தாய் தெய்வங்கள் - பகுதி 2

பருத்த மார்பகங்களையும், அகன்ற புட்டங்களையும் அரை வட்டவடிவமாகக் காட்டப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் காணலாம். தலையை கிளியின் வடிவில் அமைத்துள்ளதுகூட, தாய் தெய்வத்தை நினைவுபடுத்துவதாகவே உள்ளது.

தாய் தெய்வம் - தொகுப்பு

தாய் தெய்வம் என்பது நம் நாட்டில் வழங்கப்படும் வளமைச் சடங்குகளின் குறியீடாகும். பெண்கள் வளமைக்கு உரியவர்கள். எனவே, இவர்களையே தாய் தெய்வம் என்று குறித்தனர். பல்வேறுவிதமான வடிவங்களில், அதாவது பல்வேறு சூழுலில் இவர்களை தாய் தெய்வங்கள் எனக் குறித்துள்ளனர். முதலில் அவற்றைத் தெளிவுபடுத்திக்கொள்வோம். உருவாக்குதலும் அதனைச் செழிப்படையச் செய்தலும், அன்னை மாதாதேவி என்று அழைக்கப்படுபவற்றைக் குறிப்பதாகும். தாய் தெய்வம் என்ற சொல்லுக்குப் பெண்மையை முன்னிறுத்துவதும், அவர்களை முதன்மைப்படுத்துவதுமே ஆகும். பெண்கள் தாய்மைப்பேற்றினை அடைவதும், பருத்த மார்பகங்களைக் கொண்டுள்ளதும் அவர்களை மனித உருவிலிருந்து வேறுபடுத்தியும், முதன்மைப்படுத்தியும் காட்டப்படக்கூடிய சிறப்புகளைப் பெற்றதால்தான். மனித இனத்தில், பெண்கள் தனித்துவம் வாய்ந்தவர்களாக அமைந்துவிடுகின்றனர்.

தாய் தெய்வத்தைக் காட்டும்பொழுது, ஒரு பெண்ணின் உருவமும் இடது பக்கத்தில் குழந்தை ஒன்றை ஏந்தியுள்ளதைப் போன்றும் அமைந்திருக்கும். இதுவே தாய் தெய்வத்துக்குரிய அடையாளமாகப் பின்னர் அமைந்துவிட்டது எனலாம். தாயும் சேயும் காணப்படுவது தாய் தெய்வத்தைக் குறிக்கும் அடையாளக் குறியீடாகும் (Symbolic representation). நாளடைவில், மனித இனத்தை இருபெரும் கூறுகளாக பகுத்து, ஆண்பால் என்றும் பெண்பால் என்றும் பாலினமாக பிரித்துக்கொள்வதற்கு முனைந்தனர். பிறந்த குழந்தைக்குப் பாலை ஊட்டுவதாலே பாலை மையமாகக் கொண்டு பகுத்துள்ளனர் போலும். வடஇந்தியாவில், பெண்ணின் பிறப்புறுப்பைக் காட்டும் சிற்பங்களை தாய் தெய்வங்கள் என்று குறிக்கின்றனர். வடமாநிலங்களில் இன்றும் சக்கராயி (சக்தி) வழிபாடு தொடர்கிறது.

கொற்றவை - மூத்தோள் - நீலி

சங்க காலம் முதல் வெற்றியை வணங்கும் தெய்வமாக கொற்றவையைப் போற்றி வணங்கினர். இறந்துபட்ட வீரர்களுக்கு எடுக்கப்பட்ட நடுகல் சிற்பங்கள், பெருங் கற்கால நினைவுச் சின்னங்கள் போன்றவற்றை, வீரத்தின் தன்மை குறித்தே வணக்கத்துக்கு உரியவையாகக் கருதி போற்றியுள்ளனர். பெருங் கற்கால கற்பதுக்கையை நீலிக்கல் என்று அழைக்கின்றனர். கொற்றவையை நீலி எனச் சிலம்பு பகர்கிறது. ஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழியின் மேல் பகுதியில் காணப்படும் பெண் உருவத்தை கொற்றவை என்றே ஆய்வாளர்கள் குறிக்கின்றனர். மான், மயில் இவற்றை தனது இரு பக்கங்களிலும் இப்பெண் தெய்வம் கொண்டுள்ளது. மேலும், கொற்றவையைக் குறிக்க அகன்ற வயிறும், பருத்த புட்டங்களும், பெரிய மார்பகங்களும் கொண்ட தாய் தெய்வங்கள் அனைத்தும் கொற்றவையைச் சுட்டுவதாகவே அமைந்தவை.

