அத்தியாயம் 66 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடி

ரிக் வேத மக்களை மேய்த்தல் தொழில் புரிந்த இனச் சமூகத்தினராகப் பார்க்கத் தவறுகிறது; பழங்குடிப் பண்பாடுகளைச் சுமந்துவந்த சமூகத்தினராகப் பார்க்கத் தவறுகிறது.

ரிக் வேதத்தின் வேள்வி வழிபாடுகள் மந்திரத்தின் குணம் கொண்டவை. இக்குணம், தொன்மைச் சமயம் அல்லது சமயங்களுக்கு முற்பட்ட வழிபாட்டு முறையினை, அதாவது தொல்குடிப் பண்பாட்டு நிலையிலான வழிபாட்டு நம்பிக்கை என்ற கோட்பாட்டின் வயப்பட்டவை என முந்தைய அத்தியாயத்தில் குறிக்கப்பட்டது. எனில், மந்திரம், அதன் தோற்றம், அதன் செயல்பாடுகள் மற்றும் அதன் விளைவுகள் ஆகியவை பற்றி அறிந்துகொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. ஏனெனில், பண்டையப் பொருளில் அமைந்திருந்த மந்திரம் என்பது சமய வழிப்பட்ட மந்திரங்களுக்கும், குறிப்பாக இன்று நாம் மயக்கப் புரிதலோடு கொண்டுள்ள வடமொழியில் அர்ச்சிக்கப்படுபவற்றுக்கும், கண்கட்டு அல்லது மாயாஜால வித்தை என்ற புரிதலுக்கும், நஞ்சு முறிக்க ஓதுவது போன்ற இன்றைய பொதுப்புத்தியில் உறைந்துவிட்ட புரிதலுக்கு மாறுபட்டது; நோக்கத்திலும், செயல்முறையிலும் வேறானது.

ரிக் வேதத்தில் மந்திரம் என்பதான ஆய்வுகள், நெடுங்காலத்துக்கு முன்பிருந்தே மேற்கொள்ளப்பட்டுள்ளன. பழைமையான இந்த ஆய்வுகள், பெரும்பான்மையாகத் தத்துவவாதிகள், சமயவியலாளர்கள் மற்றும் மொழியியலாளர்களால் முன்னெடுத்துச் செல்லப்பட்டவையாக உள்ளன. தற்காலத்தில், ஐரோப்பியர்களால் இவ்வாய்வு மிகவும் முன்னெடுத்துச் செல்லப்பட்டது.

ஆனால், இதில் உள்ள தொன்மை வழிபாட்டுப் பண்பின் நீட்சியைப் புறக்கணித்து, மேலாக இன்றுள்ள வாழ்வியலே சமூகப் பொருளாதார வாழ்வியலே அன்றும் இருந்தது என்பதை நிரூபிக்க முனையும் ஆய்வுகளும், சாயானர் வழிப்பட்ட பொருளோடும் மதம் அல்லது சமயக் கருத்து முதல்வாத அடிப்படைகளோடும் அமைந்த பெரும்பான்மையோரின் இந்தியத் தேடுதலும், ரிக் வேத மக்களை மேய்த்தல் தொழில் புரிந்த இனச் சமூகத்தினராகப் பார்க்கத் தவறுகிறது; பழங்குடிப் பண்பாடுகளைச் சுமந்துவந்த சமூகத்தினராகப் பார்க்கத் தவறுகிறது. உள்ளூர் மக்களோடு கலப்புற்ற, உள்ளூர் மரபுகளை ஏற்று செரித்துக்கொண்ட சமூகத்தினராகப் பார்க்கத் தவறுகிறது. அவர்களின் வேள்வி வழிபாட்டு மரபுகளை, மேய்த்தல் தொழில் புரிந்த சமூகத்தினரின் சடங்குகளாகப் பார்க்கத் தவறுகிறது.

மேலும், இவ்வகை ஆய்வுகள், ரிக் காலகட்டத்துக்கும், யசூர் காலகட்டத்துக்கும் இடையிலான சமூகப் பொருளாதார வாழிடச் சூழல் வேறுபாடுகள்; அடுத்தகட்டமாக யசூர் காலகட்டத்துக்கும் பிராமணங்களின் காலகட்டத்துக்கும்; மூன்றாவதாக பிராமணங்களில் இருந்து ஆரண்யங்களின் காலகட்டத்துக்கும் இடையிலான சமூகப் பொருளாதார வாழிடச் சூழல் வேறுபாடுகளைப் பெரும்பாலும் கணக்கில் கொள்வதில்லை.

