அத்தியாயம் 68 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடி

இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் உள்பட பல சமயம் சார்ந்த மக்களிடையே வேரூன்றியுள்ள ‘அதிர்ஷ்டம்’ என்ற நம்பிக்கை, உயிரியம் கோட்பாடு சார்ந்ததே. அதிர்ஷ்டம், மனா ஆற்றலின் அனைத்து நன்மைகளையும் பெற்றுள்ளது.

சென்ற அத்தியாயத்தில் விவரிக்கப்பட்ட, மனித இனத்தில் ஆவி வழிபாட்டின் செல்வாக்கு என்பது உலகளாவிய தன்மை கொண்டது. ஆவி இனத்தைச் சார்ந்ததாக “தாவரம் மற்றும் மிருகங்களின் ஆவிகள், ஆத்மாக்கள், பேய்கள், துஷ்டபூதங்கள், துர்தேவதைகள், அரேபியக் கதைகளில் கூறப்பட்டுள்ள விநோத சக்தியுடைய பூதங்கள் போன்ற உயிரினங்கள், ஸ்காண்டிநேவியன் புராணக் கதைகளில் கூறப்பட்டுள்ள குறும்பூதங்கள், தேவதைகள், சிறுதேவதைகள், மிகச்சிறிய தேவதைகள், ஐரிஷ் மரபுக் கதைகளில் கூறப்பட்டுள்ள தேவதைகள், தேவதைகள், பூதங்கள், பேய்கள், தேவதைகள், கடவுளர்” என ஹிபெல் பட்டியல் செய்து காட்டுவார்.*1

பிரான்ஸ் நாட்டின் மானுடவியலாளர் பெய்சன் (Bouisson Maurice) என்பவர், “ஆவியுலகக் கருத்தோட்டங்கள் செல்வாக்கு செலுத்தும் இடங்களில் ‘மந்திரம்’ தோன்றுகிறது” என்பார்.*2

உயிரியம் (எ) மனாயியம் (Animatism (a) Mana)

ஆவியியத்துக்குப் பிறகு தொன்மைச் சமயத்தின் தோற்றம் குறித்து எழுந்த இரண்டாவது கொள்கை, உயிரியம் (Animatism) ஆகும். இது, மனாயியம் அல்லது மனா கோட்பாடு (Manaism) என்றும் அழைக்கப்படும். இக்கோட்பாட்டை ஆர்.ஆர்.மாரட் என்பவர் முன்வைத்தார். இப்பெயரும், கோட்பாடும் மெலனீசிய மக்களிடம் மாரட் ஆய்வு செய்தபொழுது, அவர்கள் கொண்டிருந்த மனா நம்பிக்கை அடிப்படையில் இருந்து உருவாக்கப்பட்டதாகும்.*3

“மனா” என்னும் மெலனீசியச் சொல்லுக்கு ‘உயிர்ப்புத்தன்மை உடைய ஆற்றல்’ என்பது பொருள். மனா என்பது ஒரு ஆற்றல் எனக் கருதுவர். “மனா என்பது இயற்கையாக அமைந்துள்ள திறனைப் பெருமளவு மிகுதிப்படுத்தி, அதன்மூலம் சாதாரண மனிதர்கள் சாதிக்க இயலாததைச் செய்யவைக்கும் ஒரு ஆற்றலாகும்”. மனா ஆற்றல், மனித சக்திக்கு அப்பாற்பட்ட அனைத்துச் செயல்களையும் இயக்கவல்லது என்றும், இதன் தோற்றம் மனித உணர்வுகளுக்குக்கு அப்பால் காணப்பட்டாலும், செயல்திறனாகவோ, அசாதாரணமான மனிதன் செயல்களின் வழியாகவோ வெளிப்படும் இயல்புடையது என்றும் கருதப்படுகிறது. இவ்வாற்றலை நம்பும் மெலனீசிய மக்கள், மனா ஆற்றல், உலகம் முழுவதும் பரவலாக நிறைந்திருந்தாலும், சில மனிதர்களிடமும் பொருள்களிடமும் மட்டுமே மிகுதியாகச் சேரவல்லது எனக் கருதுகின்றனர்.

