அன்னை உமை - மகிஷாசுரமர்த்தினி (தொடர்ச்சி 2)

எக்காலத்திலும் மக்கள் மனதில் கொள்ள வேண்டும் என்பதால்தான் மரம், சுதை, மண், இவற்றைப் பயன்படுத்தாது, என்றும் நிலைத்து நிற்கும் கற்களைத் தேர்ந்தெடுத்து...

துர்க்கை

வீரத்துடனும், ஆக்ரோஷத்துடனும் காட்சியளிக்கும் பெரும்பாலான பெண் தெய்வங்களை துர்க்கை என்றே அழைப்பர். இவள் கொடூரமான முகத்தோற்றத்தையும், போர்புரியும் மனநிலையுடனும், கைகளில் ஆயுதங்கள் தாங்கியும் காணப்படுவாள். துர்க்கையைப் பற்றி நான்கு கைகளும், இரண்டு கண்களும், நிமிர்ந்த மார்பும், கழுத்திலும், காதிலும் அணிகலன்கள் பூண்டு ஆக்ரோஷமாகக் காணப்படுவாள் என்றும், மேல் இரண்டு கரங்களில் சங்கும், சக்கரமும் கீழிரண்டு கைகளில் அபய முத்திரையும், அடுத்து தனது உயர்ந்த இடுப்பின் மீது ஓர் கையையும் வைத்து திரிபங்க நிலையில் காட்சி அளிப்பாள் என காஸ்யபசில்பம் தெரிவிக்கிறது. தாமரை பீடத்தின் மேல் நின்ற நிலையில் மார்பில் பாம்பினையே மார்புக் கச்சமாக கட்டியுள்ளாள் என்றும் கூறுகிறது. சில்பரத்னாவில், கீழிரண்டு கைகளில் வில்லும் அம்பும் பிடித்த வண்ணம் காட்சியளிப்பதாக கூறப்பட்டுள்ளது. பெரும்பாலும், சிவாலயங்களில் வடக்குப்புறச் சுவற்றில் உள்ள தேவகோட்டத்தில் துர்க்கை சிற்பம் அலங்கரிப்பதைக் காணலாம். விஷ்ணு கோயில்களில், பீடத்தின் மீது நின்ற நிலையில் காணப்படும் துர்க்கையை லட்சுமி என அழைக்கின்றனர்.

ஒன்பது வகையான துர்க்கை

சைவ ஆகமங்களில் ஒன்பது வகையான துர்க்கையை பற்றி கூறப்பட்டுள்ளது. இரண்டு கைகள் முதல் பதினெட்டு கரங்கள் கொண்ட நிலை. ஆனால் ஒவ்வொரு சிற்பத்திலும் அவர்கள் கைகளில் வைத்துள்ள ஆயுதங்களும் வாகனங்களும் மாறிவருவதைக் காண முடிகிறது.

1. சைலபுத்ரி

இவள் நந்தி வாகனத்தில் வலம் வருவாள். பிறைச்சந்திரனைத் தலையில் அணிந்து கைகளில் சூலத்துடன் காட்சியளிப்பாள்.

2. பிரம்மச்சாரினி

தண்ணீர்க்குடமும், அக்கமாலையையும் கொண்டவள்.

3. சண்டிகந்தா

கோபமான பார்வை, வவ்வால் வாகனம்.

4. ஸ்கந்தமாதா

சிம்ம வாகனமும், தாமரை மொட்டை கையிலேந்தியும் காணப்படுவாள்.

5. கூஸ்மந்தா - துர்க்கை

இரண்டு கைகளிலும் குடங்களில் ரத்தத்தை ஏந்தியவளாகக் கொடூரமாகக் காட்சியளிப்பவள்.

6. கார்த்தியாயினி

புலி மேல் வருபவள். கையில் கத்தியுடன் அசுரனை அழிப்பவளாகக் காட்டப்படுவாள்.

7. காளாரத்திரி

பயந்த பொழிவுடன் மெல்லிய புன்னகையும் அவரது முகத்தில் காணப்படும்.

8. மகாகௌரி

வெள்ளை உடையில் வருபவள்.

9. சித்திதாயினி

துணைக்கடவுளாக வருபவள்.

இவையனைத்தும், பதினாறு மற்றும் பதினெட்டு கரங்கள் கொண்டும் எருமைத் தலை மீது உட்கார்ந்தபடி, கபால மாலை அணிந்தும் காணப்படுவாள்.

