உலக நாடுகளில் தாய் தெய்வங்கள்

நாகரிகங்கள் பரவலாகத் தோன்றி வளர்ச்சி அடைந்துள்ளன என்பதும், உருவங்களும், பெயர்களும் மாற்றம் பெற்றாலும், அவர்களது சிந்தனையும், செயல்களும், கருத்துகளும் ஒருமித்ததாகவே இருந்ததைக் காணமுடிகிறது.

தாய் தெய்வ வழிபாடானது தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவிலும் பெரிதும் போற்றி வணங்கப்பட்ட வழிபாடாகும். இந்தியாவில் முதன்மையான, மிகவும் பழமைவாய்ந்த நாகரிகம் எனப் போற்றப்படும் சிந்துச் சமவெளி நாகரிகத்திலும் தாய் தெய்வங்கள் போற்றப்பட்டு வழிபடப்பட்டு வந்துள்ளன. சிந்துச் சமவெளி நாகரிகப் பகுதி ஒரு நகர நாகரிகம் என்று அடையாளம் காணப்பட்ட பகுதியாகும். அரேபியக் கடற்கரையின் ஓரமாகப் பரந்த அளவில் இந்நாகரிகம் விரிந்து காணப்படுகிறது. இப்பண்பாட்டின் தாக்கத்தையும் வளர்ச்சியையும் நான்கு மையப் பகுதிகளில், ஆங்காங்கு மேற்கொண்ட அகழாய்வுகள் வாயிலாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இப்பகுதிகளை ஒட்டிய இந்நாகரிகம் பரவிய இடங்களிலும் மேற்கொண்ட அகழாய்வுகள் வாயிலாக, அப்பண்பாட்டுக்கு உரிய வாழ்விடங்களையும், முத்திரைகள் முதலான தொல்பொருட்களையும் தொல்லியல் துறையினர் வெளிக்கொணர்ந்துள்ளனர்.

சிந்துச் சமவெளி நாகரிகத்தில் நான்கு இடங்கள் குறிப்பிடத்தக்கவை. அவற்றில், ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆகிய இரண்டு இடங்கள் தற்போதைய பாகிஸ்தானில் அமைந்துள்ளன. அரியூப்பியா (Hariyupiya) என ரிக் வேதத்தில் குறிப்பிடும் இடமான ஹரப்பா (Harappa), பாகிஸ்தானின் - பஞ்சாப் மாநிலத்தில் சைவால் (Sahiwal) மாவட்டத்தில் ஓடும் பழைய ராவி ஆற்றங்கரையிலும், இறந்தவர்களை அடக்கம் செய்யப்பட்ட மண்மேட்டுப் பகுதி (Mound of Dead) என பொருள்படும் மொகஞ்சதாரோ (Mohenjo-daro), சிந்து மாநிலத்தில் ஓடும் சிந்து நதியின் வடகரையில் லர்க்கானா (Larkana) மாவட்டத்தில் அமைந்துள்ளன*1. மற்ற இரண்டு இடங்களான லோதால் மற்றும் காலிபங்கன் (Kalibangan) ஆகியவை இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளன. லோதால், சபர்மதி ஆற்றங்கரையில் மேற்குக் கடற்கரையில் அமைந்த நகரமாகும். காலிபங்கன், டெல்லியின் மேற்கே பழைய சரஸ்வதி ஆற்றங்கரையிலும், ராஜஸ்தான் மாநிலத்தின் வடபகுதியிலும் அமைந்துள்ளது. காலிபங்கன் என்பது கருப்பு வளையல்களைக் (Black Bangles) குறிப்பதாகும்.

பண்டைய சிறப்புபெற்ற சிந்துவெளி நகர நாகரிகப் பகுதியில் இருந்து சேகரிக்கப்பட்டுள்ள தொல்பொருட்களில், சுடுமண் பொம்மைகள் குறிப்பிடத்தக்கவை. இதற்குப் பிறகு முத்திரைகள் இடம்பெறுகின்றன. முத்திரைகளில் சித்திர எழுத்துகளும், ஆண் - பெண் மனித உருவங்களும், விலங்கு உருவங்களும் காணப்படுகின்றன. இவற்றில் காணப்படும் பெண் உருவங்களை தாய் தெய்வங்கள் எனக் குறிக்கின்றனர். ஒரு முத்திரையில், அமர்ந்த நிலையில் இரண்டு கொம்புகளுடன் தியான நிலையில் காணப்படுபவரை சிவனாகக் குறிக்கின்றனர்.

