அத்தியாயம் 40 - நடுகற்கள் வகைகளும் வகைப்பாடும் - 33

மேற்கு உலகில் பெருங் கற்படைப் பண்பாடு நிகழ்ந்த சமகாலத்தில், அது தென்னிந்தியாவில் நிகழவில்லை. மேற்கு உலகில் அப்பண்பாடு வீழ்ச்சியுற்ற காலத்தில் தென்னிந்தியாவில் உதயமானதாக உள்ளது. 
அத்தியாயம் 40 - நடுகற்கள் வகைகளும் வகைப்பாடும் - 33

பெருங் கற்படைச் சின்னங்களும் திணை வாழ்வியலும்

நெருக்கமான வாணிக உறவுகள் இருந்தும் சிந்துப் பகுதியின் மருதப் பண்பாடோ, நகரப் பண்பாடோ, உலோக, சுரங்கத்தொழில் நுட்பங்களோ தென்னிந்தியாவில் பாதிப்பை உருவாக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கதாகிறது என்பது முந்தைய அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டது. அதேசமயத்தில், சிந்துப் பகுதியின் பொருட்களின் பரவலோ, வாழ்வியல் சார்ந்த பண்பாட்டுப் பரவலோ தென்னிந்தியாவில் காணமுடியாது உள்ளதும் கவனிக்கத்தக்கதாகிறது.

எனில், இவ்விரு பகுதிகளில் வாழ்ந்த மக்கள் தங்கள் வாழ்வியலுக்கு உகந்த அல்லது தேவையானவற்றை மட்டும் ஏற்று வாழ்ந்திருந்தனர் என்ற ஒரு கொள்கை முடிவை தெரிவிக்கலாம். இதனைத் திணை வாழ்வியலின் கூறாக்க நிலை என்று அர்த்தப்படுத்திக்கொள்வதைவிட, நிலம் சார்ந்த வாழ்வியலின் விளைவு அல்லது வாழ்வியல் தேர்வு எனலாம். இதே உண்மை, மேற்கு உலகோடு தென்னிந்தியா கொண்ட தொடர்புகளில் இருந்தும் கிட்டுகிறது. மேற்கு உலகில் இருந்து பண்பாட்டுப் பரவல் நிகழ்ந்துள்ளது. ஆனால், அவை அடிப்படை வாழ்வியல் முறைகளை மாற்றும் பண்பாடுகளாக இருக்கவில்லை. பெருங் கற்படைச் சின்னங்களே மேற்குலகின் கொடைதானே என வாதிட இடமுள்ளது.

மேற்கு உலகில் பெருங் கற்படைப் பண்பாடு நிகழ்ந்த சமகாலத்தில், அது தென்னிந்தியாவில் நிகழவில்லை. மேற்கு உலகில் அப்பண்பாடு வீழ்ச்சியுற்ற காலத்தில் தென்னிந்தியாவில் உதயமானதாக உள்ளது. பண்பாட்டுப் பரவல் என்பது அப்பண்பாடு உச்சநிலையில் உள்ளபோதேதான் நிகழமுடியுமே அன்றி, அதன் வீழ்ச்சிக்காலங்களில் இல்லை. மேற்கு உலகின் பெருங் கற்படைப் பண்பாட்டினரே தென்னிந்தியாவில் குடியேறி இப்பண்பாட்டுக்கு வழியமைத்தனர் என்ற கொள்கையும் இதே காரணத்தால் கேள்விக்கு உள்ளாகிறது. தென்னிந்தியாவில் இவ்வாறு மேற்கு உலகினர் மு.பொ.ஆ.1500 அளவில் குடியேற்றங்களை ஏற்படுத்திக்கொண்டமைக்கோ, இங்கிருந்த புதிய கற்கால மக்களோடு கலந்தமைக்கோ, புதிய கற்கால மக்களை வீழ்த்தி நிலைபெற்றதற்கோ சான்றுகள் கிடைக்காது உள்ளது. இந்நிலையில், இதனை ஒரு சிந்தனையின் பரவலாகக் கொள்ள முடிகின்றதே ஒழிய, பண்பாட்டின் பரவலாகக் கொள்ள இன்றைய ஆதாரங்கள் உதவுபவையாக இல்லை.