மனா ஆற்றலை, அமெரிக்கச் சமவெளிப் பழங்குடி மக்களும், வடஅமெரிக்காவின் அல்காகுயின் மொழி பேசுவோரும் “வாக்கன்”, “மனிட்டாவ்” என அழைக்கின்றனர். வடஅமெரிக்க இந்தியரில் சிலர் இதனை “ஒரணடா”, “ஆரன்”, “வக்குவா” எனவும் குறிப்பிடுகின்றனர். இந்திய மானிடவியலாளர் டி.என். மஜூம்தார், மனா நம்பிக்கைக்கு ஒத்த “போங்கா” நம்பிக்கை, வடஇந்தியப் பழங்குடிகளான ஹோ, முண்டர் பழங்குடிகளிடையேயும், சோட்டா நாக்பூர்ப் பகுதி பழங்குடிகளிடையேயும் போங்கோ நம்பிக்கை நிலவுவதாக இவர் குறிப்பிடுகின்றார். ஆவிகளும் அவற்றின் செயல்களுமே மனிதர்களை இயக்குகின்றன என்னும் ஆவியியத்தில் இருந்து மாறுபட்டதே போங்கா நம்பிக்கை என்பார்.{pagination-pagination}

இதனை, “போங்காயியம்” (Bongaism) என்று குறிப்பிடும் இவர், “போங்கா உயிர்ப்புச் சக்தி கொண்டதும், வடிவமற்றதுமாக வெளிப்படும் தன்மையுடையது. தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் உயிர் கொடுக்கக்கூடியது. வளர்ச்சியைத் தூண்டக்கூடியது. மழை, புயல், வெள்ளம், கடும்குளிர், தனிமனிதர்களுக்கு இடையில் காணப்படும் ஆற்றல் போன்றவற்றுக்குக் காரணமாக அமைவது” என இந்நம்பிக்கையை விளக்குகிறார். இக்காரணங்களால், மெலனீசிய மக்களின் மனா நம்பிக்கைக்கு இணையானது போங்கா நம்பிக்கை என்கிறார் மஜூம்தார்.*4

மனா ஆற்றல் குறித்த நம்பிக்கைகள்

மனா ஆற்றல் குறித்த நம்பிக்கைகளைக் கீழ்க்கண்டவாறு பட்டியலிட்டுக் காணமுடியும்.

  1. ஒருவர் அல்லது ஒரு பொருளின் சிறப்புக்கும் தகுதிக்கும் காரணமாக அமையும் ஆற்றல்.
  2. பொருள் ஆற்றல் என்றோ மனித ஆற்றல் என்றோ தனித்தனி ஆற்றல் இல்லை. 
  3. ஒரே இடத்தில் நிரந்தரமாக தங்காது இடம்பெயரும் தன்மைகொண்ட ஆற்றல்
  4. உயிர்ப்பொருளில் இருந்து ஜடப்பொருளுக்கும்; ஜடப்பொருளில் இருந்து உயிர்ப்பொருளுக்கும் இடம் பெயரும் தன்மை கொண்டது.
  5. சிறந்த ஆற்றல் அல்லது சிறப்பு குறைந்த ஆற்றல் என தம்முள் ஏற்றத்தாழ்வு வேறுபாடற்றது.
  6. தம்முள் ஏற்றத்தாழ்வு அற்ற பண்புகொண்ட ஆற்றல். அதேசமயத்தில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும் ஆற்றல் கொண்டது.
  7. அவரவருக்கு / அததற்கு தேவையான அளவு உண்டாகும் ஆற்றல்.
  8. எதிரிகள் அழிவதற்குக் காரணமானது.
  9. ஆபத்துகள் ஏற்படுவதற்கும், ஏற்படாமல் இருப்பதற்கும் காரணமாக இருப்பது.
  10. பயிர்கள் நன்றாக விளைவதற்குக் காரணமாக இருக்கும் ஆற்றல்.
  11. மனாவோடு ஒன்றி இருக்க வேண்டும்.
  12. மனாவும் விலக்கும் (Taboo).     

