அத்தியாயம் 59 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடி

பிராம்மண வாழ்வியல், எல்லா பிராம்மணர்களையும் ஆரியர் இனத்தினராக கருதும் மயக்கத்தைப் பொதுமக்களிடையே எழுப்பியது. சமூகத்தில் உயர்நிலையாக்கம் என்ற இந்த மயக்கம், பிராம்மணியத்தை நோக்கி மக்களை ஈர்த்தது.

அதர்வணம்

நான்காவதும் இறுதியானதும், இதனை வேதமாகக் கொள்வதா அல்லது தனி வகையாகக் கொள்வதா என்ற நீண்ட விவாதத்துக்கு உள்ளாகிவரும் வேதம், அதர்வண வேதம் ஆகும். இதில், ரிக்கில் உள்ளதுபோல் மந்திரங்கள் உள்ளன. கூடுதல் பண்பாக, நோய்களைக் குணப்படுத்தவும், எதிரிகளைத் தோற்கடிக்கவும், காதலில் வெற்றிபெறுவதற்கான பல வசிய மந்திரங்களும் தொகுக்கப்பட்டுள்ளன.

இவ்வேதத்தில் மிகப்பழைய கருத்துகள் இருக்கின்றன. இக்கருத்துகள், ஏனைய வேதங்களில் கூறப்பட்டிருக்கும் கருத்துகளில் இருந்து முற்றிலும் வேறானவை. இதன் காரணமாக, இது, உயர் நிலையில் நில்லாத கீழோருக்கு அதாவது, ஆரியர்களற்ற மக்களுக்கு உரியது என குறிக்கப்பட்டது. இதனை சாதாரண மக்களுக்கு உரியது என்றும், உயர்தர (குருமார்) மக்களின் நம்பிக்கைகளுக்கு மாறாக இருப்பது என்றும்கூட விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.

ஏதோ ஒருவகையில், அதர்வணம் ஆரியர்களுடையதன்று, குறிப்பாக பிராம்மணர்களுடையதன்று என்ற கருத்து அறிஞர்களிடையேயும், பொதுமக்களிடையேயும் வேரூன்றி இருந்தது. அதனால், இது ஆரியர்களுக்கு முன்பு இந்தியாவில் இருந்த தமிழர் என்ற திராவிடர், ஆஸ்திரோ-ஆசியர், சைனோ-திபேத்திய மக்களின் படைப்புகள் என்பது தெளிவாகிறது. இதன் காரணமாக, அதர்வணத்தை ஒரு வேதமாக ஏற்றுக்கொள்ள மறுத்தே வந்தனர். இது, நான்காம் வேதமாக ஆகும் முன், சில மாற்றங்களை ஏற்று வேற்றுரு அடையச் செய்யப்பட்டது. ஏனைய வேதங்களில் இருந்து சில பகுதிகள் இவ்வேதத்தின் உறுப்பாக ஆக்கப்பட்டன. பிறகே, அதர்வணம் நான்காம் வேதமாகியது.

அதர்வணம் நான்காம் வேதமானதில், அன்றைய சமூகக் காரணம் முக்கியப் பங்காற்றியது என்பதை அறியமுடிகிறது. இந்திய ஆரியர், பிராம்மண மதத்தை வளர்த்தெடுத்தனர். பிராம்மணத்தைத் தழுவியவர்கள் யாவரும் பிராம்மணர்கள் ஆயினர். பிராம்மண வாழ்வியல், எல்லா பிராம்மணர்களையும் ஆரியர் இனத்தினராக கருதும் மயக்கத்தைப் பொதுமக்களிடையே எழுப்பியது. சமூகத்தில் உயர்நிலையாக்கம் என்ற இந்த மயக்கம், பிராம்மணியத்தை நோக்கி மக்களை ஈர்த்தது. இந்நிலையில், பிராம்மணியம் தந்த எளிய வாழ்வியல், பிராம்மணியத்தை பிறப்பின் வழியானது என வலியுறுத்தி மற்றவர்களை, பிராம்மணியத்தை ஏற்கலாம், தழுவமுடியாது அவ்வாறே பிராம்மணன் ஆகமுடியாது என, அதாவது சமூகத்தில் மேல்நிலையான ஆரியர் ஆக முடியாது என்ற வழக்கத்தை உருவாக்கியது.

