அத்தியாயம் 42 - நடுகற்கள் வகைகளும் வகைப்பாடும் - 35

அரிசி என்ற தமிழ்ச் சொல் ‘ரைஸ்’ என்று மருவி, உலகளாவி அப்பயிரினத்தையும் அத்தானியத்தையும் குறிக்க நிற்பதற்கான காரணங்கள் மொழித்தொல்லியல் வாயிலாக விரிவாக ஆராயப்பட வேண்டும்.

பெருங்கற்படைச் சின்னங்களும் திணை வாழ்வியலும்

அரிசியும் தென்னிந்தியாவும்

தமிழரின் திணை வாழ்க்கையை மாற்றியமைத்ததற்கும் திணை நிலங்களை மாற்றியமைத்ததற்கும், அரிசிக்கும் இரும்புக்கும் பெரும் பங்கு உண்டு. குடிக்குள் நிலவியிருந்த தொன்றுதொட்ட சமநிலையும், பகிர்வும், திணை வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வையும் போதத்தையும் உருவாக்கியதற்கும், அரிசியும் இரும்பும் தம்தம் பங்களிப்பை வழங்கியுள்ளன. தமிழர் வரலாற்றில் இவ்விரு பொருட்கள் பற்றியும் மிகக்குறைவான பதிவுகளே எஞ்சியுள்ளதாக நமக்குக் கிடைக்கின்றன.

அரிசி என்ற தமிழ்ச் சொல் ‘ரைஸ்’ என்று மருவி, உலகளாவி அப்பயிரினத்தையும் அத்தானியத்தையும் குறிக்க நிற்பதற்கான காரணங்கள் மொழித்தொல்லியல் வாயிலாக விரிவாக ஆராயப்பட வேண்டும். மு.பொ.ஆ.600 - 500 அளவில், அரிசி என்ற தமிழ்ச் சொல், “அருசா” என்ற மருவில் கிரேக்க மொழியில் வழங்கப்பட்டுள்ளதை அறியமுடிகிறது. இதனுடன், இஞ்சி வேர் “ஜிஞ்சிபொ” என்றும், கருவாப்பட்டை “கர்பியன்” என்றும் அம்மொழியில் வழக்கில் இருந்ததை அறிய முடிகிறது. மேலும் மயில், சந்தனம் ஆகியவற்றின் தமிழ்ச் சொல் மருவுகள் கிரேக்கத்தில் இடம்பெற்றுள்ளன.

இதற்கு முன்னர், பைபிள் பழைய ஏற்பாட்டில் இருந்து பெறப்படுவதில் இருந்து, மு.பொ.ஆ.1000 அளவில் இந்தியாவிலிருந்து சாலமனின் இறக்குமதிப் பொருட்களில் தோகை என்பது “துகி” என்று வழக்குப்பட்டுள்ளது. இம்மொழிப் பயன்பாடுகள், அக்காலத்தில் அவை அந்நாடுகளின் உற்பத்திப் பொருட்களாக இருக்கவில்லை; அவை தமிழ் மொழி பேசும் நிலத்தில் இருந்து உற்பத்தியாகி வணிகத்தின் மூலம் பரவி, அதே பெயரில் உச்சரிப்பு மருவுடன் வழக்குப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது. இவை அந்நாடுகளுக்கு இறக்குமதிப் பொருட்களே என்பதையும், அவை அந்நாடுகளுக்கு அந்நியப் பொருட்களே என்பதற்கும் இம்மொழிக் குறிப்புகளே சான்றுகளாகின்றன.

