அத்தியாயம் 52 - நடுகற்கள் வகைகளும் வகைப்பாடும் - 45

நவீனகால இந்தியாவுக்குச் சூட்டப்பட்ட ஆட்சிப்பெயர் பாரத்; இதன் பொருள் ‘பரதர்களின் நாடு’. இந்தப் பரதர்கள் நிச்சயமான ஆரியர்களே. இதனால், பண்டைக்கால ஆரியர்கள் நிறத்தூய்மையைப் பாராட்டவில்லை என்பது தெளிவு.

திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடி

இந்தியா - மொழிகளின் காட்சிச் சாலை

நல்ல வழக்கில் உள்ள நான்கு மொழிக் குடும்பங்களுடன், உலகில் பரப்பளவில் ஏழாவது பெரிய நாடாகவும், மக்கள் தொகையில் இரண்டாவது பெரிய நாடாகவும் விளங்குவது நமது சுதந்திர இந்தியா. அதில், 1981-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கின்படி, 1600-க்கும் அதிகமான மொழிகள் வழக்கில் உள்ளன என்றும், அவற்றுள் 300-க்கும் அதிகமான மொழிகள் சந்தேகத்துக்கிடமான மொழிகள் என்றும், அவற்றுள் 52 மொழிகள் இந்திய மொழிக் குடும்பங்கள் நான்கிலும் சேராத மொழிகள் என்றும் குறிப்பிடுகிறது. இக்கணக்கின்படி, இந்தியாவில் 1302 மொழிகள் உள்ளன என சில மொழியியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

பண்டைய அகன்ற இந்தியாவில், இன்னும் சிலநூறு மொழிகள் இப்பட்டியலில் இணையக்கூடும். பாகிஸ்தானில் வழக்கில் உள்ள பிராகூயி, இமயமலையின் வடக்கே சீன-திபெத் பகுதிகளில் வழங்கும் புருசாகி மொழிகள், இந்தியப் பண்டைய மொழிகளில் குறிப்பிடத்தகுந்தவை. பிராகூயி, வட திராவிட மொழிகளில் ஒன்று என்பது அறிந்ததே. புருசாகி மொழியும் தமிழில் (திராவிடத்தில்) இருந்து கிளைத்த மொழிகளில் ஒன்று என ஆர்.எஸ். சர்மா முதலானோர் கருதுவர். இது குறித்து மொழி ஆய்வாளர்கள் மேலும் ஆய்வுக்கு உட்படுத்தவில்லை. உலகில் பேசப்படும் மொழிகளில் (5000 - 7000) நான்கில் ஒருமொழி (1600 - 1300) இந்தியாவில் பேசப்படுகின்றன. இப்பின்புலத்தில், இந்தியாவை “மொழிகளின் காட்சிச் சாலை” என மொழியியலாளர்கள் குறிப்பிடுவர். இவற்றுள், இந்தோ - ஆரிய மொழிக் குடும்பமே மிகப்பெரியது என்பது முன்னரே குறிப்பிடப்பட்டது.

இந்தோ - ஆரிய மொழிக் குடும்ப மொழிகள் பல்கிப் பெருக முதன்மையான காரணம் “சம்ஸ்கிருதமயமாதல்” என்ற ஆரியமயமாதல் மற்றும் “திராவிடமயமாதல்” என்ற தமிழ்மயமாதல் முக்கிய வினையாற்றுகிறது. இந்த இருமொழிக் குடும்பங்களைப் பேசிய தனித்தனி மக்களினங்களை மொழிவழி தனித்துப் பகுக்கும் செயலைக் கடினமாக்கியதும், பகுக்கும் முறைகளைச் சிக்கலாக்கி பிம்பங்களை நம்பும் செயலைப்போல் பயனற்றதாக்கியதும் இந்த இருசார் பண்பாடுகளின் பரிமாற்றங்கங்களே முக்கியக் காரணிகளாக இருக்கின்றன.