இந்நிலையில் இந்திய ஆரியப் பிராம்மணியத்தைத் தழுவிய பிற சமூகத்தினர், தம் தாய் மரபுகளை இழக்க விரும்பாது, தொன்மையான தம் மந்திர, தந்திரச் சடங்கு முதலான நம்பிக்கைகளைத் பிராம்மணியத்துக்குள் இருந்துகொண்டே தொடர விரும்பினர். அவ்வாறே இருக்கவும் செய்தனர். அவர்கள் மூலம் தொகுக்கப்பட்டதே, மூலவடிவ அதர்வணம் ஆனது. அதர்வணம், பிற மூன்று வேதங்களுக்குப் பிறகு இயற்றப்பட்டது என்பது ஒரு பொதுவான கருத்துதானா என்பதை, பின்வரும் அதர்வணம் அப்பெயர் பெற்ற வரலாற்றில் இருந்து தெளியலாம்.

தேவி பிரசாத் அவர்கள் மாயம், மந்திரம், தந்திரம் ஆகிய குறித்து விரிவாகக் காண்கையில், இவற்றை பெரிதும் வேளாண்மைச் சடங்குகளுக்கு உரியதாக விளக்குவார்.*1 இருந்தும், இதில் நாம் வேளாண்மைக்கு உரியவற்றைவிட அன்றாட வாழ்வியலின் நம்பிக்கைகள் பெரிதும் இடம்பெற்றிருப்பதைக் காணமுடிகிறது. இது தொல்குடிகளின் பலவகைப்பட்ட சமயம்சாரா நம்பிக்கை சடங்குகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறது எனலாம். எனில், இவை வேளாண் குடிகளில், உழுதுண்ணும், அல்லது உழுகுடிகளின் – நிலமற்ற சூத்திரர்களின் அல்லது சாதாரண மக்களின் நம்பிக்கை சார்ந்த பாடல்களாக, அதாவது மந்திரத் துதிகளாக இவை இருப்பதால், யாக வளமைச் சடங்குக்கு மாற்றாக இருந்ததும் யாகம் முன்னிறுத்தப்பட்ட, உழுவித்து உண்ணும் பிராம்மணர்களால் இவ்வாறு இழிநிலையில், புறக்கணிக்கத்தக்க ஒன்றாக வகைப்படுத்தப்பட்டது எனலாம்.

அதர்வணம் - பெயர்க் காரணம்

அதர்வணம் அப்பெயர் பெறக் காரணம் என்ன என்பதை பிற மூன்று வேதங்கள் தம்தம் பெயர் பெற்ற வரலாறு துணைபுரிகிறது. ‘ரிக்’ என்றால் பாட்டு என்பது பொருள், தெய்வங்களைப் போற்றிப் பாடும் துதிகளைக் கொண்டது என்பதால், அது ரிக் எனப் பெயர் பெற்றது. ‘யசூர்’ அல்லது ‘யசுஸ்’ என்பதற்கு உரைப் பகுதிகள் என்பது பொருள். யசூர், கிரியைகளைப் பற்றிய விளக்கம் உரைநடையில் அமைந்த நூல் என்பதால் இப்பெயர் பொருந்தும். ‘சாமம்’ என்றால், இசை பெருகி ராகம் இழுத்துப் பாடும் பாட்டு என்னும் பொருள் கொள்வதாகும். இப்பின்னணியில், ‘அதர்வணம்’ என்பதற்கு நேரடியாக எடுத்துக்காட்டதக்க வகையில் பொருள் அமையவில்லை. அதர்வணத்துக்கு, “அதர்வாங்கிரஸ்”, “பிருகுவாங்கிரஸ்”, “பிரம்மவேதம்” என்ற வேறு பெயர்கள் உண்டு. இதில் பிரம்மவேதம் என்ற பெயர் பிற்காலத்தில் வந்தது என்பர். இதற்கு “பேஷஜானி”, “யாது” என்பன போன்ற வேறு பெயர்களும் வழங்கிவந்ததை அறியமுடிகிறது. இவை, இவ்வேதம் கூறும் செய்திகளின் ஒரு சில பகுதிகளைச் சுட்டும் பெயர்களாக உள்ளதை அறியமுடிகிறது. இப்பெயர்கள் இன்று மக்கள் வழக்கில் இருந்து நீங்கியுள்ளன.

