காங்கிரஸூக்கு அதிக இடங்கள்: தங்கபாலு நம்பிக்கை - Dinamani - Tamil Daily News

காங்கிரஸூக்கு அதிக இடங்கள்: தங்கபாலு நம்பிக்கை

First Published : 22 January 2011 01:48 AM IST


சென்னை, ஜன. 21: சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் காங்கிரஸ் கட்சிக்கு 2006 தேர்தலைவிட கூடுதலான இடங்கள் கிடைக்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ. தங்கபாலு நம்பிக்கை தெரிவித்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியது:

தொகுதிப் பங்கீடு குறித்து காங்கிரஸ் மேலிடத்தின் வழிகாட்டுதலின்படி பேச்சுவார்த்தை நடத்துவோம். 2004 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 10 இடங்களில் போட்டியிட்டது. 2009 தேர்தலில் அது 15 ஆக உயர்ந்தது. எனவே, பொறுத்திருந்து பாருங்கள். நல்லதே நடக்கும்.

2004-ல் இருந்து தொடரும் திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக, பலமாக உள்ளது. இந்த வெற்றி வரும் தேர்தலிலும் தொடரும்.

சட்டப் பேரவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை தொடங்கியுள்ளோம். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். மாவட்டம், சட்டப் பேரவைத் தொகுதி, ஊராட்சி ஒன்றியம், மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து, கிராமம் மற்றும் வாக்குச் சாவடி அளவில் தேர்தல் பணிக் குழுக்கள் அமைக்கப்படும்.

ஜனவரி 27-ம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் தேர்தல் பணிக்குழு கூட்டம் அந்தந்த மாவட்டத் தலைவர் தலைமையில் நடைபெறும். இக்கூட்டங்களில் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் கலந்து கொள்வார்.

ஜனவரி 30-ம் தேதி ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, வார்டுகள், பஞ்சாயத்து அளவில் தேர்தல் பணிக்குழு கூட்டம் நடைபெறும். இதில் தேந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள்.

பிப்ரவரி 5-ம் தேதி கிராம அளவில் தேர்தல் பணிக்குழு கூட்டங்கள் நடைபெறும். இக்கூட்டத்தில் வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்பார்கள். தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க இதுபோன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மத்திய அரசு வேடிக்கை பார்க்கவில்லை: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தி வரும் தாக்குதல்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. தமிழக மீனவர்கள் கொல்லப்பட்ட தகவல் கிடைத்ததும் இலங்கைத் தூதரை அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்தது.

இலங்கையில் உள்ள இந்தியத் தூதர் அந்நாட்டு அரசுடன் பேசியுள்ளார். இந்த விஷயத்தில் மத்திய அரசு வேடிக்கை பார்க்கவில்லை.

அலைக்கற்றை ஒதுக்கீடு- கருத்து கூற கபில் சிபலுக்கு உரிமை உள்ளது: எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் மத்திய அரசை விமர்சிக்க ஜெயலலிதாவுக்கு உரிமை உண்டு. அதுபோல தொலைத் தொடர்புத் துறையின் அமைச்சர் என்ற முறையில் 2ஜி அலைக்கற்றை விவகாரம் குறித்தும், அத்துறை குறித்தும் கருத்து தெரிவிக்கும் உரிமை கபில் சிபலுக்கு உண்டு என்றார் தங்கபாலு.

காங்கிரஸை நம்பியே திராவிடக் கட்சிகள்

கடந்த 40 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகளை நம்பித்தான் காங்கிரஸ் கட்சி உள்ளது என்பது உண்மையல்ல.

காங்கிரஸை நம்பியே திராவிடக் கட்சிகள் உள்ளன என்றும் கூறலாம்.

திமுகவும் காங்கிரஸýம் நட்புக் கட்சிகள். நட்பில் யார் பெரியவர் சிறியவர் என்பதெல்லாம் கிடையாது. நாங்கள் ஒருவரையொருவர் சார்ந்தே இருக்கிறோம்.

ராகுல் காந்தியின் தமிழக சுற்றுப் பயணத்துக்குப் பிறகு கூட்டணி குறித்தும், தோழமைக் கட்சிகள் குறித்தும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் எதுவும் பேசவில்லை. பேசக் கூடாது என்று அவர்களுக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார் தங்கபாலு.

இந்தப் பகுதியில் மேலும்

குறிப்பு: வாசகர்கள் இந்த கமெண்ட் பாக்ஸ் மூலம் பதிவு செய்யும் கருத்துகள், அவரவரின் பேஸ்புக், கூகுள், டிவிட்டர், லிங்க்ட்இன் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு கணக்கு மூலம் நுழைந்து அவரவர் அடையாளத்துடன் தாமாகவே பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த வித அடையாளக் கணக்குகளும் இன்றி, விருந்தினராக நுழைந்து வாசகர் பதிவு செய்யும் கருத்துகள், ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியாகும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு. இருப்பினும், நாகரீகமற்ற, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், கருத்து பதிவு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க தினமணிக்கு உரிமை உண்டு. அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும். எனவே நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம்.