அத்தியாயம் 58 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடி

இந்திய ஆரியர்களுக்கும் ஐரோப்பிய ஆரியர்களுக்கும் பண்பாட்டு ரீதியாவும், வாழ்வியல் ரீதியாகவும் பெருத்த முரண்கள் உண்டு. இந்த முரண்கள், கலப்புச் சமூகமாகப் பரிமாணம் கொண்டதால் கிளைத்த முரண்கள்...

முந்தைய அத்தியாயத்தில், சாம வேதம் பற்றியும் அதன் பாடுபொருட்கள் பற்றியும் விளக்கப்பட்டது. இங்கு யசூர் பற்றிய செய்திகள் விவரிக்கப்படுகின்றன. யசூரே காலவரிசையில் இரண்டாவது எனவும் பெரும்பான்மையாகக் கருதப்படுவதுண்டு.

யசூர்

யசூரில் தனிப்பட்ட வகையான யஜுக்கள் என்ற மந்திரங்கள் உள்ளன. இவை பாடலாகவும் உரைநடையாகவும் உள்ளன. சடங்குகளில் பயன்படுத்தப்பட வேண்டிய வரிசைப்படி இவை ஒழுங்கு செய்யப்பட்டுக் காணப்படுகின்றன. யசூர் இரண்டு பெரும் பிரிவாக தொகுக்கப்பட்டுள்ளது. அவை - கிருஷ்ண யசூர் மற்றும் சுக்ல யசூர். இப்பிரிவு தைத்ரீயர், வாஜசநேயர் என்ற இரு இருடிகளின் பெயரால் வழங்கப்பெற்றது என்பர். கிருஷ்ண யசூர், தைத்திரியம் என்றும்; சுக்கில யசூர், வாஜசநேயம் என்றும் அழைக்கும் மரப்பின் அடிப்படையில் இவ்வழக்கு எழுந்துள்ளது. சுக்ல யசூர் என்பது வெள்ளை யசூர் என்றும், அது ஆரியர் (பிராம்மணர்) மரபின்பால் தொடர்புடையது என்றும்; கிருஷ்ண யசூர் என்பது கருப்பு யசூர் என்றும், ஆரியர் அற்ற கருப்பு மக்களின் மரபின்பால் தொடர்புகொண்டது என்றும் கருதலாம். அதனால், கிருஷ்ண யசூர் இரண்டாம் தரமானதாகவே புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

கிருஷ்ண யசூர் பாடிய கருப்பு மக்கள் யாவர் என்ற கேள்விக்கு யாரும் விடையிறுப்பதில்லை. இவர்கள் ஆரியர்களில் கருப்பு நிறம்கொண்ட ஒரு பிரிவினர் என சிலர் தெரிவிப்பதுண்டு. கருப்பு நிறம் கொண்ட ஆரியர் யார் என்பதற்கு இந்த அத்தியாயத்தின் இறுதியில் இந்தியச் சமூகங்கள் பற்றிய அறிதலுடன் சில கருத்துகளை முன்வைக்கலாம்.

ரிக் காலத்தில் இருந்து உருவான கலப்பு காரணமாக இடம்பெற்றவர்கள் குறித்து ரிக்கில் உள்ள அகச்சான்றுகளின் அடிப்படையில், இக்கருப்பு மக்கள் வடஇந்தியாவில் இருந்த தமிழ்க் கிளைக் குடியினர் மற்றும் ஆஸ்திரோ-ஆசியக் குடியினர் எனக் கொள்வதில் பிழையாகாது.

ரிக்கின் முக்கிய இருடிகள் யாவரும், ஒன்று பெண்வழிச் சமுதாயத்தைச் சார்ந்தவர்களாகவோ, அல்லது கருப்பு நிறம் கொண்டவர்கள் என்று காட்டப்படுவதோ பற்றி முன் அத்தியாயங்களில் காணப்பட்டது. ஆனால், அவர்கள் பாடல்கள் புறக்கணிக்கப்படாதவையாக இருப்பதைக் காணமுடிகிறது. ஆனால், சாமத்தில் அரண்யக பாடல்களும் (கோட்டையக, அதாவது கோட்டையில் வாழ்பவருக்குரிய பாடல்கள் - நான்), யசூரில் கருப்பு யசூர்ப் பாடல்களும் வேதங்களாகத் தொகுக்கப்பட்ட பின்னரும், பிற்கால ஆசிரியர்கள் அதனைப் புறக்கணித்தும் இகழ்ந்தும் வந்துள்ளனர். அடுத்து விளக்க இருக்கும் அதர்வண வேதம் முழுமையே, புறக்கணித்தும் இகழ்ந்தும் மட்டுமின்றி, வேத வரிசையில் கொள்வதில்கூட முரண்பட்ட போக்கு உருவாகியதைக் காணமுடிகிறது. இதற்கு அடிப்படைக் காரணம், அவை உள்ளூர் மரபுகளையும், நாட்டார் வழக்குகளையும் கொண்டவையாகவும், மையப்படுத்தப்பட்ட, பிராம்மணியத்தில் இருந்து விலகிய, குறிப்பாக யாக - வேள்வித் துதிகளின் குணங்களில் இருந்து விலகிய போக்குகள் கொண்டவையாகவும் இருப்பதால் இந்நிலையை அடைந்தன எனக் கொள்ளலாம்.{pagination-pagination}

