அன்னை உமை - மகிஷாசுரமர்த்தினி (தொடர்ச்சி 3)

உயர்ந்த பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக கிராமங்களிலும் ஆலமரத்தினடியிலும் துர்க்கையம்மன் சிற்பங்கள் வைத்து வழிபட்டு வந்துள்ளதை ஆங்காங்கே கிடைத்துள்ள சிற்பங்களைக் கொண்டு எளிதில் கூறமுடியும்.

மகிஷனுடன் போர் புரிதல்

மகிஷாசுரமர்த்தினி மண்டபத்தின் வடக்குச் சுவர் முழுவதும் செதுக்கப்பட்ட குடவரைச் சிற்பமே இப்போர்க்காட்சி. இதுவே துர்க்கை அம்மனின் இரண்டாவது நிலையாகக் கொள்ளலாம். சிற்பங்களை பகுத்துத் தொகுத்துக் காண்பதிலும் சுவையன்றோ. காரணகாரியங்களுடன்தான் சிற்பங்களைப் படைத்துள்ளனர் என்பதையும் அறியவேண்டுமல்லவா. அதைவிடுத்து, ஏதோ சிலை வடித்தனர் என்று வருங்கால மக்கள் கருதக் கூடாது என்பதற்காகவும் இங்கு துர்க்கை அம்மனைத் தொகுத்து பிரித்து வழங்கப்படுகின்றது.

மகிஷாசுரமர்த்தினி போரிடும் காட்சியை சின்னத்திரையில் படம் காட்டுவதைப் போன்று எவ்வளவு எளிமையாக பார்ப்பவர் எவராயினும் எளிதில் புரிந்துகொண்டு மனதில் இருத்தி ரசிக்கும் நிலையில் படைத்திட்ட இக்காவியத்தை நாமும் சற்று கவனிப்போம். இருவருக்கும் இடையே போர். இருவரில் ஒருவர் துர்க்கை அம்மன். அடுத்தவர் அசுரர் தலைவன் மகிஷன்.

மகிசாசுரமர்த்தினி மண்டபம் - மகிஷனுடன் போர்களக் காட்சியில் துர்க்கை

மகிஷாசுரமர்த்தினி

கம்பீரமாக சிம்ம வாகனத்தில் எட்டு கரங்களுடன் பக்கத்துக்கு ஒரு காலை பொறுத்திக்கொண்டு கோபாவேசமாக ஆக்ரோஷத்துடன் செல்லும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது. சிம்ம வாகனத்தில் அமர்ந்து வருவதால் சிம்மவாகினி என்று அழைக்கப்படுகிறாள். அன்னையின் வேகத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில், பாய்ந்துகொண்டு மகிஷனை நோக்கி சிம்மம் எத்தனிப்பதையும், எத்தனை லாகவமாகக் காட்டியுள்ளான் பல்லவச் சிற்பி. மகிஷனே துர்க்கையின் ஆவேசத்தைக் கண்டு, கையில் ஆயுதம் தாங்கியும் நிராயுதபாணியாக உணர்ந்தவன்போல் பயம் கலந்த முகத்துடன் ஒரு கண் தேவியையும், அடுத்த கண் தப்பிச் செல்ல வழியைத் தேடுவதைப் போலவும் படைத்துள்ளது மிகவும் சிறப்பாகும்.

தேவியின் காலருகே தேவிக்குத் துணையாக வந்த காளியும், சிவனின் பூதகணங்களும், அசுரர்களை விரட்ட தேவியோ தனது முதுகுப் பகுதியில் வைத்துள்ள அம்பறாக்கூட்டுக்குள் இருக்கும் அம்பை அழகாக எடுத்து மகிஷனை நோக்கி குறி பார்க்க, அரக்கர்கள் அனைவரும் பயந்தோடும், மகிஷன் செய்வதறியாது தடுமாறி நிற்பதையும் காணலாம். இறுதியாக, போர்க்கலத்தில் அசுரர்களையும், அசுரர்களின் தலைவன் மகிஷனையும் கொன்று மகிஷாசுரமர்த்தினி என்று பெயர் பெறுகின்றாள். அசுரர் தலைவனைவிட அவனுக்குத் துணைபுரியும் பிற அசுரர்களையும் குறிப்பாக சும்ப, நிசும்பன் போன்ற அரக்கர்களையும், அவர்களுக்குத் துணைநின்ற சண்ட, முண்டர்களையும் அழித்து வெற்றியை நிலைநாட்டுகின்றனர். கொடியவனை அழிக்கும்முன் அவனுக்குத் துணை போகும் கொடியவர்களையும் முதலில் களைதல் வேண்டும் என்ற நோக்கில் எண் கரங்களிலும் கிடைத்தவர்களை வதம் செய்து பிற அசுரர்களை அழிக்கும் இப்போர்க்காட்சி எங்கும் காண இயலாத ஒன்றாக இப்படைப்பு அமைந்துள்ளது.

