அம்பிகா இயக்கியும் காரைக்கால் அம்மையாரும் (சமணமும் சைவமும்) - 1

திருவாலங்காட்டுக்கு ஈசனைத் தரிசிக்க ஞானசம்பந்தர் வரும்போது இப்பதிகத்தை தன் காலால் தொடுதல் பாவமென்று கருதி, ஊருக்கு வெளியேயே தங்கி நடராசரைப் புகழ்ந்து பாடல்கள் பல பாடினார்

இந்தியாவில் பௌத்தமும் சமணமும் தழைத்தோங்கிய காலத்தில், இவ்விரு சமயங்களும் நாட்டின் அனைத்துப் பகுதியிலும் பரவி தங்களது கருத்துகளை நிலைநாட்டி, மக்களிடையே பெரும் செல்வாக்கைப் பெற்றன. சமயங்கள் வளரும்போது காழ்ப்புணர்ச்சியும் உடன் சேர்ந்து வளர்வது பண்பாட்டு இயக்கவிதிகளின் முறைப்படுவதாகவே தோன்றுகிறது. சங்க காலத்தைப் பார்க்கும்போது இவ்வுண்மை தெளிவாகும்.

திராவிடரின் ஆரியருக்கு முற்பட்ட, வேறுபட்ட வழக்குகளும், ஆரியரின் வேத வழக்கும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்வதை சில சங்க கால, சங்கம் மருவிய கால இலக்கியங்கள் நமக்குத் தெளிவுபடுத்துகின்றன. அதேபோல, பௌத்தமும் சமணமும் வளர்ந்து வந்த காலத்தில், சைவமும் வைணவமும் தலைதூக்கத் துவங்கின. இவ்வைதீகச் சமயங்கள் வலுவடைவதற்குரிய வழிகளைக் கண்டறிந்து, தங்கள் சமயங்களை மக்களிடையே கொண்டு சேர்க்க பெரும் முயற்சிகள் மேற்கொண்டனர்.

சமணமும் பௌத்தமும் தமிழகத்தில் நன்கு வளர்ச்சி அடைந்ததைத் தொடர்ந்து, சைவமும் வைணவமும் தங்களது சமய வளர்ச்சிக்காகப் பக்தி மார்க்கத்தையும், இஷ்டதெய்வங்களையும், தனிப்பெருந்தெய்வங்களையும் மக்களிடையே தோற்றுவித்தன.*1 சைவமும் வைணவமும் தங்களது கடவுளர்களான சிவன், விஷ்ணு ஆகியோரின் வழிபாட்டில் மிகவும் சிறப்புற்ற வேளையில், இவ்விரண்டு சமயங்களும் நமக்கு முன்னிருந்த பல சமயங்களின் சமய நம்பிக்கைகளையும், வழிபாட்டு முறைகளையும், தெய்வங்களையும் தம்முடன் பல்வேறு வகைகளில் இணைத்து செயல்படத் துவங்கின.*2 பின்பு, நன்கு வளர்ச்சியுற்ற நிலையில், சைவமும் வைணவமும் மதப்பூசலில் ஈடுபட்டன. இந்நிலை, பொ.ஆ. 18-19-ம் நூற்றாண்டு வரை தொடர்ந்து நீடித்தது என்பர்.*3

சைவ, வைணவ சமயங்களின் தொன்மையைக் கண்டறிய ஆராயும்போது, வேத வழக்குக்கு முற்பட்ட காலத்திலேயே சைவ, வைணவ வழிபாடு சிறப்படைந்தது என்பதை அறிய முடிகிறது. இதற்குச் சான்றாக, சிந்து சமவெளி நாகரிகத்தில் சிவ வழிபாட்டு எச்சங்கள் காணப்பட்டதைக் கூறலாம். சமணமும் பௌத்தமும் தமிழகத்தில் மெல்ல மெல்ல குறையத் துவங்கியதும், இரு சமயங்களுக்கும் இடையே நேரடிச் சமயப் போராட்டம் தலைதூக்கியது. இதனை ஒத்ததே, அம்பிகாவும் காரைக்கால் அம்மையாரும் ஆகும்.