சில ஆசிரியர்கள் குறிப்பிடுவதுபோல், இவை சாதாரண மக்களின் நம்பிக்கை சார்ந்த துதிகள் என்பதாலும், உயர்தர (குருமார்) மக்களின் நம்பிக்கைகளுக்கு மாறாக இருப்பதும், இதன் புறக்கணித்த இகழ்ந்த நிலைக்கு ஒரு புறக்காரணமாகவும் இருக்கலாம். ரிக் துதிகளிலும், காலத்தால் பிற்பட்ட 1, 9, 10-ஆம் மண்டலத்தின் பாடல்களும், கிலங்கலான பிற்சேர்க்கைப் பாடல்களுமே பிற்காலத்தில் போற்றப்படுகின்றன. குறிப்பாக வழிபாடு, யாக - வேள்வி குறித்தவை இவற்றில் இருந்தே பெறப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. காலத்தால் மூத்த 6, 7, 8, 5, 4, 3, 2 மண்டலத் துதிகள் பெரும்பான்மையும், அக்கினி, இந்திர, வருண, அசுவினி தேவர்கள் மற்றும் வேத கடவுளர்களையும், சோமத்தையும் வேண்டும் துதிகளின் பயன்பாடாக மட்டும் உள்ளது.

கருப்பு யசூர் பற்றிய இகழ்ச்சிகள் பிற்காலத்தில் எழுந்தவையாக இருக்க வேண்டும். அது பிராம்மணியம், ஆரியர் என்ற வெள்ளை நிறத்தவரின் தனிப்பெரும் மதம் அல்லது தத்துவார்த்தம் என்ற கருதுகோளை வலியுறுத்திய மேய்த்தல் சமூகத்தில் இருந்து வேளாண் சமூகமாக அதுவும், உழுவித்து உண்ணும் சமூகமாகப் பரிமாணம் கொண்ட காலகட்டத்தில் எழுந்திருக்க வேண்டும். இக்காலகட்டத்தில் பிராம்மணியம், பிராம்மணியர்களுக்கு மட்டும் உரிமையானதாவும், பிராம்மணியம் பிறரால் தழுவமுடியாதவை, அது பிறப்புரிமையானது என்ற கோட்பாடுகள் நடைமுறைக்கு வந்தாகவும் விரித்துப் பார்க்கலாம். இதனால், ரிக் வேதத்தில் காணமுடியாத ஒன்றான, தன் சமூகத்தின் தூய்மைக்கு உண்மையில் புதிய இனக்கலப்பற்ற புதிய சமூகத்துக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய கருப்பு என்ற சொற்கள் இகழப்படுகின்றன. மேலும், அவ்வகைப் படைப்புகளும், அவற்றின் நடைமுறைகளும் புறக்கணிக்கப்படுகின்றன. அவை தம் முன்னோர்களால் வேதம் என்று தொகுக்கப்பட்ட பிறகும்கூட.

ஆனால், யாக - வேள்வியை வழியுறுத்தும் பிராம்மணங்கள், கருப்பு யசூரின் வழித்தோன்றல்களாகவே உள்ளன. இது, கருப்பு யசூரும் யாக – வேள்வியை அடிப்படையாகக்கொண்டது என்பதை விளக்குகிறது. கருப்பு யசூர் தத்துவார்த்த விவாதங்கள், பிராம்மணங்களின் முன்னோடிகள் என தேவிபிரசாத் சட்டோபாத்யாயா இதைக்கொண்டே தெரிவிக்கிறார் எனலாம். ஆனால் இரண்டுக்கும் பெருத்த வேறுபாடு உள்ளது. இவ்வேறுபாட்டை ஆர்.டி.எச். கிரிஃபித்தின் வார்த்தைகளில் பின்னர் காண்போம். மேலும், வெள்ளை யசூரின் உருவாக்கத்தை கண்டால், அது ரிக்கில் இருந்து மட்டுமல்லாமல், பெரும்பான்மையான கருப்பு யசூரின் பாடல்களையும் தனதாக்கிக்கொண்டுள்ள தன்மையினைக் கொண்டிருப்பதை அறியமுடிகிறது. இதனை ம.ரா. ஜம்புநாதன் வழங்கிய தமிழ் வடிவத்தின் பாடல் குறிப்புகள் துல்லியமாக விளக்கிவிடுகிறது. வெள்ளை என்ற சுக்ல யசூரை மட்டும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஆர்.டி.எச். கிரிஃபித், தமது ஆய்வுமுறையிலான விளக்கக் குறிப்புகளுடன் கூடிய மொழிபெயர்ப்பின்வழி அதன் பாடுபொருள் வரிகள் சார்ந்து, அவை கருப்பு யசூரின் பிரதியாக்கல்கள் என்பதையும், இரு யசூர்களும் சுமந்துவரும் ரிக் மற்றும் அதர்வண மந்திரங்களையும் அதன் பகுதிகளையும் வெளிச்சமாக்கிவிடுகிறார்.