மு.பொ.ஆ. 3500 - 1500 ஆண்டுக் காலங்களில், மக்களின் வாழ்வியல் அடிப்படையில் சிந்துவில் மருதப் பண்பாடாக விளங்க, தென்னிந்தியா முழுமையும் குறிஞ்சி மற்றும் முல்லையாகவும் அல்லது குறிஞ்சி - முல்லை கலப்புப் பண்பாடாகவும் வெளிப்பட்டுள்ளது எனலாம். இவ்விரு பெரு நிலப் பகுப்புகளின் மக்களின் திணை வாழ்வியல் இவ்வாறாக வேறுபட்டு இருக்க, இரு பகுதி மக்களுக்கு இடையே ஒற்றுமைக் குணங்களாக இனக்குழு வாழ்க்கை, இனக்குழுத் தலைமை மற்றும் செழுமையான உள்நாட்டு மற்றும் கடல் கடந்த வணிகம் போன்றவற்றில் வெளிப்பட்டுள்ளது. இயற்கை வழிபாடு, தாய்தெய்வ வழிபாடு, இலிங்க வழிபாடு ஆகிய வழிபாட்டிலும் இவ்வொற்றுமை வெளிப்பட்டுள்ளது. அதே சமயத்தில், இரு நிலப் பகுதிகளிலுமே நெய்தல் திணை மக்களின் வாழ்வியலும் ஓங்கியிருந்திருக்க வேண்டும். கடல்கடந்த வணிகத்தை முன்னெடுத்துச் சென்றவர்களாகவோ அல்லது அவ்வணிகத்துக்குப் பக்க துணையினராகவோ நெய்தல் மக்கள் விளங்கினர் எனலாம். சிந்துப் பகுதியின் முற்றான குறிஞ்சி மற்றும் முல்லைத் திணை வாழ்வியல்; தென்னிந்தியாவில் முற்றான மருதத் திணை வாழ்வியல் என்பது வெளிப்பட்டிருந்ததா என்று இன்றுவரை கிடைத்துள்ள சான்றுகள் அடிப்படையில் தெளிவுபடுத்திக்கொள்ள முடியாது உள்ளது.

சிந்துவெளி நாகரிகம் நடைபெற்ற மு.பொ.ஆ 3500 முதல் மு.பொ.ஆ. 1500 வரையிலான காலகட்டத்தில், தென்னிந்தியாவில் பெரும்பான்மையாகப் புதிய கற்காலப் பண்பாடு நிகழ்ந்துவந்தது. இந்நிலையில், தென்னிந்தியப் புதிய கற்காலப் பண்பாடு, உலகின் பிறபகுதிகளில் வெளிப்பட்ட புதிய கற்காலப் பண்பாட்டின் எல்லாக்கூறுகளும் வெளிப்பட்டனவா, ஒத்த குணங்களுடன் இருந்துள்ளனவா என்ற ஒப்பாய்வு வேண்டும் கேள்வியை எழுப்பி விடை காணவேண்டி உள்ளது. இவ்விடைக்குத் தொல்லியல் சான்றுகளே பெரிதும் உதவுகின்றன. “தென்னிந்தியப் புதிய கற்காலத்தில் அதிகமும் காணமுடிவது, மேய்த்தல் வாழ்க்கைப் பண்பாட்டையே. இவ்வாழ்க்கை முறையானது, பெருங் கற்காலப் பண்பாட்டின் மத்திய நிலை அல்லது இடைநிலைப் பெருங் கற்படைக் காலகட்டம் வரை நீடித்திருந்ததை அறியமுடிகிறது”.