வரலாற்றுப்போக்கில், இக்காலகட்டங்களினூடே சாம வேதத்துக்கும் அதர்வண வேதத்துக்கும் இடையிலான காலகட்டங்களில் நிகழ்ந்த சமூகப் பொருளாதார வாழிடச் சூழல் வேறுபாடுகளைக் கணக்கில் கொள்ளத் தேவை எழவில்லையா என ஐயம் எழுவது இயற்கைதான். சாமம் அதற்கு முன்பான வேதங்களை, பாடல்களை இசைத்துப் பாடுவதை முதன்மையான நோக்கமாகக் கொண்டது. சாம வேத காலகட்டத்தில் புதியதான சிந்தனைகள் ஏதும் வெளிப்படுத்தப்படவில்லை. அதர்வண காலகட்டம் என்பது உள்ளூர் மரபுகளில் மிகப் பழைமைவாய்ந்தவற்றின் மீட்பும், ரிக், யசூர் சிந்தனைகளின் கலப்பும் கூடி வெளிப்பட்ட காலகட்டமாக உள்ளது என்பதால், கலவை பண்பு கூடிய காலகட்டமாகப் பார்க்க வேண்டியதாகிறது. தொன்மையான மந்திரங்கள் கொண்ட தொகுதியைப் புனிதப்படுத்தும் விதமாகவே ரிக், யசூர் சிந்தனைகள் இதில் கலக்கப்பெற்றன என்றும், அதன் பிறகே இது வேத வரிசையில் இடப்பெற்றது எனவும் வடமொழி இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவது இங்கு நினைவுகூரத்தக்கது. இப்பின்னணியில், இக்காலகட்டத்தில் உள்ளூர் மரபுகளின் பழைமை மீட்பு முன்னிலை பெற்றதே அன்றி, புதிய சிந்தனைகள் இக்காலகட்டத்தில் முன்னிநிலை பெறவில்லை.

முற்றிலும் மந்திரங்களால் அமைந்தது அதர்வண வேதம் என்பது, சில அத்தியாயங்களுக்கு முன்னர் விளக்கப்பட்டது. நான்கு வேதங்களில், அதர்வண வேதத்தின் இடம் என்பது பலவாறாக விவாதிக்கப்பட்டு, அது விலக்கப்பட்டிருந்த காலகட்டமும் உண்டு என்பதும் வெகுகாலத்துக்குப் பின்னரே நான்கு வேதங்களின் வரிசையில் சேர்க்கப்பட்டது என்பது அங்கு விளக்கப்பட்டது. இன்றும் வழக்கில் உள்ள திரிவேதி, சதுர்வேதி என்ற சிறப்புப் பெயரடைகள், இந்த வேறுபாடு இருந்த காலகட்டத்தை அடையாளம் காட்டுவதாக உள்ளன. ‘திரயீவித்யா’ என்று வேதங்களைக் குறிக்கும் சொல், மூவகை வேதங்களையே குறிக்கும். பிரம்ம வேதம் என்ற குறிப்பெயர், அதர்வணத்தின் ஆதித்தன்மையை காட்டுவதாக அமைகிறது.{pagination-pagination}

யசூர் வேதம் போன்று மிக விரிவான வேள்விக் கிரியை முறைகள் எழுதப்பட்ட பிறகு, குறு மந்திரங்களும், எளிய செயல்முறைகளையும் கொண்ட அதர்வணம் ஏன் தொகுக்கப்பட வேண்டும் என்ற கேள்வி வரலாற்று நோக்கில் முக்கியமானது. அதர்வணம் தொகுக்கப்பட்ட பிறகு, அது வேத வரிசையில் இடம்பெற்றது குறித்தான ஏற்பும் நிராகரிப்பும் இந்தக் கேள்விக்கு விடை அளிக்கிறது. யசூர் கிரியை முறைகள், அதனையொட்டி மேலும் கூடுதலாக விளக்கமும் கிரியைகளில் புதியன புகுந்த விரிவாக்கமும் பெற்ற யசூர் பிராமணங்கள் மற்றும் யசூர் ஆரண்யங்களின் உருவாக்கம், வேள்வியின் சமூகநலம் மற்றும் சமூகவளத்தின் நோக்கையும், வேள்வியின் பயனின் சமூகப் பகிர்தலையும் புறக்கணித்தன. எளியவனின் எளிமைக்கும் அவை இடமளிக்கவில்லை. பொருளாதாரச் செழிப்பின்மையால், வேள்வி நிகழ்த்துவோரால் அவர்கள் புறக்கணிக்கப்பட்டனர். இதன் காரணமாக, சமூக உறுப்பினர்களுள் பெரும் எண்ணிகையில் எஞ்சிய எளியவனும், சாமானியனும் தம்தம் மரபில் நீடித்த எளிமையான பழைமையான மந்திரங்களை நாடினான். தன் வாழ்வியலில் நம்பிக்கை கொண்டான். தன் வழிபாட்டுத் தேவைகளைத் தக்கவைத்துக்கொண்டான். பூர்த்தி செய்துகொண்டான். இந்த வகையில், யசூர், பிராமணியங்கள், ஆரண்யங்கள் வளர்த்தெடுத்த “பிராமணிய மார்க்க”த்துக்கு மாற்றாகத் தொகுக்கப்பட்ட வேதமாக, அதாவது ரிக் வேத மந்திரங்களுக்கும் முற்பட்ட மந்திரங்களும் கூடிய ஆதிவேதத் தொகுப்பாக அதர்வணம் உள்ளது. இந்தவகையில் வேதங்களின் வேள்விக் கிரியைகளை நேர்க்கோட்டு வளர்ச்சியாகக் காணாமல், பக்கக்கிளையும் அறுபட்ட தொடர்ச்சியும் கொண்ட வளர்ச்சியாகப் பார்க்கும்பொழுதுதான், மந்திரத்தின் உண்மை முகம் வெளிப்படும். அதர்வணம் வேறுபடுவதும் இந்தப் புள்ளியில்தான்.