அக்னி வழிபாட்டில் மிகவும் ஈடுபட்ட புராதனகாலப் புரோகிதர்கள், அதாவது இருடிகளுடன் இவ்வேதம் தொடர்புடையது என கருதுவோரும் உண்டு. மேலும், இப் புரோகிதர் ‘‘அதர்வணர்கள்” மற்றும் “அங்கிரசர்கள்” என இரு பிரிவினராக உள்ளனர் என்றும் அறியமுடிகிறது. இவர்களின்றி, பிருகு என்பவரின் பரம்பரையைச் சார்ந்த “பிருகுக்கள்” இப்புரோகிதக் குழுவைச் சார்ந்தவர்கள் ஆவர் எனவும் அறியமுடிகிறது. இதன் காரணமாக, இவ்வேதத்துக்கு, “அதர்வாங்கிரஸ்” என்றும் “பிருகுவாங்கிரஸ்” என்றும் பெயர்கள் தோன்றலாயின. இவற்றுள், “அதர்வாங்கிரஸ்” என்ற பெயர் சிறப்படைந்து, நாளடைவில், அதர்வணம் என்று குறுகிய வழக்கும், அதர்வண வேதம் என்ற தொகைப்பெயரையும் பெற்றுள்ளது.

பிற சான்றுகளைக் கொண்டு, அதர்வணத்தின் பெயர்களை ஆராயும்போது, அதர்வாங்கிரஸுகள் என்ற இப்பெயர், பன்மை உருபை ஈற்றில் ஏற்று வரும் உம்மைத்தொகைச் சொல். இதுவே, இவ்வேதத்தின் மிகப் பழைய பெயராக விளங்குகிறது. குறிப்பாக, அதர்வண வேதத்திலேயே இப்பெயர் வழக்குப்பட்டுள்ளது. மகாபாரதமும் இப்பெயரைக் குறிக்கிறது. யாக்ஞவல்க்ய ஸ்மிருதியும் இப்பெயரை வழங்குகிறது. மனுஸ்மிருதியும் இப்பெயரை தெளிவாக எடுத்துக்கூறுகிறது. பெளத்தாயன தர்ம சூத்திரத்திலும், இப்பெயரோடு இவ்வேதம் குறிப்பிடப்படுகிறது. எவ்வாராயினும், இப்பெயரைக் கூறும் நூல்கள் பிற்காலத்தைச் சார்ந்தது என்பர் கா.காலாசநாத குருக்கள், இவருக்குத் துணையாக மெக்டொனால், கீத், கிரிஃபித் போன்றோர் முன்னோடியாக உள்ளனர்.

அதர்வண வேதத்திலேயே இவ்வேதத்தைக் குறிக்க எழுந்த வேறு சில பெயர்கள் உள்ளன. பேஷஜானி என்று குறிக்கப்படும் அதர்வணத்தின் பகுதிகள், மக்களுக்கு நன்மை விளைவிக்கும் கிரியைகளைச் சுட்டுவனவாக உள்ளன. கா.கைலாசநாத குருக்கள் எடுத்துக்காட்டும்பொழுது, “இந்திய இலக்கியப் பரப்பில் சிறப்பாக சமய நூல்களில், இவ்வேதத்தைப் பற்றி குறிப்பிடும் இடங்களில் எல்லாம், இவ்வேதத்தின் நன்மை குறித்து வரும் பகுதிகளைக் கருத்தில்கொண்டே அதர்வணம் என்றும் பேஷஜானி எனவும், சாந்தம் எனவும், பெளஷ்டிகம் எனவும் நூலாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இவ்வேதத்தில் வரும் தீமை விளைவிக்கவல்ல பகுதிகளுக்கு, இந்நூல்கள் இடும் பெயர்கள் வேறாக உள்ளன. அதர்வண சங்கிதையில்கூட இவ்வகைப் பாகுபாடு தெளிவாகப் பிரித்து உணர்த்தப்படுவது கவனிக்கத்தக்கது.