சங்க காலத்திலிருந்தே, சமயங்களின் இவ்வகைப் போட்டிகளை இலக்கியங்களின் வாயிலாக அறியலாம். பத்துப்பாட்டிலும், இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலையிலும் சமயங்கள் அருகருகே இருந்துகொண்டு போட்டியிடுவதைக் காணலாம். பத்துப்பாட்டில் ஒன்றான மதுரைக்காஞ்சியில், அந்தணர் பள்ளியும், பௌத்தப் பள்ளியும் சிறப்புற்று விளங்கும் மதுரை மாநகரைக் காணலாம்.*4

பண்டைய தமிழகம் மது, மாமிசம் முதலியவற்றின் இருப்பிடமாகத் திகழ்ந்தபோது, சமணமும் பௌத்தமும் கொண்டுவந்த அமைதி, ஒழுக்கம், கட்டுப்பாடு, புலால் மற்றும் மது வெறுப்பு, பொருளாசை வெறுப்பு போன்ற சிறந்த நற்பண்புகளை மக்கள் விரும்பி எளிதில் ஏற்றுக்கொண்டனர். அதேசமயத்தில், பள்ளிகளுக்கும் விகாரைகளுக்கும் பொருள் சேர்த்தலை மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெறுக்கத் துவங்கினர். இச்சமயங்கள், செல்வந்தர்களை ஆதரிக்கும் போக்கு வளர்ந்தது. இவை மக்களுக்குப் பெரும் சுமையாக மாற்றம் பெற்றன. வணிகரும் வசதி படைத்தோரும் ஆதரிக்கத் துவங்கியதும், இச்சமயங்கள் சரிவை நோக்கிச் செல்லத் துவங்கின. இங்குதான் சமணச் சித்தர்களுக்கும், சமயக் குரவர்களுக்கும் இடையே பெரும் போர் மூண்டது எனலாம்.

சமயக் குரவர்களின் தாக்குதல்களால் சமணச் சித்தர்களும் சற்று சோர்வடைந்தனர். இதன் முன்னோடியாக, விடிவெள்ளியாகத் தோற்றுவிக்கப்பட்டவர்தான் காரைக்கால் அம்மையார். இவர் தன் திருப்பதிகங்களில், சிவனைக் கருணையின் பிழம்பாகவும், கோபத்தின் சின்னமாகவும், அழிவின் சக்தியாகவும் கொண்டாடுகின்றார். இவர், சிவனது பண்பை தமிழகத்து வழிபாட்டு முறைகளுக்கு ஏற்ப பாடுகின்றார்.

சைவ, வைணவ வளர்ச்சிக்கு நாயன்மார்களும் பெரும் பங்கு ஆற்றியுள்ளனர். சைவ சமய மறுமலர்ச்சி பக்திப்பிரவாகமாகத் தமிழகத்தில் ஓடப்போகிறது என்பதைச் சுட்டிக் காட்டி நிற்பவர் காரைக்கால் அம்மையார். இவருடன் இணைந்து, நாயன்மார்களும் பக்தி மார்க்கத்தை உச்சிக்குக் கொண்டுசென்றனர். தமிழகத்தில் பக்தியானது பொருளாதார, சமூக, அரசியல், சமயப் பேரியக்கமாக மாறியது. இதனைக் கண்ணுற்ற அப்போது தமிழகத்தை ஆட்சிபுரிந்த பல்லவ மன்னன் மகேந்திரவர்மன், சமணப் பள்ளிகளை இடித்து சிவனுக்கு கோயில்களைக் கட்டினான் என்று பெரியபுராணம் தெரிவிக்கிறது.*5

“வீடறியாச் சமணர் மொழிபொய்யென்று மெய்யுணர்ந்த

காடவனும் திருவதி நகரின்கட் கண்ணுதற்குப்

பாடலிபுத்திரத்தில்மண் பள்ளியோடு பாழிகளுங்

கூடவிடித்துக் கொணர்ந்து குணதரவீச்சுரமெடுத்தான்”