(ஆதிச்சநல்லூர் - கொற்றவை)

இடுகாட்டுள் வசிப்பவளையே கொற்றவைத் தெய்வம் என்றழைத்தனர். சிலம்பு, “காடுகிழாள்” (ப.129) “காடமர்செல்வி’ (மணி 6:53, 18:15) என்றும், கொற்றவையை இடுகாட்டுள் உறைபவளாக சங்க இலக்கியங்களும் சித்தரித்துள்ளன. கொற்றவையை மூத்தோள் என்றும் அழைத்தனர். சங்க இலக்கியங்களில் பழையோள், பெரியவள் என்ற பொருளில் அழைக்கப்பட்டுள்ளாள். தாய் தெய்வம், ஊரின் நடுவில் இல்லாமல் காட்டுக்குள் காணப்படுகிறாள். இத்தாய் தெய்வத்தின் வழிபாட்டில், துணங்கைக் கூத்து நடைபெறுருவது வழக்கமாகும்.

தாய் தெய்வ வழிபாடும் பெருங் கற்காலப் பண்பாடும்

தாய் தெய்வ வழிபாடு, பெருங் கற்கால மக்களிடையே மிகவும் சிறப்புற்றிருந்தது. ஆதிச்சநல்லூரில் உலோகத்தால் ஆன சிறிய தாய் தெய்வ உருவம் ஒன்று கிடைத்துள்ளது. தாழியின் வெளிப்புறத்தில் விளிம்புகளுக்குக் கீழே தாய் தெய்வ உருவங்களை ஒட்டி வைத்திருப்பர். இதுபோன்ற பெண் உருவங்களை, பானை செய்த பின்பு தாய் உருவத்தை தனியாகச் செய்து அதன் விளிம்புகளுக்குக் கீழே வைத்துப் பொருத்துவர். இதுபோன்று ஒட்டப்பட்ட பெண் தெய்வ உருவங்கள் கொண்ட தாழிகள் பூம்புகார்*1, ஆதிச்சநல்லூர் போன்ற இடங்களில் கிடைத்துள்ளதைக் குறிப்பிடலாம்.

(பூம்புகார் – பெருங் கற்காலப் பண்பாட்டைச் சார்ந்த முதுமக்கள்தாழியில் பதிக்கப்பட்ட தாய் தெய்வ சுடுமண் உருவங்கள்)

இச்செயல், தாய் தெய்வத்தைக் குறிப்பதாகவே அமைந்துள்ளது. தாயின் வயிற்றிலிருந்து பிறந்தோம். பின்னர், இறுதியில் இறந்த பின்பும் தாழியின் உள்ளே வைத்துப் புதைப்பதை மீண்டும் தாயின் வயிற்றுக்குள்ளேயே சென்றுவிடுவதையே சுட்டுகிறது. தாழியினை தாயின் வயிறாக சித்தரிக்கவே தாழியின் வெளிப்புறத்தில் தாய் தெய்வ உருவங்களைச் செய்து பதித்துள்ளனர் என்பதை அறிந்துகொள்ளலாம்.

(பெருங் கற்கால நினைவுச்சின்னம் – மனித வடிவில் காணப்படும் குத்துக்கல்)

பெருங்கற் சின்னங்களில் ஒன்றாக விளங்கும் குத்துக்கல் வகை (Anthromorphic Menhir), மனித உருவில் அமைந்த ஒன்று. குறிப்பாக, பெண் உருவ அமைப்பில் அமைந்தது. பருத்த மார்பகங்களையும், அகன்ற புட்டங்களையும் அரை வட்டவடிவமாகக் காட்டப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் காணலாம். தலையை கிளியின் வடிவில் அமைத்துள்ளதுகூட, தாய் தெய்வத்தை நினைவுபடுத்துவதாகவே உள்ளது. மோட்டூர், உதயநத்தம் போன்ற இடங்களில் காணப்படும் மனித உருவில் அமைந்த குத்துக்கல் நினைவுச் சின்னத்தைக் குறிப்பிடலாம்.*2 இதனை தாய் தெய்வ வழிபாட்டின் எச்சம் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

பெருங்கற் சின்னங்களில் பெண்ணின் குறியீடுகளுடன் மனிதச்சாயல் கொண்ட கற்சிற்பங்கள் காணப்படுகின்றன. தமிழகத்தில், திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டத்தில் மோட்டூரிலும்; விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத்தில் உதயநத்தத்திலும் இதுபோன்ற மனிதச் சாயல் கொண்ட கற்சிற்ப வடிவில் பெருங் கற்கால நினைவுச் சின்னங்கள் காணப்படுகின்றன. தமிழகத்தில் மட்டுமின்றி ஆந்திர மாநிலத்திலும் கண்டறியப்பட்டுள்ளன. கிருஷ்ணா மாவட்டம் லிங்கனாவிலும், வாரங்கல் மாவட்டத்தில் தோட்டிகுட்டாவிலும், நெல்லூர் மாவட்டத்தில் வேடர்பாளையத்திலும் இவை கிடைத்துள்ளதாக திரு. துளசிராமன் குறிக்கின்றார். இவை அனைத்தும் தாய் தெய்வ வழிபாட்டின் முன்னோடிதான் என்று முனைவர் இரா. நாகசாமி அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.*3 இச்சிற்பங்களை, வேதகால அதிதி எனும் தாய் தெய்வத்துடன் ஒப்பிட்டுக் கூறுவர். இதுபோன்றே, மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள மினோவன் கிரீட்டிலும், இத்தாலியில் உள்ள சர்தீனியாவிலும் இதனையொத்த சிற்பங்கள் கிடைத்துள்ளன. அவற்றின் காலத்தை பொ.ஆ.மு.1700 எனக் குறிப்பர்.