வேதத்தின் மந்திரப் பகுதிகளான நான்கினையும் கூறும் சந்தர்ப்பம் ஒன்றில், ‘‘இருக்கு, யசூர், சாமானி, பேஷஜா” என்னும் சொற்றொடரில் வேதத்தைக் குறிக்க வரும் பேஷஜா என்னும் சொல், அதன் கருத்தைப் பொறுத்த அளவில், அவ்வேதம் முழுவதையும் சுட்டாது, இதன் ஒரே ஒரு பிரிவை மட்டுமே குறித்து நிற்கிறது. எனினும், இது, அதர்வண வேதம் முழுவதையுமே குறிக்கின்றது என்பதைச் சந்தர்ப்பம் நோக்கி நாம் உய்த்துணரல் வேண்டும். அதர்வர், ஆங்கிரஸ் என்னும் இரண்டும் வெவ்வேறு கருத்தை உணர்த்துவனவா என்பதைக் காரணம் காட்டிக் கூறவல்லதும், எக்காலத்தில் இப்பாகுபாடு எழுந்தது என்பதை சுட்டக்கூடியதுமான ஆதாரம் எதுவும் அதர்வண வேதத்தில் இல்லை. ஆனால், இரு பெயர்களையும் இணைத்து அதர்வாங்கிரஸ் என இவ்வேதத்தை நான்காம் வேதம் எனக் குறிப்பிடப்படும் பிற்கால வழக்கு, இவ்வதர்வாங்கிரஸ்கள் அக்னி வழிபாட்டில் மிகுதியாக ஈடுபட்ட புரோகிதர்கள் என்று ஏற்கெனவே கூறப்பட்ட கருத்தை வலியுறுத்தும் என்பர்.

இப்புரோகிதர்கள், சோமனுடன் தொடர்புபடுத்திக் கூறப்படும் ரிக் வேதம் கூறும் புரோகிதர்களினின்றும் வேறுபட்டவர்கள். அங்கிரஸ் என்றும் இவர் பெயர் பெறுவர். இவர் அதர்வண இனத்தவர்களிலிருந்து வேறுபட்டு, அவரினும் பயங்கரமானவர்களாகக் காணப்படுவர் என்பதை, இருக்கு வேதம் காட்டும் பிருகஸ்பதி, அங்கிரஸ் இனத்தைச் சார்ந்தவர். இவர் தேவகுரு. இவருக்கு ஆங்கிரஸ் என்ற பெயர் பிற்காலத்தில் ஏற்படலாயிற்று”.*2

ஆங்கிரஸ் யார் என்று கேள்வி எழுப்புவதற்கும், விடை காண்பதற்கும் மேற்கண்ட பத்திகள் ஒரு அவசியத்தை உருவாக்கியுள்ளன. யுத்தபூமி தொடரின் அத்தியாயம் 52-ல், ரிக்கில் சுட்டப்படும் முக்கிய இருடிகளை அடையாளப்படுத்திக்கொள்ளும் முகமாகக் காணும்பொழுது, ஆங்கிரஸ் கருப்பு நிறத்தவர் என்றும் அவ்வாறு குறிப்பிடுவது அவர்களின் ஆரியரல்லாத இனத்தை சுட்டிநிற்கிறது என்றும் குறிப்பிடப்பட்டது. இதற்கு முடிவு காணும்விதமாக, “தமிழர் என்ற திராவிட இனத்தைச் சார்ந்த வசிட்டர், அகத்தியர், கன்வர், அங்கிரஸ் போன்ற இருடிகளும், சுதாஸ் முதலான அரசர்கள் ஆரியத்தை அல்லது பிராம்மணியத்தை ஏற்றுக்கொண்டவர்களாக விளங்கினர். இவர்கள் வழியாக நாமடி ஒலிகள் எளிதாக இந்தோ-இரானிய மொழியில் புகுந்து, இந்தோ-ஆரிய மொழி பிரிய ஒரு காரணியாக அமைந்தது என்ற எளிய முடிவுக்கு வரமுடிகிறது” எனக் குறிப்பிட்டதை நினைவுகூர்ந்து, கா. கைலாசநாத குருக்கள் காட்டிய “இவ்வதர்வாங்கிரஸ்கள் அக்னி வழிபாட்டில் மிகுதியாக ஈடுபட்ட புரோகிதர்கள் என்று ஏற்கெனவே கூறப்பட்ட கருத்தை வலியுறுத்தும் என்பர். இப்புரோகிதர்கள் சோமனுடன் தொடர்புபடுத்திக் கூறப்படும் இருக்கு வேதம் கூறும் புரோகிதர்களினின்றும் வேறுபட்டவர்கள். அங்கிரஸ் என்றும் இவர் பெயர் பெறுவர். இவர் அதர்வண இனத்தவர்களிலிருந்து வேறுபட்டு, அவரினும் பயங்கரமானவர்களாய்க் காணப்படுவர் என்பதை இருக்கு வேதம் காட்டும்” என்பதை இங்கு பொருத்தி, மேற்கண்ட இம்முடிவுக்கு மேலும் வலியேற்றலாம்.