இந்த இரு குடும்ப மொழிகளைப் பேசுவோரின் பண்பாடுகளின் இருசார் பங்களிப்பு பண்பாட்டுத்தளத்தில் மட்டுமல்லாது, மொழியிலும் தாக்கத்தை உருவாக்கியது. அதன் முதல் விளைவு இந்தோ - இரானிய மொழிக்கும், இந்தோ – ஆரிய மொழி என்ற ரிக் வேத மொழிக்கும் உள்ள வேறுபாடு. அதன் சாய்வான ஒன்றே பிற்காலத்தில் ரிக் வேத மொழிக்கும் செம்மை சம்ஸ்கிருதத்துக்குமான வேறுபாட்டுக்கும் காரணமாகிறது. இந்தோ - இரானிய மொழிக்கும், இந்தோ – ஆரிய மொழி என்ற ரிக் வேத மொழிக்கும் பிரிவை உண்டாக்கியது நாமடி ஒலிகளான தமிழ் என்ற திராவிட மொழி ஒலிக்கூறு என்றால், வேத மொழிக்கும், செம்மை சம்ஸ்கிருத மொழிக்கும் இடையில் தொடர்ந்து பயணித்த மக்களின் வழக்கு மொழிகளாக இருந்த பிராகிருத மொழிகளின் பங்களிப்பு என்பதை இங்கு நினைவில் கொள்வோம்.

இரண்டு கட்டங்களிலும், இவ்வேறுபாட்டை அடையாளப்படுத்திக்கொள்ள தொல்லியல் ஆதாரங்களைவிட இலக்கிய ஆக்கங்களே உதவுகின்றன. முதலில், வேதகாலத்தின் கால வரையறையில் இருந்து துவங்கி, இலக்கியங்கள் காட்டும் மாற்றங்களையும் அதன் வழியே அச்சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்களையும் காண்போம். இது இந்தோ - இரானிய மொழியில் இருந்து இந்தோ - ஆரிய மொழியான ரிக் வேத மொழியையும் அதனைப் பேசிய மக்களையும் நன்கு அடையாளப்படுத்தும்.

இங்கு இரு கருதுகோள்களை முன்வைத்துக்கொண்டுதான் முன்னேற முடியும். அவை -

1. இந்திய ஆரியர் மற்றும் இந்திய ஆரியர் அல்லாதோர் யாவர் என்ற அடையாளம்.

2. ஆரிய மொழி பேசியோர் மற்றும் ஆரிய மொழி அல்லாத மொழிகளைப் பேசியோர் யாவர் என்ற அடையாளம்.{pagination-pagination}

இந்திய ஆரியர் மற்றும் இந்திய ஆரியர் அல்லாதோர் யாவர் என்ற அடையாளம்

ரிக்கில் ஆரியர் அல்லாதோர் - இந்தியாவில் ஆரியருக்கு முன் வாழ்ந்த நான்கு இனக்குழு மக்கள் பற்றி முந்தைய அத்தியாயங்களில் கண்டோம். இவர்களுள் ஆஸ்டிக் இனத்தவர்கள், கோல்கள், கோலரிகள் என்று வரலாற்று ஆசிரியர்களால் குறிக்கப்படுகின்றனர். நிசாதர் என வடமொழி இலக்கியங்கள் குறிப்பிடுவது இவர்களையே என்பர். இவர்கள், ஆரியரின் முற்காலப் பரவலின் காலகட்டங்களில் சிந்துப் பகுதியில் இருந்து வெகு தொலைவில் வசித்துவந்ததால், ஆரியர்களுடன் நேர் கொண்ட இடங்கள் இல்லை என்று சொல்லும் அளவில் தொடர்பற்று இருக்கின்றனர். பிற்கால வேதங்களில், ஆஸ்டிக் மொழியின முண்டா மொழிகளின் சொற்கள் இடம் இடம்பெற்றுள்ளன. இது, ஆரியர்கள் பிற்காலத்தில் இம்மக்களுடன் கொண்ட தொடர்பைக் காட்டுகிறது. ரிக் வேதக் காலத்தில், ஆப்பிரிக்க இனத்தினர் தென்னிந்தியாவிலும், அந்தமான் – நிக்கோபார் பகுதிகளிலும் ஒடுங்கியதால், ஆரியர்கள் இவர்களை அறிந்திருக்கவில்லை.

