அத்தியாயம் 45 - நடுகற்கள் வகைகளும் வகைப்பாடும் - 38

இரும்பு பெருவாரியாக புழக்கத்தில் வந்த பிறகு, உலக வரலாற்றில் புகழ்வாய்ந்த அரசுகளின் வீழ்ச்சிக்கும் புதிய அரசுகளின் தோற்றத்துக்கும் வித்திட்டதற்கும் அதன் பங்கு மிக அதிகம்.

பெருங் கற்படைச் சின்னங்களும் திணை வாழ்வியலும்

உலகில் இரும்பு மற்றும் எஃகு ஆகியவற்றின் தோற்றம் பரவல் குறித்த இருவேறுபட்ட கருத்துக்களான, 1. மேற்குலகில் இருந்து பரவியதே இரும்பு; 2. இந்தியாவில் இருந்து மேற்குலகுக்குப் பரவியதே இரும்பும் எஃகும் என்ற செய்திகளின் தொகுப்பு சென்ற அத்தியாயத்தில் விளக்கப்பட்டது. இந்திய நிலப்பரப்பை கருத்தில் கொண்டால், இரும்பின் வரலாறானது, தென்னிந்தியாவே இரும்பு உற்பத்தியின் தாயகம் மற்றும் வடஇந்தியாவிலிருந்து தென்னிந்தியாவுக்கு இரும்பு பரவியது என்ற இருமை வேறுபாடுகளிடையேதான் உழல்கிறது.

காலத்தால் முற்பட்ட, சுயமான தொழில்நுட்ப அறிவால் இந்தியாவில் இரும்பு கண்டுபிடிக்கப்பட்டது என்ற ஒரு கொள்கை முடிவு பரவலாக இன்று உலோகவிலாளர்கள் மத்தியில் முன்வைக்கப்படுகிறது. இதன் காலம் பற்றி இன்னும் முடிவுக்கு வரமுடியாது உள்ளது. இந்தியாவில் மு.பொ. இரண்டாம் ஆயிரமாண்டுகளின் துவக்கத்திலேயே இரும்பு இருந்தது என்ற கருத்தும்; காலத்தால் முந்தைய நிலை இல்லாவிடினும், மு.பொ.1800 ஆண்டுகளிலேயே இந்தியாவில் இரும்பு இருந்தது என்றும், இக்காலநிலை உலகில் வரலாறாக உள்ள கிழக்கு துருக்கி மற்றும் வடக்கு சிரியாவில் (ஹிட்டடைட் ஆட்சிப் பகுதிகள்) இரும்பின் கண்டுபிடிப்புக் காலத்தினோடு நெருக்கமுடையது என்றும், இந்தியா சுயமான தொழில்நுட்ப அறிவால் இரும்பின் உற்பத்தி மையமாகத் திகழ்ந்தது என்றும் இன்று தொல்லியலாளர்களாலும் வரலாற்று ஆசிரியர்களாலும் நிறுவப்பட்டு வருகிறது.

பெருங் கற்கால இரும்பாயுதங்கள் - 1

இவ்வாறு நிறுவப்பட்டு வரும் காலத்துக்கும் சே.எம். கீத், சர். சே.சே. வில்கின்சன் ஆகியோர் எகிப்திய பிரமிடுகளை (கி.மு. 3000 முற்பட்ட தொன்மையுடைய காலம் முதலே) சேலத்து கஞ்சமலை எஃகினால் செய்த உளி, கத்திகளைக் கொண்டு கட்டினர் என்றும் குறிப்பிடுவதற்கும் உள்ள கால வேறுபாடு மிகமிக அதிகமானது. முன்னது, தொல்லியல் ஆய்வுகளின் அடிப்படையானது என்றால்; பின்னது, கனிமப் பொருளாய்வின் அடிப்படையானது. அவர்களே உலகில் பிற நாடுகளில் எஃகு இன்னதென்று அறியாத காலத்தில், தமிழகம் எஃகு உற்பத்தியில் முன்னோடியாக இருந்தது என்று குறிப்பிடுவதிலும், தமிழக இரும்பின் தொன்மையின் சான்று உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்ட இவ்விரு காலகட்டத்திலும், ஆரியர்களின் நுழைவை இந்தியா சந்தித்திருக்கவில்லை என்ற ஒரு வரலாற்றுப் புள்ளியை நினைவில் கொள்வோம்.