இந்த வகையில், ஏழு பெண்கள் நின்ற நிலையில் காட்டப்பட்டுள்ள முத்திரை குறிப்பிடத்தகுந்ததாக உள்ளது. இம்முத்திரையில், ஏழு பெண்கள் நின்ற நிலையில் காட்டப்பட்டுள்ளனர். இதில் காட்டப்பட்டுள்ள பெண் தெய்வங்கள், இந்துக் கடவுள்களில் சிறப்புற போற்றி வணங்கப்பெறும் ஏழு கன்னிமார்கள் சிற்பத்தை ஒத்ததாகவே கருத இடமளிக்கிறது. சிந்துச் சமவெளியில் கிடைத்த முத்திரையில் காணப்படும் இதனை, சப்தமாதர்கள் சிற்பங்களின் முன்னோடியாகக் கருதலாம்.

சிந்துச் சமவெளி முத்திரை - ஏழு பெண்கள் நின்ற நிலை

தமிழகத்தில் காணப்படும் சப்தமாதர்கள் எனும் தெய்வங்களை ஒரு தொகுப்பாக வணங்கப்படுவதை இங்கு ஒப்பிடலாம். பல்லவர் காலத்தில் இருந்து சப்தமாதர்கள் வழிபாடு மிகவும் சிறப்பு பெற்று திகழ்ந்துள்ளது. பல்லவர்கள் காலத்தில் அவை தனித்தனியான சிற்பங்களாக அமைத்து வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் சோழர்கள் காலத்தில் சற்று மெருகேற்றி, சப்தமாதர்களின் சிற்பங்களை ஒரு தொகுப்பாகவோ தனித்தனியாகவோ அமைத்தனர். சப்தமாதர்களுக்குக் காவல் தெய்வமாக விநாயகரையும் வீரபத்திரரையும், சில சிற்பத் தொகுப்புகளில் அய்யனாரையும் வைத்து வழிபட்டு வந்ததைக் காணமுடிகிறது. விஜயநகர மன்னர்கள் காலத்தில்தான், சிந்துவெளி முத்திரைகளில் காணப்படுவதைப் போல் ஒரே கல்லில் அமைத்து வழிபட்டுள்ளனர். சப்தமாதர் சிற்பத் தொகுப்பைப் பற்றி பின்னர் வரும் அத்தியாயங்களில் தெரிந்துகொள்வோம்.

இவை அனைத்தும், இப்பகுதி மக்களால் வழிபடப்பட்ட தாய் தெய்வங்களாகும். இங்கு காணப்பட்ட முத்திரைகளில், கருவுற்ற தாயின் உருவமும், குழந்தையுடன் உள்ள தாய் தெய்வ முத்திரையும், ஒரு பெண் குழந்தையை ஈன்றெடுப்பது போன்றுள்ள முத்திரையும் மிகவும் சிறப்புக்குரியதாகக் கருதப்படுகிறது. வளமைச் சடங்குகளையும் தாய்மையையும் போற்றிய முதல் நாகரிகமாக சிந்துச் சமவெளி நாகரிகம் திகழ்ந்துள்ளது. அதற்கு எடுத்துக்காட்டாக, அகழாய்வில் அதிக அளவில் கிடைத்த சுடுமண் தொல்பொருட்களாக பெண் தெய்வ உருவங்கள் உள்ளதைக் குறிப்பிடலாம்.

இதேபோன்று, இந்தியாவில் கடைநிலைப் பழைய கற்காலத்தில் காணப்பட்ட எலும்பினால் ஆன பெண் உருவமே மிகவும் பழமையானதாகும். இது பெலின் பள்ளத்தாக்கில் கண்டறியப்பட்ட ஒன்று. இதனை, ஹரப்பாவுக்கு முற்பட்டது (Pre-Harrapa) எனக் குறிப்பர். இது, கிரேவிட்டியன் பண்பாட்டை (Gravettian culture) சார்ந்தது எனவும் குறிப்பர்.*2 Venus of Dolni vestonice - இதுவே உலகில் காணப்பட்ட முதன்மையானதும் முதலாவதுமான பெண் (தாய் தெய்வம்) தெய்வ உருவமாகும். இது எலும்பினால் ஆனது. சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Venus of Dolini vestonice - Mother Goddess

