சமண சமய பெண் தெய்வங்கள் (இயக்கியம்மன் வழிபாடு)

இந்தியாவில் சமண – பௌத்த சமயங்களுக்கு முன்னரே பண்டைய கிராமங்களில் வழக்கத்தில் இருந்த பெண் தெய்வமே இந்த இசக்கியம்மன் என்பதே சரியான கூற்றாகும்.

இந்தியாவில், சமணமும் பௌத்தமும் பொஆ.மு. 2-ம் நூற்றாண்டு முதலே தழைத்தோங்கியது. இவ்விரு சமயமும் தங்களது பெண் தெய்வமாக இயக்கியம்மனை வழிபட்டுள்ளன. தமிழகத்தில் பௌத்த சமயத்தில் வழிபட்ட இயக்கியம்மன் குறித்த தகவல்கள் மணிமேகலை காப்பியத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. சமண சமயத்து இயக்கியர்கள் குறித்த குறிப்புகள், முதன்முதலில் சங்க இலக்கியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தில் காணப்படுகின்றது.

பௌத்த சமயத்து பெண் தெய்வங்களைக் குறித்த செய்திகள் பொ.ஆ. 6-ம் நூற்றாண்டிற்குப் பிறகு அதிகளவில் காணப்படவில்லை. ஆனால், சமண சமயத்துப் பெண் தெய்வங்கள் குறித்த குறிப்புகள் சிலப்பதிகார காலத்திலிருந்து நாயக்கர்கள் காலம் வரை தொடர்ந்து காணப்படுகின்றன. சமண சமயத்து இயக்கியரின் சிற்பங்களும், செப்புத் திருமேனிகளும், கல்வெட்டுகளும் தமிழகத்தில் காணக்கிடைக்கின்றன. ஆரம்ப காலகட்டங்களில் இயக்கியர்களின் திருவுருவங்கள், தீர்த்தங்கரர்களுடனும், பின்னர் தனித்தும் காணப்படலாயிற்று. அடுத்த நிலையில், தீர்த்தங்கரர் ஆலயங்களுக்கு அருகிலேயே இயக்கியம்மனுக்குத் தனியாக கோயில் எடுத்து சிறப்பு செய்து வழிபட்டுள்ளனர்.

இயக்கி வழிபாட்டின் தாக்கத்தை, தமிழ்நாட்டு சைவ, வைணவப் பெண் தெய்வங்களின் வழிபாட்டிலும் காணமுடிகின்றது. இயக்கியம்மன் வழிபாடு தொடர்ந்து பின்பற்றப்பட்டாலும், நாயக்கர்கள் காலத்தில் இவை அனைத்தும் நாட்டார் வழக்கோடு தொடர்புபடுத்தியே வழிபடும் வழக்கத்தைக் கொண்டுள்ளது. தமிழகத்தில், குறிப்பாக தென்பகுதியில் இன்றளவும் இசக்கியம்மன், பேச்சியம்மன், பகவதியம்மன், பொன்னியம்மன் போன்ற பெண் தெய்வங்களே மிகவும் சிறப்பு பெற்று திகழ்கின்றன. இவை அனைத்திலும், சமண சமயத்து இயக்கியம்மனின் சாயலையும் வழக்காறுகளையும் காணமுடிகின்றது.

தமிழகத்தின் தென்பகுதியில், வழிபாட்டில் மிகவும் சிறப்புபெற்றது நாட்டார் வழக்கிலுள்ள பெண் தெய்வம் இசக்கியம்மன் வழிபாடே எனலாம். இன்றளவிலும் அப்பகுதியில் இசக்கிமுத்து, இசக்கியப்பன். இசக்கிபாண்டி. இசக்கியம்மாள், இசக்கி எனப் பல்வேறு பெயர்களைச் சூட்டி அதன் சிறப்பை வெளிப்படுத்திக்கொண்டுள்ளனர். இவை அனைத்தும் இயக்கியம்மனின் தாக்கம் பெற்றவையே என்றால் அது மிகையாகாது.