இந்த வெளிச்சம், ஆய்வுமுறையிலான வாசிப்புக்கு இருவகை உதவிகளை அளிக்கிறது. முதலாவதாக, அது கருப்பு யசூரின் யாகமுறை மந்திரங்களுக்கும், அதன் பிரயோக உத்திக்கும்; வெள்ளை யசூரின் யாகமுறை மந்திரங்களுக்கும், அதன் பிரயோக உத்திக்கும் உள்ள வேறுபாட்டையும் நோக்கத்தையும் அறிய உதவுகிறது. இரண்டாவதாக, இந்த வேறுபாட்டின்வழி எப்படி யாகவழிப்பட்ட பிராம்மணியம் தன்னை கட்டமைத்துக்கொண்டது என்பதை அறிய உதவுகிறது.

“துதிப்பாடல்களைக் கொண்ட ரிக் வேதம், பாடப்படும் பாடல்களைக் கொண்ட சாம வேதம், மந்திரம் போன்றவற்றைக் கூறும் பிரம்ம வேதம் என்கின்ற அதர்வண வேதம் ஆகியவற்றில் இருந்து, யசூர் வேதம் மாறுபட்டது. இதனை அத்வர்யு புரோகிதர்கள் பயன்படுத்தினர். இந்த அத்வர்யு புரோகிதர்கள். ரிக் வேத கால ஹோதா, உத்காதா போன்ற புரோகிதர்களில் இருந்து வேறுபட்டவர்கள். அத்வர்யுக்களின் காலத்தில் பல வேள்விகளைச் செய்வதற்கு ரிக் வேத முறைகள் போதாததால் யசூரின் தேவை உணரப்பட்டது.” என்று கிரிஃபித் கூறுவது கவனிக்கத்தக்கதாகிறது.

இவர், இவ்விரு யசூர்களின் பெயர்களுக்குத் “தெளிவற்ற பல மந்திரங்களைக் கொண்டிருப்பதால் கருப்பு (கிருஷ்ண) என்றும்; தெளிவான பாடல்களை அதாவது சத்தியபிராமணம் போன்றவை கொண்டிருப்பதால் வெள்ளை (சுக்கிலம்) என்றும் அழைக்கப்படுகின்றன” என வேறு பொருளை வழங்குவார். தெளிவு, தெளிவற்றது என்ற விளக்கம் ஒன்றினை இகழ்வதற்கும், புறக்கணிப்பதற்கும் காரணமாக அமையமுடியாது. மேலும், வேதங்கள் முழுமையும் நேரடிப்பொருளில் இயங்குபவையல்ல, மறைபொருள் சார்ந்தவை என்பதே காலம்தோறும் சதூர்வேதிகள் முன்வைக்கும் கருத்து. அதனால், சதூர்வேதிகளின் போற்றுதலுக்குரியதாக தெளிவற்ற நேரடிப் பொருளற்ற கிருஷ்ண யசூரே போற்றப்பட்டிருக்க வேண்டும். மாறிய நிலை நிலவுவதால், இது தெளிவு, தெளிவற்றது என்பதற்கு மீறிய பொருளோடு தொடர்புடையது என்பதே பொருந்துகிறது எனலாம்.{pagination-pagination}

யசூரின் காலகட்டம் மு.பொ.ஆ.800 மூதல் மு.பொ.ஆ.600 வரை என்பர். இக்காலகட்டம், ஆரியர்கள் குரு, பாஞ்சாலப் பகுதிகளில் இருந்தும், வடஇந்தியப் பகுதியில் இருந்தும் வாரணாசி, கோசலம் முதலான பகுதிகளுக்கு குடியேற்றம் நிகழ்த்திய காலகட்டத்தைக் குறிக்கின்றது. இப்புதிய பகுதி இவர்களுக்குள் ஏற்படுத்திய மாற்றங்களை யசூர் எதிரொலிக்கிறதா என்பது குறித்தும் ஆய்வுகள் விரிவுபடவேண்டி உள்ளது.

