விஜயநகரர் மற்றும் நாயக்கர் காலத்தில் துர்க்கை அம்மன்

பண்டைய காலம் தொட்டு வழிமுறையாக தனிச் சிற்பங்களாக அமைத்த துர்க்கை அம்மனும் மகிஷாசுரமர்த்தினி உருவங்களும் தூண்களில் அலங்காரம் செய்யும் நிலைக்கு வந்தன.

தமிழகத்தை ஆட்சிபுரிந்த விஜயநகரப் பேரரசர்கள் வைணவத்தைத் தழுவியவர்கள். எனவே, தமிழகத்தில் இவர்கள் ஆட்சிக்காலத்தில் வைணவக் கோயில்கள் பெருகின. இவர்கள் விஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் அதிக அளவில் சிற்பங்களாக வடித்தனர். குறிப்பாக, வைணவக் கோயில்களில் காணப்படும் தூண்களில் அவதாரச் சிற்பங்களையே புடைப்புச் சிற்பங்களாக அமைத்தனர். தமிழக வைணவக் கோயில்களில் ஆஞ்சநேயர் சிற்பங்களும், வேணுகோபால சுவாமியும், யோகநரசிம்மரும், விட்டலாசாமியும் அதிகம் இடம் பெறலாயினர். பண்டைய காலம் தொட்டு வழிமுறையாக தனிச் சிற்பங்களாக அமைத்த துர்க்கை அம்மனும் மகிஷாசுரமர்த்தினி உருவங்களும் தூண்களில் அலங்காரம் செய்யும் நிலைக்கு வந்தன. அவ்வாறு காணப்படும் மகிஷாசுரமர்த்தினி, துர்க்கை அம்மன் சிற்பங்கள் சிலவற்றை இப் பகுதியில் காணலாம்.

தாய் தெய்வங்களைப் போற்றி வழிபாடுகளும், கோயில்களில் தாய் தெய்வங்களுக்கான தானங்களையும் பெருக்கினாலும், அதற்கான தனிச் சிறப்பை சோழர்கள் காலத்தில் காணப்பட்டதைப்போல இக்காலத்தில் காண இயலவில்லை.

சிவதுர்க்கை - விஷ்ணுதுர்க்கை

சிவாலயங்களில் தூண்களில் சிவதுர்க்கையை அமைத்தனர். இவை சிவதுர்க்கை என்பதற்கு ஏற்ப சிவனின் கைகளில் உள்ளதைப்போல பின்னிரண்டு கைகளில், மேலிருகைகளில் மானும் மழுவும் காட்டப்பட்டிருக்கும். அடுத்த முன்னிரண்டு கைகளில் சூலத்தைக் கொண்டு அசுரனை வதம் செய்வதுபோல காட்டப்பட்டுள்ளதைக் காணலாம். விஷ்ணுதுர்க்கை என்பதில் பின்னிரண்டு கைகளில் பிரயோகச் சக்கரமும், சங்கும் காட்டப்பட்டிருக்கும். இதைக்கொண்டு விஷ்ணுதுர்க்கையை எளிதில் கண்டறியலாம்.

விஜயநகரப் பேரரசு

தமிழகத்தை ஆட்சிபுரிந்த பேரரசுகள் அனைத்தும் தங்களுக்கென ஒரு தனியான கலையமைப்பைக் கொண்டு தனிச்சிறப்புடன் கோயிற்கலைகளையும், சிற்பங்களையும், கோபுரங்களையும், விமானங்களையும் படைத்தன. பல்லவர், சோழர், போசளர் என பேரரசுகள் தமிழகத்தில் பல கலைப் படைப்புகளைப் படைத்தாலும், அடுத்துவந்த விஜயநகரப் பேரரசர்கள் தமிழகக் கோயிற்கலைகளை வானலாவிய உயரத்துக்குக் கொண்டுசென்ற பெருமை பெறுகின்றனர்.