இவ்வாறு, சைவம் தழைத்தோங்கிய காலத்தில், மக்களின் கருத்தைக் கவருவதாக, சமண சமயத்தில் சிறப்புற்று வாழ்ந்த சாசனா தெய்வங்களான இயக்கியர்கள் உள்ளனர். சமணத்தில், இருபத்தி நான்கு தீர்த்தங்கரர்களுக்குப் பாதுகாப்பாக இருபத்தி நான்கு இயக்கியர்கள் இருந்து பல நற்செயல்களைப் புரிந்துள்ளனர். அவர்களில், சில குறிப்பிட்ட சாசனா தெய்வங்களே இன்றும் பல்வேறு பெயர்களால், பல்வேறு சமயத்தவராலும் போற்றப்பெற்றவர்களாக உள்ளனர். அவர்களுள் தலைசிறந்த பெண்தெய்வமாக விளங்கியவளும், தமிழகத்தில் பரவலாகப் போற்றப்பட்டவளுமாக இருப்பவள் அம்பிகா இயக்கியம்மனே ஆகும். இவளுக்கு பல இடங்களில் தனிக் கோயில்களும், கல்சிற்பங்களும், செப்புத் திருமேனிகளும் அமைத்துப் போற்றியுள்ளதை தமிழகத்தில் கிடைத்த சான்றுகளின் அடிப்படையில் உணரமுடிகிறது.

இதனோடு, சைவ சமயக் குரவர்களால் பாராட்டப்பெற்றவளும், சிவபெருமானின் அருள்பெற்று அவரின் திருமணக் காட்சியை அவரது பாதத்தின் அடியில் இருந்து காணும் பேறு பெற்றவர் காரைக்கால் அம்மையார். எனவே, இவர்கள் இருவரின் செய்திகளையும் ஒருங்கிணைத்துப் பார்த்தல் அவசியமாகிறது. இவ்வாறு ஒருங்கிணைத்துப் பார்ப்பதால், தமிழகத்தில் சமண சமயக் கருத்துகள் பக்தி மார்க்கம் வாயிலாக எவ்வாறு விரிவடைந்தது, நுழைந்தது என்பதையும், அதன் தாக்கம் தமிழகத்தில் எவ்வாறு போற்றப்பட்டது என்பதையும் காணமுடியும். தமிழகத்தில் பல்வேறு சமயக் கருத்துகள் சமய மாற்றங்களால் அழிந்துபடாமல், பிற சமயங்களின் மேல் அதனைக் கொண்டு சென்று, எக்காலத்திலும் எல்லா சமயத்தவர்களும் ஏற்றுக்கொள்ளும்படி மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் சமயக் குரவர்களின் பங்கு போற்றுதலுக்குரியது.

இயக்கி அம்பிகா

இயக்கி அம்பிகாவின் செப்புப் படிமம் - சிங்கனிக்குப்பம், விழுப்புரம் மாவட்டம்

தமிழ் நிகண்டுகளான பிங்கலம், சூடாமணி போன்றவற்றில், அம்பிகா இயக்கியின் பல பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. தர்மதேவதை, மரகதவல்லி, அம்பிகை, அம்பாலிகா, பூகமர்நிழல்வஞ்சி, பரமசுந்தரி என்று பல்வேறு பெயர்கள் அவளது சிறப்பான பண்பு கருதி அமைக்கப்பட்டதாகத் தெரிகிறது. இவளது தோற்றத்தை, தமிழகச் சிற்பங்களில் அழகுற வடித்துள்ளனர். கரண்டமகுடத்துடன் அமர்ந்த நிலையிலும், சில இடங்களில் நின்ற நிலையிலும் காணலாம். இவள் நேமிநாதரின் இயக்கியம்மன். இவளைக், கூஸ்மன்டினி என்றும் அழைப்பர். இவள் நான்கு கரங்களுடன் காட்சியளிப்பாள். கைகளில் மாங்கனிகள் அடங்கிய கொத்து, பாசம், குழந்தைகள், மேலும் இவளது வாகனம் சிம்மம் ஆகியவற்றுடன் காட்சியளிப்பாள்.*6 நமக்கு இரு கைகளுடன் உள்ள சிற்பங்களும், செப்புத் திருமேனிகளும் கிடைத்துள்ளன.