இயக்கியம்மன்

சமண தீர்த்தங்கரர்களுடன் இயக்கியம்பிகையம்மன் குடவரைச் சிற்பம்

தனித்த நிலையில் இயக்கியம்மன் புடைப்புச் சிற்பம்

தீர்த்தங்கரருடன் இயக்கியம்மன்

வடஇந்தியாவில் சமண சமயப் பெண் தெய்வங்களை யக்ஷி என்று பெயரிட்டு அழைத்தனர். ஆண் காவல் தெய்வங்களை யக்ஷன் என்றும் அழைத்தனர். தமிழில் இச்சொற்கள் இயக்கி, இயக்கன் என்று குறிப்பிடப்படுகின்றது. இருபத்தி நான்கு தீர்த்தங்கரர்களுக்கும் காவல் தெய்வமாக ஒரு இயக்கியும் ஒரு இயக்கனும் உளர்.

தமிழகத்தில் பக்தி இயக்கங்கள் தோன்றி வளர்ந்த காலத்தில், அவரவர் சமயங்களை வளர்க்க பெண் தெய்வங்களையே சார்ந்திருந்தனர் எனலாம். தமிழகத்தில் காணப்படும் நாட்டார் வழக்கில் அமைந்த கிராம தெய்வங்களான இசக்கியம்மன், சமண - பௌத்த சமயங்களின் வாயிலாக வந்தவை எனக் கூறுவதைவிட, இந்தியாவில் சமண – பௌத்த சமயங்களுக்கு முன்னரே பண்டைய கிராமங்களில் வழக்கத்தில் இருந்த பெண் தெய்வமே இந்த இசக்கியம்மன் என்பதே சரியான கூற்றாகும்.

இந்தியா முழுமையிலும் உள்ள கிராம மக்கள் தங்களுக்கென ஒரு பெண் தெய்வத்தை அனைவரும் வழிபடும் வகையில் அமைத்துச் சிறப்பு செய்துள்ளனர். நாட்டுப்புற மக்கள் முதன்முதலில் வணங்கியது பெண் தெய்வத்தையே. அதுவே தாய் தெய்வ வழிபாடாகும். அந்நாட்டுப்புற வழக்கில் வாழ்ந்த மக்கள், தங்களுக்கு ஏற்றார்போல இசக்கியம்மனை வழிபட்டு வந்தனர். இதனைப் பின்பற்றியே, இந்தியாவில் பிறசமயங்கள் தங்களது சமயத்துக்கு ஏற்ப இப்பெண் தெய்வத்தை தங்களது பெண் தெய்வங்களாக ஏற்று, அதன் மீது தங்களது சமயம் சார்ந்த கருத்துகளைத் திணித்து, அம்மக்களுக்கு ஏற்ப பல நம்பிக்கைகளையும், வரலாற்றுச் செய்திகளையும் கூறி இசக்கியம்மனை இயக்கியம்மனாக ஏற்றுக்கொள்ளச் செய்துள்ளனர். இக்கருத்து, அப்போதைய சூழ்நிலைக்கு ஏற்றார்போல், பல நன்மைகளை மக்களுக்கு கிடைக்கச் செய்தமையால், அவர்களும் இதனை ஏற்றுக்கொண்டு வழிபட்டனர் என்பதே பொருந்தும்.

சமண சமயத்தில் மதபோதகர்களாகத் திகழ்ந்தவர்கள்தான், சமணத் தீர்த்தங்கரர் என அழைக்கப்பட்டவர்கள். இவர்கள் மொத்தம் 24 தீர்த்தங்கரர்கள் ஆவர். உருவ வழிபாடு புகுந்த பின்னர், சமண சமயத்து மக்கள் இவர்களையே மூலநாயகர்களாகக் கருதி வழிபடலாயினர். இம்மூலநாயகர்களுக்குத் துணைபுரியும் தெய்வங்களாக அமைக்கப்பெற்றவர்களை பரிவாரத் தெய்வங்கள் என்றழைப்பர். அப்பரிவாரத் தெய்வங்களை சாசனா தெய்வங்கள், வித்யாதேவிகள், சூத்திரதேவிகள் என்று வகைப்படுத்தி அமைத்துக்கொண்டனர்.*1 மூலநாயகரைக் காக்கும் கடவுளாக இந்த சாசனா தெய்வங்கள் விளங்கியதால், இவர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டது. வித்யா தெய்வங்கள் சமய ஞானத்தையும், கல்வி அறிவையும், உடல் ஆரோக்கியத்தையும் வழங்கும் ஆற்றல் பெற்றவளாவாள்.