ஆனால், இச்சான்று “அரிசி”க்கு எப்படிப் பொருந்தும் என்ற கேள்வி எழுகிறது. மொசபடொமியா, சுமேரியா, எகிப்து, அசிரியா ஆகிய பகுதிகளில் மு.பொ.ஆ 7000 முற்பட்டு நிகழ்ந்த புதிய கற்காலம் மற்றும் அதனைத் தொடர்ந்த உலோகக் காலங்களில் நெல்லும், கோதுமையும், பார்லியும் விளைபொருட்களாக இருந்துள்ளன என நம்பப்படுகிறது. அவ்விடங்களில் மேற்கொள்ளபட்ட அகழாய்வுகளில் கிடைத்துள்ள மு.பொ.ஆ.4000-க்கும் முற்பட்ட தொல்லியல் ஆதாரங்கள் இதனை உறுதி செய்கின்றன.

பண்டைய எகிப்தின் மு.பொ.ஆ.3000 அளவிலான, தீப்ஸில் ஒரு கல்லறையில் அறியப்பட்ட ஓவியம் ஒன்று (Painting in a Tomb at Thebes), அம்மக்கள் நெல்லைப் புடைத்துச் சுத்தம் செய்வதை காட்சிப்படுத்துகிறது. இது எகிப்து மக்களிடத்தே அரிசி இன்றிலிருந்து 5000 ஆண்டுகளுக்கும் மேலான பழமையைக் கொண்டது என்பதற்குச் சான்றாகிறது.

(வில்கின்சன் காட்டும் எகிப்து மக்கள் நெல் புடைத்துச் சுத்தம் செய்யும் ஓவியம், புராக்டர் வழங்கியபடி (From Wilkinsons’s “Ancient Egyptians” as presented in ‘Rice - Its History, Culture and food value’ by H.B. Procter, 1882, p.10) இப்பகுதிகளில் நெல் காட்டுப்பயிராக இருந்து முதலில் நாட்டுப்பயிராக மாறிய காலகட்டம் எது? என்ற கேள்விக்கு முரண்பாடான பதில்கள் இருக்கலாம். போலவே, பண்டைய இப்பகுதிகளில் கோதுமையும், பார்லியும் மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்திசெய்யப் போதுமான உற்பத்தியிருந்தும், மாற்று உணவுப் பொருளாக நெல்லுக்கு மாறிய காலகாட்டம் எது என்பதும் துல்லியமாக அறியமுடியாதுள்ளது.

கோதுமையை முக்கிய உணவுப் பொருளாகக் கொண்டிருந்த வடஇந்திய மக்கள் அரிசிக்கு மாறியதற்கு அதிக காலம் எடுத்துக்கொண்டனர் அல்லது அரிசியை உணவுத் தேவைக்குப் பயன்படுத்த நெடுங்காலம் எடுத்துக்கொண்டனர் என்ற கணிப்பின் உண்மையானது, மேற்கு நாடுகளுக்கும் பொருந்தும் எனக் கொள்ளலாம். இதற்கு முன், பண்டைக் காலத்தில், உண்மையில் பொதுமக்களின் உணவுதானியமாக நெல் இருந்ததா? என்ற கேள்விக்கும் விடை காண வேண்டும்.

எங்கிருந்து, எவ்வாறு, எக்காலத்தே, யாருக்காக அரிசி மேற்குலகுக்குச் சென்றது என்பதை கண்டடையும்முன், உண்மையில் நெல் மற்றும் அரிசி ஆகிய இரு தமிழ்ச் சொற்களின் பயன்பாட்டுப் பொருள் மற்றும் சுட்டுப் பொருள் கவனிக்கத்தக்கதாகிறது. தமிழில், நெல் புல்லினத்தில் பயிரினம் ஒன்றையும், உமி நீக்கப்படாத அரிசியையும் குறிப்பது. நெல்லுக்கு இணையான சொல் பாடி (Paddy) என்பதே. அரிசி என்பது உமி நீக்கிய நெல்லையே குறிப்பிடும். இதுவே மூங்கிலரிசி போன்ற சொற்களுக்கும் பொருந்தும். எனில் தமிழில் நெல்லும், அரிசியும் வெவ்வேறு பொருளை சுட்டிநிற்பவை என்பது வெளிப்படையானது. மேலும் விளக்கிக்கொள்வோம் எனில், நெல் ஒரு பயிரைக் குறிப்பது, மறு உற்பத்திக்குப் பயனாவது. ஆனால், அரிசி ஒரு பயிரைக் குறிப்பதன்று; மேலும் அது மறு உற்பத்திக்குப் பயன்படாத நிலையில் இருப்பது. எனில், அரிசி என்ற சொல் மேற்குலகில் விளையும் பயிறொன்றுக்குப் பெயராக அமைந்தது எவ்வாறு என்ற கேள்வி முக்கியமுடையதாகிறது.

