வளமைத் தாய் தெய்வம்

பெண் ஒருத்தியே ஓர் உயிரைப் படைக்கும் தகுதி படைத்தவள் என்று அனைவரும் உணர்ந்தே இச்சக்கராயி வழிபாட்டை துவக்கினர். வளமை வழிபாட்டில், உச்சகட்டம் என்பது இக்குறியீட்டைக் கொண்ட சிற்பங்களே.

தாய் தெய்வம் என்பது நம்நாட்டில் வழங்கப்படும் வளமையை வழங்கும் தெய்வமாகவே இருந்தது. பெண்கள் வளமைக்குரியவர்கள், எனவே இவர்களையே தாய் தெய்வம் என்று குறித்தனர். நமக்குக் கிடைக்கும் தொன்மையான தாய் தெய்வ உருவங்கள், வளமைச் சடங்கின் குறியீடாகவே காட்சியளிக்கின்றன. இவ்வகையிலான வளமை வழங்கும் தாய் தெய்வங்கள், மெசபடோமியா நாகரிகத்தில் இருந்தே சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தமைக்கான சான்றுகள் தொல்பொருள் சான்றுகளாக அகழாய்வுகளில், மண் உருவங்களாகவும் முத்திரைகளாகவும் கிடைத்துள்ளன.

தாய் தெய்வங்கள்

பல்வேறு விதமான வடிவங்களில் பல்வேறு சூழலில் இவர்களைத் தாய் தெய்வங்கள் எனக் குறித்தனர். முதலில் அவற்றைத் தெளிவுபடுத்திக்கொள்வோம். ஒன்றை உருவாக்குவதிலும், அதனைச் செழிப்படையச் செய்வதிலும் அன்னை மாதாதேவி என்றழைக்கப்படுபவற்றைக் குறிப்பதாகும். தாய் தெய்வம் என்ற சொல்லுக்குப் பெண்மையை முன்னிறுத்துவதும், அவர்களை முதன்மைப்படுதுமே ஆகும். பெண்கள் தாய்மைப்பேற்றினை அடைவதும், பருத்த மார்பகங்களைக் கொண்டுள்ளதும், அவர்களை மனித உருவிலிருந்து வேறுபடுத்தியும், முதன்மைப்படுத்தியும் காட்டக்கூடிய சிறப்புகளைப் பெற்றதால்தான், மனித இனத்தில் பெண்கள் தனித்துவம் வாய்ந்தவர்களாக அமைந்துவிடுகின்றனர்.

தாய் தெய்வத்தைக் காணும்பொழுது, ஒரு பெண்ணின் உருவமும், இடதுபக்கத்தில் குழந்தை ஒன்றையும் ஏந்தியுள்ளதைப் போன்றும் அமைந்திருக்கும். இச்சித்தரிப்பே தாய் தெய்வத்துக்குரிய அடையாளமாக பின்னர் அமைந்துவிட்டது. தாயும் சேயும் காணப்படுவது தாய் தெய்வத்தைக் குறிக்கும் அடையாளக் குறியீடாகும். (Symbolic Representation).

மனித இனத்தை நாளடைவில் இருபெரும் கூறுகளாகக் பகுத்து, ஆண்பால் என்றும் பெண்பால் என்றும் பிரித்துக்கொள்வதற்கு முனைந்தனர். இருபால் சார்ந்தும் வளமை குறித்த சிந்தனை மேலோங்கியது. ஆண்பால் வளமைக் குறியீடாக ஆண்குறி அல்லது பாணம் ஆனது. பெண்ணின் வளமை பெண்குறி குறியீடானது.

சக்ராயி மற்றும் லஜ்ஜாதேவி தாய் தெய்வங்கள்

பெண்ணின் வளமைக் குறியீடாக ஆன பெண்ணின் பிறப்புறுப்பைக் காட்டும் சிற்பங்கள் சக்ராயி மற்றும் லஜ்ஜாதேவி தாய்தெய்வங்களாக வழிபாட்டிலும், கோயில் தூண் சிற்பங்களிலும், கோயில் கோபுரச் சிற்பங்களிலும் இடம் பெற்றுள்ளன. சக்ராயி வழிபாடு சக்தியின் வழிபாடாக இன்றும் வடமாநிலங்களில் தொடர்கிறது.