இந்தியச் சமய நூல்களிலும், தத்துவ நூல்களிலும் நெடுநாட்களாக அதர்வணத்தைப் பற்றி நல்ல கருத்து நிலவவில்லை. இவ்வேதத்தை ஏற்றுக்கொள்ளாது புறம்பாக ஒதுக்கிக்கூறியது மட்டுமல்லாது, இதற்கு விரோதமான கருத்துகளைக் கூறிய பழைய நூல்களைப் பரவலாகக் காணமுடிகிறது. இந்நிலை, அதர்வணம் நான்கு வேதங்களுள் ஒன்றாக இணைக்கப்பட்டு உரிய இடம் அளிக்கப்படுவதற்கு முற்பட்ட நிலை ஆகும். இந்த நிலையை விளக்கிக்கொள்வதில், ஆரியம் வளர்த்தெடுத்த பிராமணியத்தைத் தழுவியவர்கள் தொடர்ந்த தமிழ் என்ற திராவிட மற்றும் பிற குடிகளால் தம் தொல் மரபுகளிலிருந்து உருவாக்கப்பட்டவை என்பது தெளிவாகிறது.

அதர்வண மந்திரங்கள் “ரிக் வேத காலத்துக்கும் முன்னர் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைப் பற்றி இயற்றப்பட்டிருக்கலாம்” என்பது, இதன் பாடுபொருள் சார்ந்து பொரும்பலான ஆசிரியர்கள் முன்வைக்கும் கருத்தாக உள்ளது. இங்கு அதர்வணர்கள் அரக்கர்களை அழிப்பவர்களாகக் கூறப்படுகின்றனர். மந்திரம் மாந்திரீகம் ஆகியவற்றால் தீமை விளைவிக்கும் இழிந்த நிகழ்ச்சிகளைச் செய்பவர்களாக அங்கிரஸர்கள் குறிப்பிடப்படுகின்றனர். அதர்வணர்களோ நன்மை பயக்கும் மாந்திரீகம் செய்பவர்களாகத் தொடர்புபடுத்தப்படுகின்றனர்.

அதர்வண வேதத்தின் தொகுப்பு முறையைக் காணும்பொழுது, அது 9 பிரிவுகளாக உள்ளது. இப்பிரிவுகளைச் சாகைகள் என்றும் குறிப்பிடும் வழக்கு உண்டு. இவை பைப்பலாவாதம், கெளடம், மெளடாயனம், செளநகியம், ஜாஜலம், ஜலதம், பிரம்மவாதம், தேவதர்சம், சரணவைதயம் என பெயர்கொண்டுள்ளன. இவற்றுள் பைப்பலாவாதம், செளநகியம் இரண்டும் புகழ்பெற்றவையாக இருக்கின்றன. இந்த ஒன்பது சாகைப் பிரிவுகளும் 20 காண்டங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இறுதிப் பகுதியான 20-ம் காண்டம், பிற்காலத்தில் இணைக்கப்பட்ட ஒன்றாகும். இதில் இடம்பெற்றுள்ள பாடல்கள் ரிக்கில் இருந்து எடுத்துப் பயிலப்பட்டவையாக உள்ளன. மேலும், பத்தொன்பதாம் காண்டத்தில் வரும் பாடல்கள் இவ்வேதத்துக்கே உரியனவல்ல என்றும் கருதப்படுகிறது.

அதர்வணத்தில் உள்ள மொத்தப் பாடல்களில் ஏழில் ஒரு பங்குப் பாடல்கள் ரிக் பாடல்கள் என்ற ஒரு கணிப்பு உண்டு. மேலும், இதில் பாதிப் பாடல்கள் ரிக்கின் 10-வது மண்டலத்தில் இருந்து எடுக்கப்பட்டவையாகவே உள்ளன. ஏனையவை, முதலாம் மற்றும் எட்டாம் மண்டலத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. இக்கணிப்புகள் ஒரு உண்மையை வெளிப்படுத்துகின்றன. ரிக்கின் பிற்சேர்க்கையான 10 மண்டலப் பாடல்கள் இதில் இணைக்கப்பட்டு, இதற்கு ஒரு ரிக்கின் மரபுத் தொடர்பு ஏற்படுத்தப்படுகிறது. மேலும், இதில் காலத்தில் பிந்தைய 1-ம் மண்டலப் பாடல்களே எடுத்தாளப்படுகின்றன.*3