மு.பொ.ஆ. 1800 அளவில் வடஇந்தியாவில் இரும்புத் தொழில் நடைபெற்றமைக்கு இன்று தொல்லியல் சான்றுகள் கிடைத்தாலும், ஏறத்தாழ, மு.பொ.ஆ. 1500 ஆண்டுகளில் மறைந்த சிந்துவெளி மக்கள் இரும்பைப் பற்றி அறிந்திருக்கவில்லை. சிந்துவெளிப் பகுதி அகழாய்வுகள் அப்பண்பாட்டுக்குரிய போர் ஆயுதங்களை வெளிப்படுத்தவில்லை என்பதுடன் இதனை இணைத்துப் பார்க்கத் தோன்றுகிறது. கல்-செம்பு நாகரிகத்தில் திளைத்திருந்த சிந்துவெளி மக்கள், போர் ஆயுதங்களாக செம்பு ஆயுதங்களை உற்பத்தி செய்தனர் என்பதற்கு உறுதியானச் சான்றுகளைப் பெறமுடியாது உள்ளது. சிந்துவெளிப் பண்பாட்டை வெண்கலப் (பித்தளை) பண்பாடு என்று வரலாற்று ஆசிரியர் டி.டி. கோசம்பி, அங்கு கிடைத்த கருவிகள் தாமிரமல்ல; அவை தாமிரம், வெள்ளீயம் மற்றும் வேறு உலோகங்களின் கலவையான வெண்கலத்தால் உருவாக்கப்பட்டவை என்றும் குறிப்பிடுவார்*1. இரும்பை இந்தியாவுக்கு ஆரியர் கொண்டுவந்தது என்ற கருத்தையும் இவர் கொண்டுள்ளார்.

இந்தியாவின் அரசியல், சமூக, பொருளாதார, தத்துவ, உலோகவியல், கட்டடக் கலை, வானவியல், பிற துறை அறிவியல் என எவ்வகை வரலாற்றையும் தமிழ், ஆதிசம்ஸ்கிருதம், செம்மை சம்ஸ்கிருத மொழிகளின் துணையின்றி முழுமையாக அளித்துவிட முடியாது. செம்மை சம்ஸ்கிருதம் வழக்குக்கு வந்துவிட்ட மு.பொ. நான்காம் நூற்றாண்டுகளிலும்கூட, செம்பையே ‘இரும்பு’ என்று குறிப்பிட்டு வந்தனர். வேதகாலத்தில் செப்புக்கே ‘அயஸ்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. இரும்பு கண்டுபிடிக்கப்பட்ட பிறகு செப்புக்கும் இரும்பு என்னும் சொல்லே நிலைபெற்றுவிட்டது. முதலில் செம்பை ‘தாமிர அயஸ்’ என்றும், இரும்பை ‘கருஷ்ண அயஸ்’ என்றும் கூறிவந்தனர். ஆனால், மெள்ள மெள்ள செப்புக்கு ‘தாமிரம்’ என்றும், இரும்புக்கு ‘அயஸ்’ என்றும் பெயர்கள் நிலைத்துவிட்டன. சம்ஸ்கிருதத்தில் ‘உலோகம்’ என்றால் “செந்நிறம் கொண்டது” என்றும் பொருளாகும். இது செம்புக்கே மிக அதிகமாகப் பொருந்தும்” என்று ராகுல் சாங்கிருத்தியாயன்*2 அவர்கள் குறிப்பிடுகிறார். “ரிக் வேதமும், அயஸ் (தாமிரம்/வெண்கலம்) என்ற ஒரு உலோகத்தைப் பற்றி மட்டுமே குறிப்பிடுகிறது.