சக்கராயி தெய்வம்

சக்கராயி தெய்வம்

தமிழகத்தில் அரிதாகவே பெண்குறி தாய் தெய்வங்கள் சிற்பங்களில் இடம்பெற்றுள்ளன. கர்நாடக, ஆந்திர மாநிலங்களிலும், வடஇந்தியாவில் பரவலாகவும் இவ்வழிபாடும் இவ்வகைத் தாய்தெய்வ உருவங்களும் காணக்கிடைக்கின்றன.

சக்கராயி பெண் தெய்வங்கள்

சக்கராயி வழிபாடு

தாய்தெய்வ வழிபாடு என்பது மிகவும் பழமையானது. சக்கரம் என்பது பெண் உறுப்பைக் குறிப்பதே. மறைமுகமாகக் குறிக்கும் பொழுது அக்குறியீட்டை குறிக்க முக்கோணம், நட்சத்திரம் போண்றவற்றை வரைந்துக் காட்டுவர்.

பெண் ஒருத்தியே ஓர் உயிரைப் படைக்கும் தகுதி படைத்தவள் என்று அனைவரும் உணர்ந்தே இச்சக்கராயி வழிபாட்டை துவக்கினர். வளமை வழிபாட்டில், உச்சகட்டம் என்பது இக்குறியீட்டைக் கொண்ட சிற்பங்களே என்றால் அது மிகையாகாது. முன்பே குறிப்பிட்டது போல் இந்த வழிபாட்டு மரபு வட இந்தியாவில் பரவலாக தொடர்கிறது. தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் குறைவே எனலாம்.

அரசுகள் ஆட்சி புரிந்த காலகட்டங்களில் பாலுணர்வுச் சிற்பங்கள் என்று அதை ஒதுக்கி கோபுரங்களிலும், கோயில்களில் அமைந்த பல்வேறு மண்டபங்களின் அடிப்பகுதியிலும் சிறிய அளவில் புடைப்புச்சிற்பமாக காட்டப்படும் வழக்கம் வந்ததை அறிய முடிகிறது. முழுமையாக ஒதுக்க முடியாவிட்டாலும் ஆங்காங்கே வளமையின் சின்னத்தையும், தாய்மையையும் போஏஏஉம் பெண் தெய்வங்களையும் பெருமைபடுத்தியும், நினைவுபடுத்தியும் கொண்டேதான் இருந்துள்ளனர் என்பதையே இச்சிற்பங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

இவ்வகை தாய்தெய்வ சிற்பங்களில் சில இடங்களில் தாமரை மலரை தனது இருக்கையாகவும், சில இடங்களில் தலைப்பகுதியை தாமரை மலரின் அமைப்பில் உருவகப்படுத்தியும் காட்டியுள்ளனர். தாமரை மற்றொரு வளமைக் குறியீடாகவும், மங்கலக்குறியீடாகவும் உருவம் கொள்வது இந்திய மரபாகும்.

லஜ்ஜா தேவி அல்லது லஜ்ஜா கெளரி

பெண் உறுப்பைக் காட்டும் தாய் தெய்வ உருவங்களே லஜ்ஜா தேவி என்று அழைக்கப்படுகிறது. சக்கராயிக்கும் லஜ்ஜா தேவிக்கும் உருவ வேறுபாடுகள் கிடையாது. லஜ்ஜா தேவியை லஜ்ஜா கெளரி என்றும் அழைப்பர்.

தாமரை தலைச் சித்தரிப்புடன் லஜ்ஜா தேவி சிற்பங்கள்

உலக மக்களின் அமைதியையும், வளமையையும் எடுத்துக்காட்டுவதே இச்சிற்பங்களில் காட்டப்பட்ட தாய் தெய்வ அமைப்பாகும். மனித உயிரின் தோற்றத்தையும், அவை உருவாகி வளர்ந்த இடத்தையும் நாம் மூடிமறைத்ததால்தான், தாய் தெய்வத்தின் சிறப்பை இன்று அறியாமல் உலக மக்கள் நிலை தடுமாறிச் செல்கின்றனர். உலகில் பிறந்த மக்கள் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியது, நமது பிறப்பையும் இறப்பையுமே ஆகும். நாம் எங்கிருந்து வந்தோம், எங்கு செல்கிறோம் என்பதை பண்டைய காலத்திலேயே நமக்குச் சிற்பமாக வடித்துக் கொடுத்தனர்.

தொன்மையும் தாந்த்ரீகமும்

இந்தியாவில், ரிக் வேத அதீதி பெண் தெய்வத்தை முதல் லஜ்ஜா தேவியாகக் கொள்வர். சக்தி வழிபாட்டுடன் தொடர்புபடுத்தப்பட்டு இணைக்கப்பட்டதால், தாந்த்ரீக வழிபாட்டு மரபிலும் சக்கராயி / லஜ்ஜா தேவி வழிபாடு போற்றுதலுக்கு உரிய இடம் பெற்று விளங்குகிறது.