தமிழகத்தில் காணப்படும் பெரும்பான்மையான கோயில்களின் கோபுரங்கள் மக்களை மேல்நோக்கிப் பார்க்கச் செய்ய வைத்தன. அத்தகைய உயரமான கோபுரங்கள் விஜயநகரப் பேரரசு ஆட்சிக் காலத்தில்தான் உருவாக்கப்பட்டன. விஜயநகரத்தில் தலைநகரை வைத்துக்கொண்டு, பொ.ஆ. 1336 முதல் ஹரிஹரன், புக்கன் சகோதரர்களால் உருவாக்கப்பட்ட விஜயநகரப் பேரரசு, பொ.ஆ. 1652 வரை சங்கம, சாளுவ, துளுவ, அரவீடு என நான்கு வம்ச பிரிவுகளைச் சார்ந்த மன்னர்கள், அதாவது மூன்றாம் ஸ்ரீரங்கன் வரை தமிழகத்தில் ஆட்சிபுரிந்தது. இவர்கள் கோயில் கட்டடக் கலையில், சிற்பக் கலையில் வியத்தகு விநோதங்களையும் அழகிய மண்டபங்களையும், குளங்களையும் அளவில் பெரிய சிற்பங்களையும் படைத்து மகிழ்ந்தனர். மன்னர்கள், சிற்பங்களை மட்டுமின்றி அவர்களது துணைவியர்களையும் இவ்வுலகுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் முதன்முதலில் இருவரும் இணைந்து நின்று இறைவனை வணங்குவதுபோலப் படைத்து சிறப்பு செய்தனர்.

அடுத்து, மன்னனது ஆணையை ஏற்று ஆட்சிபுரிந்த நாயக்கர்களும், தளபதிகளும் சிற்பங்களில் இடம்பெற்றனர். இவற்றை புடைப்புச் சிற்பங்களாகவும், தூண்களில் தனிச் சிற்பமாகவும் படைக்கும் வழக்கத்தையும் அதிக அளவில் அறிமுகப்படுத்தினர்.

இவர்களது புடைப்புச் சிற்பமாக இடம்பெற்ற சிம்ம உருவம் தனித்துவம் வாய்ந்தது. அழகிய வேலைபாடுகளை அதில் காணலாம்.

விஜயநகரர் காலச் சிம்மம் - புடைப்புச் சிற்பம்

இக்காலத் திருவுருவச் சிற்பங்களில் ஆடை அணிகலன்கள் தெளிவாகக் காட்டப்பட்டிருக்கும். அதிக அளவில் நுணுக்கமான வேலைபாடுகளும், கணுக்கால்வரை ஆடைகளும் அதில் காணப்படும் பூ வேலைப்பாடுகளும் வியக்கவைக்கும். தூண்களை பிரம்மாண்டமாக அமைத்தல், அலங்காரமாக அமைத்தல் இக்காலச் சிறப்பு. இத்தகைய பல சிறப்புகளைக் கொண்ட விஜயநகரப் பேரரசுக் காலத்தில் துர்க்கை அம்மனுக்கு வழங்கிய இடத்தையும், அவர்கள் படைத்த துர்க்கை அம்மன் சிலைகள் சிலவற்றையும், அவர்கள் பெண் தெய்வத்தை வழிபட்ட விதத்தையும் இங்கு காண்போம்.