இயக்கி அம்பிகாவின் வரலாறு

அம்பிகை, முதன்முதலில் வடஇந்தியாவில் கிரிநகரம் என்ற கிராமத்தில் சோமர்சன் என்ற அந்தணர் ஒருவருக்கு மனைவியாக வாழ்ந்துள்ளாள். இவளுக்கு இரண்டு ஆண்மக்களும், இவர்களோடு தோழிப்பெண் ஒருத்தியுடனும் வாழ்ந்து வந்தாள். சோமர்சன் தனது முன்னோர்களுக்குப் பித்ருகடன் அளிப்பதற்காக அறுசுவை உணவு படைத்தான். தனது உறவினர்களையும் அவ்விருந்துக்கு அழைத்திருந்தான். உணவருந்துவதற்கு முன்னர் அனைவரும் அருகில் உள்ள ஆற்றில் புனித நீராடி, பின்னர் பூசை செய்து உணவருந்தலாம் என்று கூறி, தனது மனைவி அம்பிகாவை மட்டும் வீட்டில் இருக்கச் செய்துவிட்டு, அனைவரும் ஆற்றுக்கு நீராடச் சென்றனர். அம்பிகை மட்டும் வீட்டில் தனித்திருக்கையில், அந்நகரத்துக்கு அருகில் அமைந்துள்ள மலையில் பல நாட்களாக உண்ணாமல் விரதம் இருந்து இறைவழிபாட்டில் ஈடுபட்ட ஒரு சமணத் துறவி, அம்பிகை வீட்டு வாசலில் வந்து யாசகம் கேட்டு நின்றார். சமணத் துறவியின் நிலை கண்டு, அம்பிகா தன் வீட்டில் படையலுக்கு வைத்திருந்த படையல் உணவுகளை சமணத் துறவிக்கு அன்னமிட்டு மகிழ்ந்தாள்.

ஆற்றுக்குச் சென்ற சோமர்சன், தனது உறவினர்கள் அனைவருக்கும் வீட்டில் சமைத்துவைத்திருக்கும் அறுசுவை உணவை வழங்க ஆவலுடன் வீட்டுக்கு வந்தான். அதுசமயம், படையலுக்கு வைத்திருந்த உணவை சமணத் துறவிக்குப் பரிமாறியதால் அந்த உணவு எச்சிலாயிற்று என்று சோமர்சனும் அவனது உறவினர்களும் கோபம் கொண்டனர். இதனால், அம்பிகையை அவன் வீட்டை விட்டு வெளியேறச் செய்தான். அம்பிகை தனது குழந்தைகளுடன், மிகுந்த வேதனையுடன் செய்வதறியாது தனது சேடிப்பெண்ணுடன் வீட்டில் இருந்து வெளியேறினாள். எங்கு செல்வது என அறியாத நேரத்தில், சேடிப்பெண்ணையும் தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு, தன்னிடம் யாசகம் பெற்ற சமணத் துறவி வாழும் மலைக்கே சென்று தனது குறைகளை அவரிடம் முறையிட்டாள். சமணத் துறவி வாழும் மலையிலேயே மனம் கலங்கிய நிலையில் செய்வதறியாத தவித்து நின்றாள் அம்பிகை. அந்தச் சமயத்தில், அவள் முன் கற்பகவிருட்சம் ஒன்று தோன்றி, அவளுக்குத் தேவையானவற்றையெல்லாம் அளித்து, அவளை எவ்வித மனக்கவலையும் இன்றி வாழ வழிவகுத்தது என்பர்.

நடந்த நிகழ்ச்சிகளைக் கேள்வியுற்ற சோமர்சன், தனது மனைவி தெய்வ அருளைப் பெற்றவள், எனவே அவள் நம் மீது கோபம் கொள்வதற்கு முன் நாமே வழியச்சென்று அவளுடன் வாழ்க்கை நடத்தலாம் என்று விரும்பி, அவள் இருந்த மலையை நாடிச் சென்றான். சோமர்சன் வருகையைக் கண்ணுற்ற அம்பிகா ,தனது இடம் அறிந்து மீண்டும் துன்புறுத்தவே இங்கு வந்துகொண்டிருக்கின்றான் என்று கருதி, மலை மீது ஏறி உச்சிக்குச் சென்று தனது உயிரை மாய்த்துக்கொள்கிறாள். அவள் செய்த தர்மத்தின் பயனாக, அவள் தேவர்கள் வாழும் உலகில் பொன்மயமான இயக்கியாக மாறிப் பிறக்கும் பாக்கியத்தைப் பெற்றாள்.