மராட்டிய மாநிலம் துலிய மாவட்டத்திலும், பெலன் ஆற்றங்கரையில் உள்ள பேட்டினி என்ற இடத்திலும் கிடைத்த கடைக் கற்காலத்தைச் சார்ந்த எலும்பினால் ஆன தாய் தெய்வத்தை மிகவும் தொன்மையானது எனக் குறிப்பர்.*4 தக்காணத்தில் செப்புக் காலப் பண்பாட்டைச் சேர்ந்த பல சுடுமண் தாய் தெய்வங்கள், சிதைந்த நிலையில் சேகரிக்கப்பட்டுள்ளன. இவை, தாய் தெய்வ வழிபாடு எவ்வாறு பிற மாநிலங்களிலெல்லாம் பரவியிருந்துள்ளது என்பதையே சுட்டுகின்றது. குறிப்பாக, மராட்டிய மாநிலம் தீவாஸ் மாவட்டம் பில்வாடி, அகமதுநகர் மாவட்டம் நெவோசா, புனே மாவட்டம் இனாம்கோன் போன்ற இடங்களில் இவை காணப்பட்டு குறிக்கப்பட்டுள்ளன. மத்தியப் பிரதேச மாநிலம், மகேஸ்வர் மாவட்டம் நவ்தாதோலியும் குறிப்பிடத்தக்க இடமாகும்.

மேலும், வடஇந்தியாவில் ஜோப் (Zhob), குவெட்டா (Quetta), குள்ளி (Kulli) மற்றும் அரப்பா போன்ற சிந்துச் சமவெளி நாகரிகங்கள் பரவிய இடங்களிலெல்லாம், பெண் தெய்வ உருவங்கள் கிடைத்துள்ளன. சிரண்டு (Chirand) பகுதியில், சுடுமண்ணால் செய்த தாய் தெய்வ உருவம், புதிய கற்காலப் பண்பாட்டுப் பகுதியில் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தென்னிந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகம் போன்ற பகுதிகளில் பொ.நூ.ஆ.மு. முதல் நூற்றாண்டுக்கு முன்னர் உள்ள தாய் தெய்வ சுடுமண் உருவங்கள் ஏதும் கிடைத்தில என ஏ. கோஷ் அவர்கள் தனது ஆய்வில் குறிப்பிடுகின்றார்.*5 இக்கருத்து ஏற்புடையதாக இல்லை. புதிய கற்கால வாழ்விடமான மோதூரில் சுடுமண் தாய் தெய்வம் கிடைத்தள்ளதைச் சான்றாக குறிப்பிடலாம்.

கூம்பிய தலையையும் கொங்கைகளையும் கொண்ட பல தாய் தெய்வ சுடுமண் உருவங்கள், சிந்துச் சமவெளி நாகரிகங்களைக் கொண்ட பகுதிகளான மொகஞ்சதாரோ, அரப்பா, லோத்தால் போன்ற இடங்களில் கிடைத்துள்ளன. முதலில் கண்டறியப்பட்ட நாகரிகமாகவும், நாகரிகங்களில் முதன்மையானதும் என சிந்துச் சமவெளி நாகரிகங்களையே வரலாற்று அறிஞர்கள் குறிப்பர். மொகஞ்சதாரோ, அரப்பா போன்ற இடங்களில் காணப்பட்ட தாய் தெய்வங்களையே முதன்மைப்படுத்தி பிற நாகரிகங்கள் ஒப்பாய்வு செய்யப்பட்டு வருகின்றன. அவ்வாறு, அங்கு காணப்பட்ட பெண் தெய்வங்களையும் அறிந்துகொள்ளுதல் அவசியமாகிறது.

சான்றெண் விளக்கம்

1. K. Shridaran, Poompuhar, A seminar on underwater archaeology. Seminar paper, 1992. pp.68, Terracotta art of Poompuhar, Melapperumpallam.

2. உதயநத்தம், மனித உருவில் அமைந்த குத்துக்கல், விழுப்புரம் மாவட்டம். இக்கட்டுரை ஆசிரியர் தனது கள ஆய்வில் கண்டறிந்து வெளிப்படுத்தியது.

3. Dr. R. Nagaswamy. The Hindu, Dt. 22.07.1982.

4. A. Gosh, An Encyclopaedia of Indian Archaeology, Munshiram Manoharlal Publishers Pvt Ltd. 1980.

5. Ibid. pp

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com