இவற்றை விரிவாகக் காணுவதன் மூலம், உயிரியமும் மனித இனத்தில் இன்றுவரை செலுத்திவரும் தாக்கத்தைக் காணமுடியும். தொல்சமய நம்பிக்கையின் ஒரு பகுதியை உருவாக்கிய கோட்பாடு, பழங்குடிகள் மட்டுமல்ல, நவீன சமூகத்திலும் தன் சுவடுகளைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது.

1. ஒருவர் அல்லது ஒரு பொருளின் சிறப்புக்கும் தகுதிக்கும் காரணமாக அமையும் ஆற்றல்

இந்நம்பிக்கையின்படி, தலைவர்கள், சமயக் குருமார்கள், அசாதாரணத் திறமை பெற்றுள்ளவர்கள், பெரும் புகழ் பெற்றுள்ள மனிதர்கள், மிகுந்த வலிமை பெற்றுள்ளவர்கள், கூரிய பார்வை பெற்றவர்கள் சிறப்புற்றிருப்பதற்குக் காரணம், அவர்களிடம் மனா ஆற்றல் உள்ளதே. இதனைப்போலவே, மனா ஆற்றலின் காரணமாகவே, கலைநுட்பம் மிகுந்த உருவாக்கும் திறமையைக் கைவினைஞர்கள் பெறுகிறார்கள்; கவிஞர்கள், புகழ்பெற்ற கவிதைகள் இயற்றுகிறார்கள்; பாடகர்கள், நல்ல குரல் வளம் பெற்று பாடுகிறார்கள். மேலும், சராசரிக்கு மேலாக ஒரு செயலில் திறமையைக் காட்டும் ஒருவன், மனா ஆற்றல் காரணமாகவே அத்தனித்துவமான செயலைப் புரிகிறான். உதாரணமாக, படகோட்டுவதில், போரிடுவதில் தனித்துவம் பெற்றிருத்தல். இவ்வாறே, இயல்பாகக் காணப்படாத மிகப்பெரிய பாறைகளும், இயற்கைப் பொருட்களும் மனா ஆற்றலைப் பெற்றுள்ளதாலாலேயே  அவ்வாறு உள்ளன. ஆக, உயிர்ப்பொருள், ஜடப்பொருள் எதுவாயினும், அவற்றின் சிறப்பியல்புக்கு மனா ஆற்றலைப் பெற்றிருத்தலே காரணம்.

2. பொருள் ஆற்றல் என்றோ மனித ஆற்றல் என்றோ தனித்தனி ஆற்றல் இல்லை

இந்நம்பிக்கையின்படி, “மனாவில் பொருள் மனா (object mana) அல்லது மனிதர் மனா (person mana) என்று தனித்தனி வேறுபட்ட ஆற்றல் இல்லை”. அதாவது, மனா ஆற்றலில் உயிர்ப்பொருள் ஆற்றல் என்றோ, சடப்பொருள் ஆற்றல் என்றோ வேறுபாடு இல்லை என்பதாகும்.

3. ஒரே இடத்தில் நிரந்தரமாக தங்காது இடம்பெயரும் தன்மைகொண்ட ஆற்றல்

இந்நம்பிக்கையின்படி, “மனா ஆற்றல் நிலையாக ஒரு இடத்தில் இருக்கக்கூடிய ஒன்றல்ல; இந்த ஆற்றல் ஒருவரை விட்டு மற்றொருவரிடம் செல்லும். இவ்வாற்றல், இவ்வாறு எந்த நேரத்திலும் வெளியேறலாம். ஜடப்பொருள் பெற்ற மனா ஆற்றலும் இத்தன்மையைப் போன்றதே.”{pagination-pagination}

4. உயிர்ப்பொருளில் இருந்து ஜடப்பொருளுக்கும்; ஜடப்பொருளில் இருந்து உயிர்ப்பொருளுக்கும் இடம் பெயரும் தன்மை கொண்டது

இதன்படி, ஓரிடத்தில் நிலையாகத் தங்காத குணத்தின் காரணமாக, ஒன்றில் இருந்து வெளியேறும் மனா ஆற்றல், ஒரு மனிதனிடமிருந்து மற்றொரு மனிதனுக்கே செல்ல வேண்டும் என்பதில்லை; மனிதனிடமிருந்து பொருளுக்கும், பொருளில் இருந்து மனிதனுக்கும் இடம்பெயரும் தன்மை கொண்டது.