யசூர் வேதமானது, குறிப்பாக அத்வர்யுக்கள் என்ற வேள்வி வேட்பவர்களின் ஒரு பிரிவினருக்காக எழுந்ததே ஆகும். சில குறிப்புகளின் அடிப்படையில், அத்வர்யுக்களின் வேதம் நூற்றியொரு பிரிவினைக் கொண்டது என கருதப்படுகிறது. இவற்றுள், ஐந்து பிரிவுகள் பற்றி மட்டுமே நாம் இன்று அறியக்கூடியதாக இருக்கிறது. இந்த ஐந்தில், நான்கு கிருஷ்ண யசூர், அதாவது கருப்பு யசூர் வேதத்தைச் சார்ந்ததாகவும்; ஐந்தாவது சுக்கில, அதாவது வெள்ளை யசூர் வேதத்தின் பகுதிகளாகவும் உள்ளன. ‘காடக சங்கிதை’, ‘கபிஷ்டல-கட சங்கிதை’, ‘மைத்திராயணீ சங்கிதை’, ‘தைத்திரீய சங்கிதை’ ஆகிய நான்கும் கருப்பு யசூர் சங்கிதைகளாகும். ‘வாஜசநேயி சங்கிதை’ என்பது வெள்ளை யசூர் ஆகும். வாஜசநேயி சங்கிதையானது கண்வ சாகை எனவும், மாத்தியந்தின சாகை எனவும் இருவகையாக அமைந்துள்ளது. கிருஷ்ண யசூர் 7 உட்பிரிவுகளுடனும், வெள்ளை யசூர் 40 உட்பிரிவுகளுடனும் தொகுக்கப்பட்டுள்ளது.

வாஜசநேயி சங்கிதையில் இருப்பவை, வேட்கும் வேளையில் அத்வர்யு ஓத வேண்டிய மந்திரங்கள் ஆகும். அதே சமயத்தில், கருப்பு யசூர் வேதத்தில் இவ்வகை மந்திரங்கள் மட்டுமல்லாமல், வேள்வியுடன் தொடர்புடைய பல்வேறு கிரியைகளைச் செய்யும் முறைகளும், இவை பற்றிய விளக்கங்களும், விவாதங்களும் உள்ளன. எனவே, இவை மந்திரங்களாக மட்டும் அமையாமல், பிராம்மணங்களைப் போன்றும் காணப்படுகின்றன. கருப்பு யசூர் வேதமே, வாஜநேயி சங்கிதையான வெள்ளை யசூரைவிடப் பழைமை வாய்ந்தது எனக் கருதப்படுகிறது.

இதன் படைப்பாக்க முறை பற்றி தெரிவிக்கும்பொழுது, ‘‘யசூர் வேதம் செப்பனிட்டு உருவாக்கப்பட்ட வேளையில், ஏனைய வேதங்களை நிகர்த்து இவ்வேதமும் மந்திரங்களை மட்டுமே கொண்டமைதல் முறை என்னும் கருத்து மனதில் தோன்றியதனால் போலும். கிருஷ்ண யசூர் ஏற்கெனவே உருவாகிய இடத்தும், சுக்கில வேதம், பிராம்மணங்கள் வேறாய் அமைதல் வேண்டும் என்னும் கொள்கை பற்றி, இருக்கு சங்கிதையை நிகர்த்தும் அமையும்வண்ணம் நாளடைவில் உருவாக்கப்பட்டது” என்பர். இதனை இவ்வாறு உள்வாங்கிக்கொள்ளலாம், கிருஷ்ண யசூர் கருப்பு மக்களிடையே வழக்கில் இருந்த மந்திரங்களாகும். அதனை இந்திய ஆரியர் தம் பிராம்மணியத்துக்குத் தக்கவாறு மாற்றி அமைத்துக்கொண்டதே வெள்ளை யசூர் ஆகும்.{pagination-pagination}