பொதுவரையரையில், புதிய கற்காலப் பண்பாட்டின் மிகமுக்கியமான வெளிப்பாடு வேளாண்மை ஆகும். புதிய கற்கால வேளாண்மை என்பது வன்புல வேளாண்மை அல்ல அது மென்புல வேளாண்மையை முற்றாகச் சுட்டுவது. அது தொல்காப்பிய பகுப்பில் மருதப் பண்பாட்டின் வேளாண்மையைக் குறிப்பது. வன்புல வேளாண்மை என்ற மலைப்புல வேளாண்மை என்பது காலத்தால் பழைமை வாய்ந்தது. அதன் பழைமை என்பது மென்புல வேளண்மையைவிட பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் மூத்தது. உணவுதானியங்கள் குறித்து கிடைத்துள்ள மிகப் பழைமை வாய்ந்த சான்றுகள், மலைப்புல வேளாண்மையின் விளைச்சல்களாகவும் இருக்கக்கூடும். அவை எவ்வகை வேளாண்மையின் விளைச்சல் என்பதை வேறுபடுத்தி அறிய தொழில்நுட்பம் வளரவில்லை.

அநேகமாக, உலகின் எல்லாப் பகுதி உணவுதானியப் பயிர்களின் உற்பத்தியும், மலைப்புல வேளாண்மையில் இருந்துதான் தொடங்கியிருக்கின்றன என வரலாற்றுப்போக்கிலும், மானுட வளர்ச்சிப்போக்கிலும் அறியமுடிகின்ற ஒன்று. உலகின் பலபகுதி தொன்மங்களும், இலக்கியங்களும் காட்டுப்பயிர் ஒன்று நாட்டுப்பயிரான நிகழ்வை சிறப்பித்துக் கூறுகின்றன. இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக, தமிழ் இலக்கியத்தில் ஒளவையாரால் அதியமான் முன்னோன் ஒருவன் கரும்பை பயிரிட்ட அல்லது வெளியிடத்தில் இருந்து கொண்டுவந்த நிகழ்வை சிறப்பித்துக் கூறுவதை எடுத்துக்கொள்ளலாம். (புறநானூறு எண்கள்: 99, 392) இது, குறிஞ்சி - முல்லைத்திணை மக்கள் மருதப் பண்பாட்டில் நுழைந்ததையோ, மருத நிலமாக்களிலோ ஈடுபட்ட நிலையையோ சுட்டுவதே.

எல்லம், சுமேரியா, பாபிலோன், எகிப்து, அட்டி, இட்டடைட், கிரேத்தா, இதனுடன் சீனா முதலான எல்லா தொன்மையான பண்பாடும் புதிய கற்காலப் பண்பாட்டின் மென்புல வேளாண்மையுடன் எழுந்த நாகரிகங்கள். மென்புல வேளாண்மை, இரு முக்கிய இயற்கைப் பொருளைச் சார்ந்து உள்ளது. அவை, நிலமும் நீரும் ஆகும். நிலம் மற்றும் நீர் மீதான ஆளுமையும் தனியுடைமையும், ஆளும்குடி மரபுரிமை அரசு உருவாக்கத்துக்கு வித்திட்டன; இனக்குழுத் தலைமையை வீழ்த்தின; இனக்குழுத் தலைமை அரசுகளை நசுக்கின அல்லது மலைப்புல வேளாண் சமூகங்களை வேட்டையாடின. இதில் மண்ணுக்கு உகந்ததாக இயற்கை தேர்வின் வழிப்பட்ட பயிரினங்களின் விதைகளைத் தேடிய போரும் இருந்திருக்கக்கூடும். சான்றுகள் இல்லை எனினும், மருத நிலப் பண்பாடு உருவாக்கத்தில் உள்ளூர் பயிரினங்கள் முக்கியப் பங்காற்றியிருக்கின்றன. அதனால், மருத நில விரிவாக்க வெற்றிக்கு விதைகளும் முக்கியக் காரணி எனலாம். இம்மலைப்புல வேளாண் சமூகத்தின் தலைமைக் குடிகளே “வேளிர்” எனப்பட்டனர்.