விஜயநகரர் கால சிற்பக்கலை

சிற்பங்களைப் படைப்பதில் ஒவ்வொரு அரச மரபினரும் ஒவ்வொரு சிறப்பைப் பின்பற்றி தங்களது கலைப்படைப்பை வழங்கியுள்ளனர். அவ்வாறு காணும்பொழுது, விஜயநகரர்கள் ஆட்சிக் காலத்தில் சிற்பங்களையும், தூண்களையும் படைப்பதில் தனிக்கவனம் செலுத்தினர் என்றால் அது மிகையாகாது. சோழர்கள் காலத்தில் தூண்களை நீள்செவ்வக வடிவிலும், நீள்உருண்டை வடிவிலும் அமைத்து, பொதிகைகளை சாதாரண வடிவில் அமைக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர். சோழர்கள் காலத்து கோயில்களுடன் ஒப்பிட்டால் இது தெளிவாகும். பிற்காலச் சோழர்கள் காலத்தில் தூண்களும், சிற்பங்களும் அதிக அணிகலன்களையும் மிகவும் நுணுக்கமான வேலைபாடுகளையும் கொண்டதாக அமைக்க முற்பட்டனர். எவ்வாறாக இருப்பினும், தேவகோட்டம் மற்றும் தனிச் சிற்பங்களாகவே சோழர்கள் காலத்தில் பெரும்பான்மையான சிற்பங்களைப் படைத்துள்ளனர். ஆனால் விஜயநகரர் காலத்தில்தான் தூண்கள் அகன்றும், பல தூண்கள் ஒருங்கிணைந்தும் மிகவும் மெல்லிய வேலைபாடுகளும், மணிகள் தொங்குவது போன்றும் அகன்ற பெரிய அளவில் பொதிகைகளையும் படைத்தனர்.

அடுத்து, தூண்களில் இணைந்து சிற்பங்களைப் படைக்கும் வழக்கத்தை ஏற்படுத்தினர். இதனை அடுத்து, மன்னன் உருவமும் அவரது துணைவியாரும், அதாவது ராஜாவும் ராணியும் இறைவனை வணங்குவதுபோலத் தூண்களில் அமைத்தனர். விஜயநகரர் காலத்தில்தான் சிற்பங்களை அரசன், மகாராணி, கடவுளின் சிற்பங்களையும் மிகப்பெரியதாக வடிவமைத்தனர். தனிக்கல்லில் பெரியளவில் உருவாக்கிய பெருமை இவர்களையே சாரும். அடுத்து, தூண்களில் குதிரைச் சிற்பங்களையும் கற்பனைக்கு அடங்காத கொடிய மிருகங்களான யாழியையும் முன்னங்கால்களைத் தூக்கிக்கொண்டு சீறுவது போன்றும், குதிரையையும் குதிரை மீது வீரனையும் அமர்த்தி, அவன் குதிரையை அடக்குவது போன்றும் அவை திமிறிக்கொண்டு செல்வது போலவும் சிற்பங்களை வடிப்பதில் விஜயநகரப் பேரரசுக்கு இணை அவர்களே.

இவ்வாறான படைப்புகள் பின்னர் நாயக்கர் காலம் வரை தொடர்ந்தது எனலாம். தூண்களில் மன்னர் சிற்பங்களையும், மண்டபங்களில் நாயக்கர்கள், தளபதிகள் என பலரையும் போற்றி சிறப்பித்தலுக்காக அவர்கள் உருவங்களை அமைக்க அனுமதி அளித்திருக்கலாம். நாயக்கர்களும் சைவ, வைணவ சிற்பங்களைத் தூண்களில் அமைத்தனர். விஷ்ணுவின் அவதாரங்களையும் மண்டபங்களில் சிற்பங்களாகத் தூண்களில் செதுக்கிவைத்தனர். ஆளுயர சிற்பங்களைத் தூண்களில் செதுக்கினர். அவற்றில் விஷ்ணுவின் அவதாரச் சிற்பங்களை ஆளுயர வடிவில் அமைத்து அழகுபார்த்தனர். அரியலூர் கோதண்டராம சுவாமி திருக்கோயிலில் காணப்படும் தூண் சிற்பங்களை எடுத்துக்காட்டாகக் காணலாம். இவ்வாறு, சிறப்புபெற்ற இறைவனின் அவதாரங்களையும் தனி மண்டபமாக அமைக்காமல் தாங்கள் எழுப்பிய மண்டபத்தில் அமைந்த தூண்களிலேயே படைத்தனர். இவ்வாறு வளர்ச்சி பெற்றதால்தான், துர்க்கை போன்ற பிற சிற்பங்களும் தூண்களில் அதிகமாகக் காணப்படுவதன் காரணம்.