லஜ்ஜா கெளரி - தனியான தாமரையுடன்

முழு பெண் உருவத்தில் லஜ்ஜா கெளரி

முழு பெண் உருவத்தில் லஜ்ஜா கெளரி

ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில், குடவல்லி (Kudavalli) என்ற இடத்தில் உள்ள சங்கமேஸ்வரர் கோயிலில் உள்ள பொ.ஆ.650-ஐ சேர்ந்த லஜ்ஜா கெளரி சிற்பம்

தற்பொழுது, பாதாமி அருங்காட்சியகத்தில் உள்ள கர்நாடக மாநிலம், பீஜப்பூர் மாடத்தில் கிடைத்த நாகநாதா கோயில் லஜ்ஜா கெளரி சிற்பம். காலம் - பொ.ஆ.650

மு.பொ.1-ம் நூற்றாண்டு சுடுமண் லஜ்ஜா கெளரி சிற்பம் – சந்திரகேடுகார் - அலகாபாத் அருங்காட்சியம்

பொ.ஆ.1-ம் நூற்றாண்டு குஷானர் கால சுடுமண் லஜ்ஜா கெளரி - அலகாபாத் அருங்காட்சியம்

*

தமிழகத்தில் வளமைச் சின்னங்களின் நிலை

வளமையைக் குறிக்கும் சின்னங்கள் மனதை நெருடுவதாக இருந்தாலும், இதில் நாம் அறிய வேண்டிய உண்மைகள் ஏராளம். அதற்காக, வரலாற்றின் பின்னணியை சற்று கவனித்தால், அதன் தெளிவு புலப்படும். பழைய கற்கால மக்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்த காலத்தில், அவர்களின் நுண்ணறிவுக்கு எட்டிய கருத்து யாதெனில், உலக வளமை எங்கிருந்து தோன்றுகிறது என்பதைக் கண்டறிந்ததே ஆகும். பின்னர், அதனை நன்குணர்ந்து போற்றியதால், நாடும் நாமும் செழித்தோம். கால வளர்ச்சியில் வளமைச் சின்னங்களை மறக்க நேரிட்டதால் ஏற்பட்ட விளைவுகளைப் பற்றி சிறிது உற்று நோக்குதல் இங்கு தேவையானதாகிறது. மக்கள், தாம் கடந்துவந்த பாதையை மறப்பதால், மனிதநேயம் அழிந்துபோகின்றது. தான் வந்த இடம் தெரியாததால், தன் தாயை மறக்கிறான். இது சற்று கடினமாகத் தோன்றினாலும், உலக மக்களின் வாழ்க்கைக்கு இன்றியமையாததாகிறது.

நாடோடிகளாகத் திரிந்த மக்கள் நகர வாழ்கைக்கு மாறும்பொழுதும், அரசு உருவாக்கம் பெற்ற காலத்துக்குள் தள்ளப்பட்டபோதும், இவர்கள் வளமைச் சின்னங்களை மறக்கத் தொடங்கினர். பின்னர் மறைக்கச் செய்தனர். இதனால், வம்சவிருத்திகள் குறையத் தொடங்கின. பாலுணர்வு எனத் தவறாகப் பெயரிட்டதால் வந்த விளைவு போலும். இதுவும் மனிதனின் அன்றாட செயல்முறைகளில் ஒன்று என்பதை உணர்த்தத் தவறியதால், வளமைச் சின்னங்கள் சிற்பங்களை கோயில்களில் யாரும் எளிதில் அறியமுடியாத, காணமுடியாத இடங்களில் வைத்தனர். கண்ணனின் லீலைகளையும், இதனுடன் இணைத்து கடவுளையும் துணைக்கு சேர்த்துக்கொண்டனர்.