சமண சமய மக்கள், பௌத்த சமய மக்களைப் பின்பற்றியே தாங்களும் சமணத் தலங்களில் இயக்கியின் உருவங்களைச் செய்து மக்களை தங்கள் பக்கம் ஈர்த்துள்ளனர் எனலாம்.

இயக்கியம்மன் தோற்றமும், வளர்ச்சி நிலையும்

இந்தியாவின் வடபகுதியில், சமண சமயத்தில் இயக்கி வழிபாடு, குப்தர்கள் காலம் தொடங்கி முறையாக வளர்ச்சி பெற்று தனிச்சிறப்பை எட்டியது. குஷானர் காலத்தில் தோன்றிய அம்பிகா வழிபாடு மட்டுமே இதற்கு விதிவிலக்காகத் திகழ்ந்தது. மதுராவில் கிடைத்த குஷாணர்கள் காலத்து சமண சமயச் சிற்பங்கள், சுடுமண் உருவங்கள் போன்று இந்தியாவில் தொன்றுதொட்டு விளங்கிவந்த இயக்கியின் உருவங்களும் கிடைத்துள்ளன. ஒரிஸாவில் காரவேலன் காலத்தில் உதயகிரி, கண்டகிரி ஆகிய குன்றுகளில் காணப்படும் குகைத்தலங்களில் இயக்கியின் உருவங்கள் சிற்பங்களாகச் செதுக்கி வைக்கப்பட்டுள்ளன.*2 பார்குத் பகுதியிலும் சமண சமய இயக்கியின் உருவங்கள் காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் இதுபோன்ற தொடர்ச்சியான வளர்ச்சியை சமண சமய இயக்கி வழிபாட்டில் காணமுடிந்தாலும், வடஇந்தியாவைக் காட்டிலும் இயக்கி வழிபாடு தமிழகத்தில்தான் மிகவும் உயர்ந்த நிலையில் இருந்துள்ளது.

இயக்கியம்மன் - மதுரா - பொ.ஆ. 2-ம் நூற்றாண்டு / பார்குத் - இயக்கி

சமண சமயத்தில் இருபத்தொன்றாவது தீர்த்தங்கரரான நேமிநாதர்க்கு உரிய இயக்கி அம்பிகாவுக்குப் பிறகு மற்ற தீர்த்தங்கரர்களுக்கும் இயக்கியம்மன் உருவம் சேர்க்கப்பட்டுள்ளன. பொ.ஆ. 6-ம் நூற்றாண்டுக்கும் பொ.ஆ. 10-ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்திலேயே சமண சமய வரலாற்றில் இருபத்தி நான்கு தீர்த்தங்கரர்களுக்கும் இயக்கியம்மன் உருவாக்கப்பட்டுள்ளது. அம்பிகை இயக்கியம்மனுக்குப் பிறகு பார்சுவநாதர்க்கு உரிய பத்மாவதி என்ற இயக்கியும், ஆதிநாதர்க்கு உரிய சக்கரேஸ்வரி, மகாவீரர்க்கு உரிய சித்தாக்கியா ஆகிய இயக்கியர்கள், முழுமையாகப் புகழ்பெற்று அமைந்துள்ளதைக் காணமுடிகிறது.*3 இயக்கியர்களைப் பற்றிய குறிப்புகள் அனைத்தும் சமண சமய பழமையான நூல்களான பகவதி சூத்திரம், தத்வார்த்த சூத்திரம் போன்றவையும், கர்நாடகத்தில் தோன்றிய திரிஸஷ்டிசாலகாபுருஷ சரித்திரம் என்ற நூலும் தெளிவாக எடுத்துரைக்கின்றன.*4

அம்பிகா, பத்மாவதி, சக்ரேஸ்வரி, சித்தாக்கியா போன்ற பெண் தெய்வங்களே சிற்பங்களாகத் தனித்த நிலையிலும், தீர்த்தங்கரர்களோடும் சேர்ந்து காணப்படுகின்றன. இவ்வியக்கியம்மன் வழிபாடு, காலப்போக்கில் தனிச்சிறப்பு பெற்று ஒரு சிறந்த இடத்தைப் பெற்றது எனலாம்.