கரணாகமத்தில், மேற்குறித்த ஒன்பது துர்க்கையின் நாமகரணமும் பல்வேறு பெயர்களில் குறிப்பிடுகிறது. அவற்றில் ஒன்றைத் தவிர மற்ற அனைத்துக்கும் பதினாறு கரங்களும் ஒன்றுக்கு மட்டும் பதினெட்டு கரங்களும் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கரணாகமத்தில் ஸ்கந்தமாதா பற்றி குறிப்பிடும்போது, பதினாறு கரங்கள் என்றும் பெயர் சோடசபுஜ துர்க்கையம்மன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மகிஷாசுரமர்த்தினி

சங்க கால இலக்கியங்கள் வழி கொற்றவையும், பார்வதிதேவியும் அறிமுகமாகின்றனர். அப்பெண் தெய்வங்களைப் போற்றி வணங்கவும் செய்தன. கைலாயத்தில் சிவனும் தேவியும் உடன் இருப்பதுபோல் காட்டப்படுகிறது. இங்குதான் பார்வதிதேவி அறிமுகமாகிறார். இவ்வாறு பார்வதிதேவி அறிமுகமானாலும், சிற்பங்களில் அதிகம் காணப்படுவதும், போற்றி வணங்கப்படுவதும் துர்க்கை அம்மனாகிய மகிஷாசுரமர்த்தினியே என்றால் அது மிகையல்ல. எங்கு காணினும் அம்மன், காளி, சாமுண்டா, துர்க்கா பரமேஸ்வரி போன்ற கோலங்களே தென்படுகின்றன. அத்தகு துர்க்காதேவியைப் பற்றியும் அவளே மகிஷாசுரமர்த்தினியாக மாற்றம் பெற்றதையும் இங்கு காண்போம்.

குறிப்பாக, தென்னிந்தியாவில் மகிஷாசுரமர்த்தினி அம்மன் வடிவத்தை பல்வேறு கோணங்களில் கொடூர அரக்கனை வதம் செய்யும் காட்சியாக வடித்துள்ளனர். சிவாலயங்களில் மகிஷன் தலைமுடியைப் பிடித்தது போலவும், சூலாயுதத்தால் குத்துவது போலவும் அவளது வடிவத்தை பல பாவங்களில் அழகுற அமைத்துப் போற்றி வழிபட்டுள்ளனர். சாமுண்டா, மகிஷாசுரமர்த்தினி, மகாலட்சுமி போன்ற அனைத்துப் பெயர்களும் அம்மனைக் குறிக்க அமைந்த பெயர்களாகும்.

சாமுண்டா என்றும் அழைக்கப்படுபவள். இவளை நிரிசிம்மபிரசாதத்தில் (Nrisimhaprasada); குறிப்பிடும்பொழுது, மகிஷாசுரமர்த்தினியாக இளமையாகவும், அழகாகவும் அதே சமயம் கோபமாகவும் காணப்படும் இவள் பார்வதிதேவியின் வடிவமே எனப் பகர்கிறது. மெல்லிய இடையும், நிமிர்ந்த மார்பும், இருபது கரங்களுடனும் காட்சியளிப்பவள். இவள், காலுக்குக் கீழே கொடிய எருமைத்தலை அரக்கனையும் கடுங்கோபத்தில் தனது சூலத்தை எருமைத் தலை மீது குத்திய நிலையிலும், ஒரு காலை தனது வாகனமாகிய சிம்மத்தின் மீதும் வைத்தபடி ஆக்ரோஷமாகக் காணப்படுபவள் என்று விவரிக்கிறது.

துர்க்கையின் செயல் ஆவேசச் செயலாக இருந்தாலும், தேவர்களுக்கும், தன்னை நாடிவந்த பக்தர்களுக்கும் ஆதரவாகவே இது தெரிகிறது. இன்னல்கள் நேரிடின் துர்க்கை ஆவேசமாக உருவெடுத்து, எத்தகைய துன்பமாக இருப்பினும் நம்மைக் காக்க ஓடோடி வருவாள் என்ற நம்பிக்கையை இதன் வாயிலாக உணர்த்தி நிற்கின்றாள். அசுரர்களின் தலைவன் மகிஷனைக் கொன்றதால், இவள் மகிஷாசுரமர்த்தினி என்றழைக்கப்படுகின்றாள்.