மானுடயினப் பரிணாம வளர்ச்சிகளூடே மந்திரத்தை அணுகி, மந்திரத்தின் உண்மையான முகத்தை சமயவியலாளர்களைவிட தொல்லியலாளர்களும், மானுடவியலாளர்களும் மிகச் சரியாக வெளிப்படுத்தியுள்ளனர். மந்திரத்தின் துவக்கம் என்பது உணவு தேடி அலைந்த மந்தை நிலையில், கூட்டமாக வாழ்ந்த காலகட்டத்திலேயே துவங்கிவிட்டது. மந்தை நிலையில் இருந்து இனக்குழுவாக வாழ்ந்து, படிப்படியாக இன்று உள்ள நிலை வரை மந்திரம் மனித இனத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

மந்திரம்

மந்திரம், மாயவித்தை என்றும் தற்கால ஆசிரியர்களால் குறிப்பிடப்படுவது உண்டு. “இது செய்ய வேண்டும்” என்ற உறுதியில் மந்திரங்கள் தோன்றின. “மந்திரம் என்பது ஒரு மாயையை உண்டாக்கி, அதனால் இயற்கையை உண்மையாகவே கட்டுப்படுத்துவதாக நம்புவதாகும்” என்பார் கார்டன் சைல்ட். இதனையொட்டிய கருத்தாக, “தாங்கள் விரும்பியபடி இயற்கையைச் செயற்படுத்துவதற்கு உதவக்கூடிய ஒரு பொய்த்தோற்ற யுத்தியே மந்திரம்” என்ற ஜார்ஜ் தாம்சனின் கருத்தையும் காணலாம். “புராதன மந்திரமானது, கற்பனையொன்றினை உருவாக்குவதன் மூலம் கட்டுப்படுத்தலாம் என்ற கருதோட்டத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இது உண்மையான தொழில்நுட்பத்தில் பற்றாக்குறையினை ஈடுகட்டுவதற்காகத் தோன்றிய கற்பனையான தொழில்நுட்பமாகும்” என்றும் விளக்கப்பட்டுள்ளதும் கவனிக்கத்தக்கதாகிறது.

“நிறைமொழி மாந்தர் ஆனையிற் கிளர்ந்த

மறைமொழி தானே மந்திரம் என்ப”

என, மந்திரம் யாரால், எதற்காக, எவ்வாறு சொல்லப்படுவது என தொல்காப்பியம் காட்டுகிறது. அதாவது, நிறைமொழி மாந்தரால், அதாவது குறையற்ற சொல்லொலியோடு, மறைமொழியாக, கட்டளையிடும் (ஆணை) தன்மை கொண்டது மந்திரம் எனக் காட்டுகிறது. தொல்காப்பியரின் கூற்றை மேற்குறித்த கருத்துகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க இடம் உள்ளது.