உலக நாடுகள்

இவ்வாறு, தொன்மையான நாகரிகங்கள் இந்தியாவில் நிலவியபோது, உலக நாடுகளிலும் தாய் தெய்வங்களைப் போற்றி வணங்கியுள்ளனர் என்பதையும் நாம் அறியமுடிகிறது. அவ்வாறு, உலக நாடுகளில் காணப்பட்ட பெண் தெய்வங்களும், அவற்றை தாய் தெய்வங்களாக வழிபட்டதையும் அவற்றின் வரலாற்றுச் செய்திகளையும் இங்கு காண்போம்.

உலக நாடுகள் முழுவதுமே சமகாலகட்டத்தில் நாகரிகங்கள் பரவலாகத் தோன்றி வளர்ச்சி அடைந்துள்ளன என்பதும், உருவங்களும், பெயர்களும் மாற்றம் பெற்றாலும், அவர்களது சிந்தனையும், செயல்களும், கருத்துகளும் ஒருமித்ததாகவே இருந்ததைக் காணமுடிகிறது. எனவே, பழைய கற்கால மக்கள் முதலாக, தொடர்ச்சியான பண்பாட்டுக் காலங்கள் வரை, எவ்வாறெல்லாம் உலக மக்களின் நாகரிகமும் ஆன்மிகச் சிந்தனைகளும், வழிபாட்டு முறைகளும் இருந்துள்ளன என்பதை இங்கு காண்போம். எவ்வாறாக இருப்பினும், உலக நாடுகள் முழுமையும் தாய் தெய்வ வழிபாடே முதன்மையானது என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டது என்பதை தெளிவுபடுத்தும் வகையில் அமைந்ததே, இங்கு காட்டப்பட்டுள்ள தாய் தெய்வ உருவங்களும், அவர்கள் வழங்கிய பெயர்களும் ஆகும். அவற்றை ஒரு முன்னோட்டமாக அறிந்துகொண்டால், இத்தொடருக்கு அவை வலுவூட்டவதாகவே அமையும்.

புதிய கற்காலம் - ஐரோப்பா (Europe)

புதிய கற்காலம் என்பது விவசாயத்தின் பயனை அறிந்து வேளாண்மையை உலகுக்கு அறிமுகப்படுத்திய காலம். மட்கலன்களை தயாரித்து பயன்படுத்தத் துவங்கிய காலம். இந்நாகரிகம் புதிய முயற்சிகளுக்கு முதலிடம் கொடுத்து, பசுமைப் புரட்சியை ஏற்படுத்திய காலம். இந்தியாவில், புதிய கற்கால வளர்ச்சி தோன்றி வளர்ந்தது போலவே, உலக நாடுகளான ஆப்பிரிக்க, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் தெற்கு ஆசியாவிலும் புதிய கற்கருவிகளின் வளர்ச்சி தோன்றி, மிகவும் சிறந்த நிலையிலான முன்னேற்றம் அடையத் தொடங்கியது. இக்காலத்தில் ஆடு, மாடு, பன்றி, நாய் போன்ற வீட்டு விலங்குகளை வளர்க்கத் துவங்கினர். இதன் காலத்தை, பொ.ஆ.மு.5000 முதல் 10,000 ஆண்டுகள் வரை குறிப்பர்.

ஐரோப்பியாவின் பகுதிகளிலும், புதிய கற்காலத்தில் தாய் தெய்வ வழிபாடு தோன்றி வளர்ச்சி பெற்றது. இப்பண்பாட்டு மக்களும் வளமையைப் போற்றி வணங்கினர். அதன்விளைவே தாய் தெய்வ வழிபாடு ஆகும். இங்கு கிடைத்த சுடுமண் தாய் தெய்வம், கோடுகளால் அலங்கரிக்கப்பட்ட ஒன்று. தலைப் பகுதி, இந்தியப் பாறை ஓவியங்களில் காணப்படுவது போன்று கூர்மையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சிவப்பு நிறத்தில் காணப்படும் இச்சுடுமண் உருவத்தை, இவர்களது பழமையான தாய் தெய்வம் எனப் போற்றி வழிபட்டுள்ளனர்.*3

Cucuteni - tripillion culture. 5000 - 2750 B.C.E., Archaeology Museum - Piatra Neamt. Earth Mother goddess - Europe)

