சம்மர் வந்தாச்சே போகலாமா ஈரோடு இன்பச் சுற்றுலா பார்ட்- 2

தமிழகத்தில் விளையும் மஞ்சளில் பாதிக்கு மேல் இந்த மாவட்டத்திலேயே விளைகிறது. மேலும் இந்தியாவின் மிகப்பெரிய மஞ்சள் சந்தையாக ஈரோடு மாநகரம் திகழ்கிறது.
சம்மர் வந்தாச்சே போகலாமா ஈரோடு இன்பச் சுற்றுலா பார்ட்- 2

வனவளம்

தமிழகத்திலேயே ஈரோடு மாவட்டத்தின் வனப்பரப்பே மிகப் பெரியது. மொத்த நிலப்பரப்பில் 27.7% காடுகளாக உள்ளது. சத்திய மங்கலம் சரகம், தலமலை சரகம், பர்கூர் சரகம், அந்தியூர் சரகம் என நான்கு வனக்கோட்டங்கள் இங்கு இருக்கின்றன. 

இந்த வனப்பகுதியில், சந்தனம், வாகை, தேக்கு, ரோஸ்வுட், மருது, வேங்கை, கருங்காலி, ஈட்டி, புளி, மூங்கில் உள்ளிட்ட எண்ணற்ற மரவகைகள் உள்ளன. தமிழகத்தில் கிடைக்கும் சந்தனத்தில் மூன்றில் ஒரு பகுதி இம்மாவட்ட வனப்பகுதிகளிலேயே கிடைக்கிறது. சத்தியமங்கலத்தில் தமிழக அரசின் சந்தன மரக்கிடங்கு ஒன்றும் உள்ளது. 

மேலும் இக்காடுகளிலிருந்து குங்கிலியம், மட்டிப்பால், தேன், சிகைக்காய், கொம்பரக்கு, பட்டை வகைகள், கடுக்காய், புங்கம் விதை, ஆவாரப்பட்டை, உள்ளிட்ட பலவகை மருத்துவ குணம் கொண்ட பொருட்களும் கிடைக்கின்றன. இவ்வனப்பகுதிகளில் புலி, சிறுத்தை, சிறுத்தைப்புலி, யானை, கரடி, காட்டெருமை, நீர்நாய், புள்ளிமான், கடமான், குள்ளமான், செம்புள்ளி பூனை, போன்ற 35வகைப் பாலூட்டிகளும், மீன் பிடி கழுகு, மஞ்சள் திருடிக் கழுகு உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பறவை இனங்களும், பாம்பு, முதலை போன்ற ஊர்வனவும் வாழ்கின்றன. 

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்

சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள 1,411ச.கி.மீ. பரப்பளவு கொண்ட காடு புலிகள் காப்பகமாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதான் தமிழகத்தின் மிகப்பெரிய சரணாலயமாகும். இதனை சுற்றிலும் கர்நாடகத்தின் கொள்ளேகால் வனக்கோட்டம், பிலகிரி ரங்கஸ்வாமி கோயில் காட்டுயிர் சரணாலயம், ஈரோடு வனக்கோட்ட காட்டுப் பகுதிகள் உள்ளன. இதனால் இவ்வனப்பகுதி யானைகளின் இடப்பெயர்வுக்கு மிகவும் வசதியாகவும், உதவியாகவும் இருக்கிறது. 

விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு
ஈரோடு மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 35% விவசாய நிலங்கள்தான். இங்கு நெல், சோளம், எள், புகையிலை, பருத்தி, தென்னை, வாழை, போன்றவை அதிகமாகப் பயிரிடப்படுகிறது. அந்தியூர் தாலுக்காவில் வெற்றிலை சாகுபடியும் குறிப்பிடத்தக்கது. 

மஞ்சள் சாகுபடி மற்றும் சந்தை


தமிழகத்தில் விளையும் மஞ்சளில் பாதிக்கு மேல் இந்த மாவட்டத்திலேயே விளைகிறது. மேலும் இந்தியாவின் மிகப்பெரிய மஞ்சள் சந்தையாக ஈரோடு மாநகரம் திகழ்கிறது. இதனால் இந்நகரம் மஞ்சள் நகரம் என்றும் வர்ணிக்கப்படுகிறது. இந்தச் சந்தையில்தான் மஞ்சளுக்கான விலை நிர்ணயிக்கப்படுகிறது. 

பட்டுப்பூச்சிக் கூடு
கோபிச்செட்டிபாளையத்தில் பட்டு நூல் எடுப்பதற்கு அவசியமான பட்டுப் பூச்சியின் கூட்டுப் புழுக்கள் வளர்க்கப்படுகின்றன. இதற்காக பட்டுப்பூச்சிகளின் உணவான முசுக்கட்டை மரம் அதிகமாகப் பயிரிடப்படுகின்றன. கோபியில் தமிழக அரசின் பட்டு ஆராய்ச்சி நிறுவன மையமும் இருக்கிறது. 