வேள் என்பது பொருள் என்னவாக இருக்கும் என்று பார்க்கும்போது, “வேள் என்பது ஒளி, தலைமை மற்றும் விருப்பம் என ஆதிதிராவிட மொழியில் குறிப்பிடப்படுகிறது. இது, துரை அரங்கசாமி கண்டடைந்த பொருளான ஒளி, வெளிச்சம், தலைமை என்பதுடன் மிக்க நெருக்கமாக உள்ளது. (Durai Rangasamy, the surnames of Cankam Age Literary and Tribal, pp.153) மேலும்,  ரொமிலா தாபர், வேத மொழியில் வழக்கில் உள்ள ‘ராஜா’ என்ற சொல்லுக்கு ஒளிவீசுதல், தலைமை பெறுதல், தன்வயப்படுத்துதல் ஆகிய பொருள்கள்தான் சரியானவை என்றும், ‘வேள்’ என்ற சொல்லுக்கு அளிக்கப்பட்டுள்ள விளக்கங்களும், ‘ராஜா’ என்ற சொல்லுக்கு அளிக்கப்பட்ட விளக்கங்களும் ஒன்றுபடுகின்றன என்று சுட்டிக்காட்டுவது (Archaeology and Tamil Litery Tradition, p.48.) கவனிக்கத்தக்கதாக உள்ளது. மேலும், அவர் வேளிர், பெருங் கற்படைச் சின்னங்கள், நெல்விளைவு ஆகியவற்றுக்கிடையே வரலாற்று ரீதியான தொடர்பு உண்டு என்றும் குறிப்பிடுகிறார். இதனை ஒட்டி, வேளிர்களை வேளாளர்களின் முன்னோடி என்று கருதுவதும், வேளாண்மை என்பது நீர் ஆளுமையைக் குறிக்கும் என்பதும் கவனிக்கத்தக்க பொருள்களாகும்” எனும்போது, அதியமானும், மலையமானும், ஆநிரைகளைச் செல்வமாகக் கருதியவர்களாக விளங்கினர். ஓரியும், நள்ளியும் வேட்டுவ வாழ்க்கையினை முன்னெடுத்துச் சென்றவர்களாக உள்ளனர். வேள்கள் என்று குறிக்கப்படும் பிற கடையேழு வள்ளல்கள் மூவரும், வேள்கள் என்று பல்வேறு எண்ணிக்கையில் குறிப்பிடப்படும் பிறரும், அடிப்படையில் குறிஞ்சி – முல்லை நிலத் தலைவர்களே என்பது ஆழ்ந்து கவனிக்கத்தக்கது.

எல்லம், சுமேரியா, பாபிலோன், எகிப்து, அட்டி, இட்டடைட், கிரேத்தா, மற்றும் சீனாவின் புதிய கற்கால மருதப் பண்பாடு அங்கே உருவாக்கியது போன்று, சிந்துப் பகுதியின் மருதப் பண்பாடு ஆளும்குடி மரபுரிமை அரசு உருவாக்கத்தை செய்துள்ளது என்பதற்கான சான்றுகளை அறியமுடியவில்லை. இந்த அரசியல் நிலை நமக்கு மிக முக்கியமான ஒரு சான்றை வழங்குகிறது. இது ஒப்பாய்வின் மூலம் அடைவதே. உலகின் பிறபகுதி, குறிப்பாக மேற்கு உலகில் புதிய கற்கால தனியுடைமையும், ஆளும்குடி மரபுரிமை அரசு உருவாக்கமும் அவ்வப்பகுதி பூர்வகுடிகளை வீழ்த்தியும், துரத்தியும், மேலாண்மை செய்தும் உருவானவை. மு.பொ.ஆ. 4000 காலகட்டத்தைச் சார்ந்த எல்லம் நாகரிகம் முதல் அதனைத் தொடர்ந்து கிரேத்தா நாகரிகம் வரை இதுவே பொது விதியாக உள்ளது. சீனாவின் ஆளும்குடி மரபுரிமை அரசு உருவாக்கம் இவ்விதியிலிருந்து மாறுபட்டதாக இருக்கலாம். அது உள்நாட்டு இனக்குழுக்கள் தம்முள் செலுத்திக்கொண்ட ஆளுமையின் காரணமாக உருவாகியிருக்க வேண்டும். இதனை சங்க காலத்தில், தென்னிந்தியப் பிறகுடிகள் மீது சேர, சோழ, பாண்டிய குடிகள் செலுத்திய ஆளுமை போன்றதாக இருக்கலாம்.

