சோழர்களும் மகிஷாசுரமர்த்தினியும்

சோழ மன்னர்கள் துர்க்கையைப் போற்றினர், வணங்கினர் என்பதற்கு அவர்கள் படைத்த கோயில்களில் துர்க்கைக்கு அவர்கள் அளித்த இடமும் மற்றும் காளிக்கு கோயில் எடுப்பித்ததும் அதனை நன்கு வெளிப்படுத்துகிறது.

சோழ நாடு சோறுடைத்து என்று புலவர்களால் பாராட்டுப் பெற்ற நாடு. இதன் உட்பொருள் என்னவெனில், தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் எனப் பாடிய பாரதியுடன் ஒப்பிட்டுக்கண்டால், அதன் உண்மை புலப்படும். ஒருவனுக்கு உணவு கிடைத்துவிட்டால் அவனின் மனித ஆற்றலுக்கு நிகர் ஏதுமில்லை என்பதே அதன் உட்பொருள்.

அந்த உண்மையைப் புரிந்த சோழ மன்னர்கள், நாட்டின் நீர் வளத்தைப் பெருக்கினர். பின்னர் அந்நாடு கலைவளம் மிக்க நாடாகத் திகழ ஆரம்பித்தது. சிற்பக் கலை, செப்புப் படிமக்கலை, கட்டடக் கலை எனவும் இசைத்தமிழ், நாடகத்தமிழ் என அனைத்திலும் புகழ்பெற்ற நாடாகத் திகழ்ந்தது. அங்கு சிற்பக் கலைக்கு மட்டும் பஞ்சமா என்ன? காண இங்கு அனைத்துச் சிற்பங்களையும் எடுத்துச் சொல்ல இயலாது. எனவே, எடுத்துக்கொண்ட துர்க்கை அம்மனைப் பற்றிய சிற்பங்கள் சிலவற்றை மட்டும் காண்போம்.

அவை வடிவமைக்கப்பட்ட விதமும், நுணுக்கமான வேலைபாடுகளும் கண்டு, சிற்பியின் திறத்தை வியப்பதா இதற்கு அனுமதி தந்து எவ்வாறெல்லாம் அமைய வேண்டும் என கருதிய சோழ மன்னர்களை நினைத்துப் பெருமிதம் அடைவதா? நீங்களே பாருங்கள், நமது தமிழகத்துச் சோழர் காலச் சிற்பக் கலையை. 

புள்ளமங்கை - பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருவலஞ்சுழி - துர்க்கை

முற்காலச் சோழர்

சோழ மன்னர்கள் துர்க்கையைப் போற்றினர், வணங்கினர் என்பதற்கு அவர்கள் படைத்த கோயில்களில் துர்க்கைக்கு அவர்கள் அளித்த இடமும் மற்றும் காளிக்கு கோயில் எடுப்பித்ததும் அதனை நன்கு வெளிப்படுத்துகிறது. விஜயாலய சோழனுக்குப் பின்னர் ஆட்சிபுரிந்த பராந்தகனால் கட்டப்பட்ட புள்ளமங்கையில் அமைந்த பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயிலில் உள்ள துர்க்கை மிகவும் சிறப்பாக வடிக்கப்பட்டுள்ளது. மகிஷாசுரன் மீது துர்க்கை நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறாள். தேவகோட்டத்தின் இரு பக்கமும் அவளது வாகனமான சிம்மமும், கலைமானும் வடிக்கப்பட்டுள்ளன. எட்டு கைகளுடன் காட்சியளிக்கும் துர்க்கையின் முன் கை அபயமுத்திரையுடனும், இடது கை கடியவலம்பித நிலையிலும் காட்டப்பட்டுள்ளன. மற்ற கைகளில் சங்கு, சக்கரம், வாள், வில், அம்பு, சங்கு, கேடயம் ஆகியவற்றை ஏந்தியவளாகக் காட்சி தருகிறாள்.