பெருங் கற்கால இரும்பாயுதங்கள் - 2

கி.மு. இரண்டாவது ஆயிரம் ஆண்டுகளின் மத்தியில், ஈரானில் வெண்கலம் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்ததால், அந்தச் சொல் வெண்கலத்தைக் குறிப்பதாக எடுத்துக்கொள்ளப்பட்டது. எனினும், ரிக் வேத காலத்தைச் சார்ந்தது என்று கூறத்தக்க வெண்கலப் பொருட்கள், குறிப்பிடத்தக்க அளவில் இதுவரையிலும் சப்த சிந்துப் பகுதியில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட இடங்களில் கண்டுபிடிக்கப்படவில்லை. கணிசமான அளவில் வெண்கலம் பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகள் வலுவற்றவையாக இருப்பதால், ஆரம்பகால ஆரியர்கள் மிகச்சிறந்த வெண்கலக் கொல்லர்கள் அல்லது ஹரப்பா மக்களுடையதைவிட மேலான கருவிகளையும் ஆயுதங்களையும் உற்பத்தி செய்தார்கள் என்ற கருத்துக்குத் தொல்லியல் ஆதாரம் எதுவும் இல்லை. ரிக் வேத மக்களுக்கு இரும்பைப் பற்றிய அறிவும் இருக்கவில்லை” என டி.என். ஜா*3, குறிப்பதும், இந்த முரண்களை விடுவிக்க எழுந்தவையாகக் கொள்ளமுடியம்.

வடஇந்தியாவில் உஜ்ஜயின் அகழாய்வு பற்றி குறிப்பிடும் தொல்லியலாளர்கள், அதனை “அசுரர் தொழில்நுட்பம்” (Process of Asuras) என்றும், அதன் காலம் மு.பொ.ஆ 500 - 200 என்றும் குறிப்பர். அகழாய்வாளர்கள், அங்கு கிடைத்த சான்றுகளைக் கொண்டு, அங்கு அறியப்பட்ட காலத்தைவிட இரும்பு உருக்கும் தொழில் இன்னும் பழமை வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர்*4. அசுரர் என்போர் ஆரியரல்லாத, ஆரியருக்குப் பகையான இந்தியப் பூர்விகப் பழங்குடிகளில் ஒன்று என வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பர். இவை தொல்லியல் சான்றுகளில் இருந்து விளக்கப்பட்டமையால், கூடுதல் கவனம் பெறுகின்றன.

இந்த முரண்பாடுகள் தொடர்ந்து எழுப்பப்படுபவை; விவாதிக்கப்படுபவை. ஆரியர்களின் இந்திய நுழைவு, வட இந்தியப் பரவல். தென்னிந்தியப் பரவல் குறிந்த தொல்லியல் சான்றுகளின் அடிப்படையிலான காலக்கணிப்பு சிலவற்றை உணர்த்த உதவும். ஆரியர்கள், இந்தியாவின் பிரம்மவர்த்தப் பகுதியான சப்த சிந்துப் பகுதியான வடமேற்கு இந்தியாவில் நுழைந்த காலகட்டம் மு.பொ.ஆ.1500 ஆண்டுகளை ஒட்டியது. இருநூறு முந்நூறு ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் வடஇந்தியா என்னும் கங்கைச் சமவெளிக்குள் நுழைந்தனர்; அதாவது, மு.பொ.ஆ. 1200 ஆண்டுகளை ஒட்டி. விந்திய மலையைத் தாண்டி அவர்கள் மேலும் 600-700 ஆண்டுகளுக்குப் பிறகே பரவினர். அதாவது, மு.பொ.ஆ. 600-500-க்கும் பிற்பட்டே. சமண, பெளத்த மதங்களுடனோ, அல்லது ஒரு நூற்றாண்டு முன்பின்னரோ நிகழ்ந்தது. இருப்பினும், மொழியின் பயன்பாடு என்ற நோக்கில் செம்மை சம்ஸ்கிருதத்துக்கு முன்னரே, வடஇந்தியப் பிராகிருத மொழிகளும், தென்னிந்தியாவில் தமிழில் இருந்து கன்னடம், தெலுங்கு மொழிகள் ஆதிசம்ஸ்கிருதம் மற்றும் பிராகிருதம் ஆகியவற்றின் தொடர்பால் முதலில் விந்திய மலையின் தென் அடிவாரத்தில் முறையே மேற்கு, கிழக்கு, திசைகளில் மலர்ந்தன. இது ஆரியர்களின் பரவலால் நிகழ்ந்ததல்ல; எல்லையோர மக்களின் தொடர்பால் மிகப்பெரியதாகவும், வணிகத் தொடர்பால் ஓரளவும், தலயாத்திரிகைகளால் சிறிதும் நிகழ்ந்தவை.