துர்க்கா தேவியின் வெற்றியையும், போர்த் தெய்வத்தின் குணத்தையும், ஆண் அசுரனை ஒரு பெண் தெய்வம் பிற பெண் தெய்வங்களின் துணை கொண்டு அழித்தமை மிகவும் சிறப்பானதாகும். எனவேதான், மகிஷன் வதம் இந்தியா முழுவதிலும் துர்க்கை அம்மனைப் படைக்கும் எண்ணத்தை உருவாக்கியுள்ளது. அவ்வாறு அவர்கள் படைக்கும்பொழுது, எருமைத் தலையை கீழே இருத்தி அதன் மீது நிற்பதுபோல வடித்துள்ளனர். தெளிவான போர்க்களக் காட்சியை மகாபலிபுரத்தில் மகிஷாசுர மண்டபத்தில் காணலாம்.

இதுபோன்று போர்க்களக் காட்சிக்குப் பின்னர் அவளது வெற்றியை உணர்த்தும் விதமாகப் படைக்கப்பட்ட சிற்பங்களே, மகிஷனின் தலை மீது துர்க்கை நின்ற நிலையில் வடிக்கப்பட்ட சிற்பங்களாகும். அரக்கனைக் கொன்று அவனிடம் இருந்து மக்களையும்; மக்களைக் காக்கும் தேவர்களையும் நிம்மதி அடையச் செய்த அம்மன், சற்று ஓய்வாக எருமைத் தலை மீது ஒய்யாரமாக நின்ற நிலையில் காட்சி தரும் சிற்பங்கள், அடுத்த காலகட்டங்களில் வடிக்கப்பட்டவையாகக் கருதலாம். எனவே, போருக்குத் தயராக உள்ள நிலை முதல் கட்டக் காட்சியாகவும், இரண்டாவது கட்டமாக மகிஷாசுரமர்த்தினி, அரக்கர் தலைவன் மகிஷனுடன் போரிடும் காட்சி. இறுதியாக, மகிஷன் தலை மீது நின்ற நிலை இவ்வாறு பகுத்துக்கொண்டால், வரலாற்றை புரிந்துகொள்ளவும், சிற்பங்களின் காலத்தை எளிமையாக வரிசைபடுத்தவும் ஏதுவாக அமையும்.

தமிழகத்தில் மகிஷனுடன் போரிடும் காட்சியை கண்ட நாம், கர்நாடகம் மற்றும் வடஇந்தியாவில் மகிஷனுடன் போரிடும் காட்சியை சித்தரிக்கும் சிற்பங்கள் சிலவற்றைக் காண்போம். தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுமையும் மகிஷனை வதம் செய்வது, எருமைத் தலை அரக்கனை சூலத்தால் துர்க்கை குத்திச் சாய்ப்பது போலவே சிற்பங்களைக் காணலாம். சுருக்கமாகச் சொல்லும் சிற்பங்கள், எருமைத் தலையின் மீது துர்க்கை நின்றுகொண்டு காட்சி அளிப்பது. இவை அனைத்துச் செய்திகளையும் உள்ளடக்கியதாகக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் வாழ்ந்த தலைமை சிற்பிகளும் பிற சிற்பிகளும் போட்டி போட்டுக்கொண்டு தங்களது தனித்திறமையை வெளிப்படுத்தியுள்ளதை தங்களது சிற்பப் படைப்புகளின் வாயிலாக தெளிவாகக் காட்டியுள்ளனர்.

மகிஷாசுரமர்த்தினி - துர்க்கை. 1. பாகல்கோட், 2. பாதாமி - கர்நாடகம்

கர்நாடகத்திலும் வட இந்தியாவிலும் மகிஷாசுரமர்த்தினியை தேவகோட்டச் சிற்பங்களாக அமைத்தனர். மகிஷன், துர்க்கையின் காலடியில் கிடத்தப்பட்டு அவனது எருமைத் தலை மீது தனது சூலத்தால் குத்திக் கிழிப்பதுபோலக் காட்டப்படுகின்றது. இங்கு போர்க்களக் காட்சி உள்வாங்கப்படுகிறது. எனவே, போர்க்களக் காட்சியைவிட, ஒட்டுமொத்த முடிவை உணர்த்தும் சிற்பமான துர்க்கை நின்ற நிலையில் காணப்படுதலே அதிகமாகப் படைக்கப்பட்டுள்ளது. இச்சிற்பம் மகிஷாசுரமர்த்தினி என்பதை உணர்த்தவே எருமைத் தலையைக் காட்டி அதன் மீது நிற்பதுபோல வடிக்கப்பட்டுள்ளதையும் உணரலாம்.