தமிழகத்தில் இயக்கியம்மன் வழிபாடு

தீர்த்தங்கரர்களுடன் இயக்கியம்மன்கள்

தமிழகத்தில் இயக்கியம்மன் வழிபாடு படிப்படியாக வளர்ச்சி பெற்று, வடஇந்தியாவைக் காட்டிலும் தனிச்சிறப்பு பெற்றுத் திகழ்ந்தது. இயக்கர் வழிபாட்டைக் காட்டிலும் இயக்கியம்மன் வழிபாடே பெரிதும் போற்றப்பட்டது. வடஇந்தியாவைக் காட்டிலும், தமிழகத்தில் இயக்கியம்மன் வழிபாடு மிகவும் சிறப்புப் பெற்று உயர்ந்த நிலையை எட்டியது. பண்டைய காலத்திலிருந்தே தமிழகத்தில் ஒத்த கருத்துடைய பெண் தெய்வங்கள் பழக்கத்தில் இருந்தமையால், இங்கு பெண் தெய்வ வழிபாட்டுக்குத் தொன்றுதொட்டு அளித்துவந்த தனிச் சிறப்பும், தமிழகத்தில் தமிழக மக்கள் சமண சமயத்தைச் சார்ந்த இயக்கியம்மன் வழிபாட்டுக்கு வந்தபொழுது, அதனை எளிதில் ஏற்றுக்கொண்டதற்குக் காரணமாகலாம்.

தமிழகத்தில் பண்டைய இலக்கியங்களில் சிலப்பதிகாரத்திலேயே இயக்கியம்மன் வழிபாடு பற்றிய குறிப்பு காணப்படுகின்றது என்பதை முன்னரே குறிப்பிட்டோம். சமண சமய காவியமான சிலப்பதிகாரத்தில், கதாபாத்திரங்களாகவும், அமைவிடங்களாகவும் பல இடங்களைப் படைத்து, மக்களுக்குப் பல சமண சமயக் கருத்துகளை எடுத்துரைக்கின்றன. இந்திய சமண சமய வரலாற்றில், காலப்போக்கில் புகுந்த இயக்கி வழிபாட்டை தமிழகத்து சமண சமயமே தென்னிந்தியாவில் முதன்முதலில் அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும்.

இயக்கியர்களின் தன்மைகளைப் ஒருங்கே பெற்ற பெண் தெய்வங்கள் பல சிலப்பதிகாரத்தில் காணப்படுகின்றன. சான்றாக, சிலப்பதிகாரத்தில் காணப்படும் பாவை மன்றம், வழியிடைத் தெய்வங்கள், கானுறைத் தெய்வம், பூங்கண் இயக்கி போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவற்றில், இயக்கியின் தன்மைகளைத் தன்னிடத்தே கொண்ட தெய்வங்களாக சிலம்பில் காட்டப்படும் வரோத்தமை, வனசாரினி போன்ற பெண் தெய்வங்களுடன் இயக்கி என்ற பெயரிலேயே காணப்படும் பெண் தெய்வமானது பூங்கண் இயக்கியம்மன் போன்றவையும் குறிப்பிடத்தக்கது.*5 பூம்பூகாரில் இருந்த பல மன்றங்களில் பாவை மன்றமும் ஒன்று. இப்பாவை மன்றம், பெண் தெய்வம் உறையும் மன்றமாகத் திகழ்ந்த ஒன்று. அரசு தவறிழைத்தாலும், நீதிநெறி தவறி நடந்தாலும், அதனை நாவினால் கூறாமல், அதற்காக கண்ணீர்விட்டு அழும் தன்மையுடையதாகும்.