Egypt - A Statue of Mother Goddess - Isis)

எகிப்து (Egypt)

உலகில் பல நாடுகளில் பெண் தெய்வ வழிபாடு சிறப்புக்குரியதாகத் திகழ்ந்துள்ளது. பெண் தெய்வ வழிபாடு தோன்றுவதற்கு அடிப்படைக் காரணம், அவை தோன்றிய சமுதாயத்தில் தாய்மையையும், பெண்மையையும் போற்றியமையே ஆகும். தாய்ச் சமுதாயம், அதாவது தாய்வழி முறை வளமையைப் போற்றுவது என்றும், அதனை பேணிக் காப்பதும் என்ற கட்டமைப்பு அச்சமுதாயத்தில் இருந்துள்ளதே முதன்மையான காரணமாகவும் அமைந்தது.

தாய் தனது குழந்தைக்குப் பாலூட்டுவது போன்று சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. தாய் தெய்வம் என்று கூறப்பட்ட காலம் முதலே, தாயுடன் சேயும் இணைந்தே படைத்தனர். உலக நாடுகள் முழுவதிலும் இந்த ஒற்றுமையையும் ஒரே சிந்தனையையும் வரலாற்றில் ஒப்பிட்டுக் காணலாம். இன்றைக்கும் தாய்மார்கள் தனது குழந்தைக்குப் பாலூட்ட, தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பொது இடங்களில் தாய்மார்களுக்குத் தனியறை ஒதுக்கீடு செய்து தாய்மையைப் போற்றிப் பாதுகாத்துள்ளது என்பதை ஒப்பிட்டுக் காணுதல் வேண்டும். வேறு எந்த நாட்டிலும், ஏன் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் ஏற்படுத்தாத புதிய திட்டமாகவே இதனை ஏற்க வேண்டும். தாய்மையைப் பேணுவதிலும், வணங்குவதிலும் முதன்மையானவர்கள் என்பதற்கும், பண்டைய நாகரிகத்தைப் பெற்றவர்கள் என்பதிலும், தமிழர்களும், தமிழகமும் முன்னிற்கிறது என்றால் அது மிகையாகாது.

Statutte of MUTA Late representative of Earliest Mother goddess. (C.664-525) Egypt

எகிப்து, சிரியா, சின்னாசியா போன்ற உலக நாடுகளில், பெண் தெய்வ வழிபாடு தோன்றியதற்கும் இத்தகைய சமுதாய முறைகளே காரணமாகும். சிரியாவிலும் பாலஸ்தீனத்திலும் அசுதாத் (Astarte) என்ற பெண் தெய்வத்தையும், எகிப்தில் இஸிஸ் (Isis) என்றும் தாய் தெய்வங்களையும் மேற்குறித்தவாறு பெயரிட்டு அழைத்துள்ளனர்.*4

பிற உலக நாடுகளில் தாய் தெய்வங்கள்

ரோம் நாட்டில் மாயா (Maia), மைய்யா, மரியா, பசுபிக் நாகரிகங்களில் பூமித்தாயே தாய் தெய்வமாகவும் கருதப்பட்டாள். இவளே தண்ணீர்க் கடவுளாகவும் சித்தரிக்கப்பட்டாள். இவளையே மௌரி (Maori) என்று அழைத்துள்ளனர். இப்பெண் தெய்வத்தை இந்தியாவில் மரிஆய் என்றும், தமிழகத்தில் மாரி என்றும் பெயரிட்டு அழைத்தனர்.*5 மாரிக் கடவுள் என்றும் தமிழகத்தில் அழைப்பர். மாரியம்மா, மாரியாத்தா என்ற கிராமப் பெண் தெய்வங்களுடன் தொடர்புடையது.

மத்தியக் கிழக்கு நாடுகளில் தாய் தெய்வம் மிகவும் சிறப்புற்றிருந்தது. வளமையை மனத்தில் கருதி, இத்தாய் தெய்வத்தைப் போற்றி வணங்கினர். கிரீஸ், ரோம், மற்றும் கிழக்கு ஆசிய நாடுகள், சின்னாசியா பிரிஜியா (Phrygia), லிடியா (Lydia) போன்ற நாடுகளில் தாய் தெய்வத்தை சிபிலா (Cybele) என்று அழைத்துள்ளனர்.*6