சங்க காலத்தின் சமகால வெளிநாட்டுச் சான்றாக, பிளினி “தன் காலத்தில் இரும்பு மனிதனுக்கு இன்றியமையாததாக இருந்ததாகவும், இரும்புத் தாதுக்கள் இந்தியாவில் எல்லா இடங்களிலும் காணப்பட்டதாகவும், நல்ல ரகமான இரும்பாகிய எஃகு சேரர்களால் தயாரிக்கப்பட்டு, ஆட்டுத்தோல் மற்றும் இறைச்சியுடன் ஏற்றுமதி செய்யப்பட்டது’’*5 என்ற குறிப்பும் உள்ளது. “எகிப்தியர்கள் எஃகில் கருவிகள் செய்வதற்குரிய அறிவையும், கடின இரும்பைத் தயாரிப்பதற்குரிய அறிவை இந்தியர்களிடமிருந்து கற்றுக்கொண்டனர்” என்று ஹேட்ஃபீல்டு தெரிவிப்பதில் இதன் தொன்மை மறைந்திருக்கிறது. ஹேட்ஃபீல்டு, இந்தியர்கள் என்று பொதுவாகக் குறிப்பிட்டாலும், அது தமிழர்களையே குறிக்கும் என்பதை பிற துணைச்சான்றுகளைக் கொண்டு நிறுவலாம். பதினெட்டாம் நூற்றாண்டின் மிகப்பெரும் விஞ்ஞானியான மைக்கேல் ஃபாரடே, ஊட்ஸ் இரும்பின் மர்மத்தை வெளிப்படுத்த ஆய்வுகள் மேற்கொண்டார் என்பதில் இருந்து எஃகு உற்பத்தியின் தொழில்நுட்பம் மேற்கு நாடுகளுக்கும், ஐரோப்பியர்களுக்கும் அண்மைக்காலம் வரை கிட்டியிருக்கவில்லை என்பதை தெளிவாக்குகிறது.

பெருங் கற்கால இரும்பாயுதங்கள் - 3

எவ்வாறாயினும், இரும்பு பெருவாரியாக புழக்கத்தில் வந்த பிறகு, உலக வரலாற்றில் புகழ்வாய்ந்த அரசுகளின் வீழ்ச்சிக்கும் புதிய அரசுகளின் தோற்றத்துக்கும் வித்திட்டதற்கும் அதன் பங்கு மிக அதிகம். இரும்பாயுதங்களின் வரவே உலகில் ஆதிக்க எண்ணம் கொண்ட இனக்குழுக்குகளின் பரவலை உற்சாகப்படுத்தியது; தூண்டியது. வெற்றியை எளிதாக்கியது. இரும்பாயுதங்களுடன் இரும்புக் கவசங்களும் உற்பத்தியாயின. இவ்விரண்டும், தொழில்முறை போர்வீரர்களை உருவாக்கியது. தொழில்முறை போர்வீரர்களின் வரவு, யுத்தத்தின் போக்குகளை மாற்றியது. இனக்குழுக்களுடையான, அரசுகளுக்கிடையான போரின் முகங்களை மாற்றியது. உலகில் மனித இனத்தின் செழுமைக்கு எவ்வளவு பங்களிப்பை இரும்பு வழங்கியதோ அதைவிட மனிதத்தின் வீழ்ச்சிக்கு அதிகம் வழங்கியுள்ளது.