வரோத்தமை, வனசாரினி, கானுறைத் தெய்வம்

சிலம்பில் குறிக்கப்பட்டுள்ள பெண் தெய்வங்களின் பண்பு நலன்கள், இயக்கியின் பண்பு நலன்களோடு இணைவதும், சமண சமயக் கொள்கைகளோடு ஒன்றிப்போவதும், அவை படைக்கப்பட்டுள்ள விதத்திலிருந்தும் அறியமுடிகின்றது. கொடும்பாளூரிலிருந்து மதுரை செல்லும் வழியானது காட்டு வழியாகும். அக்காட்டுப் பாதையில் செல்லும்போது, அவற்றில் இருக்கக்கூடிய பெண் தெய்வம் வழியிடைத் தெய்வங்களான வனசாரினி, வரோத்தமை குறிக்கப்படுகின்றனர். இருவரும் கானுறைத் தெய்வங்களாகும். இப்பெண் தெய்வங்கள் காட்டுக்குள் ஏற்படும் துன்பங்களைப் போக்க உதவுவார்கள். துன்பங்களைத் தந்தாலும் பின்னர் நல்வழிகாட்டுவர்.

கோவலனும் கண்ணகியும் மதுரை செல்லுமிடத்து ஏற்படும் இடர்களைக் களையவும், ஏற்படும் ஆபத்துகளை முன்கூட்டியே அறியவும் கவுந்தியடிகள் வழிகாட்டி நின்றாள் என்று கூறுகின்றது. இருப்பினும், கோவலன் இதுபோன்ற தெய்வங்களை விரட்டுவதற்கு, வெற்றியைத் தரும் கொற்றவையின் மந்திரத்தைக் கூறி தங்களை வழியிடைத் தெய்வங்களிலிருந்து காத்துக்கொள்வர் என்ற கருத்தும் கூறப்படுகின்றது. ஆகவே, நன்மை தரும் பெண் தெய்வங்களும், தீமை தரும் பெண் தெய்வங்களும் ஒருங்கே இருந்துள்ளன. இவற்றில் குறிக்கப்படுவது என்னவெனில், அனைத்தும் பெண் தெய்வங்களே என்பதை கருத்தில் கொள்ள வேண்டுவதாகும். மதுரைப் பெருவழிகளில் அமைந்த திருமால் குன்றத்தில் அமைந்த பெண் தெய்வமே வரோத்தமையாகும். அங்குள்ள இத்தெய்வத்தின் அருளைப் பெற, அழகர்மலையை மூன்று முறை வலம் வந்து நின்றவர்க்கு நல்வழிகாட்டி நன்மை பயக்கும் என்று கூறுவர்.*6

பூங்கண் இயக்கி

மதுரையின் கோட்டைக்கு வெளியே அகழியினை ஒட்டி இருந்த பகுதி புறஞ்சிறைமூதூர் என்று அழைக்கப்பட்டது. இப்பழமையான ஊரில், பூங்கண் இயக்கி என்ற இயக்கியம்மன் கோயில் ஒன்று இருந்துள்ளது. அம்மதுரை மாநகரத்து ஆயர்பாடியில் இருந்த மாதுரி என்ற ஆயர் முதுமகள், மதுரைக் கோட்டைக்கு வெளியே வந்து மாலைக் காலத்தில் இக்கோயிலில் உள்ள பூங்கண் இயக்கியை வழிபட்டாள். இதனை சிலப்பதிகாரத்தில் அடைக்கலக் காதை வரிகள் தெளிவுபடுத்துகின்றன.*7 தமிழகத்தில், இயக்கி வழிபாடு குறித்து காணப்பட்ட கல்வெட்டுகள், சிற்பங்கள் ஆகியவற்றுக்கு முந்தைய சான்றாக இவை தென்படுகின்றன என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். சிலம்பில் காணப்படும் இச்சான்றே, தென்னிந்தியாவில் இயக்கியம்மன் வழிபாடு பற்றி நமக்குக் கிடைக்கும் சான்றுகளில் மிகவும் பழமையானதாகும்.

பூங்கண் இயக்கி என்ற பெயர்க் காரணம், பூப்போன்ற கண்களைப் பெற்றவள் என்று கண்ணை அடைமொழியாகக் கொண்டு பெயர் பெற்றிருக்கலாம். இப்பெண் தெய்வத்தை சமண சமய மக்கள் மட்டுமின்றி, ஆயர்குல மக்களும் வணங்கியுள்ளனர்.