Cybele - Mother goddess (Primordial Deity - உலகின் தொடக்க நிலைக் காலத்துக்குரிய தாய் தெய்வம்)

அமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தோனேஷியா போன்ற நாகரிகம் வளர்ச்சி அடையாத நாடுகளில், பெண்களையே சக்தி வாய்ந்தவர்களாகவும், மந்திர தந்திரங்கள் பெற்றவர்கள் என்றும் நம்பினர்.*7 இவர்கள் குழந்தையை ஈன்றெடுப்பதையே மந்திர சக்தியால்தான் என்று கருதினர். ரஷ்யா போன்ற நாடுகளிலும் தாய்மையைக் கண்டு அச்சமுற்றனர் என்றே கூறலாம். பெண்கள் ஓர் உயிரைப் படைக்கும் சக்தியையும், மாந்திரீக வல்லமையையும் பெற்றவர்கள் என்ற நம்பிக்கையை மெய்ப்பிக்கும் வகையில், பெண்கள் குழந்தையைப் பெற்றெடுத்தனர். இதனையே அடிப்படையாகக் கொண்டு, பெண்களே முதன்முதலில் மந்திர சக்தியையும், நோய் தீர்க்கும் மருந்தையும் வழங்கக்கூடிய ஆற்றல் பெற்றவர்கள் என்று நம்பினர்.*8

தாய் – தெய்வமானதும்; தாய் - மாந்திரீக சக்தி பெற்றதும்…

தாய், தெய்வமாகப் போற்றப்படுதலுக்கும், அவளே மாந்திரீகச் சக்தி பெற்றவளாகக் கருதப்படுவதற்கும் இயற்கையே காரணமாகும். இதனை முழுமையாக ஆய்வு செய்த ஜாக் லின்ஸே கூறிய கருத்தை கவனித்தால் அதன் உண்மை விளங்கும் என்பதற்காக, அவரது வரிகளையே இங்கு உங்களுக்கு வழங்கப்படுகின்றது.*9

“புராதன மனிதன் கூட்டு வாழ்க்கையின் மூலமாகவும், அதன் விளைவாகவும் கற்கருவிகளின் உபயோகத்தை மெள்ள மெள்ள அறிந்துகொண்டான். அந்நிலையில், தனக்குப் புறம்பாக இயற்கை இயங்குவதைக் கண்டான். தன்னுடைய சிற்றறிவின் துணைகொண்டு, தன்வசம் இருந்த மிகச் சில கற்கருவிகளின் உதவியோடு, இயற்கையைச் சமாளிக்கவேண்டியவனாக இருந்தான். அவனது கருவிகள் திருந்தத் திருந்த, இயற்கையின் உணர்வும் அதிகரித்தது. கருவிகள் செம்மைப்பட செம்மைப்பட, கூட்டு வாழ்க்கையும் வலிமை பெற்றது. கூட்டம் விரிவடைவதைப் போலவே, இயற்கையும் பரந்து விரிந்து கிடந்ததைக் கண்டான். அவனது அகக்காட்சி விரிவடைந்தது. அதற்கு இணையாகச் சிந்தனையும் விரிவடைந்தது.

“ஒருபுறம், இயற்கையின் சிறு பகுதிகளில் தனது சக்தி பயன்படுவதைக் கண்டான். மறுபுறம், அவனுக்கு அப்பாற்பட்ட சிக்கல் நிறைந்த இயற்கைச் சக்திகள் அவனை அச்சுறுத்திக்கொண்டிருந்தன. அவற்றைப் பற்றி அவனுக்கு எதுவும் தெரியவில்லை. தன்னால் வெற்றிகண்ட பகுதியில், தனது செயல்கள் காரண காரியத் தொடர்புடன் இயங்குவதைக் கண்டான். இவ்வுணர்வின் அடிப்படையில் இயற்கையின் முழுத்தன்மையையும் அறிந்துகொள்ளும் பெருமுயற்சியில் இறங்கினான். தான் காணும் பிரபஞ்சத்தின் ரகசியத்தை அறிய விழைந்த மனிதன், ஏறத்தாழ பின்வருமாறு சிந்திக்கத் துவங்கினான்.

