கி எதுவும் இல்லை.

 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வென்ற இரா. ஆவுடையப்பன் 49,345 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் என்றாலும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுகவின் முருகையா பாண்டியன் பெற்ற 33,614 - வாக்குகளுடன், ஐக்கிய ஜனதாதளம் மற்றும் தேமுதிகவின் வாக்குகளைச் சேர்த்துப் பார்த்தால் அவரது வெற்றி சந்தேகமாகிறது.

 கடந்த மக்களவைத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதிக்குள்பட்ட அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைப் பகுதியில், வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ராமசுப்பு 45,498 வாக்குகளையும், எதிர்த்து நின்று தோல்வி அடைந்த அதிமுகவின் அண்ணாமலை 41,420 வாக்குகளும் பெற்றிருந்தனர். இப்போது அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் தேமுதிக 17,693 வாக்குகள் அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைக்குள்பட்ட பகுதிகளில் பெற்றிருந்தார். அதிமுக வேட்பாளராக இருக்கும் இசக்கி சுப்பையாவுக்குக் கூட்டணி பலம் வலு சேர்க்கிறது.

 திமுக மாவட்டச் செயலர் கருப்பசாமிப் பாண்டியனுக்கும் பேரவைத் தலைவர் ஆவுடையப்பனுக்கும் சுமுகமான உறவில்லை என்பது தலைமைக்கே தெரிந்த ரகசியம். கருப்பசாமிப் பாண்டியனின் ஆதரவாளர்கள் அவருக்குப் பிரசாரம் செய்யத் தென்காசிக்குச் சென்றுவிடுவதால், தனது சொந்த செல்வாக்கை நம்பி மட்டுமே பிரசாரம் செய்ய வேண்டிய நிலைக்கு ஆவுடையப்பன் தள்ளப்பட்டிருக்கிறார். மேலும், காங்கிரஸ் வாக்காளர்களும், கட்சியினரும் திமுகவுக்கு முழுமனதான ஆதரவுடன் செயல்படுவதாகத் தெரியவில்லை.

 கடந்த 2006 சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக வேட்பாளரான ஆவுடையப்பனின் வெற்றிக்குக் கூட்டணி பலம் ஒரு முக்கியக் காரணமாக இருந்தது. கணிசமான காங்கிரஸ் வாக்குகளும், இடதுசாரித் தோழர்களின் வாக்குகளும்தான் திமுகவின் வெற்றியை உறுதிப்படுத்தின.

 இந்த முறை, திமுக அரசின் இலவசத் திட்டங்களையும் தனது சொந்த செல்வாக்கையும் மட்டுமே நம்பிக் களமிறங்கி இருக்கிறார் பேரவைத் தலைவர் ஆவுடையப்பன். கணிசமான இடதுசாரி வாக்குகளைக் கொண்ட அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதியின் கூட்டணி பலம்தான் வெற்றி, தோல்வியைத் தீர்மானிப்பதாக இருந்து வந்திருக்கிறது. இந்த முறை கூட்டணி பலம் அதிமுக வேட்பாளருக்குததான் சாதகமாக இருப்பதாகத் தெரிகிறது.

இந்தப் பகுதியில் மேலும்

குறிப்பு: வாசகர்கள் இந்த கமெண்ட் பாக்ஸ் மூலம் பதிவு செய்யும் கருத்துகள், அவரவரின் பேஸ்புக், கூகுள், டிவிட்டர், லிங்க்ட்இன் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு கணக்கு மூலம் நுழைந்து அவரவர் அடையாளத்துடன் தாமாகவே பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த வித அடையாளக் கணக்குகளும் இன்றி, விருந்தினராக நுழைந்து வாசகர் பதிவு செய்யும் கருத்துகள், ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியாகும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு. இருப்பினும், நாகரீகமற்ற, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், கருத்து பதிவு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க தினமணிக்கு உரிமை உண்டு. அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும். எனவே நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம்.