5. சிறந்த ஆற்றல் அல்லது சிறப்பு குறைந்த ஆற்றல் என தம்முள் ஏற்றத்தாழ்வு வேறுபாடற்றது

இம்மனா ஆற்றலில், சிறந்த மனா அல்லது சிறப்பு குறைந்த மனா என ஏற்றத்தாழ்வு இல்லை. இந்த ஆற்றலைப் பெற்றுள்ள மனிதர்களோ, பொருள்களோ வெவ்வேறான நிலைகளை, தனிச்சிறப்புகளை அடைந்துள்ளதன் மூலம், இந்த ஆற்றலில் ஆற்றல் வேறுபாடுகள் உண்டு என எண்ணக் கூடாது. ஒருவர் அல்லது ஒரு பொருள் அடையும் வெவ்வேறான நிலைக்கு வேறு காரணம் உண்டு.     

6. தம்முள் ஏற்றத்தாழ்வு அற்ற பண்புகொண்ட ஆற்றல்; அதேசமயத்தில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும் ஆற்றல் கொண்டது

இந்நம்பிகையின்படி, இந்த ஆற்றலைப் பெற்றுள்ள மனிதர்களோ, பொருள்களோ, வெவ்வேறு வகையில் தனிச்சிறப்பு பெற்றுள்ளதன் மூலம், இந்த ஆற்றலில் வேறுபாடு இல்லை என்று ஆகிறது. ஆனால், இவ்வாற்றல் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கக்கூடியது. அதாவது, இவ்வாற்றல் சமுதாயத்தில் ஒருவனது ஏற்றத்தாழ்வுகளுக்கும் காரணமாக அமைகிறது எனவும் நம்புவது குறிப்பிடத்தகுந்தது. 

7. அவரவருக்கு / அததற்கு தேவையான அளவு உண்டாகும் ஆற்றல்

ஒரு மனிதனின் அல்லது ஒரு பொருளின் தனிச்சிறப்புக்குக் காரணம், அவர் / அது சார்ந்த சமுதாய அமைப்போடு இணைந்தது. அதாவது, ஒரு சமுதாயத்தில் மக்களிடையே நிலவும் படிநிலை அமைப்புக்கு ஏற்ப, இந்த ஆற்றல் அவரவர்களிடத்தில் வெளிப்படுகிறது. இதன் காரணமாக, பொதுமக்களைவிட ஒரு சமூகத் தலைவர் மிகுந்த மனா ஆற்றலையும், போர்ப்படையைச் சேர்ந்தவர் அத்துறையினைச் சேராதவரைவிட மிகுந்த மனாவையும்,  உயர் குடியினரைவிட அரசர் மிகுந்த மனாவையும், சாதாரண மக்களைவிட சமயக் குருமார்கள் மிகுந்த மனாவையும் பெறமுடியும். அதாவது, ஒருவரிடத்தில் மனா ஆற்றலின் வெளிப்பாடு என்பது அந்தச் சமுதாயத்தின் கட்டமைப்போடு ஒத்திசைவு பெற்று, அவரவருக்குத் தேவையான அளவு உண்டாகிறது. இதன்படி, சமுதாய ஏற்றத்தாழ்வுக்கு மனாவே காரணமாகிறது.

இந்நம்பிக்கையின்படி, ஒரு குறிப்பிட்ட சமூகக் குழுவினரிடம் மனா ஆற்றல் மரபுவழியில் தொடர்ந்து நிலைபெற்றுள்ளது என்றும், அவர்களின் வழிவருவோரும் மிகுந்த மனா ஆற்றலைப் பெருபவர்களாகப் பிறக்கிறார்கள். இந்நம்பிக்கை, சமுதாயத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளுக்குக் காரண காரணத்தை வலுப்படுத்துவதோடு, இந்நாள்வரை ஒருவர் பெற்றுள்ள தகுதியைத் தக்கவைத்துக்கொள்ளவும் உதவுகிறது.