அதர்வணத்தின் இயல்மரபான ஆக்கம் என்பது ரிக்கின் எட்டாம் மண்டலம் பாடிய கன்வர், அங்கிரஸ் பாடியவை எனலாம். இவ்வங்கிரஸ் மரபினரின், முன்னோர் முதல் வழித்தோன்றல்கள் வரை அதர்வணத்துக்குப் பெரும் பங்களித்துள்ளனர் என்பதை முன்னர் கண்ட விவாதங்களுக்கு விடையாக அமைந்துவிடுகிறது. ரிக்கிலேயே அங்கிரஸ்கள் தனித்துவம் நிரம்பியவர்களாக உள்ளனர். கருப்பு நிறத்தவராகக் குறிக்கப்படும் இவர்கள் தீயை உண்டாகியோர் எனப் போற்றப்படுவது கவனிக்கத்தக்கதாகிறது. ஆதியில் இருந்து ஆரியர் இயற்கையாக உருவான தீயை தாம் சென்ற இடமெங்கும் அணையாது பாதுகாத்து எடுத்து வந்தனர் எனவும், அங்கிரஸ் மரபினர், கல், குச்சி, மரத்துண்டு ஆகியவை கொண்டு தேவைக்குத் தக்கவாறு தீயை உற்பத்தி செய்தவர்களாக இருந்தமையாலேயே தீயை உண்டாகியோர் எனப் போற்றப்பட்டனர் எனலாம். அதனாலேயே, அக்னி வழிபாட்டில் மிகவும் ஈடுபட்ட புராதனகாலப் புரோகிதர்கள், அதாவது இருடிகளுடன் இவ்வேதம் தொடர்புடையது என்று முன்னர் காணப்பட்ட விளக்கம் சரியாகப் பொருந்துவதைக் காணமுடிகிறது.

ரிக் வேதத்துக்கும், அதர்வணத்துக்கும் பொதுவாக உள்ள பாடல்களில், அதர்வண வேதத்திற்கு மட்டுமே சிறப்பானவை எனக் கருதப்படும் பண்புகளான மாந்திரிகப் பகுதிகள் பொதுவாகக் காணப்படுகின்றன. இவற்றுள் சில நன்மை விளைவிப்பவை, சில தீங்கிழைப்பவை. தாம் எடுத்துக்கூறும் முறைகளிலும் இரு சங்கிதைகளிலும் வெவ்வேறாக உள்ளன. எனவே, இரு முறைகளைக் கையாளும் இருவகைப் பாடல்களை இங்கு காண்கிறோம். ஒன்று ரிக்குக்குச் சொந்தமானது, மற்றது அதர்வணத்துக்கு மட்டுமே உரியது. பின்னதுதான், அதாவது அதர்வணம்தான் பிராமணங்கள், சூத்திரங்கள் முதலிய கிரியை நூல்களை அமைய வழிவகுத்துக் காட்டியது.*4

இதன் ஆக்கக் காலம் மு.பொ.ஆ. 600 முதல் 400 வரை கருதப்படுகிறது. இதன் நவீன மொழி இதனை வழியுறுத்தும். ஆனால், அதர்வண வேதத்தில் காணப்படும் மொழியமைப்பு, இருக்கு வேதத்தில் இருக்கும் மொழியமைப்பு முறையில் இருந்து வேறுபாடாதது என்ற கருத்தும், யாப்பு முறையும் அவ்வாறே அமைந்தது என்ற கருத்தும்*5, இவற்றின் பாடுபொருளின் தொன்மையை வெளிக்காட்டுபவையாக உள்ளன. மொழி நவீனமடைந்தாலும், மொழியமைப்பு மரபாகவே நீடித்துள்ளது என்பது ஒரு இணைவுப்புள்ளியை வெளிப்படுத்தும் சான்றாகிறது.