துர்க்கையின் சிற்பத்தை மிகவும் கலை நுணுக்கத்துடன், எழில்வாய்ந்த, கம்பீரமான தேவியை சோழர்கள் படைக்கும்பொழுது, தேவகோட்டச் சிற்பமாக இருந்தாலும், நின்ற கோலத்தில் காட்சி தருவதைப்போல இயற்கையாக அமைப்பது தனிச் சிறப்பாகும். படைப்பாளிகளின் ரசனைக்கு ஏற்ப, அக்காலச் சமூகச் சூழுலுக்கு தக்கதுமான துர்க்கையின் சிற்பங்கள், இடத்துக்கு இடம் வேறுபடுவதைக் காட்டவே, பல்வேறு கோயில்களில் சோழர் காலத்தில் தேவகோட்டத்தில் அமைந்த துர்க்கைச் சிற்பம் இங்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள சிற்பத் தொகுப்பின் வாயிலாக, சோழர் காலச் சிற்ப அமைதியையும், காதணிகலன்களையும், கழுத்தணிகலன்களையும், ஆடை அலங்காரங்களையும் தெள்ளத் தெளிவாக கண்டறியலாம். எருமைத் தலை மீது நிற்பது பொதுவானதாக அமைந்தாலும், நிற்கும் விதம் சிற்பத்துக்குச் சிற்பம் மாறுபடுவதையும் காணலாம். கோபமாகவும், சாந்தமாகவும், வெற்றிக்களிப்புடனும் காட்சி தருவதுபோல அவர்கள் அமைத்துள்ளனர்.

சோழர்கள் காலத்தில் மகிஷாசுரமர்த்தினி சிற்பத்தை மிகவும் அழகுற வடிக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது. இங்கு போர்க்கலக் காட்சியைக் காட்டுபவையாக உள்ளவை மிகவும் குறைந்த இடங்களிலேயே காணமுடிகிறது. அவைகூட, புடைப்புச் சிற்பங்களாக சிறிய அளவில் வடிக்கப்பட்டுள்ளன. ஆனால், துர்க்கையின் வடிவத்தை நன்கு அழகிய வடிவில் சாந்தமான முகத்தோற்றத்துடன் எருமைத்தலையை பீடமாகக் கொண்டு  நின்ற நிலையில் காட்டியுள்ளனர். முதல் சிற்பத்தில், துர்க்கையின் பாதுகாவல் நிலையில் இரண்டு பெண்களின் சிற்பம் வைக்கப்பட்டுள்ளன. துர்க்கையின் உருவம் எட்டு கரங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. சற்று வலது காலை மட்டும் மடித்து ஒய்யாரமாக நின்ற நிலையில் ஆயுதங்களுடன் அவள் காட்சி தருகின்றாள்.

அதற்கு அடுத்த நிலையில், சாந்தமே உருவான அன்னையின் தோற்றத்திலேயே காட்சியளிக்கிறாள். இச்சிற்பத்தில், அபய முத்திரையும் கட்டியவலம்பித முத்திரையும் இருப்பதைக் காணலாம். எருமைத் தலை மீது நின்ற நிலையில், சங்கு சக்கரம் ஏந்திய நிலையில் நான்கு கரங்களுடன் காட்டப்பட்டுள்ளது. இச்சிற்பம், மகிடனை வென்று தனது செயலை வெற்றிகரமாக முடித்து மீண்டும் பக்தர்களைக் காக்க அமைதியே உருவான நிலையில, கையில் ஆயுதங்கள் ஏதுமின்றி காட்சி அளிப்பது மிகவும் இயற்கையாக அமைந்த ஒன்று எனலாம்.

தக்கோலம் ஜலநாதீஸ்வரத்தில் அமைந்த துர்க்கை. இவள் தனது காலை மடக்கி ஒரு காலை எருமைத் தலை அரக்கன் மீதும், அடுத்த காலை நிலத்தில் இருத்திக்கொண்டும் நிற்கும் காட்சி. மகிடனை அழித்து போரில் வெற்றிபெற்று தனது ஆவேசமான போர்க்குணத்தை துறந்து, மக்களுக்கு அபயகரத்தைக் காட்டிக்கொண்டு நளினமாக நிற்கும் விதமும், சிற்பக் கலைக்கே அழகு சேர்ப்பதாக அமைகிறது.  துர்க்கை என்றால் கோபாவேசமாக கொடூரமான முகத்தோற்றமும், பல கைகளும், அக்கைகளில் வில்லும், வாளும், அம்பும் கொண்டு காட்சியளிப்பவள் என்ற நிலை மாறி சாந்தமே உருவான நிலையில், தனது தொடை மீது கையை கட்டியவலம்பித அமைப்பில் வைத்துக்கொண்டு யாமிருக்க அஞ்சேல் என்பதைக் கூறுவதுபோல அபயமுத்திரையையும் காட்டி வடிக்கப்பட்டுள்ளது இத்துர்க்கையின் வடிவம். பெரும்பாலும், தேவகோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சோழர்கள் கால துர்க்கை, சாந்தமுடன் காட்சி தருபவளைப் போன்றே காட்டப்பட்டுள்ளதைக் காணலாம். மார்புக்கச்சையும், இடையில் ஆங்காங்கே ஆடும் ஆடையணிகலன்களும், கைகளில் காட்டியுள்ள கேயூரமும் அன்னையின் அழகை மேலும் மெருகூட்டுகின்ற நிலையில் அமைந்துள்ளன.