இவை, மதுரைப் பகுதியில் இயக்கியம்மன் வழிபாட்டின் சிறப்பை உணர்த்துகின்றன எனலாம். இவை சிலப்பதிகார காலத்துக்கு முன்பிருந்தே, பண்டைய கிராம மக்களால் இப்பகுதியில் வணங்கப்பட்டு வந்த பெண் தெய்வமாகும் என்ற கருத்தும் உள. இப்பூங்கண் இயக்கியம்மன் கோயில், மதுரையின் உட்பகுதியில் அமையாமல் மதுரையின் வெளிப்பகுதியில் அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. மதுரையைச் சுற்றிலும் சமணத் துறவிகள் வாழ்ந்த பகுதிகள் நிறைய உள்ளன. தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை மேற்கொண்ட ஆய்வுகளில், மதுரைக்கு அருகே மீனாட்சிபுரம், மாங்குளம் பகுதியில் மேற்கொண்ட அகழாய்வில் இங்கு பல சமண சமயத் துறவிகள் தங்கி வாழ்ந்திருத்தல் கூடும் என்பதற்கு தக்க சான்றுகளாகப் பல கற்படுக்கைகளும், கட்டடப் பகுதிகளும், மட்கலன்களும், சங்க காலக் கூறை ஓடுகளும், இரும்பு ஆணிகளும், சுடுமண் மணிகளும் கிடைத்துள்ளன.*8 மேலும் கிடைத்துள்ள பல குகைச் சிற்பங்களும், பாறைகளில் காணப்படும் புடைப்புச் சிற்பங்களும் இங்கு சமண முனிவர்கள் தங்கி வாழ்ந்துள்ளனர் என்பதற்குச் சான்றாக விளங்கும் தொல்லியல் சான்றுகளாகின்றன.

பூங்கண் இயக்கியம்மன் கோயில் மதுரைக்கு வெளிப்பகுதியில் அமைந்துள்ளது என்ற குறிப்புக்கு ஏற்ப, அண்மையில் மதுரைக்கு அருகாமையில் நடைபெற்ற கீழடி அகழாய்வில் தொன்மையான பல சங்க காலக் கட்டடப் பகுதிகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதைக் கண்டோம்.*9 நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் கீழடியில் வந்து தங்கிச் சென்றிருத்தல் கூடும் என்ற கருத்தும் கூறப்பட்டது. இவர்கள் வணிக நோக்குக்கு வந்தவராக இருப்பின், அவர்கள் வழிபட்ட தெய்வமாகவும் இப்பூங்கண் இயக்கி இருந்திருக்கலாம். ஏனெனில், நமது மிகவும் பழமையான தெய்வம் பெண் தெய்வமே என்ற கருத்தும் இதில் வெளிப்படுகிறது. இவை அனைத்தும், இப்பூங்கண் இயக்கியம்மன் மதுரைக்கு வெளியே அமைந்திருந்ததாலும், அனைவராலும் போற்றி வணங்கப்பெற்ற பெண் தெய்வமாகவே இருந்திருக்க வேண்டும் என்பதே ஏற்புடைத்ததாகும்.

சமண சமயத் துறவிகள் ஊருக்கு வெளியே மலைக்குன்றுகளிலும், மலையடிவாரத்திலும் தங்கி வாழ்பவர்கள் என்ற கருத்து அனைவரும் அறிந்த ஒன்று. மேலும், மதுரையைச் சுற்றி பல சமண சமயத் துறவிகள் இருப்பிடங்களும், பண்டைய தமிழி (பிராமி) கல்வெட்டுகளும் காணப்படுவதால் இக்கருத்து ஏற்புடையதாகவே அமைகிறது. வடஇந்தியாவில், பெரும்பாலும் முனிவர்கள் இயக்கர்களையே வழிபட்டனர். ஆனால், தமிழகத்தில் மட்டுமே இதற்கு மாறாக, அவர்களின் தொன்றுதொட்டு வணங்கிய தாய் தெய்வத்தின் மீது கொண்ட பற்றின் காரணமாக, இங்கு வாழ்ந்த சமணத் துறவிகள் அனைவரும், சமணப் பெண் தெய்வமான இயக்கியம்மனையே வழிபட்டனர். இவை, தமிழகத்தில் சமண சமயத்தில் பெண் தெய்வ வழிபாட்டுக்கு இருந்த செல்வாக்கையே காட்டுகின்றது.

