வீரவழிபாடும் இசையும்: நடுகல் பண்பாட்டுக்குப் புதிய வெளிச்சம் தரும் புலிக்குத்திப்பட்டான் நடுகல்

நடுகல் வழிபாட்டில் இசை பெற்றிருந்த சிறப்பான இடத்தை அறியச்செய்யும் தொல்பொருள் சான்றாகவுள்ள இது...

ஆலுக்குறும்பா (=தமிழில்: பால் குறும்பா) என்ற முகநூல் பக்கத்தில், கடந்த 2018 மார்ச் 24-ம் தேதி பதிவேற்றியிருந்த புலிக்குத்திப்பட்டான் நடுகல் பற்றிய குறிப்புகள், வீர வழிபாட்டுக்குப் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுவதாக உள்ளது. இது மூதாதையரை வழிபடும் பண்பாட்டில் இசை பெற்றிருந்த முக்கியத்துவத்தையும், அவ்வழிபாட்டின் நிகழ்வுகளைக் காட்சிப்படுத்தும் முதல் சான்றாகவும் விளங்குகிறது. இது குறும்பர் சமூகத்தினருக்கு மட்டும் உரிய பண்பாடா அல்லது பிற சமூகங்களும் இவ்வகை வழிபாட்டு மரபுகளைக் கொண்டிருந்தனவா என்ற முடிவுக்கு வர மேலும் சான்றுகள் தேவை. அதேசமயத்தில், இக்குறிப்பிட்ட சான்று குறும்பர் சமூகத்தினருக்கு உரியது. இன்றைய நிலையிலும் அவர்களது வழிபாட்டில் இருப்பது.

(புலிக்குத்திப்பட்டான் நடுகல் முழுத்தோற்றம் (புகைப்படம் நன்றி: ஆலுக்குறும்பா முகநூல் பக்கம்)

உடனடி கவனத்தை ஈர்த்த இந்நடுகல் குறித்து கடந்த சிலநாட்களாக சில செய்திகளையும், கருத்துப்பதிவுகளையும் காண நேர்ந்தது. குறிப்பாக, வீரன் தேவலோகம் செல்லும் காட்சி; தேவலோகத்துக்கு அழைத்துச்செல்லும் பெண்கள்; காட்சியில் உள்ள அனைவரும் தேவலோகப் பெண்கள் போன்ற சில பதிவுகளை மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய அவசியம் உள்ளது. இப்பதிவுகள் எதுவும் இந்நடுகல்லின் சிற்ப வெளிப்பாடுகளையும், நுணுக்க விவரங்களையும் கருத்தில் கொள்ளவில்லை. ஆகையால், மூதாதையர் வழிபாட்டில் குறும்பர் பண்பாட்டின் பின்னணிகளைக் கண்டடைய வேண்டிய இடம் அடையமுடியாமல் தவறவிடப்பட்டுள்ளது. மேலும், இதில் கல்வெட்டுப்பொறிப்பு இல்லை என்பதால், நடுகல் தெரிவிக்கும் செய்தி மற்றும் காலம் குறித்த விவரங்களை நேரடியாக அறியமுடியாது உள்ளது. இதன் காரணமாக, சிற்ப வெளிப்பாட்டையும், சிற்ப அமைதியைக்கொண்டே நடுகல்லின் உள்ளார்ந்த பொருள் மற்றும் காலம் பற்றிய முடிவுகளுக்கு வரவேண்டி உள்ளது. இப்பின்னணியில், இந்நடுகல்லை விரிவாகவும் நுணுக்கமாகவும் பார்க்கவேண்டி உள்ளது.

புலிக்குத்திப்பட்டான் / விண்ணுலகம் / தேவலோகப் பெண்கள் பொது சிற்பக்காட்சி

புலிக்குத்திப்பட்டான் வகை நடுகற்களின் பொதுவான சிற்பக்காட்சிக்கும், தேவலோகப் பெண்கள், சுவர்க்கம், கைலாயம், சமயச் சின்னங்கள் முதலியவை இடம்பெறும் சிற்பக்காட்சிகளுக்கும், இந்நடுகல்லின் சிற்பக்காட்சிகளுக்கும் உள்ள வித்தியாசம்தான் இந்த நடுகல்லை அரிய ஒன்றாக்கியுள்ளது. நடுகல் வழிபாட்டில் இசை பெற்றிருந்த சிறப்பான இடத்தை அறியச்செய்யும் தொல்பொருள் சான்றாகவுள்ள இது, அக்காலப் பண்பாட்டின் நிகழ்வுகளை எழுதிச்செல்கிறது. நடுகல் வழிபாட்டில் புதிய வெளிச்சம் பாய்ச்சி, இலக்கியங்கள் இலக்கணங்கள் வழி அறியப்படாத செய்திகளைப் புலப்படுத்துகிறது.