இரும்புக்கு முன் இந்தச் செயலை செம்பும், பிறகு சிறிது காலம் பித்தளையும் செய்தன. இருந்தும் இரும்பின் தாக்கம் கூடுதலானது. இன்று நவீன மனித இனம் அணு ஆயுதங்களுக்கு அலைந்து திரிந்து எப்படியாகிலும் பெறவிரும்புவதுபோல், அன்று அவ்வக்கால நவீன உலோக ஆயுதங்களைத் தன்வயப்படுத்திக்கொள்ளும் முனைப்பு சில இனக்குழுக்களுக்கு இருந்தது. இதில் வெற்றிபெற்ற இனக்குழுக்களுக்குள் ஆதிக்க வெறி, மூளை, உடல் பலம் கொண்ட தனியன் மரபுரிமை கூடிய ஆளும்குடியை அமைத்தான். அதுவே அரசு உருவாக்கத்தின் துவக்கம். இனக்குழு தலைவனும் அரசன், மன்னன், வேந்தன் என்று அழைக்கப்பட்டதற்கான சான்றுகள் மொழிப் பயன்பாட்டில் கிடைத்தாலும், பிற்காலத்தில் காணும் குடி மரபுரிமையில் அரசன், மன்னன், வேந்தன் பெற்ற பொருளில் அவை இருக்கவில்லை.

இரும்புக்கு முன், செம்பு உலோகமும், பித்தளையும் (ஈயம்-செம்புக் கலவை உலோகம்) தொழிற் கருவிகளுடனும், பண்டபாத்திரங்களுடனும் வகைவகையான ஆயுதங்களையும் உற்பத்திசெய்ய பயன்படுத்தப்பட்டன. கற்கள், எழும்புகள், கொம்புகள், கட்டைகள், மூங்கில் தடிகள் போன்றவற்றால் செய்யப்பட்ட ஆயுதங்களைவிடவும், செம்பு, பித்தளை ஆயுதங்களின் வரவு பிற மிகப்பெரிய மாறுதல்களை மனித சமுதாயத்துள் நிகழ்த்தியது. முதலில் செம்பு உலோகத்தைக் கண்டுபிடித்த இனக் குழு, மற்ற இனங்களை அடக்கி ஒடுக்கியிருக்க வேண்டும்.

உலோகக் கருவிகளின் பயன்பாட்டின் தெளிவான சான்று எகிப்திலிருந்து கிடைக்கிறது. மு.பொ.ஆ. 4000-க்கு முற்பட்ட தொன்மையான “சியோப் பிரமிடை” உருவாக்க செம்பிலான உளிகளைப் பயன்படுத்தியுள்ளனர். இவ்வாறான தொழிற் கருவிகளுடன், படைக் கருவிகளும், உழு கருவிகளும், பண்டபாத்திரங்களையும் செய்துகொண்டதால், நாடு பெருக்கம், உழவுப் பெருக்கம் ஆகியவற்றையும் எளிதாகச் செய்துகொண்டனர். இவ்வாறு, மேற்கு நாடுகளின் அரசு உருவாக்கத்துக்கு உலோகங்களின் பங்களிப்பு அதிகம் என்பதை வரலாற்றுப்போக்கில் தெளிந்துகொள்ள முடிகிறது. செம்பைவிட பித்தளையும், பித்தளையைவிட இரும்பும் கடினமானதாகவும், வலிமையுடைதாகவும் இருந்ததால், செம்பை பித்தளையும், பித்தளையை இரும்பும் வீழ்த்தின. இந்நிகழ்வுகள், வரலாற்றின் தனித்தனிப் பண்பாட்டுக்கூறுகளாக நின்றுவிட்டன.

இந்த வரலாற்றுப்போக்கை, தனியான செம்பு-பித்தளை உலோகப் பண்பாட்டுக் காலங்களைப் பெற்றிறாத, இரும்புப் பண்பாட்டில் நேரடியாக நுழைந்த தென்னிந்தியாவுக்குப் பொருத்திப் பார்க்கலாம்.