பல்லவர் - பாண்டியர் ஆட்சிக் காலத்தில் இயக்கியம்மன்

பொ.ஆ. 5-ம் நூற்றாண்டுக்குப் பிறகு கர்நாடகம், மகாராஷ்டிரம் போன்ற பகுதிகளிலிருந்து தமிழகப் பகுதிக்குப் புகுந்த திகம்பர சமணப் பிரிவைச் சார்ந்தவர்கள் மேலும் பல வளர்ச்சியை அடைந்தனர். தமிழகத்தில் பல்லவர், பாண்டியர் ஆட்சிக் காலத்தில், கர்நாடகமும், மகாராஷ்டிரமும் இணைந்து அதன் பகுதிகளில் அரசியல், சமயம், வணிகம், கலை எனப் பலவகையான தொடர்புகளைப் பெற்று பல மாற்றங்களைக் கண்டது. இவர்கள், சமண சமயத்தைத் தங்களது சமயமாக ஏற்றுக்கொண்டு ஆட்சி புரிந்துவந்த கங்கர்களோடு அரசியல் தொடர்பும் மண உறவுமுறைத் தொடர்பும் கொண்டு அரசு புரிந்தனர். பல்லவ அரசன் சிம்மவர்மனின் தாய், சமண சமயத்தைப் போற்றும் கங்கர் குலத்தைச் சார்ந்தவள்.*10

இப்படி, பல்வேறு காரணங்கள் தமிழகத்தில் இயக்கி வழிபாட்டின் தூண்டுதல்களாக அமைந்திருக்கின்றன. தமிழகத்தில் பல்லவர், முற்கால பாண்டியர் காலத்தில் எழுந்த பக்தி இயக்க அலையும், சமண சமய இயக்கி வழிபாட்டின் வளர்ச்சிக்கு ஓர் இன்றியமையாத தூண்டுகோலாக அமைந்துள்ளது எனலாம். இவ்வாறு சமண சமயத்தைச் சார்ந்த இயக்கியம்மன் வழிபாடு பல்வேறு நிலைகளில் வரலாற்றின் துவக்க காலம் முதல் தொடர்ந்து தமிழகத்தில் பல வளர்ச்சிகளைப் பெற்றுள்ளது.

(தொடரும்)

சான்றெண் விளக்கம்

  1. Gupta R.S, Iconography of Hindus, Buddhist and Jains, D.B.Taraporevala sons and Co. Pvt Ltd., Bombay, 1972. pp175 - 176.
  2. Deblamitra, Udhagiri and Kandagiri, Archaeological Survey of India, NewDelhi, 1975, pp.32 - 35.
  3. வெ. வேதாசலம், இயக்கிஅம்மன் வழிபாடு, அன்னம் (பி) லிட், சிவகங்கை, பக்.36 - 39,1989.
  4. சிலப்பதிகாரம், வரிகள் 2337 - 2338.
  5. P.B. Desai, Jainism in South India. pp.13 - 14.
  6. சிலப்பதிகாரம், காடுகாண் காதை - வரிகள், 1698 - 1732.
  7. மேலது.
  8. S. Selvaraj, C. Santhlingam and Marxia Gandhi, Mangulam Excavation Report, Govt of Tamilnadu, Chennai.
  9. ச. செல்வராஜ். தமிழகத்தில் அண்மைக்கால அகழாய்வுகள், கீழடி மற்றும் பட்டறைப்பெரும்புதூர், தினமணி டாட் காம், புதையுண்ட தமிழகம், அத்தியாயம் 43.
  10. டி.என். சுப்பரமணியன் (பதி), பாண்டியர்கள் செப்பேடு பத்து, தமிழக வரலாற்றுக் கழகம், சென்னை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com