காலப்போக்கில் பல்லவ, சோழப் பேரரசுகள் இதில் அதிக நாட்டமில்லாமல் போயின. அதனைப் பின்பற்றி வந்த விஜயநகரப் பேரரசும், நாயக்கர்களும் தமிழகத்தை ஆட்சி புரிந்தபொழுது ,இதன் விளைவுகளையும், அதன் தாக்கத்தையும் நன்கு உணர ஆரம்பித்தனர் எனலாம். அதன் விளைவாகவே, தங்களது வளமையும் குன்றத் தொடங்கியதாகக் கருதினர். இதனை உணர்ந்த விஜயநகர நாயக்க மன்னர்கள், தாங்கள் எழுப்பிய கோபுரங்களில் வைத்த வளமைச் சின்னங்களை கோயிலுக்கு உள்ளேயே ஸ்வர்ண மஹால், கல்யாண மண்டபம் என அமைத்து, அம்மண்டபங்களைச் சுற்றிலும், அதிட்டானத்திலும், அதன் மேல் வரிகளிலும் புடைப்புச் சிற்பங்களாக அமைக்கத் தொடங்கினர்.

திருமண நிகழ்வு முதல் ஒரு பெண் குழந்தையை ஈன்றெடுப்பது வரை புடைப்புச் சிற்பங்களாக வடித்தனர். இவற்றை, காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி திருக்கோயிலில் அமைந்த நாயக்கர் மண்டபத்தில் இன்றைக்கும் காணலாம். இவை மக்கள் அனைவரும் எளிதில் அறிந்துகொள்ளவும், அதனை தவறான செயல் என்று கருதாமல் இருக்கவும், முறையான திருமணத்தை ஏற்பதும் என, செய்திகளை தெளிவாக இத்தகைய சிற்பங்களில் வடித்தனர். தவறுகளைக் களையவே கோயில்களிலேயே இறைவனது திருவடியிலேயே திருமணங்கள் நடத்தப்பெற்றன என்பதையும் நாம் உற்றுநோக்குதல் வேண்டும்.

வளமைச் சின்னங்களும் - பாலுணர்வுச் சின்னங்களும்: ஓர் ஒப்பீடு

நாயக்கர் காலத்தில், தருமபுரி பகுதியை சென்னப்ப நாயக்கன் ஆட்சி புரிந்துள்ளான். இவன், தனது மகள் திருமண வாழ்வில் ஈடுபட பெரிதும் அச்சமுறுகிறாள் என்பதை அறிந்த அரசன், தனது மகளிடம் நேரடியாக இவற்றை தெளிவுபடுத்தத் தயங்கியதால், அதற்காக சின்னயம்பேட்டை என்ற இடத்தில் ஒரு குளத்தை வெட்டுகிறான். அக்குளம் முழுவதையும் பலகைக் கற்களைக் கொண்டு அமைக்கின்றான். அப்பலகைக் கற்கள் முழுவதும் புடைப்புச் சிற்பங்களால் அலங்கரிக்கப்படுகிறது. அவை கூறுவது என்னவெனில், தினசரி அரச வாழ்வில் நடைபெறும் நிகழ்ச்சிகள், அடுத்து மக்களின் அன்றாட வாழ்வியல் முறைகள், அடுத்துவரும் படிக்கட்டுகளில் விலங்குகள், மனிதர்கள் எனப் பலவும் புணரும் சிற்பங்களைப் புடைப்புச் சிற்பங்களாக வடிக்கப்பட்டது.

இதன் கருத்து, வளமையின் அடிப்படையே புணர்தல் என்ற கருத்தும், உலகத்தில் படைக்கப்பட்ட ஜீவராசிகள், விலங்குகள் அனைத்துக்கும் இது பொதுவானது என்பதையும், இது தவறானதல்ல என்பதையும் எடுத்தியம்புவதாகவே உள்ளது. இக்குளம் தற்பொழுது தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களில் ஒன்றாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இது, திருவண்ணாமலை – அரூர் சாலையில், தாணிப்பாடியை அடுத்து சின்னயன்பேட்டை நுழைவுப் பகுதியில் அமைந்துள்ளது. இதேபோன்று மேலும் ஒரு குளம் பீமரப்பட்டியில் அமைந்துள்ளது. இவை அனைத்தும், வளமைச் சின்னங்களைப் போற்றுவதாகவே அமைகிறது.

வட இந்தியாவில் கஜுராஹோ கோயில் சிற்பங்கள் அனைத்தும் வளமையைத் தூண்டும் சிற்பங்களே ஆகும். இவை அனைத்தும், நாம் எதை மறந்தோமோ அதனை நினைவூட்டுவதாகவே அமைந்துள்ளன. இவை அனைத்தும், பொ.ஆ.13-16-ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் அமைந்தவை என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே, வளமைச் சின்னங்களைப் போற்றுவோம்; முறையான திருமணத்தையும் தாய்மையையும் வளமாக்க, கண்ணியமான தாய்மையையும் போற்றுவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com