தென்னிந்தியா என்ற பண்டைய தமிழகத்தில், இரும்பு எந்தெந்த இனக்குழுக்களை வீழ்த்தியது; எந்தெந்த அரசுகளை வீழ்த்தியது; முற்றிலும் அழிந்துபட்ட இனக்குழுக்கள் எவையெவை; குடியேறிய புதிய இனக்குழுக்கள் எவையெவை என்று இலக்கிய, தொல்லியல் சான்றுகள் கொண்டு இன்று அறியமுடியாது உள்ளது. என்றாலும், மேற்குலகில் நிகழ்ந்ததுபோல் பண்டைய அரசுகளின் வீழ்ச்சி; புதிய அரசுகளின் உதயம் போன்று இங்கு நிகழவில்லை என்று உறுதியாகச் சொல்லலாம். தென்னிந்தியா, அந்நியப் படையெடுப்புகளால் ஒருபோதும் தாக்கப்பட்டதில்லை. நாம் அறியமுடிகின்ற இங்கு நடந்த எல்லா யுத்தங்களும், இம்மண்ணின் பூர்வகுடிகளால் மேற்கொள்ளப்பட்டவை. இங்கு இன ஒழிப்போ, ஆளும் குடியின் வேரறுப்போ இல்லை.

இப்பின்னணியில், சங்க இலக்கியம் அடையாளப்படுத்தும் தமிழகத்தின் பூர்வ இனக்குழுக்கள் இன்றில்லாமை, அக்குழுக்களின் அழிவைக் காட்டுகின்றதா அல்லது அவை பிற குழுக்களால் உள்வாக்கப்பட்டதால் உருவானதா என்று நமது ஆய்வுகள் விரிவடைய வேண்டும். ஒரு குழு மற்றொரு குழுவால் உள்வாக்கப்பட்டிக்கும் சான்றுகள் கூடுதலாக இருக்கிறது. இனக்குழுக்களின் அழித்தொழிப்பு இங்கு நிகழவில்லை என்பதும், சங்க இலக்கியம் சுட்டும் போர்கள் அனைத்தும் தமிழர் என்ற பேரினத்தின் சிற்றினங்களுக்கு இடையிலான, அதாவது தமிழ் இனக்குழுக்களுக்கு இடையிலான மோதல்களே ஆகும்.

இன்றைய ஆப்கனிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளை உள்ளடக்கிய அகண்ட இந்தியாவின் எண்பது விழுக்காடு நிலத்தை ஆயுதங்கள் கொண்டு பெற்ற வெற்றியால் ஆட்சிபுரிந்த மெளரியப் பேரரசுகூட, எஞ்சிய இருபது விழுக்காடு நிலமான தமிழகத்தில் தம் ஆயுதங்கள் கொண்டு வெற்றிகொள்ள முயற்சிக்கவில்லை. மெளரியப் பேரரசின் தென் தமிழகப் படையெடுப்பு என்பது உண்மையில் ஊடுருவல் முயற்சியே அன்றி, முற்றான போரல்ல என நிறுவ முடியும். இதன் பின்புலத்தில் தமிழகத்தின் இரும்பு இருக்கிறது. இரும்பின் தொழில்நுட்ப வளர்ச்சி இருக்கிறது. உறுதித்தன்மைக்குப் பேர்போன தேனிரும்பு என்ற எஃகு வழங்கிய தனித்துவமிக்க பங்களிப்பு இருக்கிறது.

வடஇந்திய அரசுகளின் உதயம், அதாவது குடியரசு ஆட்சிகளை வீழ்த்தி உருவான அரசுகள் குறித்து ஒப்பாய்வுக்கு அறிவோம். தென்னிந்தியாவின் அரசு உருவாக்கத்தைப் புரிந்துகொள்ளவும்; சான்றுகளை விளக்கிக்கொள்ளவும் இவ்வறிதல் கூடுதலாக உதவுகிறது. இவை வரலாற்று ஆசிரியர் ராம் சரண் சர்மாவின் வார்த்தைகள் - “மெளரியர்களது ஆட்சி தோன்றுவதற்கு முந்தைய இரண்டு நூற்றாண்டுக் காலத்தில் மகதப் பேரரசு கண்ட எழுச்சி, வளர்ச்சி இதே காலகட்டத்தில் இரானியப் பேரரசு கண்ட எழுச்சியை ஒத்ததாக இருந்தது. அந்நாட்களில் இந்தியாவின் மிகப்பெரிய அரசு உருவானது. பிம்பிசாரன், அஜாதசத்ரு, மகாபத்தம நந்தன் போன்ற பேரார்வமும், பெருமுயற்சியும் கொண்ட அநேக மன்னர்களின் கடுமையான உழைப்பில் கனிந்த கனியாகும். அவர்கள் ராஜ்ஜியங்களை விரிவுபடுத்துவதற்கும் அவற்றை வலுப்படுத்துவதற்கும் சாமம், தானம், பேதம், தண்டம் முதலிய எல்லா உபாயங்களையும் கைக்கொண்டார்கள். ஆனால், மகதம் விரிவடைவதற்கு இது மட்டுமே காரணமல்ல.