பதினாறு, இருபது கரங்களைக் கொண்ட எருமைத்தலை அரக்கனைக் கொல்லும் சைவ சக்தியாக விளங்குபவள் மகாலட்சுமி என்றழைக்கப்படுபவளும் இவளே. மகாலட்சுமியின் மறுவடிவமே துர்க்கை அம்மன். தென்னிந்தியாவில் சிவாலயங்களில் மகிஷாசுரமர்த்தினியை சாமுண்டா, துர்க்கை, மகாலட்சுமி என்றெல்லாம் அழைப்பர். சிற்பங்களாக வடிக்கும்பொழுது அவரவர் கலைத்திறனுக்கு ஏற்ப படைத்துள்ளதைக் காணலாம். மகிஷாசுரமர்த்தினியைப் பற்றி புராணங்கள் என்ன கூறுகின்றன என வரும் பகுதியில் காண்போம்

மார்க்கண்டேய புராணம் - மகிஷாசுரமர்த்தினி

துர்க்கை அம்மனின் கருப்பொருள் ஒன்றே ஆயினும், கூறப்பட்ட விதம் நோக்கத்தக்கது என்பதால், மார்க்கண்டேய புராணத்தில் கூறப்பட்ட விதம் பற்றியும் இங்கு குறிப்பிட விழைகின்றேன்.

மார்க்கண்டேய புராணத்தின் கூற்றுப்படி, பெண் தெய்வமான மகிஷாசுரமர்த்தினி அந்த எருமைத்தலை அரக்கனை வதம் செய்தவள். இவளுக்கு இத்தகைய ஆற்றலை வழங்கியவர்கள் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெருந்தெய்வங்களே ஆகும். படைத்தல், காத்தல் அழித்தல் ஆகிய மூன்று செயல்களுக்கும் காரணியாக விளங்குபவர்கள். இவர்கள் தங்களது சக்தியை முழவதும் ஒருங்கிணைத்து அப்பெண் தெய்வத்துக்கு வழங்கி, அந்தக் கொடிய அரக்கனை அழிப்பதற்கு ஏற்ப ஆயுதங்களையும், ஊயிரைப் பறிக்கக்கூடிய கோடாரிகளையும், அணிகலன்களையும். வழங்கி அருளினர்.

சாமுண்டா, எட்டு, பத்து, பன்னிரண்டு கரங்களுடன் படைக்கப்பட்டு காட்சியளிப்பவள். சாமுண்டாவை காளி என்றழைப்பர். அரக்கனை அழிக்கும்பொழுது பத்ரகாளியாக ஆக்ரோஷமாக அவதாரமெடுக்கிறாள். காளியாக இருக்கும்பொழுது, ஆறு கரங்களும் பத்ரகாளியாக உருவெடுக்கும்பொழுது எட்டு கரங்களுடனும் காட்சியளிப்பாள். கொடூரமான முகத் தோற்றத்தையும், கபால மாலையையும் அணிந்துகொண்டு சிம்மத்தின் மீது அமர்ந்து, ஒரு காலை எருமைத்தலை அரக்கனின் தலை மீதும் வைத்தநிலையில் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.

தேவி மகாத்மியம்

துர்க்கா, பண்முகம் கொண்ட பெண் தெய்வம். மகிஷாசுரமர்த்தினி, சக்தி, காளி, அம்பா, ஜகதாத்திரி, தாரா, அம்பிகா அன்னபூரணி. செல்வத்துக்கு அதிபதியான லட்சுமியும் இவளே. அழகுக்கும், அறிவுக்கும் உரிய பெண் தெய்வமாவாள். சம்ஸ்கிருதத்தில் துர்க்கா என்றால் கோட்டை என்று பொருள். கோட்டை என்றால் அதனை யாராலும் எளிதில் அணுக முடியாத பாதுகாக்கப்பட்ட அரண்களையுடைய இடம் ஆகும். இன்றும் தமிழகத்தில் பல கோட்டைகள் துருகம் என அழைக்கப்படுவதைக் காணலாம். தியாகதுருகம், சங்ககிரிதுருகம், ஜெகதேவிதுருகம், பாலகொன்றாயதுருகம் எனப்பல துருகங்கள் தமிழகத்தில் அமைந்துள்ளன.