சிந்துப் பகுதியில் தனியுடைமை கூடிய ஆளும்குடி மரபுரிமை அரசு உருவாக்கம் பற்றி அறியமுடியாது உள்ளதற்கு அது அந்நியப் படையெடுப்புகளாலோ; பூர்வகுடிகளைத் துரத்தி உருவான அரசு அல்லது அரசுகளோ அல்ல. அது முற்றாக, பூர்வகுடிகளின் அரசு அல்லது குடியரசுகளே. அதனால், அக்குடிகள் மீதான மேலாண்மைக்கு அவசியமற்ற நிலையும் இணக்கமான போக்கும் அங்கு நிலைபெற்றிருந்தன.

இந்தப் புரிதல், மற்றொரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது. ஓரிடத்தின் பூர்விகக் குடிகள் மீது அந்நியர்கள் செய்த மேலாண்மை என்பது அந்நிய ஆளும்குடி மரபுரிமை அரசுகளின் உருவாக்கத்துக்கு வித்திட்டதா என்பதுதான். அது அவ்வாறு இருக்க வேண்டிய அவசியமில்லை. இனக்குழுத் தலைமைகளும் அந்நியக் குடிகள் மீது மேலாண்மையை நிகழ்த்தின. ஆனால், மேற்கு உலகில் புதிய கற்காலப் பண்பாட்டுக்குப் பிறகும் செம்பு / வெண்கலப் பண்பாட்டுக்குப் பிறகும் உதயமான இரும்புக் கால பண்பாட்டில் ஆளும்குடி மரபுரிமை அரசு உருவாக்கம் இவ்வாறே நிகழ்ந்துள்ளது. செல்வமும், நாட்டுவளமும் பகிர்ந்தளிக்கப்படாமல், அவை ஆளும் ஒரு குடிக்கே குவிந்துள்ளது. இந்தப் புரிதல், சிந்துப் பகுதி மருதப் பண்பாட்டிலும் சரி, தென்னிந்தியாவில் குறிஞ்சி, முல்லைப் பண்பாட்டிலும் சரி, ஆளும்குடி மரபுரிமை அரசு உருவாக்கம் ஏற்படாமல் இனக்குழு தலைமை அரசே ஏற்பட்டிருந்தது என்பதை தெளிவாக்குகிறது. தென்னிந்தியாவில் இந்த இனக்குழு தலைமை ஆளும் அமைப்பு, சங்க காலத்தின் துவக்கம் முதல் நீடித்திருந்தது. தென்னிந்தியாவில் சங்க கால அரசு உருவாக்கம், மருதத் திணைப் பெருக்கத்துடன் தொடர்புடையது. இது குறித்து பின்னர் காணலாம்.

குறிஞ்சி – முல்லைத் திணைப் பண்பாட்டில் செழித்திருந்த தென்னிந்தியாவின் புதிய கற்கால மக்கள், உலகம் முழுவதும் அன்று அறிப்பட்டிருந்த எல்லா நாகரிகப் பகுதிகளுடனும் தொடர்புகொண்டிருந்தனர்; வணிகத் தொடர்பும் கொண்டிருந்தனர் என்பதை பல தொல்லியல் சான்றுகளால் அறியமுடிகிறது. அட்டவணை - 1 சிலவற்றை தொகுத்துத் தருகிறது. (இது குறித்து சில செய்திகள், யுத்தபூமி அத்தியாயம் 4-ல் இடம்பெற்றுள்ளது).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com