ஆரியர்கள் இந்தியாவுக்கு நுழையும்போது, பிற இரு இனக் குழுக்களான தமிழ் என்ற திராவிட இன மக்களையும், மான்கொமர் இனத்தினரான சைனோ - திபெத்திய (இதனை திபெத்திய பர்மிய மொழிகள் என்றும் சிலர் குறிப்பர்) மொழிகளைப் பேசிய இன மக்களையும் சந்திக்கின்றனர்; எதிர்க்கின்றனர். ரிக்கில் தாசர் என்று குறிப்பது மொகஞ்சதாரோ - ஹரப்பா பகுதி தமிழர் என்ற திராவிடரை என்றும், தஸ்யு என்று குறிப்பிடுவது மான் – கொமர் மொழிகளைப் பேசிய காஷ்மீரில் இருந்து அசாம்வரை அதன் சார்பு இமயமலைகளிலும், அதனிடை பள்ளத்தாக்குகளிலும் வாழந்த கிர் அல்லது கிராத் மக்களையுமே. பிற்கால யஜுர் வேதத்திலும், அதர்வணத்திலும் இவர்கள் கிராதர்கள் என்றே குறிக்கப்படுகின்றனர்.

ரிக் வேத ஆரியர் வட இந்திய பரவல் பகுதிகள்

(புகைப்படம் நன்றி - விக்கிப்பீடியா)

ரிக் தரும் சான்றுகள் தமிழர்களையும், கிராதரையும் எவ்வித வித்தியாசமும் இன்றி இருக்கின்றன. அது இரு இனத்தவரையுமே கருப்பரென்றும், கருமைப் பெண்களுக்குப் பிறந்தவர்கள் என்றும் சுட்டுகின்றன. உண்மையில், தோற்றத்தில் அவர்கள் திராவிட முகப்பொலிவில் இருந்து வேறுபட்டனர். நிறத்திலும், கிராதர் கருப்பு நிறம் கொண்டவர்கள் அல்லர்; மஞ்சள் நிற மங்கோலியர். இரு சாரரையுமே கருப்பு என்றும், தஸ்யு என்றும் தாசர் என்றும் ரிக் குறிப்பிடுகிறது. இதனால், ரிக் வர்ணனை கொண்டு இருவரையும் வேறுபாடு கொள்வதற்கு சிக்கல் உருவாகும் இடங்களில், அவர்களின் வாழிடம் சார்ந்த நிலவியல் குறிப்புகளே உதவுகின்றன. இவ்விருவருடன் குறிக்கப்படும் மற்றொருவர் “பணி” ஆவர். இவர்கள், சிந்துவெளி தமிழரின் வணிகக் குழுவினர் ஆவர். எதிரிகளான இம்மூவரும், ஆரியர் பார்வையில் மூன்றுவிதமாக இருக்கின்றனர். இது குறித்து ஆங்காங்கே குறிப்பிடப்படும்.

இந்தியாவுக்கு வந்த இந்தோ - இரானியர் இனத்தின் கிளை இனத்தவரே இந்திய - ஆரியர் என்பதை சென்ற இரு அத்தியாயங்களில் ஆங்காங்கே விளக்கப்பட்டது. இவர்களின் உடல் அமைப்பு, தோற்றம், குணநலன்கள் என்பது குறித்து ரிக் வேதத்தில் சிறப்பான விவரங்கள் இல்லை. ஆனால், அதன் துவக்க காலப் பாடல்களில், ஆங்காகே அவர்களுடைய தேவர்களின் உருவம், வர்ணம் பற்றிய வர்ணனைகள், ஆரியரின் உருவம் மற்றும் வர்ணமாக இருக்கும் எனக் கொள்ளலாம். 1. வெண்மை நிறம் கொண்டவர்கள். 2. தாமிர வண்ண, மஞ்சள் நிறக் கூந்தல், 3. புனித ஆசாரத்தைப் பின்பற்றுதல் போன்றவை அவர்கள் அடையாளம் என்று பதஞ்சலி தனது “மகா பாஷ்யம்” நூலில் சுட்டிக்காட்டுவார். அவர்கள் தங்கள் நிறம் கொண்டு பெருமிதம் கொண்டவர்களாக இருந்தனர். அதனாலேயே அவர்கள் நிறம் குறைந்த இன மக்களை கருப்பர் எனக் குறித்தனர் எனலாம்.