வெள்ளை யசூரான வாஜசநேயி சங்கிதையில் உள்ள நாற்பது உட்பிரிவுகளில், இறுதியில் உள்ள பதினைந்து பிரிவுகள் காலத்தால் பிந்தியவை. இவையும் கிலங்கள், அதாவது பிற்சேர்க்கை என்றே குறிக்கப்படும். அதன் முதல் இருபத்தைந்து பிரிவுகளும் மிகவும் முக்கியமான வேள்விகளுக்கு வேண்டிய மந்திரங்களைக் கொண்டுள்ளன. சோம யாகத்தில் ஓத வேண்டிய மந்திரங்களும், வீரர்களாலும், மன்னர்களாலும் வேட்கப்படும், தேரோட்டப் போட்டிகளும், சோமபாணமும் கூடிய வாஜபேயம் யாக விவரங்களும், அரசர்களுக்கு மட்டும் வேட்கக்கூடிய இராஜசூய வேள்வி பற்றிய விவரங்களும் இதில் உண்டு. இவற்றில் பங்காலப் பழக்கவழக்கங்கள் பல இடம்பெற்றுள்ளன. சில உண்மைகளைக் குறிப்பாக உணர்த்தும் நோக்குடன், போலியாக நிகழும் படை மோதல், தாய விளையாட்டு, மாந்திரீக நிகழ்ச்சிகள் எல்லாம் வெள்ளை யசூரின் பாடுபொருட்களாக உள்ளன.

வெள்ளை யசூரின் 1 & 2 பிரிவுகள், தர்சன பூர்ணமாச மந்திரங்கள்; 3-ஆம் பிரிவில் நித்தியாக்கினி ஹோத்திர் மந்திரங்கள்; 4 முதல் 8-ஆம் பிரிவு வரை அக்கிஹோத்திரம் மற்றும் நான்கு மாதத்திற்கு ஒருமுறை நிகழும் சார்மாஸ்ய கிரியைக்குரிய மந்திரங்கள், இரு சோம யாகங்களை பற்றிய விவரங்கள் 9, 10-ஆம் பிரிவுகளில் இடம்பெறுகின்றன. இதில்தான், முன்னர் விவரித்த சோமயாகம், வாஜபேயம், இராஜசூயம் ஆகிய யாகங்களின் விவரங்கள் அடங்கியுள்ளன. 11 முதல் 18-ஆம் பிரிவு வரை குண்டம், வேதி முதலியவற்றை அமைக்கும்பொழுது ஓத வேண்டிய மந்திரங்களும், சிறகு விரித்த பறவை வடிவில் 16500 செங்கற்கள் கொண்டு கட்டப்படும் அக்கினி குண்டம் பற்றியும் உள்ளன; 19 முதல் 21-ஆம் பிரிவு வரை செளத்ராமணி யாகத்துக்கு உரிய மந்திரங்களும், அசுவமேதயாகம் பற்றிய மந்திரங்கள் 22 முதல் 25 ஆம் பிரிவு வரை இடம்பெற்றுள்ளன என இதன் உள்ளடக்கத்தை குறிக்கலாம்.

பிற்சேர்க்கையான, கிலங்களின் 15 பிரிவுகள், பிற்கால பிராம்மணியத்துக்கு அடிகோலும் பல பகுதிகளைத் தம்முள் கொண்டுள்ளது. 26 முதல் 29-ஆம் பிரிவு வரை முன்னர் தொகுக்கப்பட்ட 1 முதல் 25 வரையிலான செய்திகள் இடம்பெறுகின்றன. 30, 31-ஆம் பிரிவுகள், மந்திரம் ஏதும் கொண்டிராதது. ஆனால் இப்பகுதி, 184 பேர் பலியிடப்படும் புருசமேதத்தைப்பற்றிய சுருங்கிய குறிப்பும், அவர்கள் யாவர் என்ற தனித்தனியான குறிப்பும் இதில் உள்ளது. புருசமேத மந்திரங்கள் உபநிடதம் என்ற பெயருடன் விளங்குவதும் இங்கு கவனிக்கத்தக்கதாகிறது. 32-ஆம் பிரிவு, உபநிடதம் என்ற பெயர் தாங்கி, புருசமேதம் போன்ற வேறு செய்திகளைத் தருகின்றது. மேலும், இப்பிரிவில் இருந்து 34-ஆம் பிரிவுவரை சர்வமேதம் என்னும் வேள்விக்கு வேண்டிய மந்திரங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 34-ஆம் பிரிவின் முதன் ஆறு பாடல்களும் சிவசங்கல்ப உபநிடதம் என அழைப்படுகின்றன. 35-ஆம் பிரிவில் ரிக்கில் இருந்து எடுக்கப்பட்ட ஈமக்கிரியைக்குரிய மந்திரங்களாக உள்ளன. 36 முதல் 39-ஆம் பிரிவு வரை பிரவாக்கியம் என்னும் கிரியை பற்றிய விளக்கங்களைத் தருகிறது. 40-ஆம் பிரிவாக ‘ஈசா உபநிடதம்’ இடம்பெறுகிறது.