இந்நம்பிக்கையின் வெளிப்பாடாகவே, சில அரசகுடியினர் தம் குடும்பத்தாருடன் மட்டும் மணஉறவு ஏற்படுத்திக்கொள்வதைக் காணமுடியும். இவ்வகை மணஉறவு, “அரசகுடி தகாப்புணர்ச்சி” (Royal incest) என்று குறிப்பிடப்படும். தம் குடும்பத்தார் பெற்றுள்ள மனா ஆற்றல், பிறருடன் கலப்பதால் குறைந்துவிடும் என்ற அச்சமே இவ்வகை மணஉறவுக்குக் காரணமாகும். அகமண (Endogamy) வயப்பட்ட இவ்வகைத் திருமண முறையை, பண்டைய பெரு, இன்கா, ஹவாய், எகிப்திய அரசகுடியினர் கைக்கொண்டிருந்தனர். இவ்வாறே, மறக்குடியினர், தெய்வ வழிபாடு செய்வோர் தங்களுக்கென்று, அதாவது தம் குடியினருக்குத் தனித்தனியான மனா ஆற்றல் உண்டென நம்பிக்கை கொண்டவர்களாக உள்ளனர்.{pagination-pagination}

8. எதிரிகள் அழிவதற்குக் காரணமானது

ஒருவரிடைய எதிரி அழிவதற்கு, அவர் பெற்றுள்ள மனா ஆற்றலே காரணம் என்பது, மனா நம்பிக்கைகளில் ஒன்றாக உள்ளது.

9. ஆபத்துகள் ஏற்படுவதற்கும், ஏற்படாமல் இருப்பதற்கும் காரணமாக இருப்பது

ஒருவருக்கு ஏற்படும் ஆபத்துகளும், ஆபத்துகளில் இருந்து காக்கப்படுவதும், இவ்வாற்றலின் வழியேதான் நடக்கிறது.

10. பயிர்கள் நன்றாக விளைவதற்குக் காரணமாக இருக்கும் ஆற்றல்

மனா ஆற்றல் நம்பிக்கை கொண்டுள்ள நியுகினித் தீவில் வசிக்கும் தோபு (Dobu) மக்கள், பயிர்கள் மிகுந்த விளைச்சல் தருவதற்கும் மனா ஆற்றலே காரணம் எனக் கருதுகின்றனர். இந்நம்பிக்கை, மெலனீசிய விவசாயிகளிடம் வேறுவகையில் வெளிப்படுகிறது. தொடர்ந்து பல ஆண்டுகள் மரவள்ளிக்கிழங்கை பயிரிடும் விவசாயி ஒருவருக்கு, தொடர்ந்து அப்பயிர் நல்ல விளைச்சல் தராமல் போகும்பொழுது, அவர் ஒரு அசாதாரமாண கல்லைக் கொண்டுவந்து அவரது தோட்டத்தில் நட்டுவைப்பார். அக்கல், மனா ஆற்றலைப் பெற்றுள்ளது என்று நம்பிக்கை கொள்வர். அதன்பின்னர், அடுத்தடுத்த ஆண்டுகளில் நல்ல விளைச்சல் கண்டால், அதன்மூலம், அவர் கடந்த ஆண்டுகளில் நல்ல விளைச்சல் பெறாமல்போனதற்கான காரணத்தை அவர் உறுதிபடுத்திக்கொள்வார். மனா ஆற்றல் பெற்ற கல்லை தன் வயலில் நட்டுவைத்ததன் மூலமே, தற்பொழுது நல்ல விளைச்சலைப் பெற்றதாக அவர் நம்புவார். அவ்வாறே, ஒரு நீச்சல் வீரரோ, திடீரெனப் பெரும் ஆற்றலைப் பெற்று தன்னையொத்த மற்ற வீரர்களைக் காட்டிலும் சிறந்து விளங்கும்பொழுது, அந்த வெற்றி மனா ஆற்றல் மூலம் கிடைத்தது என நம்புகிறார்.