ஆரிய, தாச, தாஸ்யு, பணி ஆகியோரின் தோற்றம், நிறம் மற்றும் உறவு முறை ஆகியவற்றின் பின்னணியில், ரிக் வேதத்தின் முக்கிய இருடிகள், தலைவர்கள், காலவரையறை, தொகுப்பு முறை ஆகியவற்றைக் காண்போம்.{pagination-pagination}

ரிக் வேதத்தின் முக்கிய இருடிகள்

ரிக் வேதத்தின் இரண்டு முதல் எட்டாம் மண்டலம் வரை தொகுக்கப்பெற்ற பாடல்கள், முக்கிய இருடிகள் மற்றும் அவர்களின் முன்னோர்கள் மற்றும் வழித்தோன்றல்களால் இயற்றப்பட்ட பாடல்களாக உள்ளன. இதனால், 350-க்கும் மேற்பட்ட ரிக் கால முக்கிய இருடிகளுள் முக்கிய இருடிகளை அடையாளம் கண்டுகொள்வது எளிமையாக இருக்கிறது. இவர்களின் பெயர்களே பின்னர் பிராமணம் வலியுறுத்தும் கோத்திரத்தின் பெயர்களுக்கு அடிப்படையாக அமைகிறது.


முதல், ஒன்பது மற்றும் பத்தாவது மண்டலங்களில் யரோ ஒரு இருடியின் அல்லது அவரது குல கோத்திரத்தின் முக்கியத்துவம் இல்லை. பெளத்த நூலான “தீக்நிகாயி”-ல், ‘தேவிஜ்ஜஸூத்த’ பகுதியிலும் (1-13), மற்ற பகுதிகளிலும், மந்திரங்களை இயற்றியவர்களும் அவற்றை சொன்னவர்களுமாக அஸ்டகர், வாமகர், வாமதேவர், விசுவாமித்திரர், ஜமதக்னி, அங்கிரா, பரத்வாஜர், வசிட்டர், காஸ்யபர், பிரிகு ஆகியோர் உள்ளனர். இவர்களில் வாமகர் பெயரில் எந்த இருடியும் காணப்படுவதில்லை. மற்ற இருடிகளின் பாடல்கள் ரிக்கில் உள்ளன. வாமதேவர், விசுவாமித்திரர், பரத்வாஜர், வசிட்டர் ஆகியோர் அதிக சூக்தங்களைப் பாடியுள்ளனர்.

குறிப்பு -

வசிட்டர் 103 சூக்தங்கள்; பரத்வாஜர் 60; வாமதேவர் 55; விசுவாமித்திரர் 48; கிருத்சமத் 40; கக்ஷீவான் 28; அகத்தியர் 26; தீர்க்கதமா 25; கோதமர் 20; மோதாதி 20; சியவஸ்வ 15; குதச 14; மதுசந்தா 10; பராசர் 5; ஜமதக்னி 5 ஆகியோரும், குறைவான அளவு செய்தவர்களாக கவஷ் 4; பிருகஸ்பதி 2; ஹர்யத் 1; அபாலா 1; அஷ்டகர் 1; குசிகர் 1; சுதாஸ் 1 ஆகியோர் உள்ளனர். மேலே குறிப்பிடப்பட்டவர்கள் தவிரவும், பிற்கால இருடிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளனர். முக்கிய இருடிகளை அடையாளம் காணும் பொருட்டு, ராகுல சாங்கிருத்தியாயனைப் பின்பற்றி இப்பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய இருடிகளின் வாழ்க்கை பற்றிய செய்திகள்

முக்கிய இருடிகளின் பிறப்பு, வாழ்க்கை பற்றிய ரிக் வேத மூலச் செய்திகள், இந்திய - ஆரிய சமூக உருவாக்கத்தின் துவக்க காலநிலையை நன்கு காட்சிப்படுத்துபவையாக இருக்கின்றன. இச்செய்திகள் பல்வேறு ஆசிரியர்களால், பல காலகட்டங்களில் ஆழ்ந்து ஆராய்ந்தும், விமர்சிக்கப்பட்டும் உள்ளன. மூலச்செய்திக்கு மாறாக சில முன்வைப்புகளும் உண்டு. இச்செய்திகளை உள்வாங்கிக்கொள்வது திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகங்களை அடையாளப்படுத்திக்கொள்வதற்கு துணையாக அமைகின்றன.

வசிட்டர்

வசிட்டர், மித்திரன் மற்றும் வருணன் ஆகிய இரு வேதக் கடவுளரின் விந்துக்குப் பிறந்தவர் என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால், தாய் பற்றிய செய்தி குறிக்கப்படவில்லை. ஒரு கதையின்படி, அவர் ஊர்வசியின் மனத்தில் இருந்து பிறந்தவர் என்றும், அதே கதையில் அவர் இரு கடவுளர்களின் இணைந்த விந்துகளைப் பெற்ற ஒரு மண்குடுவையில் இருந்து பிறந்தவர் என்றும் சொல்லப்படுகிறார்.