ரிக் வேதத்துக்கும் யசூர் வேதத்துக்கும் அடிப்படை ஒன்றாயினும், இவற்றிடையே பல வேறுபாடுகள் உள்ளன. ரிக் வேதத்தில் பிரஜாபதி கடைசிப் பாடல்களில் முக்கியத்துவம் பெறாமல் இருப்பதும்; இங்கு முக்கியத்தும் பெறுவதும்; ருத்திரா என அழைக்கப்பட்ட தெய்வம் இங்கு சிவா என அழைக்கப்படுவதும்; பல்வேறு அடைமொழிகளால் துதிக்கப்படுவதும்; மகாதேவா, சங்கரா போன்ற பிற பெயர்களால் குறிக்கப்படுவதும் இதில் காணமுடிகிறது. இதுபோன்றே, விஷ்ணு தெய்வம் ரிக் வேதத்தில் உள்ளதைவிடவும் முக்கிய இடத்தில் கூறப்படுவதையும் காணமுடிகிறது.

இன்னும் அசுரர்களைப் பற்றிக் கூறப்படுவதும், அப்சரசு பெண்கள் பற்றி கூறப்படுவதும், ரிக் வேதத்தில் இருந்து மாற்றத்தைக் காட்டும். அசுரர் என்ற சொல்லும், அவர்களின் தீய சக்தியும் செயலும் அதிகமாகக் கூறப்படுவதும் கவனிக்கத்தக்கதாகும். ரிக் வேதத்தில் காணப்படாத பாம்பு வணக்கம் மற்றும் பலவகையான ஆவுதி, அதாவது பலி கொடுத்து வணங்குவது மிகமுக்கியமான நிலையைப் பெற்றுள்ளதையும் காணமுடிகிறது. மேலும், இந்த வணக்கத்தால் கடவுளரையே கட்டாயப்படுத்த முடியும் என்ற நிலையையும் இவை வெளிப்படுத்துகின்றன. உயர்வாக மதிக்கப்படும் ஓம் என்ற சொல்லின் ஆதிக்கமும் அதிகமாகக் காணப்படுவது இங்கேயே.{pagination-pagination}

ரிக் வேத சங்கிதையில் உள்ளது போன்று, தெய்வங்களின் சிறப்பை விரிவாக எடுத்துக் கூறி, அவற்றின் பெருமையை உணர்த்தும் பகுதிகள் இங்கு கிடையாது. மேலும், யாகங்களில் உபயோகிக்கப்படும் உபகரணங்களே தெய்வங்களுக்குரிய பெருமையையும், சிறப்பையும் பெற்றுவிட்டன. உபகரணங்கள் தெய்வத்தன்மை பெற்றுத் தெய்வங்களாகவே உயர்த்தி மதிக்கப்பட்டதும் இங்கிருந்துதான் துவங்குகிறது.

யசூர் வேதத்தில் உரைநடையில் காணப்படும் மந்திரங்கள், அதர்வண வேத மந்திரங்களின் இயல்பு வாய்ந்தவை. அதர்வண மந்திரங்களைப் போன்று தீயவற்றை விரட்டி ஓட்டவும், சபிக்கவும் ஆற்றலுடைய மந்திரங்களே இவை. வேள்விக்கிரியைகளில் சில பகைவனைத் துன்புறுத்தவும் பயன்படத்தக்கவை. இவ்வாறு நன்மையை மட்டுமின்றி, தேவை நேரிடின் தீமையையும் ஏனையோருக்கு விளைவிக்கப் பயன்படுத்த வழிவகுப்பது இவ்வேதம் என்பது தெளிவு. மேலும், இங்கு கூறப்படும் மந்திரங்கள் இருக்கு வேத மந்திரங்களைப் போன்று வழிபடுவதற்கு பிரயோகிக்கப்படுபவை அல்ல. இவை பெரும்பாலும் தெய்வத்தை ஏத்திப் போற்றிக்கூறும் முறையில் அமைந்திருப்பதையும் காணமுடியவில்லை. வேட்பவர் இம்மந்திரங்களைக் கருவிகளாகப் பயன்படுத்தி, அதன் துணைகொண்டுதான் விரும்பியவற்றையெல்லாம் நிகழச் செய்வான்.

வழிபாட்டு முறையில் புதியதொரு திருப்பத்தை யசூர் வேதம் தோற்றுவித்துள்ளது. இது பிற்காலத்து வழிபாட்டு முறையில், உயர்ந்தோர் தனியிடத்தைப் பெற்றுள்ளது. இம்முறை சிறப்பாகத் தென்னாட்டில் பெரிதும் கையாளப்பட்டு வருகிறது. தெய்வங்களை வசீகரித்துத் தன்வயமாக்கும் முறையைச் சார்ந்து நிற்பதாகவே தெரிகிறது. தெய்வத்துக்குப் பல பெயர்களைக் கூறும் புதியதொரு முறையை யசூரில்தான் முதன்முதலில் காண்கிறோம்.