ஒவ்வொரு கலைஞனும் மகிஷாசுரமர்த்தினியை வடித்துள்ள விதம் போற்றுதலுக்கு உரியது. இவை கோயில்களில் தேவகோட்டச் சிற்பமாகவும் அடுத்து பலகைக் கற்சிற்பமாகவும் படைக்கப்பட்டுள்ளன. பொதுவாக, இச்சிற்பம் மக்களை மிகவும் கவர்ந்துள்ளது எனலாம். நம் இன்னலைக் காக்க வரும் பெண் தெய்வம் என்றால் அனைவருக்கும் ஓர் ஈர்ப்புதானே. அதுபோல, கிராமங்களிலும் இச்சிற்பங்கள் பலகைக் கல்லிலாவது செதுக்கப்பட்டு வணங்கப்பட்டுவருவதைக் காணமுடிகிறது. இன்றளவிலும் அதிகளவில் மேற்பரப்பாய்வில் கண்டறியப்பட்ட சிற்பம், இத்துர்க்கை அம்மனின் சிற்பமே என்றால் அது மிகையாகாது.

கர்நாடகக் கோயில் ஒன்றில் மகிஷாசுரமர்த்தினி சிற்பத்தை புடைப்புச் சிற்பமாகச் செதுக்கி பெருமைப்படுத்தியுள்ளனர். அச்சிற்பத்தில், மகிஷனை சிம்மம் கடித்துக் குதறுவதைப்போல் காட்டப்பட்டுள்ளது. அதில், தனது எஜமானின் எதிரி தனக்கும் எதிரி என்பதுபோல, துர்க்கை அம்மனின் வாகனமாக உள்ள சிம்மமும் தனது பங்குக்கு அரக்கர்களை அடித்துக் கடித்து போராடுவதை தத்ரூபமாகக் காட்டப்பட்டுள்ளதை இந்தப் புடைப்புச் சிற்பம் தெளிவுபடுத்துகின்றது.

குடவரைச் சிற்பங்கள் – துர்க்கை

மகிஷனைக் கொன்று தேவர்களையும், மக்களையும் நிம்மதி அடையச் செய்த மகிஷாசுரமர்த்தினி, தான் செய்தது அருஞ்செயல் என்பதையும் மறந்து, அழகாக ஒய்யாரமாக தனது ஆயுதங்களை சேடியர்களிடம் கொடுத்துவிட்டு, ஏதும் நடவாதது போல் தனது மெல்லிய இடையைக் காட்டி, கையில் கிளியை வைத்துக்கொண்டு, திரிபங்க நிலையில் தனது பூதகணங்களுடனும், காவல் பெண்டுகளுடனும், சற்று தலையை சாய்த்துக்கொண்டு அழகே உருவாக சாந்தமே தனது தோற்றத்தைக் காட்டி ஏதுமறியாதவள்போல இக்குடவரைச் சிற்பம் காட்சியளிக்கிறது.

பக்கத்துக்கு ஒருவராக நிற்கும் பெண்கள் தங்களது கையில் கத்தி கேடயத்தையும், இடப்பக்கதில் நிற்பவர் கையில் வில்லைப் பிடித்திருக்கும் லாகவமும், போரிட்டு வெற்றிக்களிப்பில் ஓய்வெடுப்பது போல ஒய்யாரமாக நிற்பதுபோலக் காட்டப்பட்டுள்ளது. மேல் பகுதியில் பூதகணங்களும் அன்னையின் அடுத்த கட்டளைக்காக காத்திருப்பவர்களைப்போல ஆர்வத்துடன் காட்டப்பட்டுள்ளதும் கண்டு ரசிக்கக்கூடியதாகும். செஞ்சிக்கு அருகில் உள்ள சிங்கவரம் குடவரையிலும், மாமல்லபுரம் வராகர் குடவரையிலும் காணப்படும் துர்க்கை சிற்பங்கள், சிறப்புடைய முதன்மைச் சிற்பங்களாகத் தோன்றுகின்றன.