இயக்கியாகப் பிறந்த அம்பிகை, தனது குழந்தைகளையும், சேடிப்பெண்ணையும் பிரிந்து வாழ இயலாமல், இயக்கி வடிவில் தன் குழந்தைகள் முன் சென்றாள். குழந்தைகள் அவளது உருவினைக்கண்டு அஞ்சினர். இதனால் மிகவும் வருத்தமுற்ற அம்பிகாவுக்கு தெய்வத்தின் கருணையினால், நினைத்தபோது மனித உருவம் எடுத்து தனது குழந்தைகளுடனும், சேடிப்பெண்ணுடனும், கணவனோடும் சேர்ந்து மகிழ்ந்து வாழலாம் என்று அருள் கிடைத்தது.

மானிட வடிவில் வந்து கணவனோடு வாழும் காலத்தில், அம்பிகையைப் பார்த்து நான் உனது பொன்மயமான இயக்கி உருவத்தைக் காண வேண்டும் என்று கணவன் கேட்க, அவளும் அதற்கு இசைந்து தனது பொன்மயமான இயக்கியம்மன் உருவைக் காட்டினாள். இதனைக் கண்ட சோமர்சன் பயந்துபோய் வீட்டை விட்டு வெளியே சென்று தற்கொலை செய்துகொள்கின்றான். இவனே மறுபிறவியில் சிம்மமாகப் பிறந்து, தனது மனைவியான அம்பிகைக்கே வாகனமாக இருந்து செயல்படலானான். இறுதியில், நேமிநாதரின் இயக்கியாகும் பேற்றினை அம்பிகை பெற்றாள் என்று ஸ்ரீபுராணம் இவளது கதையை விளக்கமாகக் கூறுகிறது.*7

காரைக்கால் அம்மையார்

காரைக்கால் அம்மையார் பற்றிய செய்திகள் சேக்கிழாரின் பெரியபுராணத்தில் விளக்கமாகக் காணமுடிகிறது. திருவாலங்காடு, காரைக்கால் அம்மையார் தலையால் நடந்த பதி என்று குறிப்பிடுவர். எனவேதான், திருவாலங்காட்டுக்கு ஈசனைத் தரிசிக்க ஞானசம்பந்தர் வரும்போது இப்பதிகத்தை தன் காலால் தொடுதல் பாவமென்று கருதி, ஊருக்கு வெளியேயே தங்கி நடராசரைப் புகழ்ந்து பாடல்கள் பல பாடினார் என்ற இக்குறிப்பினை, பிற்காலச் சோழர்கள் காலத்தில் வாழ்ந்த சேக்கிழார் எடுத்துக்கொண்டு விவரிக்கின்றார். சம்பந்தரின் திருவாலங்காட்டுப் பதிகமும் இதனைக் குறிக்கிறது.

சம்பந்தரின் காலம் பொ.ஆ. 7-ம் நூற்றாண்டு என்றே கருதுவர். காரைக்கால் அம்மையார், அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணிமாலை, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் போன்ற சிறப்பு வாய்ந்த பாடல்களைப் பாடியவர்.*8 காரைக்கால் அம்மையாரின் காலம் பொ.ஆ. 5-ம் நூற்றாண்டு என்று கருதப்படுவது உண்டு. வேறு சிலர், பொ.ஆ. 3-ம் நூற்றாண்டு என்றும் குறிப்பர்.

காரைக்கால் பேய்

நடராஜர் காலுக்கு அருகில் பேய் உருவில் காரைக்கால் அம்மையார் - கோணேரிராஜபுரம்

காரைக்கால் அம்மையார் தான் பாடிய பாடல்களில் தன்னைக் குறிப்பிடும்போது, காரைக்கால் பேய் என்றே குறிப்பிடுகிறார். இவரது பெரும்பான்மையான பாடல்களில், சிவபெருமான் சுடுகாட்டில் பேய் நின்று பாடவும் ஆடவும் நடனமிடும் காட்சிகளையும் மிகவும் சிறப்பித்துக் கூறுவார்.