பெருங் கற்கால இரும்பாயுதங்கள் - 4

இந்த விஷயத்தில், வேறு சில காரணிகளும் உள்ளன. இரும்பு யுக காலத்தில் மகதம் நில இயல் சார்ந்த ஓர் அனுகூலத்தைப் பெற்றிருந்தது. ஏனென்றால், ஏராளமான இருப்புப் படிவங்கள் மகதத்தின் ஆரம்பகால தலைநகரமான ராஜ்கீருக்கு அருகில் அமைந்திருந்தன. வளமிக்க இரும்புச் சுரங்கங்கள் அருகில் இருந்ததால், மகத மன்னர்கள் ஆற்றல்மிக்க அயுதங்களைத் தயாரித்துக்கொள்வது சாத்தியமாயிற்று; ஆனால், அவர்களுடைய எதிராளிகளுக்கு இரும்புக்கனிகள் எளிதாகக் கிடைக்கவில்லை. கிழக்கு மத்தியப் பிரதேசத்திலும் இரும்புச் சுரங்கங்கள் உள்ளன; உஜ்ஜயினை தலைநகராகக் கொண்ட அவந்திகள் ராஜ்ஜியத்துக்கு அருகில் இவை இருந்தன. சுமார் மு.பொ.ஆ. (கி.மு) 500 ஆண்டுவாக்கில், உஜ்ஜயினில் இரும்பு காய்ச்சி அடித்து உருவாக்கப்பட்டது என்பதில் ஐயமில்லை. இவற்றிலிருந்து கம்மியர்கள் நல்ல தரமான ஆயுதங்களைத் தயாரித்து அளித்திருக்கக்கூடும். இதன் காரணமாக, வட இந்தியாவில் மேலாதிக்கம் பெறுவதில் மகதத்துக்கு மிகக் கடுமையான போட்டியாளராக அவந்தி உருவெடுத்தது. உஜ்ஜயினை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கு சுமார் நூறு ஆண்டுகள் பிடித்தன.”*6

இந்த வரலாற்று நிகழ்வுகளோடு மகத்தையும், பண்டைத் தமிழக வரலாற்றையும் இணைத்துக் கண்டால், மெளரியரின் தமிழகத்து ஊடுருவல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டதும், போர் மூலம் தமிழகம் மெளரியர் கட்டுப்பட்டுக்குள் போகாமைக்கும் உள்ள காரணிகள் தெளிவாகின்றன.

தமிழக எஃகு மற்றும் எஃகினால் ஆன ஆயுதங்கள் மற்றும் பிற கருவிகள் பெற்றிருந்த புகழ் மற்றும் அதன் மீதான அச்சம் எங்கும் நிலவியிருந்தது அக் காரணிகளாகும்.