குதிரை மண்டபம்

விஜயநகரர் காலத்தில்தான் தமிழகத்தில் பெரிய பெரிய தூண்களும், அவற்றில் குதிரை வீரர்களும், குதிரையை அடக்குவது போன்றும், போரிடுவது போன்றும், குதிரை திமிறுவதும், முன்னிரண்டு கால்களைத் தூக்கி ஆவேசமாக எம்புவதும், அதில் அமர்ந்த வீரன் கடிவாளத்தைக் கொண்டு அடக்குவது போன்ற சிற்பங்களும், யாழி போன்ற சிற்பங்களும் அதிக அளவில் மண்டபங்களில் தோன்றத் துவங்கின. மேலும் புலி, சிறுத்தையுடன் போரிடுவது போன்ற காட்சிகளில் வீரன் தனது குறுவாளைக் கொண்டு குத்துவது போன்றும் தத்ரூபமாக வடிக்கும் கலையைப் புகுத்தினர். இதுபோன்ற விஜயநகரக் கலைப் படைப்புச் சிற்பங்களைக் கொண்ட தூண்கள் நிறைந்த மண்டபங்களை ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம், அயோத்தியாபட்டணம், தென்கரைக்கோட்டை, மதுரை போன்ற பல இடங்களில் காணலாம்.

தமிழகக் கோயில்கள் பெரும்பான்மையானவை ஒரே மன்னனால் கட்டப்பட்டவை அல்ல. கர்ப்பக்கிருகத்தையும் அதன் கட்டடக் கலையையும், சிற்பக் கலையையும் கொண்டே அவை எந்த மன்னனால் கட்டப்பட்டிருக்க வேண்டும்; யாரால் விரிவாக்கம் செய்யப்பட்டது என்பதையும் கண்டறிய முடியும். அவற்றிலும், ஆட்சி கைமாறும்போது உடனடியாக கலைஞர்களும் மாறுதல் என்பது இயலாததாகும். இதனையே ஆட்சிமாற்றக் காலம் (Transitional Period) என அழைப்பர். இம்மாற்றத்துக்கு சில மாதங்கள், சில சமயத்தில் சில வருடங்களும் ஆகும். அத்தகைய சமயத்தில் சில நுணுக்கமான சிற்பக் கலையைக் கோயில்களில் காணமுடியும். சமகாலத்துக் கல்வெட்டுகளின் காலத்தையும் ஒப்பிட்டு மட்டுமே அதனைப் பிரித்துக்கூற இயலும்.

எனவே, ஆட்சி மாற்றம் ஏற்படும் காலகட்டத்தினால் சிற்பக் கலைகளில் ஒரு சில ஆண்டுகளில் பெரிய வித்தியாசத்தைக் கண்டறிய இயலாது. உட்கட்டமைப்பு மாற்றம், அதில் காணப்படும் சிற்பங்களைக் கொண்டும் தெளியலாம். அவ்வாறு காணப்படுவதுதான், சென்னை மாடம்பாக்கத்தில் காணப்படும் ஸ்ரீதேனுபுரீஸ்வரர் உடனுறை ஸ்ரீதேனுகாம்பாள் கோயிலாகும். இங்கு காணப்படும் சிற்பங்கள் சோழர் காலத்தியதைப்போல தோன்றினாலும், அவை தூண்களில் காணப்படுவதாலும் சிற்பக் கலை அமைப்பாலும் இவற்றை விஜயநகரர் காலம் எனக் கூற முடியும். அத்தகைய கோயில், முதலாம் சுந்தரசோழனால் கட்டப்பட்டது. அரைவட்ட வடிவில் அமைந்த கருவறை போன்றவை சிறப்பாகும். இங்கு விஜயநகரர்கள் காலத்தில் கோயில் விரிவு செய்துள்ளனர். தூண்கள் அதிகஅளவில் காணப்படுகின்றன. அவை அனைத்திலும் புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சைவ, வைணவச் சிற்பங்களை இத்தூண்களில் கண்டுகளிக்கலாம்.