அகத்தியர்

அகத்தியர் பிறப்பும் கும்பத்தோடு தொடர்புடையது. இவர் வசிட்டரின் சகோதரர் என்ற குறிப்பும் இதனுடன் ஒப்பிடத்தகுந்தது.

கன்வர்

கன்வர் பற்றிய செய்திகளில் முக்கியமானதுர அவர் கருப்பு வர்ணம் கொண்டவர் என்பது.

அங்கிரஸ்

கன்வர் போன்றே இவரும் கருப்பு வர்ணம் கொண்டவர் என்றே ரிக்கின் பிற இருடிகளின் கூற்றில் இருந்து அறியமுடிகிறது.

கருப்பு நிறத்தவர் என்று கன்வர், அங்கிரஸ் மட்டுமல்லாது, மேலும் பலரும் கருப்பு நிறத்தவர் என்றும் குறிக்கப்படுகின்றனர்.

இச்செய்திகளின் பின்னணியில் எழுந்துள்ள கருத்துருவங்கள் கவனிக்கத்தக்கவை. “நவீன இனவாதிகள், அவரது (வசிட்டர்) பிறப்பு பற்றிய தவறான எண்ணம் உண்டாக்கக்கூடிய கதைகளைச் சிரமம் ஏதுமின்றிச் செரித்துக்கொள்ளக்கூடும். வசிட்டர் ஆரியர் அல்லர் என்பதனை மறைத்து, அவரை ஆரியர்களோடு சேர்த்துக்கொள்ள வசதியாகக் கண்டுபிடிக்கப்பட்ட கதை இது என்பது தெளிவு. உயிரியல் நிகழ்முறை எதுவும் இன்றி, ஒரு மண்குடுவையிலிருந்து பிறந்தவர் என்று கூறப்படுகின்ற அகத்தியர் விஷயத்திலும் அதுதான் உண்மை. கன்வர், அங்கிரஸ் போன்ற பல்வேறு ரிஷிகளும் கருப்பு நிறத்தவர் என்று ரிக் வேதத்தில் வர்ணிக்கப்படுகிறது. அது அவர்களது ஆரியரல்லாத முன் வரலாற்றைக் குறிக்கின்றது”.{pagination-pagination}

ரிக்கின் முக்கியத் தலைவர்கள்

“ஆரியர் அல்லாதவர்கள் மத குருக்கள் ஆக்கப்பட்டதுபோல், வெற்றிகொள்ளப்பட்ட இனக்குழுத் தலைவர்கள் சிலரும் உள்வாங்கப்பட்டு (ஆரியத்துள்), அவர்களுக்கு உயர் அந்தஸ்து அளிக்கப்பட்டது. பால்புதா மற்றும் தாருக்சா போன்ற அத்தகைய தாசர்களின் தலைவர்கள், மதகுருமார்களுக்குத் தாராளமாகப் பரிசு வழங்கியதாகக் கூறப்படுகிறது. அவ்வாறாக அவர்கள் வரம்பற்ற பாராட்டையும், ஆரிய சமூக அமைப்பில் கூடுதலான அந்தஸ்தையும் பெற்றனர். சுதாசும், (நன்மை செய்பவர் என்று பொருள்) தாசர் குலத்தில் பிறந்தவர்தான் என்பதுபோல் தெரிகிறது”.

ஆரிய அரசர்களின் பெயர்களில் “தாசா” என்ற விகுதி இடம்பெற்றது குறித்து டி.டி.கோசாம்பி விரிவாக ஆய்கிறார். “பிற்காலத்திய ரிக் வேதத்தில் காணப்படும் போர்ச் சாகசங்கள் தேவேந்திரனைப் பற்றியல்லாது மனிதர்கள், காவிய நாயகர்கள் அல்லது மன்னர்களைப் பற்றியே விவரிப்பதால், அவற்றை வரலாற்றுச் சார்புடையதாக எண்ணத் தோன்றுகிறது. அந்தவகையில், நனிசிறந்த நிகழ்ச்சியாகத் திகழ்வது, பத்து மன்னர்கள் கூட்டணியை முறியடித்த சுதாஸின் போர் வெற்றி. பிஜவனனின் வாரிசு என்று அழைக்கப்பட்ட சுதாஸ், திவேதாசனின் புதல்வன் என்றும் கூறப்பட்டான். இதில் தாசா என்ற சொல் விகுதி விந்தையானது. இச்சொல்லை ‘’தேவர்களுக்கு அடிமை” என்று பிற்கால சம்ஸ்கிருத வழக்கில் மொழிபெயர்த்திருக்கலாம். ஆனால் ஆரம்பத்தில், தாசா அல்லது தஸ்யு என்பது ஆசியரல்லாத விரோதிகளையே குறித்தது. இவர்களுக்குச் சிறப்பான நிறம் உண்டு (வர்ணம் - நிறம் என்பது பிற்காலத்தில் சாதியையும் குறித்தது). அதாவது, கருப்பு (கிருஷ்ணா). அது அவர்களை ஆரியர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியது. புதியதாக வந்த மக்களின் வெண்ணிறத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ஆரியரல்லாதாரின் கருநிறத்தையே இது குறித்திருக்க வேண்டும்.