நவீன மொழி பெற்ற இக்காலகட்டத்தில், ஆரியர்கள் குரு, பாஞ்சாலத்தில் இருந்தும், மறுபடி வடமேற்கில் இருந்தும், பிற பகுதிகளில் இருந்தும் பெயர்ந்தவர்கள் மற்றும் விராதயர்கள் போன்றோர், வடஇந்தியா, இமயமலைச் சார்புப் பகுதிகள், மால்வா, மகதா நாடுகளில் நிகழ்த்திய தங்களின் நான்காவது குடியேற்றக் காலம் என்பதை வரலாற்றுப்போக்கில் இருந்து தெளியலாம். இது அதவர்யு எனப்படும் தனிப்பட்ட வகை புரோகிதர்களுக்காக தொகுக்கப்பட்டவை என்றும், இந்தப் புரோகிதர்கள், சடங்குகளில் அதாவது வேள்வித்தீ உண்டாக்குவது, திருப்படையல்களை இடுவது போன்ற வேலைகளைச் செய்தனர்.

பிந்திய வேதங்களான யசூர், அதர்வண வேதங்களில் கங்கை, யமுனை மற்றும் தோவாப் நதிகளை இவர்கள் நன்கு அறிந்திருந்தனர் என்பதை இவை குறித்து அதிகமாகக் குறிக்கப்படுவதில் இருந்து வெளிச்சமாகிறது. இதுவும் இவர்களது மூன்றாம் மற்றும் நான்காம் குடியேற்றக் காலங்களை நமக்கு அடையாமாக்குகின்றன.

இந்நான்கு வேதக் காட்சிகள் மூலம் வங்கம், ஒரியாப் பகுதிகள் நீங்கிய வடஇந்தியப் பகுதிகளை அவர்கள் அறிந்திருந்தனர் என்பதும், தென்னிந்தியா பற்றி ஒன்றும் அறிந்திருக்கவில்லை என்பதும், பிரம்மபுத்திரா நதிப்படுகைகளான வங்க, ஒரியப் பகுதிகளையும் அறிந்திருக்கவில்லை என்பதையும் காட்டுகிறது. பாணினி வரை இந்த நிலையே அவர்களிடையே நிலவியதை பாணினியின் அஷ்டாத்தியாயியே அகச்சான்றாகிறது.

பாணினிக்குப் பிறகு மு.பொ.நூ. 2-ல், தென்னிந்தியாவைச் சேர்ந்த இருவர் செம்மை சம்ஸ்கிருத்துக்கு வழியமைத்த அஷ்டாத்தியாயிக்கு உரை எழுதுகின்றனர். முதலாமவர் காத்தியாயனா ஆவார். இவர், பாணினியின் 1245 சூத்திரங்களுக்கு “வார்த்திகா” என்ற குறிப்புகளை எழுதியதால், இவர் “வார்த்திக்காரர்” என்றே இலக்கிய வரலாற்று நூல்களில் குறிக்கப்படுகிறார். மற்றொருவர், மு.பொ.ஆ. 150-ஐ ஒட்டிய காலத்தில் வாழ்ந்தவரான பதஞ்சலி ஆவார். பதஞ்சலி, பாணினியின் 1713 சூத்திரங்களுக்கு விளக்க உரை எழுதுகிறார். இது “மகாபாஷ்யம்” என்று பெருமையுடன் குறிக்கப்படுகிறது. இது பிராம்மணியத்தின் தென்னிந்தியப் பரவலையும், செம்மை சம்ஸ்கிருதத்துக்கு தென்னிந்தியர் செய்த கைங்கரியத்தையும் விளக்கவல்லதாக உள்ளது.

அதர்வணத்துக்குப் பிறகு, பிராமணங்கள், ஆரண்யங்கள், உபநிடதங்கள், சூத்திரங்கள் ஆகிய வேதநூல்கள் எழுகின்றன. இவை பிராம்மணத்தை முன்நிறுத்துபவையாக உள்ளன. பிற்கால பிராம்மண மதத்துக்கு ரிக்கின் தொடர்பும், பெயரும் ஏதோ ஒருவகையில் தேவை உருவாகியுள்ளது. அத்தேவையை ஒட்டித்தான், வேத நூல்களின் வரிசை ஒன்றின் பின் ஒன்று தொகுக்கப்பட்டனவா அல்லது, பிராம்மணியத்துக்கு முன்னர் தொகுக்கப்பெற்ற பண்டைய நூல்களில், பின்னர் பிராம்மணியம் ஒரு மரபுத் தொடரைக் காட்ட, ரிக்கில் பிற்சேர்க்கைகளையும் கிலங்களையும் உருவாக்கி, அதன் தொடர்ச்சி சாம, யசூர், அதர்வணத்தில், அதன் தொடர்ச்சி பிராமணங்களில், அதன் தொடர்ச்சி ஆரண்யங்களில், அதன் தொடர்ச்சி உபநிடதங்களில் என அமைத்து அல்லது பின்னதிலிருந்து முன்னதுக்கு என பிராம்மணியம் வளரவும் வளர்க்கவும், புகுத்தவும் செய்யப்பட்டனவா என ஆய்வுகள் விரிய வேண்டும். பின்னதில் இருந்து முன்னதுக்கு எனக் கருத பயன்பாட்டு மொழி நமக்கு உதவும்.