ஸ்ரீதேனுபுரீஸ்வரர் திருக்கோயில் - தூண் சிற்பம், மாடம்பாக்கம், சென்னை

இக்கோயிலில் அனைத்து தூண்களிலும் சிவனின் மூர்த்தங்களான நடராஜர், கஜசம்காரமூர்த்தி, பைரவர், வீரபத்திரர், சரபேஸ்வரர் என பல சிற்பங்களையும்; வைணவ ஆழ்வார்கள், நரசிம்மமூர்த்தி, வராகமூர்த்தி, பஞ்சமுக ஆஞ்சநேயர், ஸ்ரீவேணுகோபால சுவாமி என சைவ-வைணவச் சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இத்திருக்கோயிலிலும் வடக்குப் பக்கம் துர்க்கை அம்மன் சிற்பம் தேவகோட்டத்தில் இடம்பெற்றுள்ளதைக் காணலாம். இத்திருக்கோயிலில் காணப்படும் வைணவதுர்க்கை சிற்பத்தைக் காணும்பொழுது, அச்சிற்பத்தின் பின்னிரண்டு கரங்களில் சங்கு, சக்கரமும், முன்னிரண்டு கரங்களால் சூலமும் கொண்டு மகிஷனை வதம் செய்வதுபோல ஆக்ரோஷமாகக் காட்டப்பட்டுள்ளது. விஷ்ணுவின் கைகளில் உள்ளதுபோல சங்கு, சக்கரம் தேவியின் கரங்களிலும் காட்டப்பட்டுள்ளது. எனவே இச்சிற்பம், வைணவதுர்க்கை என அழைக்கப்படுகிறது.

தேனுபுரீஸ்வரர் திருக்கோயில் - சிவதுர்க்கை

சென்னையில் அமைந்த மிகவும் பழமையான திருக்கோயில்களில் ஸ்ரீதேனுபுரீஸ்வரர் திருக்கோயிலும் ஒன்று. இத்திருக்கோயில், முதலாம் ராஜராஜனின் தந்தை சுந்தரசோழன் காலத்தில் கட்டப்பட்ட திருக்கற்றளி ஆகும். கஜப்பிரஸ்தரம் போன்று வடிவமைக்கப்பட்ட கர்ப்பக்கிருகத்தைக் கொண்டது. அதாவது, அரைவட்ட வடிவில் இதன் அமைப்பு காணப்படுவது அமர்ந்துள்ள யானையின் பின்புறம்போலத் தோற்றமளிப்பதால், இதனை கஜப்பிரஸ்தரம் என அழைத்தனர். தொடார்ந்து இத்திருக்கோயில் விஜயநகரப் பேரரசர்களாலும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்போதுதான், இங்கு காணப்படும் தூண்கள் அனைத்திலும் புடைப்புச் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. இறைவனின் அவதாரங்களையும், சிவனின் மூர்த்தங்களையும் கோயிலின் உள்ளேயும், வெளியேயும் காணலாம். சோழர்களால் அமைக்கப்பட்ட நீள்உருளைத் தூண்களில் எவ்வித சிற்பமும் காணப்படாததற்குக் காரணம் ஏற்கெனவே இந்த அத்தியாயத்தில் விளக்கப்பட்டுள்ளது.  