தோபு பழங்குடியினர்

11. மனாவோடு ஒன்றி இருக்க வேண்டும்

மனா ஆற்றல் நன்மை தரக்கூடியது போன்றே, ஆபத்தையும் விளைவிக்கக்கூடியது என்பது விளக்கப்பட்டது. ஒருவன் தான் பெற்றுள்ள மனா ஆற்றலோடு தன்னை தக்கவைத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு தக்கவைத்துக்கொள்ளவில்லை என்றால், அவ்வாற்றல் அவனுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடும் என்பதும், இந்நம்பிக்கை கொண்டோரிடம் நிலவுகிறது.

12. மனாவும் விலக்கும் (Taboo)

பழங்குடித் தலைவன் ஒருவன் பயன்படுத்தும் பொருள்களை சாதாரண மக்கள் தொடக் கூடாது. அதனாலேயே, அம்மக்கள் ‘விலக்கு’ (Taboo) என்னும் கருத்தாக்கம், மனா கோட்பாடு தொடர்புடையதாக உள்ளது. விலக்கு என்னும் சொல்லுக்கு ‘‘புனிதத்தம்மை”, “தடை செய்யப்பட்டது” என்ற பொருள் உண்டு. சிலைகள், கோயில்கள், கோயில் பொருட்கள், உயர்குலத்தவர்கள், கடவுளின் வாகனங்கள், இன்னும் புனிதம் வாய்ந்தவையாகக் கருதப்படும் பிற பொருட்கள் அனைத்தும், சாதாரண மக்கள் தொடுவதற்குத் தடை செய்யப்பட்டுள்ளது, இக்கொள்கை சார்ந்த நம்பிக்கைகளாகும்.{pagination-pagination}

மனா ஆற்றலின் இன்றைய வடிவமும், ஆவிகளில் இருந்து வேறுபடுதலும்

இன்று இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் உள்பட பல சமயம் சார்ந்த மக்களிடையே வேரூன்றியுள்ள ‘அதிர்ஷ்டம்’ என்ற நம்பிக்கை, உயிரியம் கோட்பாடு சார்ந்ததே. அதிர்ஷ்டம், மனா ஆற்றலின் அனைத்து நன்மைகளையும் பெற்றுள்ளது. அதிர்ஷ்டம் என்னும் ஆற்றல் ஆவிகளைச் சாராதது, உயிர்ப்புச் சக்தி கொண்டது, உருவமற்றது, இயற்கைக்கு அப்பாற்பட்டது. இந்த ஆற்றல், மனித மனித சக்திக்கு அப்பாற்பட்ட அனைத்துச் செயல்களையும் இயக்கவல்லது. சமுதாயத்தில், உடனொத்தவர்களைக் காட்டிலும் சிலர் மிகப்பெரும் திறனப் பெற்றுள்ளதற்கு அதிர்ஷ்டமே காரணமென நம்புகின்றனர். ஆகவே, அதிர்ஷ்டத்தை “இந்திய மனா” அல்லது ‘‘தமிழக மனா” என்று கூறுவதில் தவறில்லை. இந்த வகையில், அதிர்ஷ்டம் என்னும் கோட்பாடு மனா கோட்பாட்டோடு பெருமளவு பொருந்துவதாக உள்ளது.*5      

(தொடரும்)

மேற்கோள் விளக்கம்

1. இரா.சீனிவாசன், சக்தி வழிபாடு, மேற்கோளில் இருந்து, ஜெயகுமாரி ஸ்டோர்ஸ், நாகர்கோயில், 1975. 

2. Bouisson Maurice, Magic its Rites and History, Rider & Co, London, 1960, p.14.

3. R.R. Marret, The Threshold of Religion, Methuen & Co, London, 1914,

4. D.N. Majumdar and T.N. Madan, An Introduction to social Anthropology, Asia Publishing house, 1961, pp. 156 & 166-167.

5. பக்தவச்சல பாரதி, பண்பாட்டு மானிடவியல், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2014 பதி, ப.504.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com