மகிஷன் எனும் அரக்கன், நீண்ட தவமொன்று இருந்து சிவனின் அருளைப்பெற்று, தனக்கு அழிவு என்பது சாதாரண ஆணாலும் பெண்ணாலும் ஏற்படாதவாறு வரம் பெறுகின்றான். ஆனால், ஒரு பெண்ணால் உனக்கு அழிவு உண்டு என்கிறார் சிவபெருமான். அசுர குணம் படைத்த என்னை எந்தப் பெண்ணாலும் வீழ்த்தமுடியாது என்று கூக்குரலிடுகிறான். வரம்பெற்ற அரக்கன், தேவர்களிடம் தனது பலத்தைக் காட்டுகின்றான். தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூன்று பெறும் கடவுள்களிடம் முறையிடுகின்றனர். இவர்கள் மூவரும் இணைந்து ஓர் அற்புத சக்தியைப் படைக்கின்றனர் அவளே துர்க்கை.

எவ்வித ஆண் கடவுளர்களின் துணையுமின்றி ஆண் அசுரர்களான மகிஷனையும் அவனைச் சுற்றி இருக்கும் அரக்கர் கூட்டத்தையும் அழிக்க முற்படுகின்றாள். கொடூரமாகக் காட்சிதரும் துர்க்கை, அரக்கர்களுடன் போரிடும்பொழுது அவ்வப்போது தனது தேவைக்காக, போரிடுவதற்கு உதவியாக பெண் தெய்வங்களையே அழைத்துக்கொண்டாள். அவற்றில் காளி, கன்னிமார்கள் (சப்தமாதர்கள்) எனும் பெண் தெய்வங்கள் போன்றவர்கள் முக்கியமானவர்கள். இவர்கள் அனைவரும் அரக்கர்களை அழிக்க உருவாக்கப்பட்டவர்களே.

துர்க்கையானவள், படைப்பால் பல உருவங்களையும் பல பாகங்களையும் தன்னகத்தே கொண்டு விகாரமாகப் படைக்கப்பட்டவள். இவளது முகம் சிவனுக்குரியது. இவளது பத்து கரங்கள் விஷ்ணுவுடையது. இவளது பாதம் பிரம்மாவுடையது. இதுபோன்று இவளது ஆயுதங்கள், அணிகலன்கள், விரல்கள், நகங்கள் என்று ஒவ்வொரு அங்கமும் ஒவ்வொரு கடவுளர்களால் அருளப்பட்டது. இவ்வாறு இந்திரன் முதல் எமன், வருணன் எனப் பலராலும் இவளது உடலமைப்பும் ஆடை அலங்காரங்களும் உருவாக்கப்பட்டது. அதனால்தான், இவள் மகிஷனை எளிதில் வீழ்த்துகின்றாள். மகிஷனை அழித்ததால் இவளே மகிஷாசுரமர்த்தினி என அழைக்கப்பட்டதாகவும் தேவி மகாத்மியம் குறிப்பிடுகிறது.

சும்பன், நிசும்பன்

மகிஷனின் சகோதரர்களான சும்பன், நிசும்பன் என்ற இருவரையும் துர்க்கை வதம் செய்து அழிக்கிறாள். சும்பன், நிசும்பனை அழித்ததால், இவளை நிசும்பசுதனி என்று அழைக்கப்படுகிறாள்.

பல்லவர்கள் காலம்

தமிழகத்தில் காணப்படும் பெண் தெய்வச் சிற்பங்களில் குறிப்பிடத்தக்கவை உமையும், துர்க்கையம்மனுமே ஆகும். இவையிரண்டும் சமகாலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டவை என்பதும் காரணமாக இருக்கலாம். இவ்விரண்டு சிற்பங்களும் பல்லவ மன்னர்களால் செதுக்கப்பட்ட குடவரைக் கோயிலான மாமல்லபுரம் கடற்கரைக் கோயிலில், சோமாஸ்கந்த சகிதமாக சிவனும் பார்வதியுமாகக் காட்சியளிக்கின்றனர். அடுத்து, மகிஷாசுர மண்டபத்தில், அரக்கர் தலைவனான மகிஷனுடன் போரிட்டு அவனையும் அவனது கூட்டத்தினரையும் வீழ்த்தி அவனைத் தனது காலடியில் கிடத்தி வெற்றிக் களிப்புடன் மிகுந்த இறுமாப்புடன் காட்சியளிப்பதுபோல அம்மண்டபத்தின் வடக்குப்புறச் சுவர் முழுவதும் இப்போர்க்காட்சி தத்ரூபமாகச் செதுக்கப்பட்டுள்ளது. பல்லவ மன்னர்கள் தம் காலத்தில் துர்க்கை அம்மனுக்கு அளித்த இடமும், அப்பெண் தெய்வத்தைப் போற்றிய விதத்தையும், அதற்காக அவர்கள் காலத்தில் வடித்த துர்க்கைச் சிற்பங்களின் சிற்பத் திறனையும், போர்க்காட்சிகளின் சிற்பத் திறனையும் அதன் பொழிவையும் இங்கு காண்போம்.