புலிக்குத்திப்பட்டான் வகை நடுகல்லின் பொது சிற்ப அமைதியாக, கீழ்க்கண்ட ஐந்து வகைகளில் காணலாம்.

சிற்ப அமைதி 1

புலியுடன் வீரன் போரிடும் காட்சி - வீரன் கைகளில் வில் அல்லது வாள், குறுவாள் அல்லது ஈட்டி போன்ற ஆயுதங்கள் கொண்டிருக்கும். பொதுவாக, வீரனின் ஒரு கரம் ஈட்டி அல்லது வில்லை கொண்டிருக்க, மற்றொரு கரம் குறுவாளை உயர்த்தியபடி விலங்கினைத் தாக்கும் வாக்கில் இருக்கும். சமயங்களில், வீரன் குறுவாளை விலங்கின் வாயிலோ, மார்பிலோ, கழுத்திலோ ஆழமாகப் பாய்ச்சிய காட்சியாகவும் சித்தரிக்கப்படும். போலவே, ஈட்டி அல்லது அம்பு விலங்கின் உடலில் தைத்திருக்க, அந்த விலங்கின் முன்னங்கால் அல்லது வாய்ப்பகுதி வீரனை தாக்கிய காட்சி இடம்பெறும். இக்காட்சிகளுடன் மதுக்குடம், மற்றும் மங்களச் சின்னங்கள் காட்டப்படும்.

சிற்ப அமைதி 2

வீரனுடன், மேலே குறிப்பிட்ட காட்சிகளுடன் வீரனின் மனைவி அல்லது மனைவியர், மதுக்குடம் அல்லது பானைகள் சுமந்து வருவது போன்று காட்டப்படுவர். இது அவனது மனைவி/மனைவியர் வீரனுக்கு கல்லெழுப்பி படையல் செய்து வணங்கிய காட்சியைச் சித்தரிப்பதாகும். மதுக்குடம், பானையைச் சுமந்துவரும் பெண்களைச் சதிக்கு ஆட்படுத்திக் கொண்டவர்களாகக் கருதும் போக்கு நிலவுகிறது. சதி முத்திரைகளோ; சின்னங்களோ, சதி குறியீட்டுப் பொருட்களோ காட்டப்படவில்லை எனில், அது சதியாக இருக்க வாய்ப்பில்லை. அது பொது வரையறையும் இல்லை.

சிற்ப அமைதி 3

சதியோடு இணைந்த நடுகல் ஆயின், மேற்கண்ட காட்சிகளோடு ஒரு பெண் சதியைக் குறிப்பிடும் பொருட்களை ஏந்தியும் அல்லது குறிகளை சுட்டும் முத்திரைகளைக் காட்டியும் சித்தரிக்கப்படுவாள்.

சிற்ப அமைதி 4

வீரனுக்குத் துணையாக, வேட்டைக்கு உதவும் விலங்கு குறிப்பாக நாய் காட்சிப்படுத்தப்படும். காட்டு விலங்கு மீது நாய் பாய்வது போன்றோ, அதனை தாக்கி கடித்து இழுப்பது போன்றோ அல்லது வீரனுக்கு அருகில் இருப்பது போன்றோ காட்டப்படும்.

சிற்ப அமைதி 5

வீரன், வீர சுவர்க்கம் அல்லது தேவலோகம் அல்லது சிவலோகம் அல்லது வைகுந்தம் அடைந்தான் என்பதனைச் சுட்டும் விதமாக, ஒன்று அல்லது இரு தேவலோகப் பெண்கள் அல்லது, இந்திரலோகப் பெண்கள் அல்லது தேவதைகள் வீரனை, சதிக்கு உட்பட்ட பெண்ணை அழைத்துச்செல்வது போன்றோ, அந்தரத்தில் நிற்பது போன்றோ, பறந்து செல்வது போன்றே காட்சிப்படுத்தப்படுவர். அந்நிலையில் லிங்கம், நந்தி, நாமம், வேல், சூலம், விஷ்ணு போன்ற சமயச் சின்னங்கள் ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டோ இடம் பெறும். இவற்றுடன், சமயங்களில் சூரியன், பிறைசந்திரன் உருவங்களும் இடம் பெறும்.