‘பேய்நின்று பாடப்பெருங்காடரங்காப் பெயர்ந்து நட்டம்

போய்நின்று பூதந்தொழச் செய்யு மொய்கழற புண்ணியனே’

- திருவிரட்டை மணிமாலை (15)

என்பது காரைக்கால் அம்மையாரின் பாடல் வரியாகும். இறைவனுக்குப் பணி செய்திருப்பதும், அவரது அடியார்க்கு அடிமை பூண்டிருப்பதுமே என்று குறிக்கின்றார். மேலும், சுடுகாட்டு நிகழ்ச்சிகளைச் சிறப்பித்துப் பாடுவதால், இவர், காரைக்கால் பேய் என்றும் காரைக்கால் பேயர் என்றும் பெயர் பெற்றிருக்க வேண்டும்.*9

சேக்கிழாரின் பெரியபுராணம் கூறும் செய்தி

பெரியபுராணத்தில் திருநின்ற சருக்கத்தில் காரைக்கால் அம்மையார் பற்றிய தகவல்களைக் குறிப்பிடும்போது, இவர் புனிதவதி என்ற பெயரில் தனதத்தனார்க்கு மகளாகப் பிறந்தவர். வணிகர் குலத்தில் பிறந்த இவருக்கு நாகப்பட்டினத்தில் நீதிபதி என்ற வணிகரது மகன் பரமதத்தனுக்கு மணமுடித்து வைத்தனர். பரமதத்தனிடம் தொழில் நிமித்தமாக வந்த இருவர் இரண்டு மாங்கனிகளை அவனிடம் அளித்தனர். அதனைப் பெற்ற பரமதத்தன், அவற்றை தனது மனைவி புனிதவதியாரிடம் கொடுத்தான். புனிதவதியார் அப்பழங்களை வீட்டில் வைத்திருந்த வேளையில், பிச்சை கேட்டு வந்த சைவ அடியாருக்கு அவற்றில் ஒன்றை உணவாகப் படைத்து மகிழ்ந்தார்.

பரமதத்தன் உணவருந்த வீட்டுக்கு வந்தான். எஞ்சியிருந்த மாங்கனியை உணவுடன் வைத்துப் படைத்தார். அதன் சுவையை உணர்ந்த பரமதத்தன், இன்னொரு கனியையும் கொண்டுவரச் சொன்னான். வீட்டின் உட்புறம் சென்று மிகவும் வேதனைப்பட்ட புனிதவதி மிகவும் தவித்தாள். புனிதவதி, சிவனை வேண்டி மற்றொரு கனியைப் பெற்றாள். அக்கனியை பரமதத்தனுக்கு உணவாகப் படைத்தாள். மாங்கனியின் சுவை முன்னதைக் காட்டிலும் அதிமதுரமாக இருப்பதை அறிந்த பரமதத்தன், இவ்வளவு சுவை கூட்ட என்ன செய்தாய் என்று கேட்க, அவளும் பெருமிதத்தால், இக்கனி இறைவனது அருளால் பெற்றது என நடந்ததை விளக்கமாகக் கூறினாள். இதனை நான் நம்பத் தயாரில்லை. மீண்டும் ஒரு கனியை வரவழைத்துக் காட்டு எனக் கூறினான். புனிதவதியாரும் கணவனின் புரிதலுக்காக இறைவனிடம் வேண்டி மீண்டும் ஒரு கனியை வரவழைத்துக் கொடுத்தாள்.

பரமதத்தன் தனது மனைவி தெய்வ அருள் பெற்றவள். எனவே அவளை எனது துனைவியாகக் கருத மனம் இடம் தராலாகாது என்று வணிகம் பொருட்டு பாண்டி நாடு செல்வதாகக் கூறிச் சென்றான்.

(தொடரும்)

சான்றெண் விளக்கம்

  1. D.D.Kosambi., An Introduction to the Study of Indian History.
  2. க. கைலாசபதி, பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும், மக்கள் வெளியீடு, சென்னை, பக். 28-29.
  3. D.D. kosambi, An Introduction to the study of Indian History, pp. 246.
  4. க. கைலாசபதி. பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும், மக்கள் வெளியீடு, சென்னை, பக். 30-31.
  5. பெரியபுராணம்
  6. Dr K. Kannan & K. Laxminarayanan, Iconograpgy of the Jain images in the Government Museum, Chennai (Madras), p.101.
  7. முனைவர் வெ. வேதாசலம், இயக்கி வழிபாடு, அன்னம் பிரைவேட் லிட், சிவகங்கை, 1989, பக். 89-90.
  8. மேலது, பக். 90-91.
  9. மேலது, பக். 92.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com