போருக்குத் தயாராகிய நிலையில் துர்க்கை

மகிஷாசுரமர்த்தினி சிற்பத்தை மூன்று காலகட்டங்களாகப் பகுத்து ஆய்வு செய்தால், அதன் எளிமையும் அற்புதத்தையும் உணரலாம்.

1. போருக்கு முன் துர்க்கை அம்மன்

2. போர்க்களத்தில் துர்க்கை அம்மன்

3. போர்க்களத்தில் வெற்றிவாகை சூடியபின் துர்க்கை அம்மன்

என பகுத்துக்கொண்டு, துர்க்கை அதாவது மகிஷாசுரமர்த்தினி அவதாரத்தைப் பார்க்கலாம். தமிழகத்தில் காஞ்சிபுரம், மாமல்லபுரம், பனைமலை போன்ற இடங்களில் காணப்படும் துர்க்கை அம்மனின் சிற்பங்களில் நீண்டதொரு ஒற்றுமையைக் காணமுடிகிறது. இரண்டிலும் எருமைத் தலை காணப்படவில்லை. பனமலைச் சிற்பத்தில் எட்டு கரங்களுடனும், காஞ்சிபுரம் கோயில் தேவகோட்டத்தில் காணப்படும் சிற்பத்தில் பத்து கரங்களுடனும் காட்சியளிக்கிறார். தனது இடது காலை சிம்மத்தின் மீது இருத்திக்கொண்டு, தன் மெல்லிய இடையை வளைத்து ஒய்யாரமாக வலது காலை நேராக விரைப்பாக நிறுத்திக்கொண்டும், வலது தொடையின் மீது வலது கையை லாகவமாகத் தொடையின் மீது வைத்துக்கொண்டு, தலையை சற்று லேசாக நிமிர்த்தி இடது கையில் வில்லை வளைத்து நிற்கும் காட்சியைக் காணக் கண்கோடி வேண்டும்.

தனது மீதமுள்ள கரங்களில் சூலம், மணி, கத்தி, மழு, அம்பு, பாசம் எனக் கருவிகளையும் தாங்கிக்கொண்டு கம்பீரமாக போருக்குத் தயாராக நிற்கும் வீரப்பெண்மணியை சுட்டுகின்றது. இச் சிற்பம், போருக்கு முன்னர் தயார் நிலையில் இருப்பதாக அன்னை துர்க்கையின் வடிவத்தைச் சித்தரிக்கிறது. ஏனெனில், எருமைத் தலை அரக்கன் இல்லை, படைபலம் இல்லை, உதவியர்கள் இல்லை. சில இடங்களில் தாமரை பீடத்தில் நிற்பதுபோலவும் சித்தரித்துள்ளனர். சாந்தமாகக் காட்சியளிக்கும் துர்க்கை ஒவ்வொரு காலகட்டத்திலும் தான் எவ்வாறு காட்சியளிக்கின்றாள் என்பதை சுட்டிக்காட்டுவதாகவே அமைகிறது. துர்க்கை போருக்குப் புறப்படும் நிலையில் எவ்வாறு காட்சியளிப்பாள் என்பதை நமக்கு வெளிப்படுத்துவதாகவே எருமைத் தலை இல்லாத சிற்பங்களைக் கொள்ளலாம் என்பது எனது கருத்தாகும். திருவொற்றியூர், திருமழிசை போன்ற இடங்களில் எருமைத்தலை இன்றி துர்க்கையம்மன் நின்ற நிலையில் காட்டப்பட்டுள்ளாள். இவ்வாறு காணப்படும் துர்க்கையை லட்சுமிதுர்க்கை என்று குறிப்பிடுவர். அனைத்து கடவுளர்களும் ஒருங்கிணைந்து மகிஷனைக் கொல்ல உருவாக்கப்பட்டவளே துர்க்கையம்மன் என்பது முன்னரே குறிப்பிடப்பட்டது. அவ்வாறு உருவாவதற்கு முன்னர், துர்க்கை திருமாலின் துணைவியான லட்சுமியையே குறிக்கிறாள். பின்னர் அவளை லட்சுமிதுர்க்கை என அழைத்தனர். அந்த துர்க்கையம்மன்தான் மகிஷன் தலையின்றி காணப்படும் துர்க்கை எனக் கருதலாம்.