தொடர்ந்து பல வெற்றிகளுக்குப் பிறகே தாசா என்ற சொல், அடிமை அல்லது தாசன் (இந்த இரண்டு சொற்களும் இனப்பெயர்களில் இருந்து அப்படியே எடுத்துக்கொள்ளப்பட்டன), சூத்திர சாதியின் உறுப்பினர், ஊழியர் ஆகிய பொருள்களைப் பெற்றிருக்க வேண்டும்; தஸ்யு என்ற சொல்வடிவம் ‘கள்வர்’ அல்லது ‘கொள்ளைக் கூட்டத்தார்’ என்ற பொருள்களைப் பெற்றிருக்கலாம். மிகவும் தொன்மையான அக்காலத்தில் ஆரிய மன்னனுடைய பெயர் ‘தாசா’ என்று முடிவுற்றது ஏன்? இது. கி.மு.1500-க்குப் பிறகு ஆரியர்களுக்கும், ஆரியரல்லாத மக்களுக்கும் இடையே தோன்றிய இனக்கலப்பை அறிவுறுத்துகிறது. சுதாஸ் ஆண்டுவந்த பழங்குடி பாரதர்கள் அல்லது பாரதர்களின் ஒரு சிறப்புக் கிளையினரான திருத்ஸுக்கள் ஆவர். நவீனகால இந்தியாவுக்குச் சூட்டப்பட்ட ஆட்சிப்பெயர் பாரத்; இதன் பொருள் ‘பரதர்களின் நாடு’. இந்தப் பரதர்கள் நிச்சயமான ஆரியர்களே. இதனால், பண்டைக்கால ஆரியர்கள் நிறத்தூய்மையைப் பாராட்டவில்லை என்பது தெளிவு. பூர்வகுடி மக்களை அவர்கள் சுவீகாரம் செய்துகொள்வது எப்போதுமே சாத்தியமாக இருந்ததுடன், அவ்வாறே கடைப்பிடிக்கப்பட்டும் வந்தது தெளிவாகிறது”.

திராவிடர் ஆரியமயமாதல் என்ற இம்முடிவுக்கு மாறாக, வரலாற்றாசிரியர் ஆர்.எஸ். சர்மா, “ஆரியர்கள் பல கட்டங்களில் இந்தியாவுக்கு அலை அலையாக வந்தனர். இவ்வாறு முதலில் வந்தவர்கள் ரிக் வேத மக்களாவர். இவர்கள் சுமார் கி.பி.1500 வாக்கில் இந்தியத் துணைக்கண்டத்தில் தென்பட்டனர். தாசர்கள், தஸ்யுக்கள் எனப்படும் சுதேசி மக்களுடன் அவர்கள் மோத நேரிட்டது. பண்டைய இரானிய இலக்கிய நூல்களில் தாசர்களும் குறிப்பிடப்படுவதால், அவர்கள் ஆரம்பகால ஆரியர்களில் ஒரு பிரிவினராக இருக்கக்கூடும். பரத வமிசத்தை என்னும் மன்னன் மன்னனால் சம்பரான் தோற்கடிக்கப்பட்டதாக ரிக் வேதம் கூறுகிறது. இங்கு திவேதாசன் என்ற பெயரின் இறுதியில் தாசன் என்னும் பதம் காணப்படுவதைக் கவனிக்க வேண்டும்” என்று குறிப்பிடுகிறார்.{pagination-pagination}