மேற்கொண்டு அதர்வணத்துக்குப் பயணிக்கும்முன், இந்திய ஆரியச் சமூகம் மற்றும் பிற இந்தியச் சமூகம் பற்றிய ஒரு பருந்துப் பார்வையாவது அவசியமாகிறது.

கிருஷ்ண யசூர் பாடிய கருப்பு மக்கள் யாவர் என்ற கேள்விக்கு யாரும் விடையிறுப்பதில்லை. இவர்கள், ஆரியர்களில் கருப்பு நிறம் கொண்ட ஒரு பிரிவினர் என சிலர் தெரிவிப்பதுண்டு. தாசர்களும், தஸ்சுக்களும் இவர்களில் ஒரு பிரிவினரையும் குறித்து நின்றது என்ற வலுவற்ற வாதத்தைப் போன்றதே இதுவும். தங்கள் கூட்டத்தினரின் ஒரு பிரிவினரே இவர்கள் என்றால், இவர்களையும், இவர்கள்தம் படைப்புகளையும் இகழ வேண்டிய அவசியம் இருந்திருக்காது. இதனை ரிக் தொகுப்பு முறையோடு ஒப்பிட்டு உணரலாம். எல்லாவற்றுக்கும் மேலாக, தங்களுக்குத் தொடர்பற்றது என்றால் இவற்றைத் தொகுத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. இப்பின்னணியில், மு.பொ.ஆ. 5000 அளவில் இவர்கள் இந்தோ - ஐரோபியர்களாக யூரல் மலைப்பகுதியில் இருந்து துவங்கி ஈரான் அடைந்த பிறகும் சரி, அதற்குப் பிறகு இவர்கள் இந்தோ - ஈரானியராகியபொழுதும் சரி, இவர்களுள் கருப்பு நிறக் குழுவினர் இருந்தமைக்கான எந்த சான்றுகளை நாம் காணமுடியவில்லை.{pagination-pagination}

ஈரானிலிருந்து சிந்துவெளிவரை இவர்கள் கடந்து வந்த பாதை நெடுகிலும் பல இனக் குழுக்களை, பல நிறம் கொண்ட இன மக்களை நாம் காணமுடிகிறது. ஆனால், மேய்த்தல் சமூக ஆரியர் இனத்துள் கருப்பு நிறம் கொண்டவர்கள் என்ற சான்றை இன்றுவரை காணமுடியாதொன்று. அவர்களின் வெள்ளை நிற அடையாளம் இன்றுவரையிலும் முன்நிறுத்தப்படும் அடையாளங்களில் ஒன்றாகவே உள்ளது. ஆரியக் கலப்புக்கு முன்னரே, வடஇந்திய -  தென்னிந்திய திராவிட இனக்குழுவில் நிறபேதம் உருவாகியிருந்தது. இது நெடுங்காலம் ஒரே சுற்றுச்சூழலில் வாழ்ந்ததால் பெற்ற சிறிதான நிறமாற்றம். இமயமலை சார்ந்த மலைப் பனிப்பிரதேசங்களிலும் அதன் சார்பு நிலங்களான கங்கைச் சமவெளி திராவிடர் - தென்னிந்திய திராவிடரைவிட கருப்பு குறைந்தவர்களாகவே இருந்தனர். அத்தகைய குறைகருப்பு நிறம் கொண்டவர்களையே கருப்பு நிறம் கொண்டவர்கள் என்ற பேதத்துடன் ரிக் வேத இருடிகளால் குறிப்பிடப்பட்டவர்களாக இருக்கின்றனர். இங்கு வருணன் என்னும் கடவுள், அசுரன் என்று ரிக்கில் குறிப்பிடப்படுவதும், மிட்டானியில் அசுர என்ற சொல் மேலானவர், உயர்ந்தவர் என்ற பொருளோடு வழங்குவதும் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.