குடவரைச் சிற்பங்கள் – துர்க்கை

பலகைக் கற்சிற்பங்களில் துர்க்கை

தமிழகத்தில் அதிக அளவில் கிடைத்துள்ள பலகைக் கற்சிற்பங்களில் பெரிதும் காணப்பட்ட உருவம் துர்க்கை அம்மன்தான். உயர்ந்த பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக கிராமங்களிலும் ஆலமரத்தினடியிலும் துர்க்கையம்மன் சிற்பங்கள் வைத்து வழிபட்டு வந்துள்ளதை ஆங்காங்கே கிடைத்துள்ள சிற்பங்களைக் கொண்டு எளிதில் கூறமுடியும். தச்சூர், ஒலக்கூர், சோமாண்டார்குடி, எலவனாசூர் கோட்டை, தீர்த்தமலை போன்ற பல இடங்களில் இதுபோன்ற சிற்பங்கள் ஏராளமாகக் காணப்படுவதிலிருந்து, துர்க்கை எனும் பெண் தெய்வ வழிபாடு மக்களிடையே கொண்டிருந்த வரவேற்பும், பக்தியையும் சுட்டுவதாகவே அமைகின்றது. இவை சங்க காலத்திலிருந்து தொடர்கின்றன. கொற்றவை என்றும், துர்க்கை என்றும், மாகாளி, பத்ரகாளி, மகிஷாசுரமர்த்தினி என்றும் கிராமங்களில் முழுவதும் நன்கு பரவிய பக்தி நிலையைக் காணமுடிகின்றது. எனவே, பல்லவர்கள் காலத்தில் தொடங்கி, தொடர்ந்து சோழர், போசளர், விஜயநகர மன்னர்கள் எனத் தொடர்ந்தது, நம்மக்களின் மரபு மாறாத்தன்மையையும், பெண் தெய்வ வழிபாட்டில் கொண்ட ஈடுபாட்டையும் காட்டுகின்றது.

எட்டு கரங்கள், ஆயுதங்கள், போரிட துணைநின்ற பெண் தெய்வங்கள் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன. காகமும், மானும் கொற்றவையை நினைவுபடுத்துவதாக உள்ளன. கையில் அதிகாரத் தோரணையில் வைத்துள்ள எச்சரிக்கை மணியினையும், வில், அம்பு, கத்தி, கேடயம் ஆகியவை, போருக்குத் தயாரான நிலையைச் சுட்டுகிறது.

துர்க்கை - எலவனாசூர் கோட்டை; துர்க்கை - தச்சூர்

பல்வேறு வடிவில் காட்சியளித்த மகிஷாசுரமர்த்தினி என்றழைக்கப்படும் துர்க்கா தேவி, சோழர்கள் காலத்தில் எவ்வாறெல்லாம் போற்றப்படுகின்றாள் என்பதையும், அவர்கள் அமைத்த கோயில்களில் தேவகோட்டங்களில் எந்த இடத்தில் வைத்து வழிபட்டனர் என்பதையும், சிசும்பசூதனி பற்றிய தகவல்களையும் அடுத்து வரும் பகுதிகளில் காண்போம்.

சோழர்கள் காலத்தில் துர்க்கை அம்மன் சிற்பங்கள்

பல்லவர்கள் மற்றும் முத்தரையர்களிடமிருந்து தஞ்சையையும், வல்லத்தையும் மீட்டு தஞ்சையில் தலைநகரத்தை நிறுவி சோழராட்சியை மீண்டும் மலரச் செய்தவன் விஜயாலயச் சோழன். இவன் தனது வெற்றிக்குக் காரணம், தான் வணங்கும் பெண் தெய்வமே எனப் போற்றி, அப்பெண் தெய்வத்துக்குக் கோயில் எடுப்பித்தான் என்பர். அவ்வாறு விஜயாலயச் சோழன் எடுத்த கோயில் இன்றும் சிறப்புடன் உரிய வழிபாட்டுடன் அமைந்திருக்கும் நிசும்பசுதனி எனும் துர்க்கை திருக்கோயிலே ஆகும். துர்க்கை கோயிலை விஜயாலயன் கட்டிய செய்தி திருவாலங்காட்டுச் செப்பேடுகளின் வாயிலாக அறியமுடிகின்றது. இக்கோயில், சோழர்களின் பழைய கோட்டையின் கீழ்வாசலின் அருகே அமைந்துள்ளது.