“தனது உணர்ச்சி, தனது நோக்கம் முதலியவை இயங்கியதைப்போலவே, தான் வாழும் கூட்டத்தினரின் உணர்ச்சியும், நோக்கமும் இருந்ததை புறநிலையில் நின்று அவன் ஓரளவுக்கு அறிந்துகொண்டான். தான் இவ்வாறு அறிந்துகொண்ட உண்மையின் அடிப்படையிலேயே எஞ்சிய பரந்த பிரபஞ்சமும் இயங்க வேண்டும் என எண்ணினான். தன்னைப்போலவே இயற்கைக்கும் உணர்ச்சிகளும், ஆசைகளும் இருத்தல் வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான். சூரிய ஒளியில் குதூகளிப்பதும், புன்முறுவல் செய்வதும், சூறாவளியில் கடுஞ்சினமுற்று கர்ஜித்தும் இயற்கை இயங்குவதாகவும், அதற்கு உணர்ச்சிநிலையும் உயிர்நிலையும் கற்பித்தான். இந்தக் கற்பனையில் இருந்துதான் மந்திரம் தோன்றியது. தனக்குள்ளே இருக்கும் ஆசாபாசங்கள், அச்சம் போன்றவை இயற்கைக்கும் உண்டு என்ற நிலையில், தனக்கும் இயற்கைக்கும் பிணைப்பொன்றை ஏற்படுத்திக்கொள்கின்றான். தனக்குள்ளே இருந்து உணர்ச்சி, அச்சம், ஆசை போன்றவற்றைக் கொடுப்பது யார் என்று அவனுக்குத் தெரியாது.

மனிதன் தன்னுடைய சக்தியை அடிப்படையாகக் கொண்டு, தனக்குப் புறம்பாக உள்ள இயற்கையிலும் அதே சக்திகளைக் கண்டு அவற்றை உபயோகித்து அடக்கக் கண்ட கருவிதான் மந்திரம்” என்று லின்ஸே மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்.

அதே அரூபமற்ற சக்தி மனித வடிவம் பெறும்போது, மனிதர்க்கு மந்திர சக்தி இருக்கிறது என்னும் கருத்து தோன்றுகிறது. இவ்வாறு தோன்றிய மந்திர சக்தி, சடங்குகளாக மாற்றம் பெற்று, முதன்முதலில் கூட்டு வாழ்க்கையில் பிரதிபலிக்கின்றன. சிறுசிறு குழுக்களாக வாழ்ந்த மனிதன், மந்திரத்தை கூட்டு வாழ்க்கைக்குப் பயன்படுத்தினான். புதியதொரு மனிதப்பிறவியை உலகுக்குத் தருபவளாகக் காணப்பட்டவள் தாய். அத்தாயும் அசாதாரணமான சக்தி படைத்தவளாக இருந்தமையால், பெண்ணிடமே அந்த மந்திர சக்தியும் இயல்பாகக் குடிகொண்டது. பெண்ணை சக்தியாகக் கருதிய உலக நாடுகள் அனைத்திலும், சக்தி வழிபாடும் பேரன்னை வழிபாடும் ஒரு காலத்தில் தோன்றி வளர்ந்தமைக்கும், பெண்களுக்கே மாந்திரீகச் சக்தி இருக்கின்றது என்பதை அறியவைத்ததற்கும் மேற்கூறிய இவையே காரணமாகவும் அமைந்துள்ளது என்பதும் ஏற்புடையதே.

அடுத்து வரும் அத்தியாயங்களில், இந்தியாவின் முதன்மையானதும் மிகவும் பழமையானதுமான சமயங்களான பௌத்த, சமண மதத்தினர் வழிபட்ட தாய் தெய்வங்களைப் பற்றிக் காண்போம்.

சான்றெண் விளக்கம்

1. A.H. Dani and B.K. Thaper, Indus civilization, UNESCO, 1996.

2. A. Gosh., An Encylopeadia of Indian Archaeology, Munshiram & Manoharlal publishers pvt. Ltd, New Delhi, 1980.

3. Marija Gimbutas, The goddess and gods of Old Europe, Myths and cult Images University of California, 1982.

4. கலாநிதி க. கைலாசபதி, பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும், மக்கள் வெளியீடு, 1966, பக்.12-13.

5. E.O. James, The cult of the mother Goddess, p.959.

6. கலாநிதி க. கைலாசபதி, பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும், மக்கள் வெளியீடு, 1966, பக்.13-14.

7. மேலது, பக். 74-76.

8. மேலது, பக். 73-78.

9. Jack Lindsay, A Short History of Culture, pp.29-32.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com