மனித இனத்தில் மந்திரத்தின் செல்வாக்கு என்பது மிகவும் வலிமையானது; இன்று வரை தொடர்வது. நிறுவனமயச் சமயங்களில், மந்திரத்துக்கு இடமுண்டா என்ற கேள்விக்குப் பதில் காணும்முன், சமயங்கள் தோன்றுவதற்கு நெடுங்காலத்துக்கு முன்னரே மந்திரங்கள் தோன்றிவிட்டன என்பதை நினைவுகொள்ள வேண்டும். மனித இன வரலாற்றில், தொல்பழங் காலம் பல லட்சம் ஆண்டுகளும், வரலாற்றுக் காலம் சில ஆயிரம் ஆண்டுகளும் கொண்டதுபோலவே, மந்திரத்தின் வயது பல லட்சம் ஆண்டுகள் பழைமை கொண்டது.{pagination-pagination}

தொன்மைச் சமயமும், சமயமும்

மானுடவியளார்களும் வரலாற்று ஆசிரியர்களும், மனித இன வரலாற்றை வரலாற்றுக் காலம் மற்றும் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் என இரண்டாகப் பகுத்து அறிவதுபோல், மனித இனத்தின் வழிபாட்டு வரலாற்றை தொன்மைச் சமயம் மற்றும் சமயம் என இரண்டாக பகுத்துக் காண்கின்றனர். வரலாற்றுக்கு முற்பட்ட காலம் இல்லாமல், வரலாற்றுக் காலம் உருவாகாது என்பது எவ்வளவு உண்மையோ, அத உண்மை, தொன்மைச் சமயம் இல்லாமல், சமயம் உருவாகாது என்பதிலும் உள்ளது.

சமயமானது மனித சமுதாயம் முழுவதும், ஒரு ஒற்றை துவக்கப்புள்ளி கொண்டு முழுமையான ஒற்றைத் தோற்றத்துடன் கிளைத்துவிடவில்லை அல்லது முளைத்துவிடவில்லை. அது, வரலாற்றுக் காலம் இடத்துக்கு இடம் மாறுபடுவதுபோல் மாறுபடுகிறது. வரலாற்றுக் காலத்துக்குள் நுழையாத மனிதக் குழுக்கள், ஆங்காங்கே இன்றும் வாழ்ந்துவருவது எவ்வளவு உண்மையோ, அதே உண்மை, சமய நிலைக்கு நுழையாத தொல் சமய நிலையில் உள்ள வழிபாடு மரபுகளைப் பின்பற்றுபவர்களும் ஆங்காங்கே வாழ்ந்துவருகின்றனர்.

தொன்மைச் சமயத்தின் தோற்றமும் கடந்துவந்த பாதையும்

மந்திரம்தான், மனித இனத்தின் தொன்மை வழிபாட்டுப் பண்பாட்டின் துவக்கப் புள்ளியாக இருக்கவில்லை. மந்திரம், தொன்மை வழிபாட்டுப் பண்பாட்டின் ஒரு பகுதியே தவிர முழுமையானது அல்ல. மனிதன், சமயங்கள் கைவிடும்பொழுதெல்லாம் மந்திரத்தை இன்னும் கெட்டியாகக் கைப்பற்றுகிறான் என்பது வெளிப்படையானது. அதுவே மனித இனத்தின் மீது மந்திரம் கொண்டுள்ள வீரியமான தாக்கத்தைக் கட்டவல்லதாகவும் உள்ளது. தொன்மைச் சமய காலகட்டத்தில், மனிதன் கடந்துவந்த நம்பிக்கைகளும், அதன்வழி மேற்கொண்ட வழிபாடுகளும் பலவகையாக இருக்கின்றன. மந்திரத்தை அதன் உள்ளார்ந்த அர்த்தத்தில் புரிந்துகொள்ள, இவை குறித்து ஒரு பருந்துப் பார்வையேனும் அவசியமாகிறது.

அவை ஆவி வழிபாடு, உயிரியக் கோட்பாடு, மனா நம்பிக்கை, இயற்கை வழிபாடு, குலக்குறி வழிபாடு, போலிப் பொருள் வழிபாடு, விலக்கு கோட்பாடு, மூதாதையர் வழிபாடு போன்ற பல கோட்பாடுகளாக விரிந்து பரந்து வளர்ந்துள்ளன. பிற்காலத்தில், பல தெய்வ வழிபாடும், ஒரு தெய்வ வழிபாடும் எழுச்சியுற்றன. வரலாற்றுக் காலத்தில், சமயங்கள் கடவுள் மறுப்புக் கோட்பாடுகளை முன்நிறுத்தியும் எழுந்தன. அங்கும் மந்திரமும், வழிபாடு சார்ந்த தொன்மைப் பண்பாட்டின் கூறுகளும் சந்தேகத்துக்கு இடமின்றி இடம்பெற்றுள்ளதைக் காணமுடிகிறது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com