எவ்வாறாயினும், இந்திய ஆரியர்களுக்குள் தமிழர் என்ற திராவிடரின் சான்றுகள் வலிமையாக இருப்பினும், இன்றைய நிலையில், குறிப்பாக அவர்களை இவர்களே அவர்கள் என அடையாளம் தேடுவது அவசியமற்றது மற்றுமல்ல, இயலாததும்கூட. ஏனெனில், இவர்கள் தம்முடைய இன மற்றும் மொழி அடையாளத்தை இழந்துள்ளது மட்டுமல்ல, இந்தோ-ஐரோப்பிய மற்றும் இந்தோ-ஈரானிய ஐரோப்பியர்களிடமிருந்து முற்றிலும் வேறுபாட்ட பண்பாட்டைச் சமைத்துக்கொண்டு, புதிய இனமாகப் பரிமாணம் கொண்டுள்ளனர். அது இந்திய-ஆரியர் என்ற பரிமாணம். மானுடவியல் நோக்கில் இந்திய ஆரியப் பரிமாணம் என்பது எந்த வகையிலும் மாந்தரினப் பரிணாம வளர்ச்சிப்போக்கில் நிகழ்ந்துவிடவில்லை என்பதை மட்டும் தற்பொழுது குறித்துக்கொள்வோம். சம்ஸ்கிருதமாதல் என்ற கட்டமைக்கப்பட்ட மேன்மை உணர்வு அல்லது கருத்துப்போர்வையானது இலக்கிய ஆதாரங்கள், தொல்லியல் ஆதாரங்கள், மரபணுவியல் ஆதாரங்கள் ஆகிய எல்லாவற்றையும் தகர்த்து, இத்தகைய மூலஇன மற்றும் சமூக அடையாளங்களைத் தேடுவதை இன்னும் சிக்கலாக்குகிறது.

பிராம்மணியத்தை தழுவியோர் புதிய இனத்தைச் சமைத்துக்கொண்டுவிட்டனர். ஆனால், இப்படித் தழுவியோர் தம் மூலப் பண்பாட்டை இழக்காமல் இந்திய ஆரியத்துள் புகுத்திவிட்டனர். அல்லது இயல்பாகவே அது இந்திய ஆரியத்தின் பண்பாட்டின் பகுதியாக ஆகிவிட்டதாக உள்ளது. இந்த உண்மை துவக்க கால ரிக்கில் இருந்து உபநிடதங்கள் வரை படிப்படியாக காலமும், இடமும் சார்ந்து பெற்ற மாற்றங்கள் வழியாக வெளிப்படுகிறது. அதனால், இந்திய ஆரியம் அல்லது பிராம்மணியத்தில் தமிழர் என்ற திராவிடர் அல்லது வேறு இனக்குழுக்களைத் தேடுவது பண்பாட்டு அடையாளத்துடன்தான் எஞ்சுகிறது.

(தொடரும்)

சான்றெண் குறிப்புகள்

1. தேவிபிரசாத் சட்டோபாத்தியாய, உலகாயுதம், (தமிழில்), நியு சென்சுரி புக் ஹவுஸ். பி.லிட்.

2. கைலாசநாத குருக்கள். கா, மு.கு.நூ, பக். 97-98. 

3. Macdonell, A.A, Keith.B.A, கைலாசநாத குருக்கள் ஆகியோரின் நூல்களின் விவரங்கள் கொண்டு இப்பாடுபொருள் செய்திகளும், அதன் வரிசை அமைப்பும் தொகுக்கப்பட்டுள்ளன.

4. கைலாசநாத குருக்கள். கா, மு.கு.நூ. ப. 105.

5. கைலாசநாத குருக்கள். கா, மு.கு.நூ. ப. 115

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com