இதனை விளக்கிக்கொள்ள தொல்பொருள் ஆதாரம் எவ்வகையிலும் இல்லை. மொழித் தொல்லியல் வழி கணித்தால், பின்வருவனவற்றை விடையாகக் குறிக்கலாம். மேற்குலகுக்கு தென்னிந்தியாவிலிருந்து உமி நீக்கிய அரிசியே வணிகப் பண்டமாகச் சென்றது. யுத்தபூமி – அத்தியாயம் 40-ல் அட்டவணை 1-ல் சுட்டியதுபோல், மு.பொ.ஆ. 4000 அளவிலேயே தேக்குமரம் போன்ற தாவர இனங்கள் தென்னிந்தியாவில் இருந்து மெசபடோமியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதற்கான தொல்பொருள் சான்று உள்ளமையால், தென்னிந்தியாவிலிருந்து அரிசி போன்ற விளைபொருட்களும் வணிகப் பண்டமாகச் சென்றிருக்கலாம். இதன்மூலம், மேற்குலகில் அரிசி நிலைபெற்ற பெயராக மாறியிருக்கலாம். அரிசி என்பது புல்லினத்தில் ஒருவகையான பயிரினமான நெல்லில் இருந்து கிடைப்பது என்பதை அவர்கள் அறிந்திருந்தும், அது விளையும் தாவரத்துக்கே அரிசி பெயரைப் பொது அடையாளமாக்கிக் கொண்டனர் எனலாம். பிற்காலத்தில், தமிழ்ப் பெயரான நெல் என்பதை அறிவதற்கு முன் பாடி (Paddy) என்பதை அவர்கள் அறிந்தனர் எனலாம். இருந்தும், அரிசியே நெற்பயிரையும் சுட்டும் பெயராக மேற்குலகினர் கொண்டனர் எனலாம்.

இங்கு, நெல் தமிழகத்துக்கு மட்டுமான விளைபயிர் இல்லை என்பதும் அது, சீனா, ஜப்பான், பர்மா (இன்றைய மியன்மர்) மற்றும் பிலிப்பைன்ஸ் உட்பட கிழந்திந்தியத் தீவுகளுக்கும் முக்கிய விளைபயிராகத் திகழ்ந்தது என்பது நினைவில் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். இதில், பட்டு வணிகத்தில் மேற்கு நாடுகளுடன் சீனா நெடுங்காலமாகத் தொடர்ச்சியான தொடர்புகளைக் கொண்டிருந்த நாடு என்பதையும், “பட்டு நெடுஞ்சாலை” (Silk Route) மேற்கு நாடுகள் நோக்கி சீனாவிலிருந்து சென்றது என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது. பண்டைய தமிழகமான தென்னிந்தியா, மேற்குலகோடு வணிகத் தொடர்பு கொண்டிருத்தது போலவே, சீனாவும் வணிகத் தொடர்பு கொண்டிருந்தது.