இது, ஆதி ஆரியர்களில் ஒரு பிரிவினராக தாசர் மக்கள் இருந்தனர் என்றும், அவர்கள் இந்திய தாசர்களிடமிருந்து வேறானவர்கள் என்று தெரிவிப்பதாகவும் உள்ளது. இரானிய இலக்கிய நூல்களில் குறிப்பிடப்படும் தாசர், இந்தோ - இரானிய இனமக்களின் ஒரு பிரிவினர் என்பதில் எந்த அளவு தெளிவுள்ளது என்பது விளங்கவில்லை. திவேதாசன் பற்றிய இந்த நிகழ்வுகள் சப்தசிந்துப் பகுதியில் நடக்கையில், திவேதாசன், புரு இனக் குழுவின் தலைவனாகக் குறிப்பிடப்படுகின்றானே ஒழிய, தாசர் குழுவின் தலைவனாக எங்கும் குறிப்பிடப்படுவதில்லை. மேலும், புரு இனத்தில் கிளைக் குழுக்களில் ஒன்றாகவும் தாசர் குறிப்பிடப்படுவதில்லை. இதனால், ஆர்.எஸ். சர்மாவின் கருத்து மேலாய்வுக்கு உரியதாகவே உள்ளது. மேலும், ஆரியர்களின் முக்கிய இருடிகள் பலரும் கருப்பு நிறம் கொண்டவர்கள் என்பது, வேத நூல்களில் விரவியிருக்கும் கூற்றாக உள்ளதால், முதலில் குறிப்பிட்ட திராவிடர் ஆரியமயமாதல் நிகழ்வே பொருந்துகிறது.

சப்தசிந்துப் பகுதி – ரிக் வேத ஆரியர் குடியேற்றப் பகுதி

ரிக் சூக்தங்கள் கொண்டு பார்க்கும்பொழுது வசிட்டர், விசுவாமித்திரர் முதலானவர்கள் மூன்றாம் அல்லது நான்காம் தலைமுறை சார்ந்த இருடிகள் என்பது புலப்படுகிறது. இதற்கும் பல தலைமுறைகளுக்கு முன்னரே, ஆரியர்கள் சப்தசிந்துப் பகுதியில் தங்கியிருக்க வேண்டும் என்பது திண்ணம். இம்மூத்த தலைமுறையினரின் பாடல்கள் தொகுக்கக் கிடைக்கவில்லை என்று கருதலாம். துல்லியமான தலைமுறைக்கணக்கில் குறிப்பிடமுடியாவிட்டாலும், நமக்குக் கிடைக்கும் ரிக் பாடல்கள் கிடைக்கும் காலத்தில், இவர்கள் தாசர்/ தஸ்யுக்கள் நிறைந்த பகுதியில் அவர்கள் சூழயிருக்க வாழ்ந்துவந்தது தெளிவாகிறது.

திராவிட இனத்தைச் சார்ந்த வசிட்டர், அகத்தியர், கன்வர், அங்கிரஸ் போன்ற இருடிகளும், சுதாஸ் முதலான அரசர்களும் ஆரியத்தை அல்லது பிராமணியத்தை ஏற்றுக்கொண்டவர்களாக விளங்கினர். இவர்கள் வழியாக நாமடி ஒலிகள் எளிதாக இந்தோ - இரானிய மொழியில் புகுந்து, இந்தோ - ஆரிய மொழி பிரிய ஒரு காரணியாக அமைந்தது என்ற எளிய முடிவுக்கு வரமுடிகிறது.

இம்முடிவுடன், ரிக் வேதத்தில் தமிழ் / திராவிடச் சொற்கள் இடம்பெற்றுள்ளன என்ற மொழியிலாளர்களின் கூற்றை இணைத்துப் பார்க்கும்போது, அது மொழி தொடர்பு மற்றுமல்ல, இனக்கலப்பும், பண்பாட்டுக்கலப்பும் இணைந்தது என்ற உண்மையை விரிக்கிறது. “சம்ஸ்கிருதமயமாதல்” என்ற ஆரியமயமாதல் மற்றும் “திராவிடமயமாதல்” என்ற தமிழ்மயமாதல் ஆகிய முக்கிய வினையை துலக்கமாக்குகிறது.

இந்தப் பின்புலத்தில், வேத இலக்கியம் மற்றும் வேதகாலத்தின் வரையறைகள் புதிய அர்த்தத்தில் காட்சியாகின்றன.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com