சோழர்கள் காலத்தைவிட விஜயநகரர் காலத்தில் சிற்பங்கள் மிகவும் அழகுற, அதிக அணிகலன்கள் பூட்டப்பட்டு ஆடைகளும் கணுக்கால்வரை காட்டப்பட்ட நிலையில் அமைப்பது வழக்கம். அதைப்போல இங்கு மகிஷாசுரமர்த்தினி சிற்பம் தூண் சிற்பமாக விஜயநகரர்கள் காலத்தில் வடிவமைக்கும்பொழுது கொடூரத்தைக் காட்ட கோரப்பற்களுடன் அமைத்தனர். தனது வாகனமான சிம்மத்தின் மீது இருந்து ஆவேசமாக போரிடும் தோற்றத்தை வெளிப்படுத்தும்விதமாக அமைத்துள்ள இச்சிற்பத்தில், ஒரு கையில் குறுவாளும், அடுத்த கையில் கேடயமும் காட்டப்பட்டுள்ளது. சிம்மவாகினியாக உள்ள துர்க்கை அம்மனின் வாகனமானது அழகுற வடிவமைக்கப்பட்டு, சீறும் சிங்கமாக வாயைப் பிளந்துகொண்டு, கோபத்தில் தனது வால் மேல்நோக்கிச் செல்வது.. இவை அனைத்தும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

மகிஷாசுரமர்த்தினி சிற்பம் - தூண் சிற்பம்

அடுத்து, அரியலூர் ஸ்ரீவேணுகோபால சுவாமி கோயில் தூணில் காணப்படும் மகிஷாசுரமர்த்தினி சிற்பத்தைக் காணலாம். இச்சிற்பம் மிகவும் இயற்கையாக மிகுந்த கோபாவேசத்துடன் குறுவாளை மகிஷன் மேல் வீச எத்தனிக்கும் வகையில் தனது காலடியில் மகிஷனைக் கிடத்தி அவனது தலையை தனது கையால் பிடித்துக்கொண்டிருப்பது போலவும் காட்டப்பட்டுள்ளது. இச்சிற்பம் புடைப்புச் சிற்பமாகத் மகாமண்டபத் தூண்களில் படைக்கப்பட்டுள்ளது.

அரியலூர் வேணுகோபால சுவாமி தூண் சிற்பம்

*

மணப்பாறை அருகே அமைந்த சைவக் கோயிலில் காணப்படும் துர்க்கை அம்மன் சிற்பம். இச்சிற்பத்தில் மகிஷனாக எருமைத் தலை காட்டப்பட்டுள்ளதும், எருமைத் தலை மீது நின்ற நிலையில் துர்க்கை அம்மன் வடிக்கப்பட்டுள்ளதும் சிறப்பு. எருமையின் கொம்பு மிகவும் நீண்டு அழகாக காட்டப்பட்டுள்ளது. கட்டியவலம்பிதமும், அபயமுத்திரையுடனும் பத்து கரங்களுடனும் காணப்படுகிறது.

விஜயநகரர் காலத்தில் மகிஷாசுரமர்த்தினி சிற்பம் எருமைத் தலை மீது நின்ற கோலத்தில் அதிக அளவில் தூண்களில் புடைப்புச் சிற்பமாகவே வடித்துள்ளனர். இவர்கள் காலத்தில் பெண் தெய்வமாகப் போற்றப்பட்டது காளி அம்மன் வடிவத்தையே எனலாம்.

*

தருமபுரி மாவட்டத்தில் காணப்படும் காளி சிற்பம். விஜயநகரர் காலத்தைச் சேர்ந்த கலைப்படைப்பாகும். இச்சிற்பத்தில் எட்டு கரங்களுடன் விரிசடைமுடியுடன் ஆக்ரோஷமாக சூலம் ஏந்திய முன் கையை கோபாவேசமாக ஓங்கியபடி கீழே கிடத்தியுள்ள அரக்கனை காலில் மிதித்துக்கொண்டு அமர்ந்தநிலையில் காட்டப்பட்டுள்ளது. விரிசடைமுடியுடன் காணப்படும் பெண் தெய்வங்களைக் காளி என்றும் பத்ரகாளி என்றும் அழைத்தனர். அத்தகைய காளியின் சிறப்பு என்ன என்பதையும் தில்லைக்காளியைப் பற்றியும் அடுத்து வரும் அத்தியாயத்தில் காண்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com