இங்கு சற்று நுட்பமாகத்தான், 1. ரிக்குக்கு முற்பட்ட இந்தியச் சமூகம், 2. ரிக் கால இந்தியச் சமூகம், 3. ரிக்குக்குப் பிற்பட்ட இந்தியச் சமூகம், இறுதியாக 4. பிராம்மணர்கள் என்ற பிராம்மணியத்தைத் தழுவியோர் பஞ்ச திராவிடர் என்றும் பஞ்ச கெளடியர் என்று வகைப்படுத்தப்பட்ட பிறகான இந்தியச் சமூகம் என்று நான்கு நிலைகளாகப் பிரித்து அறியவேண்டி உள்ளது. பின்மூன்று சமூக மக்களை இந்திய ஆரியர் என்று அழைக்கும் வழக்கு உண்டு. இந்திய ஆரியர்களுக்கும் ஐரோப்பிய ஆரியர்களுக்கும் பண்பாட்டு ரீதியாவும், வாழ்வியல் ரீதியாகவும் பெருத்த முரண்கள் உண்டு. இந்த முரண்கள், வாழும் சூழல் வழங்கிய கொடை என்பதைவிட கலப்புச் சமூகமாகப் பரிமாணம் கொண்டதால் கிளைத்த முரண்கள் என்பதே வெகுவாகப் பொருந்துகிறது.

முதல் சமூகமான ரிக்குக்கு முற்பட்ட இந்தியச் சமூகம் என்பது ஆரியர் என்ற பிற தமிழர் என்ற திராவிடர், ஆஸ்திரோ - ஆசியர், சைனோ - திபேத்தியர் மற்றும் நீக்ரோ மக்களால் நிறைந்திருந்தது. இது, அகன்ற இந்தியா முழுமைக்கும் பொருந்துவதாகும். இரண்டாம் சமூகமான ரிக் கால இந்தியச் சமூகம் என்பது இந்தோ - ஈரானிய ஆரியர்களாலும், வடமேற்கு இந்திய தமிழர் திராவிடர்களாலும், வடமேற்கு இந்தியாவில் மட்டும் இருந்த இருந்த இந்தியச் சமூகத்தை மட்டும் குறிப்பிடுவதாகும். மூன்றாவது சமூகமான ரிக்குக்குப் பிற்பட்ட இந்தியச் சமூகம் என்பது ரிக் வேத மக்கள் பிராம்மணியத்தை உருவாக்கி அதனைத் தழுவிய மக்களையும் கொண்ட சமூகத்தைக் குறிப்பதாகும். இது, தென்னிந்தியா நீங்கிய வடஇந்தியா முழுமைக்கும் பொருந்தும் ஒன்றாகும். நான்காவது மற்றும் இறுதியான பிராம்மணர்கள் என்ற பிராம்மணியத்தைத் தழுவியோர், பஞ்ச திராவிடர் என்றும் பஞ்ச கெளடியர் என்று வகைப்படுத்தப்பட்ட பிறகான இந்தியச் சமூகம் என்பது, பிராம்மணியம் இனி தழுவ முடியாத, பிறப்பின் வழிபட்ட நிலையாக்கப்பட்ட நிலைக்கு முன் உள்ள இந்தியச் சமூகத்தைக் குறிப்பதாகும். முன்னர் குறிப்பிட்டதுபோல், பின்வரிசை மூன்று சமூகங்களும் இந்திய ஆரியர் என்ற சமூகத்தை மட்டும் குறிப்பதாகும் என்று நினைவுபடுத்திக்கொள்வோம். இந்திய ஆரியர்கள் ஆகாத பிறர், தாம் சார்ந்த இன மக்களாகவே, அதாவது தமிழர் என்ற திராவிடர், ஆஸ்திரோ - ஆசியர், சைனோ - திபேத்தியர் மற்றும் நீக்ரோ இனமக்களாகவே நீடித்தனர்.

ஆர்.எஸ்.சர்மாவின் வார்த்தைகள் இதன் மற்றொரு பரிமாணத்தை நன்கு விளக்கும். “ரிக் வேதம், இனக்கலப்பு கொண்ட மக்கள் கூட்டம் இருந்ததைக் காட்டுகிறது. அக்கூட்டம், பத்து அரசர்கள் அல்லது தொல்குடித் தலைவர்கள் இடையேயான புகழ்பெற்ற சண்டையில் பங்கு பெற்றுள்ளதாகத் தெரிகிறது. அடிப்படையில், அவற்றில் ஆரியரும் இருந்துள்ளனர், ஆரியர் அல்லாதோரும் இருந்துள்ளனர் எனத் தெரிகிறது. போகப்போக, உயர்குடியில் பிறந்தவர்களும், மதிப்புறு பட்டங்களைக் கொண்டவர்களும் ஆரியர் என்று அழைக்கப்பட்டார்கள். வேதத்தின் இறுதிக் காலத்திலும், பின்வேத காலத்திலும் மூன்று உயர் வர்ணத்தைச் சார்ந்தவர்களும் ஆரியர் என்று அழைக்கப்பட்டார்கள். அம்மூவர்ணத்தினரும் ‘த்விஜா’ என்று அழைக்கப்பட்டார்கள். சூத்திரர்கள் ஆரியருக்கு இணையாக ஒருபோதும் வைக்கப்பட்டதில்லை.”

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com