இக்காட்சிகள், வீரனைச் சுற்றியோ அல்லது அடுக்குக் காட்சியாகவோ அமைக்கப்படும். அடுக்குக்காட்சி எனில், கீழ் அடுக்கில் வீரன் விலங்குடன் போர் புரியும் காட்சியும், வேட்டைக்கு நாய் உதவியிருப்பின் அதன் காட்சியும், சதி பெண்ணும் காட்டப்படுவர். இதற்கு மேலே அமைக்கப்படும் இரண்டாம் அடுக்கில், வீரனை தேவலோகப் பெண்கள் அல்லது தேவதைகள் அழைத்துச்செல்லும் காட்சி இடம் பெறும். இதற்கு மேல் அமையும் மூன்றாம் அடுக்கில் சமயச் சின்னங்கள் இடம் பெறும். இது, வீரன் அவன் சார்ந்த சமயம் அல்லது மேலுலகு சென்று இறைவனடி சேர்ந்தான் என்பதை மறைபொருளாக உணர்த்துவதாக அமையும். இதே வரிசையில் தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. குறிப்பாக, இரண்டாம் மூன்றாம் அடுக்குக் காட்சிகள் மாறியும் கூடுதல் விவரங்களுடனும் அமையலாம். சில நடுகற்கள் 5 அடுக்கு வரை சிற்பக் காட்சிகள் விவரிக்கப்பட்டுக் கிடைக்கின்றன. மேலும் கூடுதலான அடுக்குக் கொண்ட கற்களும் அரிதாகக் கிடைத்துவருகின்றன.

மேலே விவரிக்கப்பட்ட சிற்ப அமைதிகள் புலிக்குத்திப்பட்டான் கல்லுக்கு மட்டும் பொருந்துபவை அல்ல. வீரன் எவ்வகையில் மாய்ந்திருந்தாலும், அவன் சார்ந்த சமூகத்தின் நம்பிக்கையின் அடிப்படையில் தேவலோகம், சுவர்க்கம், வைகுந்தம், கைலாயம் சென்றடைந்தான் என்ற காட்சியை விவரிக்கும் எந்த ஒரு நடுகல்லுக்கும் இது பொருந்தும். 

நீலகிரி - குன்னூர் புலிக்குத்திப்பட்டான் கல்

இந்த நடுகல் இருக்கும் இடம் பற்றி அறியமுடியவில்லை. புகைப்படத்தைப் பதிவேற்றிய ஆலுக்குறும்பா, இதன் இடம் நீலகிரி - குன்னூருக்கு அருகில் என்ற விவரத்தை மட்டும் தந்துள்ளனர். குறிப்பான இடம் பற்றி மெளனம் காப்பதாகத் தெரிகிறது. இந்த நடுகல்லில் வீரன் ஒருவன், ஆடு ஒன்று, புலி ஒன்று, இரு பெண்கள் மற்றும் ஆறு ஆண் உருவங்கள் என 11 உருவங்கள் இடம்பெற்றுள்ளன. வீரன், நடுநாயகமாக மிகப் பெரியதாக காட்டப்பட்டுள்ளான். வீரன், புலியின் மார்பில் ஈட்டி போன்ற ஒரு நீண்ட ஆயுதத்தைப் பாய்ச்சியுள்ளான். வீரனின் ஈட்டியின் மேல் பகுதியும் கூர்முனை கொண்டுள்ளது. வீரனின் இடது தொடையில் புலியில் கால் ஆழப் பதிந்துள்ளது. வீரனுக்கு வலதுபுறம் ஆடு ஒன்று காட்டப்பட்டுள்ளது. இம்மூன்று சிற்பங்களும், ஆட்டைத் தாக்கவந்த புலியைத் தாக்கி தானும் மாய்ந்த வீரன் நினைவாக எடுக்கப்பட்ட நடுகல் என்ற செய்தியை வழங்குகிறது. சுற்றிலும் காட்டப்பட்டுள்ள ஆண் பெண் உருவங்கள், திருச் சின்னம், கோயில் பூசைமணி, சங்கு, கிலுக்கட்டை, கிணைப்பறை போன்ற இசைக் கருவிகளைக் கொண்டவர்களாக உள்ளனர். இக்காட்சிகளைக் கொண்டு பார்க்கும்பொழுது, புலியைக் கொன்று தானும் மாய்ந்த வீரனுக்கு அவனது குடும்பத்தினர் அல்லது ஊரார் வழிபாடு செய்யும் நிகழ்வைப் பதிவுசெய்த அரிய நடுகல்லாக இது விளங்குகிறது.