போருக்குத் தயாரான நிலையில் எவ்வாறு தனது வாகனத்துடன் கம்பீரமாக அவள் காட்சியளித்திருப்பாள் என்பதையும், அப்பொழுது அவளது ஆடை அணிகலன்கள் என்னென்ன என்பதையும், கொடும் அரக்கனிடம் போராட போகின்றோம் என்பதனால், இருகரங்கள் போதாது என்பதால் எண்கரங்களைப் படைத்து அதற்குரிய ஆயுதங்களையும் அவளுக்கு வழங்கி அதனை எவ்வாறு துர்க்கை தனது கைகளில் ஏந்தி காட்சியளித்திருப்பாள் என்பதை விளக்க முற்படுவதே சிம்மத்தின் மீது அமர்ந்த சிம்மவாகினியின் தோற்றம் ஆகும்.

பல்லவ மன்னர்கள்தான் முதன்முதலில் மூன்று விதமான காட்சிகளை நமக்குப் படம் பிடித்துக் காட்டியுள்ளனர். இதனை எக்காலத்திலும் மக்கள் மனதில் கொள்ள வேண்டும் என்பதால்தான் மரம், சுதை, மண், இவற்றைப் பயன்படுத்தாது, என்றும் நிலைத்து நிற்கும் கற்களைத் தேர்ந்தெடுத்து அவற்றில் தமது கலைப்படைப்பை தமிழகத்துக்கு வழங்கி பெருமை சேர்த்துள்ளனர். இதனைப் பின்பற்றி, பின்னர் வந்த சோழ மன்னர்களும் இம் மூன்றுவிதமான துர்க்கை அம்மனையும் படைத்துப் பெருமை செய்துள்ளனர். இக்காட்சியை மாமல்லபுரத்துக்குப் பிறகு புஞ்சையில் சுந்தரசோழன் எடுப்பித்த திருக்கற்றளியில்தான் தெளிவாகக் காணமுடிகிறது. புடைப்புச் சிற்பமாக இருப்பினும் மூன்றையும் அழகாக வடிவமைத்துக் காட்டியுள்ளது சிறப்புக்குரியது. அவற்றைப் பின்னர் காண்போம்.

இரண்டு சிற்பங்களுக்கும் சிறய அளவில் வித்தியாசமிருந்தாலும், அதனை நேர்த்தியாகத் தெளிவுபடுத்திக் காட்டியுள்ளனர். இரண்டும் திரிபங்க அமைப்புதான் என்றாலும், அவர்கள் தனது தலையை தூக்கி வில்லை எவ்வாறு நாணேற்றலாம் என்று பார்க்கும் பார்வை வேறுபடுகிறது. இங்கே, சிம்மத்தின் ஓரத்தில் அம்மனின் காலடியில் நிற்கும் பெண் காட்டப்பட்டுள்ளதும், அவளின் மொத்த நிலையையும் விளக்குவதாகவே அமைந்துள்ளது.

(மகிஷாசுரமர்த்தினி – காஞ்சிபுரம் - ராஜசிம்மன் - பல்லவர் காலம்)

போருக்குத் தயாரான நிலையில் படைக்கப்பட்ட பல்லவ மன்னன் பின்னர் போரிடும் காட்சியை நமக்கு விளக்குகின்றார். ராஜசிம்ம பல்லவ மன்னன் மட்டுமே இந்தப் போர்க்காட்சியை தத்ரூபமாக செதுக்கி, நிகழ்வை நிகழ்ச்சியாக்கி நமது உள்ளங்களில் சிற்பக் கலைக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்து என்றும் நெஞ்சைவிட்ட நீங்காவண்ணம் படைத்திட்டான்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com