சீனா, ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் உட்பட கிழந்திந்தியத் தீவுகள் நெல் உற்பத்தியில் தொன்மைக் கொண்டவை மட்டுமல்ல, அதன் உற்பத்தியில் பண்டைக் காலம் முதல் இன்றுவரை முக்கியப் பங்காற்றி வருபவையும்கூட. எனில், நெல்லைக் குறிக்கும் சீன மொழிச் சொற்களான தவோ, டாவோ, டாவ் மற்றும் ஹவோ, ஹோ, இயு, டெயு (முறையே வடக்கிலும் தெற்கிலும் மாறுபட்டு அழைப்படுபவை (The Chinese word for rice in the north, tao or dao or dau, finds its variants in south China and Indo-China ask’au (for grain), hao, ho, heu, deu, and khaw), மேற்குலகுக்குப் பரவாமையும் கவனத்தில் கொள்ளத்தக்கதாகிறது. இங்கு எச்.பி. புராக்டர் குறிப்பிடுவது கவனிக்கத்தக்கதாகிறது. அவர், அரபியில் அரூஸ் என்றும்; லத்தீனில் ஒரைசா என்றும்; இத்தாலியில் ரைசோ என்றும்; ஆங்கிலத்தில் ரைஸ் என்று அழைக்கப்பட்டும், அரிசி என்ற தமிழ்ச் சொல் அதன் இந்தியப் பிறப்பைக் குறிக்கிறது என்பார். (H.B. Proctor, op.cit., p.6). அரிசி இந்தியாவை பிறப்பிடமாகக் கொண்டது; சீனாவில் அது சிறப்பான உற்பத்தியைக் கொண்டிருந்தது என்ற கருத்து அண்மைக்காலம் வரை தாவரவியலளார்களால் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

தென்னிந்தியா அதன் புதிய கற்காலத்தில் இருந்தே மேற்கு நாடுகளுடன் கொண்டிருந்த தொடர்பு தெளிவானது. தென்னிந்தியாவில் இருந்து சென்ற பொருட்களின் பெயர்களும் தமிழின் திரிபுகளாக இடம் பெற்றிருப்பதால், அரிசியும் தென்னிந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகியிருக்கலாம். மேற்குலகோடு வட இந்தியா கொண்ட வணிகத்தின் பழைமை என்பது தென்னிந்தியாவோடு ஒப்பீட்டளவில் அண்மைக் காலத்தியதே. கடற்கரையும் துறைமுகங்கள் இன்மையும் இதற்குப் முக்கியக் காரணம் என்பது வெளிப்படையானது. சிந்துப் பகுதியின் வணிகம் என்பது வேறு வகைப்பட்டது. அது வடமேற்கு இந்தியாவின் வணிகச் செழுமையைக் குறிக்குமேயன்றி, வட இந்தியாவின் செழுமையை அல்ல. தென்னிந்திய புதிய கற்கால மக்கள் மேற்குலகில் தங்கள் வணிகக் குடியேற்றங்களை நிறுவியிருந்தனர் என பல வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். மேற்குலகின் பண்டைய எல்லா நாகரிகங்களிலும் திராவிடத் தாக்கம் மேலோக்கியிருந்தது என்ற கருத்து, R.H. Hall, Far. Heras, M.R. Mukerji போன்று பல வரலாற்று ஆசிரியர்களால் முன்மொழியப்பட்டுள்ளது. இவ்வணிக் குடியேற்றங்கள் இதற்குக் காரணமாக இருக்கக்கூடும்.

தமிழகத்தில் இருந்து மேற்குலகினர், அரிசியை அரிசியாகவே இறக்குமதி செய்தனர் எனலாம். அவர்கள் நெல்லை இறக்குமதி செய்ய முயலவில்லை. இது மிக முக்கியமான ஒரு வணிகத்தை அடையாளப்படுத்துகிறது. மேற்குலகினர், அவர்கள் தங்கள் நாட்டில் கிடைப்பது போன்ற எளிதான அரிசி வகையைத் தமிழகத்தில் இருந்து இறக்குமதி செய்யவில்லை; அவர்கள் உயர்தரமான, மணமுடைய அரிசியையே தமிழகத்தில் இருந்து இறக்குமதி செய்தனர் எனலாம். இன்று அந்த உயர் தரமான. மணமுடைய அரிசி வகை எது என்பதை நாம் அறியமுடியாமல் இருக்கிறோம் என்பதே உண்மை. அது தமிழ்மண் வழக்கில் பொதுப்படையாக அரிசி என்றே குறிக்கப்பட்டாலும், அதன் சிறப்பியல்பு காரணமாக உலகளாவிய பெயருக்குக் காரணமாயிற்று எனலாம்.