இங்குக் குறிப்பிட்டுள்ள கருவிகளின் வரிசையில் “திருச்சின்னம்” மற்றும் “கிணைப்பறை” குறித்து சில விளக்கங்களைக் கண்ட பிறகு இந்நடுகல்லின் சித்தரிப்புக்கு வருவோம்.

திருச்சின்னம்

திருச்சின்னம் இசைக் கருவி, தமிழர் பண்பாட்டில் கோவில் வழிபாடு, உற்சவ நிகழ்ச்சிகளில் முக்கிய இடம் பெறும் ஒன்றாகும். அரிய வகை இந்த இசைக் கருவி எக்காளம், தாரை போன்ற இசைக் கருவிகளின் வரிசையில் இடம் பெறும் ஒன்றாகும். தோற்றத்தில் எக்காளமோ, தாரையோ என்று மயக்கம் தருவதாகும். “ஓம்…” என்று ஒலி முகிழும் இசைக் கருவியாகவும், கோவில்களில் வாசிக்கப்படும் 18 வகை இசைக் கருவிகளில் ஒன்றாகவும், வழிபாட்டுச் சடங்கோடு தொடர்புடைய ஒரு இசைக் கருவி என்றும் திருச்சின்னம் விளக்கப்பெறும். நுட்பமான இந்த ஊதுகருவி உருவம் அனசு மற்றும் உலவுடன் கூடிய இரண்டு நீளமான பித்தளைக் குழல்களால் ஆனது. இது, குவிந்து கூர்ந்து இருக்கும் அனசுமுகப்பு இரண்டையும் ஒரு சேர வாயில் வைத்து ஊதும் கருவியாகும். மிகுந்த பயிற்சியும் வலுவும் உள்ளவர்கள் மட்டுமே இதனை இசைக்கமுடியும். இறைவன் திருவீதியுலாப் புறப்பாடு, மங்கள ஆரத்தியை அறிவிப்பதற்காக திருச்சின்னம் இசைக்கப்படுவது மரபாகும். மது எடுப்பு, குதிரை எடுப்பு ஊர்வலங்களிலும் இக்கருவி இசைக்கப்படும். “திருச்சீரணம்”, “திருச்சூரணம்” என்ற பெயர்களாலும் இது அழைக்கப்பெறுவது உண்டு. “தாரை”, “தப்பட்டை”, ‘‘நமரி”, ‘‘எக்காளம்” ஆகியவற்றுடன் திருச்சின்னம் சேர்த்து கிராமிய பஞ்ச இசைக் கருவிகள் எனக் குறிக்கப்பெறும். (P. Sambamurthy, Catalogue of Musical Instruments Exhibited in the Government Museum, Chennai, 1998 & வெ. நீலகண்டன், வாழ்விழந்து வரும் கிராமிய இசைக் கருவிகள், பிளாக்ஹோல் மீடியா, சென்னை, 2011).

நீலகிரி நடுகல்லில் உள்ள இந்த இசைக்கருவி திருச்சின்னம் என்ற முடிவுக்கு வரும்முன், “ஆயர் குழல்” (Shepherd Flute or cowherd Flute) வகையினமாக இருக்குமோ என ஐயம் கொண்டேன். ஆயர் குழல் ஒன்று சென்னை அரும்பொருட்காட்சியகத்தில் உள்ளது. (P. Sambamurthy, Ibid.,) ஆயர் குழலானது புல்லாங்குழலின் நீளத்தைவிட அளவு சிறுத்தது. ஆனால், குழலின் விட்டத்திலும் தடிமனில் பெரியது. ஊதும் அனசு முகப்பும், காற்று வெளியேறும் உலவு முகப்பும் சம விட்டம் கொண்டவை. ஆனால், இந்நடுகல்லில் உள்ள கருவியில் அனசு முகப்பு சிறுத்தும் உலவு முகப்பு பெருத்தும் உள்ளது. மேலும் புல்லாங்குழல் அல்லது ஆயர் குழல் கருவியை ஒரு குழல் கொண்டு மட்டும்தான் வாசிப்பர். திருச்சின்னம் மட்டுமே இரண்டு கருவிகளை ஒரு சேர வாயில் வைத்து வாசிக்கப்படும் சின்னமாகும். இங்கு இக்கருவி வாசிக்கும் தோற்றத்தில் இல்லை என்றாலும், இரு கருவிகளும் மத்தியில் அவற்றை பிணைக்கும் தாம்புகளும், அதனை அலங்கரிக்கும் குஞ்சங்களும் காட்டப்பட்டுள்ளன. திருச்சின்னம் கருவியோடு நான் பார்க்கும் இரண்டாம் நடுகல் இது. இரண்டையும் ஒப்பிடும்பொழுது, திருச்சின்னமும் பலவகை தடிமன் கொண்ட கருவியாகவும் மரம், உலோகம் ஆகியவை கொண்டும் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன என முடிவுக்கு வரமுடிகிறது.