பாபநாசம் வட்டம் கோபுரராஜபுரம் பகுதியில் அமைந்த திருக்கோயிலில் காணப்படும் துர்க்கையும் நான்கு கரங்களுடன் அபயமுத்திரையும், கட்டியவலப்பித அமைப்பிலும் எருமைத் தலை மீது நின்ற நிலையில் காட்சியளிக்கிறாள். பொதுவாக, சோழர்கள் காலத்தில் மகிஷாசுரமர்த்தினியை எருமைத் தலையைக் கொண்டு மட்டுமே பகுத்தறியலாம். சிவாலயங்களில், வடக்குப்புறத்தில் அமைந்த தேவகோட்டத்தில் துர்க்கைச் சிற்பங்கள் இடம் பெறுவது வழக்கமாக இருந்தது.

பாநாசம் - கோபுரராஜபுரம்;  கூடலூர் - தரங்கம்பாடி – நாகை மாவட்டம்

சுந்தரசோழன் - புஞ்சை - நல்துணையீஸ்வரம் - மகிஷாசுரமர்த்தினி

சோழர்களின் மிகவும் சிறப்பு வாய்ந்த சிற்பக் கலைகளுக்கும் சிற்பங்களுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது, புஞ்சை நல்துணைஈஸ்வரம் எனும் திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் சுந்தரசோழன் காலத்திலோ அல்லது அவனது மைந்தன் இரண்டாம் ஆதித்தியனாலோ எடுப்பிக்கப்பட்டதாக இருக்கலாம் என கல்வெட்டுச் சான்றுகள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், இங்கு காணப்படும் துர்க்கை அம்மன் சிற்பமும், புடைப்புச் சிற்பங்களாக அமைக்கப்பட்ட மகிஷாசுரமர்த்தினி சிற்பமும், துர்க்கை சிற்பமும் மிகவும் கவனிக்கத்தக்கதாகும்.

மகிடனுடன் போரிடும் காட்சி - புஞ்சை - மகிஷாசுரமர்த்தினி

முற்காலச் சோழர்கள் எடுப்பித்த இக்கோயிலில், மாமல்லபுரச் சிற்பங்களில் காணப்படுவதைப் போன்று மகிஷாசுரமர்த்தினி போர் புரியும் காட்சியையும், போரில் மகிஷனை வதம் செய்து தன்காலில் போட்டு மிதித்துக்கொண்டு சூலத்தால் கொல்வது போலவும் தத்ரூபமாகத் தூண்களில் சிறிய அளவில் புடைப்புச் சிற்பமாக வடித்துள்ளது போற்றுதலுக்குரியது. மூன்று சிற்பங்களும் புடைப்புச் சிற்பங்களே.

அவற்றில் முதலாவதாக, துர்க்கை அம்மன் தனது பிற பெண் தெய்வங்களுடனும், கைகளில் ஆயுதங்களை ஏந்தி சிம்ம வாகனத்தில் அமர்ந்துகொண்டு போர் புரியும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது. இக்காட்சியில், துர்க்கை சூலத்தை ஏந்திக்கொண்டு கோபாவேசமாக அசுரனை நோக்கிச் செல்வது போலவும், அவன் செய்வதறியாது தன் வலிமையைக் குறைத்துக்கொள்ள இயலாத சூழ்நிலையில் தவிப்பதும், போர்க்களத்திலிருந்து தப்பிச்செல்ல எத்தனிப்பது போலவும் காணமுடிகின்றது. எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடித்தலே துர்க்கையின் பண்பு. அதற்கேற்ப, அசுரனை நாடிவேகமாக முன் செல்வது போலவும், சிறய கற்பலகையில் பெரியதோர் நிகழ்வு மிகவும் இயற்கையாக வடிக்கப்பட்டுள்ளதையும் காணமுடிகிறது.