இப்பின்னணியில், காலம் பற்றி யோசிக்கும்போது, மு.பொ. 2-ம் ஆயிரமாண்டின் துவக்கக் கால் நூற்றாண்டுகளில் அரிசி, கங்கைச் சமவெளியில் இருந்து குஜராத், பலுசிஸ்தான், ஸ்வாட் பள்ளத்தாக்கு போன்ற வடமேற்கு இந்தியப் பகுதிகளுக்குச் சென்றிருக்கலாம் என்ற அஸ்கோ பர்போலோவின் கருத்து கவனிக்கத்தக்கதாகிறது. இக்காலகட்டமானது, இந்தியாவில் நாட்டுப்பயிராக நெல் மாறிய காலக்கட்டத்தைக் குறிக்கிறது என்பதைவிட, நாட்டுப்பயிராக வளர்த்தெடுக்கப்பட்ட நெல், கங்கைச் சமவெளியில் இருந்து வடமேற்கு இந்தியப் பகுதிகளுக்குப் பரவிய காலக்கட்டத்தைக் குறிப்பதாகவே கொள்ள வேண்டும். ஆனால், தென்னிந்தியாவில் நெல், நாட்டுப்பயிரான காலகட்டமும் இதுவே என்று உறுதியாகக் சொல்லமுடியாது. கங்கைச் சமவெளியிலும், அது மேற்கு இந்தியாவிலும் மென்புல வேளாண்மைத் தொழில்நுட்பட்பத்துடன் இருந்தது என்றால், தென்னிந்தியாவில் அது இதற்கு நெடுங்காலத்துக்கு முன்னரே, வன்புல வேளாண்மைத் தொழிலாக நாட்டுப்பயிராக்கப்பட்டது எனலாம். இன்றுவரையிலான தொல்லியல் ஆதாரங்கள், மென்புல நெல் தென்னிந்தியாவில் காலத்தால் பிற்பட்டது என்பதையே சுட்டிநிற்கின்றன.

அரிசி தற்காலத்தில் உள்ளதுபோல் அனைவருக்குமான உணவுப்பண்டமாக இருக்கவில்லை. அது விலை மதிப்புமிக்கதாகவே நெடுங்காலம் விளங்கியிருக்கலாம். இந்த அரிதான / மதிப்புமிக்க நிலை, அது மருத நில விளைபொருள் நிலையை அடையும் நிலைக்கு முன்னதான காலநிலையைச் சுட்டுவதாகக் கொள்ளலாம். அந்நிலையில், அது ஒரு காட்டுப் பயிராக குறிஞ்சி-முல்லையின் அல்லது வன்புல வேளாண்மையின் விளைபொருளாக இருந்திருக்க வேண்டும். இக்கருத்து மேற்குலகுக்கு துவக்க கால அரிசியில் தென்னிந்தியாவின் பங்கைக் கூடுதலாக்குகிறது.

பண்டையத் தமிழகத்தில் வன்புல வேளாண்மை மிகச்சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தது என்பதைச் சங்க இலக்கியம் காட்சிப்படுத்துகிறது. முல்லை நில வேளிர்கள் வன்புல வேளாண்மையை முன்னெடுத்துச் சென்றவர்களாகக் காணலாம். உதாரணமாக, கடையேழு வள்ளல்களுள் குறிஞ்சி நிலத்து வள்ளல்களாக நள்ளிடையும், ஓரியையும் குறிப்பிடலாம். இவர்கள் வேட்டைச் சமூகத்தின் தலைவர்களாகவும், காடுவிளை பொருட்களை உரிமை கொண்டவர்களாகவும் வகைப்படுத்திக்கொள்ளலாம். அதியமான், பாரி, பேகன், ஓரி, காரி ஆகியோர் முல்லை நில சமூகத் தலைவர்களாகவும், வன்புல வேளாண்மையில் ஓங்கியவர்களாகவும் வகைப்படுத்திக்கொள்ளலாம்.