கிணைப்பறை

இக்கருவியை “சிறுபறை” வகையினமாக முதலில் கருதினேன். ஆனால், திருச்சின்னத்தோடு இணைத்து வாசிக்கும் கருவிகளில் ஒன்றாக கிணைப்பறையைச் சுட்டுவார் மு. அருணாசலம். அதே சமயத்தில், இலக்கியங்களில் சுட்டப்படும் கிணைப்பறையின் உருவம் எப்படி இருக்கும் எனத் தெரியாது என்பார். (தமிழ் இசை இலக்கண வரலாறு, 2009, கடவு பதிப்பகம், சென்னை, ப.164) கிணைப்பறையும் தடாரிப்பறையும் ஒன்றா அல்லது வேறுவேறானதா என கேள்விக்கு, இரு கருவிகளில் இருந்தும் கிடைக்கும் ஒலி ஒன்றாக இருப்பதால் வேற்றுமையினைக் காண முடியவில்லை என்கிறார் மு. வளர்மதி. இவர். தடாரி மற்றும் கிணைப்பறைகளின் வரைபடத்தை அளித்துள்ளார். (பறை இசைக்கருவி – ஓர் ஆய்வு, திருமகள் நிலையம், சென்னை, 1999, பக். 42-47). கிணைப்பறை சிறு குச்சியைக்கொண்டு அடிக்கும் கருவியாகும். நடுகல்லில் இக்கருவியை வாசிப்பதாகச் சித்தரிக்கப்படும் ஆண் உருவம் கையில் சிறு குச்சியை பிடித்திருப்பது கவனிக்கத்தக்கது. பறை இசைக்கருவியை எந்த லாகவத்திலும் பிடித்தும் உடல் பிடிமானத்தில் வைத்தும் அடித்து இசை எழுப்பலாம். இந்த வகையில், அமர்ந்த நிலை வாசிப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ள உருவம், தனது இடது கையில் கருவியை ஏந்தி தன் தொடையை பிடிமானமாகக் கொண்டுள்ளதாகக் காட்டப்பட்டுள்ளது.

நீலகிரி புலிகுத்திப்பட்டான் நடுகல் சித்தரிப்புகள்

இந்நடுகல்லில் மையமாக உள்ள வீரன், எளிமையான இடையாடையுடன் கைகளிலும் காலிலும் காப்பு பூட்டியுள்ளான். வட்டமான முகத்தில் நீண்டு தொங்கும் காதுகளில் வட்டக் குண்டலமும் (விருத்த குண்டலம்) மார்பில் சவடி போன்ற தட்டையான ஆபரணமும் அலங்கரிக்கிறது. தலையைச் சுற்றி வட்டமாகவும், வலது புற வளைவும் முடிவில் குண்டுமுடிச்சும் கொண்ட தலைப்பாகை அணிந்துள்ளான். இடையில் இடைவாள் உறையோடு காட்டப்பட்டுள்ளது. வீரன் இடதுகாலை மடக்கி இடதுபுறமாக சாய்ந்து தன் முழு உடல்வலுவோடு ஈட்டியை புலியின் மார்பில் மேலிருந்து கீழாகச் சொருகுவதாக காட்டப்பட்டுள்ளான்.

(வீரனின் வலது புறக்காட்சி)

வீரனின் வலது புறக்காட்சியில், இரு ஆண்கள் மற்றும் ஒரு பெண் காட்டப்பட்டுள்ளனர். வலது புறத்தில் உள்ள முதல் ஆண் திருச்சின்னம் என்ற இசைக்கருவியை பிடித்தபடி உள்ளான். வலது புற நடுவில் உள்ள ஆண், வலது கரத்தில் பூசைமணியூம், இடது கரத்தில் சங்கும் ஏந்தியுள்ளான். மூன்றாவதாக உள்ள பெண், வலது கரத்தில் கிலுக்கடையும் பூசைமணியும், இடது கரத்தில் கிலுக்கட்டையும் பிடித்தபடி காட்டப்பட்டுள்ளாள்.