துர்க்கைக்குத் துணையாக பிற பெண் தெய்வங்களும் போரிடும் காட்சியும், அசுரர்களை அவர்களும் இணைந்து அழிக்கும் காட்சியும் தெளிவாக காட்டப்பட்டுள்ளது. அடுத்து, போர் முடிந்த பின்பு அந்த அசுரர் தலைவன் மகிடனைத் தனது காலில் கிடத்தி சூலத்தால் குத்துகின்ற காட்சி ஒரு தூணில் புடைப்புச் சிற்பமாகவும் படைக்கப்பட்டுள்ளது. அடுத்து, போர் முடிந்த பின்பு துர்க்கை தனது பக்தர்களுக்கு எதற்கும் அஞ்சேல் என்பதுபோல அபயக்கரம் நீட்டி, தனது சிம்ம வாகனத்தோடு துர்க்கை அம்மனாகக் காட்சியளிக்கும் நிலையும் வெகு சிறப்பாக வடிக்கப்பட்டுள்ளது.

சிம்மவாகினி – துர்க்கை – புஞ்சை; திருக்கொண்டீஸ்வரம் – துர்க்கை

இவைமட்டுமின்றி, தேவகோட்டத்தில் பெரிய அளவில் துர்க்கை அம்மனின் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளதையும் காணலாம். தனது மேல்பகுதியில் வலது பக்கம் சிம்ம வாகனத்தையும, இடது பக்கம் மானையும், கீழ்பகுதியில் இரண்டு பக்கத்திலும் பாதுகாவலர்களையும் வைத்து தனக்கு பக்கத்திலும்  உள்ளவாறு, எருமைத் தலை மீது நின்ற நிலையில் வடிக்கப்பட்டுள்ள இச்சிற்பம் காண கண்கோடி வேண்டுமென்றால் அது மிகையல்ல. சோழர்கள் காலத்துச் சிற்பங்களே மிகவும் அழகு. அவற்றிலும் முற்காலச் சோழர்களில் புஞ்சை திருக்கோயில் சிற்பங்கள் கலைகளுக்கெல்லாம் ஓர் எடுத்துக்காட்டாகும். இங்கு காணப்படும் அகத்தியர், தட்சிணாமூர்த்தி, விநாயகர் மற்றும் மகரதோரணங்களில் காணப்படும் சிற்ப நுணுக்கங்கள் அவற்றையெல்லாம் மிஞ்சும்வகையில் தூண்களில் புடைப்புச் சிற்பங்களாக ராமாயணக் காட்சிகளும் செதுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும், சோழர்களின் சிற்பக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டுகள்.

மாமல்லபுரத்தில் உள்ள மகிஷாசுரமர்த்தினி சிற்பத்துக்கு அடுத்து, சோழர்கள் காலத்தில் சுந்தரச் சோழனால் எடுக்கப்பட்ட புஞ்சை கோயிலில்தான் இதுபோன்ற புடைப்புச் சிற்பங்களில் மகிஷாசுரமர்த்தினியின் தொடர் நிகழ்ச்சிகளை தூண் சிற்பங்களில் வடித்துள்ளனர். தூண் சிற்பங்களில் மேலும் பல நிகழ்வுகளை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியுள்ளனர். ராமாயணக் காட்சிகள் சிறிய அளவில் அழகிய வடிவில் அற்புதமாகக் கதை புரியும் நிலைக்குத் தத்ரூபமாக விளக்கப்பட்டுள்ளது. போர்க்காலக் காட்சியை சித்தரிக்கும்பொழுது, ஒவ்வொருவரின் அசைவையும் நன்கு பதிவு செய்து காட்டியுள்ளனர். புஞ்சை சிற்பங்கள் சோழர் காலச் சிற்பக் கலைக்கு சிறந்ததோர் எடுத்துக்காட்டாக இன்றளவும் திகழ்கின்றன.

துர்க்கை – சிம்ம வாகனம் - மான் – புஞ்சை

துர்க்கை - எருமைத் தலை மீது நின்ற நிலை

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com