துவக்க கால சங்க இலக்கியத்தில் மருத நிலச் செய்திகள் குறைவாகவே உள்ளன. இது சங்க காலத்தின் துவக்க நிலையில் மருத நிலம் பெரிய பொருளாதார உற்பத்தி மையமாக இருக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. வைகை, தாமிரபரணி, தென்பெண்ணைச் சமவெளிகள், மருதப் பொருளாதாரத்தில் காவிரிச் சமவெளியைவிட முன்நிலையில் இருந்திருக்கக்கூடும் என்பதை அனுமானிக்க முடிகிறது. சோழ அரசு உருவாக்கத்துடன் காவிரியின் முகம் மாறுகிறது எனலாம். இது சங்க காலத்தின் மையக் காலகட்டத்தில் நிகழ்வதாகும். பாண்டியர் மற்றும் சேரர்கள் மருத நில விரிவாக்கத்துக்கு முயன்றதைவிட சோழர்கள் காடுகொன்று நாடாக்கின செய்திகள் மூலம் மருத நில உருவாக்கத்தில், அதாவது குறிஞ்சி மற்றும் முல்லை நிலங்களின் அடிவாரங்களையும் குறிஞ்சியாக மாற்றியமைப்பதில் பெரும்பங்கு வகித்தனர் என்பதை அறிகிறோம்.

தென்னிந்தியப் பெருங் கற்படைப் பண்பாட்டுக் காலத்தின் இறுதிக்கட்டமான பொ.ஆ. 200 என்பது, சங்க காலத்தின் இறுதிக்கட்டமான பொ.ஆ. 200 - 250 என்பதும் ஒரே காலகட்டத்தைக் குறிப்பது என்பதை நினைவில் கொண்டால், பெருங் கற்படைப் பண்பாட்டின் இடைக் காலகட்டத்தில் இருந்து திணை நிலங்கள் மாற்றியமைக்கப்படுவதும், திணைப் பொருளாதாரம் மாற்று முகம் கொள்வதும் நிகழ்கிறது எனலாம்.

அண்மைக்கால பொருந்தல் அகழாய்வு, தமிழகத்தில் மு.பொ.ஆ. 500 அளவில் அரிசி மதிப்பு வாய்ந்த முக்கிய விளைபொருளாக விளங்கியதைச் சுட்டுகிறது. காலத்தால் பழைமையுடைய நெற்பயிர் அல்லது அரிசி சான்று கிடைக்காது உள்ளது. மொழித் தொல்லியல் இதற்கும் நெடுங்காலத்துக்கு முந்தைய பழைமையைச் சுட்டிநிற்பது விளக்கப்பட்டது. இதன்வாயிலாக, அக்காலத்தே இந்தியாவின் எப்பகுதியில் இருந்து ஏற்றுமதியாகியிருந்தாலும் சரி, முதலில் அரிசியாகவே ஏற்றுமதி செய்யப்பட்டது என்பதைத் தெளியமுடிகிறது. அது வன்புல வேளாண்மையிலிருந்து ஏற்றுமதியானது என்பதையும் முன்வைக்கமுடிகிறது.

நெல் எற்றுமதி குறித்த செய்திகள் எவ்வாறாயினும், நெல் அரிதான மதிப்புமிக்க ஒரு உணவாக மதிக்கப்பட்டதை சங்க இலக்கியங்கள் காட்சிப்படுத்துகின்றன. இங்கிலாந்தில் பொ.ஆ. 15-ம் நூற்றாண்டிலும் நெல் விலை மதிப்புமிக்கதாகவே இருந்தது என்பதை ஷேக்ஸ்பியரின் வாக்கில் இருந்து அரியமுடிகிறது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com