(வீரனுக்கு வலது புற மேற்புற காட்சிகள்)

வீரனுக்கு மேலே மூன்று ஆண் உருவங்கள் இடம் பெற்றுள்ளன. நடுவில் உள்ள ஆண் சம்மணம் இட்டு அமர்ந்துள்ளான். இச்சித்தரிப்பு, தலைவன் அல்லது குடும்பத்தின் மூத்த உறுப்பினர் என்ற நிலையினைச் சுட்டுவதாக உள்ளது. பக்கத்துக்கு ஒருவராக ஒரு காலை மடக்கியும், ஒரு காலை தொங்கவிட்டும் உள்ளவர்களாக இருவர் காட்டப்படுள்ளனர். நடுவில் உள்ளவர் கிணைப்பறை என்ற சிறிய வகை பறைக்கருவியை இடது வலதுகரத்தில் ஏந்தியும், அதை இசைக்கும் சிறு குச்சியை வலதுகரத்தில் பிடித்தவாறும் காட்டப்படுள்ளார். இருபுறமும் உள்ளவர்கள், ஒரு கையில் கிலுக்கட்டையை உயர்த்திப்பிடித்து இசைப்பவர்களாகக் சுட்டப்பட்டுள்ளனர். மற்றொரு கரத்தில் இன்னதென்று அறியமுடியாத இசைக்கருவியைக் கொண்டுள்ளனர்.

வீரனின் வலது புறத்தில் ஆண் உருவம் ஒன்றும் பெண் உருவம் ஒன்றும் இடம்பெற்றுள்ளன. இவ்விரு உருவங்களின் கரங்களும், இன்னதென்று விளங்கிக்கொள்ள முடியாத பொருட்களைக் கொண்டுள்ளன. அவை சிறியதாகவும், பிற சித்தரிப்புகளில் மறைந்துள்ளதாகத் தோன்றுகிறது. இவையும் இசைக் கருவிகளாக இருக்க வாய்ப்பு உண்டு. எல்லா ஆண், பெண் உருவங்களும் தலைப்பாகை அணிந்துள்ளனர். பெண் உருவங்கள் இரண்டிலும் கொண்டை பெரியதாகக் காட்டப்பட்டுள்ளது. நீண்டு தொங்கும் காதுகளில் வட்டக் குண்டலங்கள் பூட்டப்பட்டுள்ளன. எல்லா உருவங்களின் உடலசைவும், அவரவர் இசையின் இலயத்தோடு இணைந்ததாக உள்ளது.

இச்சிற்பத்தில் தேவமாதர்களோ, தேவலோகமோ, சுவர்க்கமோ, வைகுந்தமே, கைலாயமோ, மதச் சின்னங்களோ, இறையுருக்களோ, இறையுருக்களின் குறியீடுகளோ என்று குறிப்பிடும்படி ஏதுவும் இடம் பெறவில்லை. ஆகையால், முகநூலில் பதிவான வீரன் தேவலோகம் செல்லும் காட்சி, தேவதைப் பெண்கள் போன்ற செய்திகளுக்குப் போதிய சான்று இச்சிற்பங்களின் வெளிப்பாட்டில் இல்லை.

காலம்

சிற்பங்களின் உருவ அமைதியும், சிறிதே பருத்த உடல்வாகும், அணிமணிகளின் அலங்காரமும், இதனை 13-ஆம் நூற்றாண்டுக்கு உரியதாகவும், வட்டமுகமும் தலைப்பாகை அலங்காரமும் பேசளர்களின் கலைநயத்தின் சாயலை ஏற்றுக்கொண்டுள்ளன எனக் கருத இடமளிக்கின்றன.

நடுகல் காட்சிகளின் பொருள்

ஆடுகளைத் தாக்க வந்த புலியைக் கொன்று தானும் வீழ்ந்த வீரனை, சுற்றமும் ஊராரும் பல்வகை இசைக்கருவிகள் முழக்கி வழிபடுகின்றனர்.

(அதே நடுகல், வண்ணம் மாற்றப்பட்டது. இசைக்கருவிகள் நன்கு துலக்கமாகின்றன).

- த. பார்த்திபன்

(தொடர்புக்கு - thagadoorparthiban@gmail.com)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com