இதே உண்மை தென்னிந்திய பெருங் கற்படைப் பண்பாடு என்பது தென்னிந்திய இரும்புக்காலப் பண்பாட்டின் ஒரு முகம் என்பதைப் பல்வேறு வரலாற்று ஆசிரியர்களும், தொல்லியலாளர்களும் தொடர்ந்து தெரிவித்து வருவதிலும், பல்வேறு சான்றுகள் கொண்டும் நிறுவி வருவதிலும் உள்ளது. இப்பின்னணியில், ஆதிச்சநல்லூரில் கிடைத்த வகைவகையான இரும்பாயுதங்கள் பட்டியல் வியப்பானது. “எறிவேல், ஈட்டி, குத்துவாள், பட்டாக்கத்தி, அம்புமுனை போன்ற வேல், இருபுறமும் கூர்மையன வாள், மூவிலை வேல் / திரிசூலம், கூரிய அம்புத்தலை, கைக்கோடாரி, வாள், வளைந்த கத்தி, இருவளைவான கொக்கித்தடி, பலிவாள், அம்புத்தலை, வேலாயுதம், கோடாரிகள், சூலாயுதம், கேடயம், அரிய வடிவ ஆயுதம் (A Curious Weapon), சிறிய உடைவாள், சிறிய ஈட்டி, செங்கோணவாயுள்ள ஈட்டி, கூரிய வாயுள்ள ஈட்டி, கூம்புவாய் ஈட்டி, ஈட்டிப்பிடியுள்ள குழிவான குழாய், குழிவான விளிம்புகள் கொண்ட குத்துவாள், அகன்ற வாய்ப்பரசு, நீண்ட வட்டக் குழிவான ஈட்டி, குழிவான இரும்புக் கைப்பிடி ஈட்டி, பலவகை வளைவுகள் உள்ள வாள், சிறிய நுனியுள்ள வாயுடைய ஈட்டி, கத்தி, வளைந்த பலவகைக் கத்திகள்”*7, இவற்றைப் போலவே வில், வாள், குறுவாள், அம்புமுனைகள் போன்ற இரும்பாயுதங்களின் புதையலாக உள்ள, தென்னிந்திய பெருங் கற்படை சின்னங்களான மூத்தோர் கோயில்கள், இரும்பாயுதங்களின் காட்சிக்கூடங்களாகவும் விளங்குகின்றன.

வகைவகையான இந்த ஆயுதங்கள் எதுவும் வெளிநாட்டு இரும்புத்தாது கொண்டு செய்யப்பட்டது எனவோ; மேற்கின் தொழில்நுட்ப அறிவுடன் வளப்படுத்தப்பட்டது என்றோ கூறவோ; தக்க சான்றுகள் கொண்டு நிறுவமுடியாதோ உள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது. டெக்கான் பகுதி ஆகழாய்வுகள், அங்குள்ள உலைக்கலங்களின் வடிவமைப்புக்கும், தமிழகப் பகுதி வடிவமைப்புக்கும் உள்ள ஒப்புமைகள், வடக்கில் இருந்து தமிழகத்துக்கு இரும்புத் தொழில் பரவியது என்பதற்குச் சான்றாக முன்வைக்கப்படுகிறது. இது பண்டைய உலைக்கலன் இருந்த எல்லா இடங்களும் அகழாய்வு செய்து பெறப்பட்ட முடிவல்ல. இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் காலக்கணிப்பு கொண்டு அடையப்பட்டதாகும். வரும்கால அகழாய்வுகள், தொன்மையான இரும்பு உலையினை வெளிப்படுத்தக்கூடும். அது ஒருவேளை கீத், வில்கின்சன் ஆகியோர் கருத்துக்கு அண்மையதாகவும் இருக்கக்கூடும். எம். கெளலாந்து கருத்தை நிறுவுவதாகவும் அமையக்கூடும்.

தமிழ் இலக்கியமும், தொல்லியல் அகழாய்வும், ஒன்றையொன்று சான்றுகளாக்கிக்கொள்ளும் விதமாக உள்ளன. விரிவாக, அடுத்தவாரச் தொடர்ச்சியில்...

மேற்கோள் சான்றுகள்

1. டி.டி. கோசாம்பி, பண்டைய இந்தியா பண்பாடும், நாகரிகமும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 2006, ப.104.

2. ராகுல் சாங்கிருத்யாயன், மனித சமுதாயம், (மொ.பெ), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 2013, பக்.80-81.

3. டி.என். ஜா, பண்டைக்கால இந்தியா: ஒரு வரலாற்றுச் சித்திரம், (தமிழில்), பாரதி புத்தகாலயம், சென்னை, 2011, பக்.51-52.

4. B.K. Gururaja Rao, Development of Technology, During the Iron Age in South India, Vol-5, No.2, p. 259.

5. Schoff. W.H, The Periplus of the Erythean Sea, p.71,

6. ராம் சரண் சர்மா, பண்டைக்கால இந்தியா, தமிழில் - மாஜினி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 2001, ப.180.

7. சாத்தான்குளம் அ.இராகவன், ஆதித்தநல்லூரும் பொருநை வெளி நாகரிகமும், பக்.103-104.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com