நிசும்பசூதனி கோயில்

முற்காலச் சோழர்களால் எடுக்கப்பட்ட திருக்கோயில், நிசும்பசுதனி எனும் துர்க்கை அம்மன் கோயில் ஆகும். மிகவும் உக்கிரமமாகக் காட்சி அளிப்பதால் அவளை உக்கரமாகாளி என அழைக்கின்றனர். ஒரு கிராம தெய்வம் போன்று அப்பகுதி மக்கள் கொண்டாடி வழிபட்டு வருகின்றனர். வடபத்ரகாளியம்மன் என்றும் அழைத்து வருகின்றனர். இங்கு காணப்படும் நிசும்பசூதனி சிற்பம் உடைந்து ஒட்டவைக்கப்பட்டுள்ளது. இதனை பிற்காலம் என்று கருதுவோரும் உண்டு. இதேபோன்ற நிசம்பசூதனி சிற்பம், அருகில் உக்ரமாகாளி கோயிலிலும் காணப்படுகின்றது. கோரப்பற்களும், கொடூரமுகமும் இயற்கையாகச் செதுக்கப்பட்டுள்ளன.

கங்கைகொண்டசோழபுரம் - நிசும்பசூதனி - விஜயாலயன் காலம்

உக்கரமாகாளி என்று தற்போது அழைக்கப்படும் நிசம்பசூதனி கோயில் கருவரையில் வீற்றிருப்பவள் நிசும்பசூதனி என்றழைக்கப்படும் துர்க்கையே ஆவாள். மகிஷன் என்ற கொடிய அரக்கனை கொன்று மகிஷாசுரமர்த்தினி என்று பெயர் பெற்றவளே இத்துர்க்கை. மகிஷனைக் கொல்வதற்கு முன் அவனது சகோதரர்களான சும்பன் நிசும்பனையும், அவர்களின் உதவியாளர்களான சண்டா, முண்டாவையும் கொன்று இக்கொடியவர்களிடமிருந்து தேவர்களையும், மக்களையும் முதலில் காத்து நிற்கின்றாள் துர்க்கை. தேவி மகாத்மியம் கூறும்பொழுது, சும்பன் - நிசும்பன் அரக்கர்கள் செய்த கொடூரச் செயல்களைக் கண்டு தேவி அவர்களை அழிக்கின்றாள். அவர்களுக்கு உதவியாக நின்ற சண்டா, முண்டாவையும் அவள் முதலில் அழிப்பதால், சும்ப-நிசும்பர்கள் வேறு வழியின்றி தேவியிடம் நேரில் போரிட முயற்சிக்கின்றனர். தங்களது தவறையும், தங்களது பலவீனத்தையும் அறிந்த அவர்கள் தேவியால் அழிக்கப்படுகின்றனர். இந்த சும்ப, நிசும்பனை அழிக்கும் துர்க்கையையே விஜயாலயன் படைத்திருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பர். அக்கூற்றுக்கு ஏற்ப சும்ப, நிசும்பனைத் தன் காலடியில் போட்டு அழிப்பதையே சிற்பமாக வடித்துள்ளான். இதன் சிற்ப அமைதியைக் காணும்பொழுது, பொ.ஆ. 9-ம் நூற்றாண்டு எனக் கருதப்படுவதால், இது விஜயாலயன் எடுப்பித்தது என்பதும் திருவாலங்காட்டுச் செப்பேட்டுச் செய்தி கூறும் தகவலும் இணைந்துபோவதால், இக்கோயிலும் அச்சிற்பமும் விஜயாலயன் காலத்தைச் சார்ந்ததே எனக் கொள்ளலாம்.

சும்பனை தனது வலது காலைத் தூக்கி கோபாவேசமாக அவனது தலையின் கழுத்துப் பகுதியில் தேவியின் காலை வைத்து அழுத்திக்கொண்டு, அடுத்து இடது காலில் நிசும்பனை தேவி அழுத்திக்கொண்டு, தனது கையிலுள்ள சூலத்தை எடுத்து ஓங்கிக் குத்துவதற்கு எத்தனிக்கின்ற காட்சி மிகவும் தத்ரூபமாகக் காட்டப்பட்டுள்ளது. போருக்குச் செல்லும் முன் சோழ மன்னர்களும் வீரர்களும், நிசும்பசூதனி எனும் துர்க்கைக் கோயிலில் பூசை செய்து அவள் அருள்பெற்றே செல்வதாகக் கூறுவர். அத்தகைய செல்வாக்குப் பெற்றது இத்துர்க்கை அம்மன் எனும் நிசும்பசூதனி கோயில் ஆகும்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com