நெசவுத்தொழில்


கைத்தறி மற்றும் விசைத்தறி மூலம் உற்பத்தி செய்யப்படும் துணி வகைகளால் ஈரோடு மாவட்டம் நாடு முழுவதும் பரவலாக அறியப்பட்டுள்ளது. பவானி, சென்னிமலை, அந்தியூர், பெருந்துறை, ஈரோடு பகுதிகளில் அதிக அளவில் துணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கிருந்து நாட்டின் பல பகுதிகளுக்கும் புடவைகள் வேட்டி, துண்டு, லுங்கி, ஜமுக்காளங்கள், தரைவிரிப்புகள், மற்றும் ரெடிமேட் ஆடைகள் அனுப்பப் படுகின்றன. 
ஜவுளிகளுக்கான சந்தையில் இந்தியாவில் ஐந்தாவது இடத்தில் ஈரோடு மாவட்டம் உள்ளது. இங்குள்ள "கனி மார்க்கெட்' உலகின் பெரிய ஜவுளி சந்தைகளில் ஒன்றாகும். பட்டுநூல் உற்பத்தி மற்றும் பட்டுத் துணி நெய்தலும் கோபிச்செட்டிபாளையம், தாளவாடி, சத்தியமங்கலம் பகுதிகளில் நடைபெறுகிறது. பவானி நகரம் ஜமுக்காளங்களுக்குப் புகழ் பெற்றது! 

பிற தொழில்கள்
அரிசி ஆலைகள், சர்க்கரை ஆலைகள், எண்ணெய் ஆலை, காகித ஆலைகள், தோல் பதனிடுதல், வேளாண்மைக் கருவிகள், மற்றும் இயந்திரங்கள் தயாரித்தல், பருத்தி நூற்பாலைகள், சாயப்பட்டறைகள், மரம் அறுக்கும் தொழிற்சாலைகள், பித்தளைப்பாத்திங்கள் தயாரித்தல், பால் பதனிடுதல், பால் பொருட்கள் தயாரித்தல் போன்றவை இம்மாவட்டத்தின் பிற முக்கியமான தொழில்களாகும். இம்மாவட்டத்தில் ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் அந்தியூர் குதிரைச் சந்தையும், கண்ணபுரத்தின் மாட்டுச் சந்தையும் புகழ் பெற்றவை. 

புகழ் பெற்ற வழிபாட்டுத் தலங்கள்

பவானி சங்கமேஸ்வரர் ஆலயம்


பவானியும், காவிரியும் கூடுமிடத்தில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோயில் சைவ, வைணவ ஒற்றுமைக்குச் சான்றாக சிவன் (சங்கமேஸ்வரர்) விஷ்ணு (ஆதி கேசவ பெருமாள்) சந்நிதிகள் ஒருங்கே அமைந்துள்ளன. 
இக்கோயிலில் பிரிட்டிஷ் கலெக்டர் வில்லியம் காரோ அவர்களால் காணிக்கையாக அளிக்கப்பட்ட கட்டில் ஒன்று உள்ளது. 
இக்கூடுதுறையில் அமிர்தா நதி பூமிக்கு அடியில் சேர்வதாக ஐதீகம். அதனால் வட இந்தியாவின் திரிவேணி சங்கமத்திற்கு இணையானதாக கருதப்படுகிறது. இக்கூடுதுறை சுற்றுலாத் தலமாகவும் உள்ளது. 

கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில்


மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் பன்னாரி கிராமத்தில் இந்த கோயில் உள்ளது. புகழ் பெற்ற இக்கோயிலுக்கு அண்டை மாநிலத்திலிருந்தும் மக்கள் வருகிறார்கள். இங்கு நடக்கும் தீமிதித் திருவிழா பிரசித்தி பெற்றது. 

ஜைன மதக் கோயில்
ஈரோட்டிற்கு 25 கி.மீ. தூரத்தில் விஜய மங்கலம் என்ற இடத்தில் 1800 ஆண்டுகளுக்கு முன்பு "கொங்கு வேளீர்' மன்னரால் கட்டப்பட்ட ஜைன மதத்தினருக்கான கோயில் உள்ளது.

சுற்றுலாத் தலங்கள்

பவானி சாகர் அணை


தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணை இது! 32 மீ உயரம் கொண்ட இந்த அணையில் 32.8 டி.எம்.சி தண்ணீரைத் தேக்க முடியும். இந்த அணையிலிருந்து வெளியேறும் நீரில் மின்சாரம் எடுக்கப்பட்டபின் 125 கி.மீ. நீளம் கொண்ட "கீழ் பவானி திட்டக் கால்வாய்' மூலம் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் திறந்து விடப்படுகிறது. 
பசுமையான மலைகள் சூழ்ந்த இயற்கை எழில் மிகுந்த சுற்றுலாத் தலமான இந்த அணைப்பகுதியில் அழகிய பூங்கா ஒன்றும் உள்ளது.

கொடிவேரி அணை
மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் பல குன்றுகளுக்கு இடையே பச்சைப் பசேல் என்று இயற்கை எழில் சூழ காட்சி தரும் கோபிச்செட்டி பாளையத்தில் இருந்து 13 கி.மீ. தூரத்தில் இந்த அணை உள்ளது. 
மனதுக்கு இதமான சுற்றுலாத் தலமாக இந்த அணை உள்ளது. 17ஆம் நூற்றாண்டில் மைசூர் மஹாராஜாவால் பவானியின் குறுக்கே இது கட்டப்பட்டுள்ளது.

வெள்ளோடு பறவைகள் சரணாலயம்


ஈரோட்டிலிருந்து 13 கி.மீ. தூரத்தில் வெள்ளோடு சரணாலயம் உள்ளது. பெரிய ஏரியைச் சுற்றி (200 ஏக்கர்) அடர்ந்த புதர்களும், பெரிய மரங்களும் கொண்ட இப்பகுதிக்கு நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை பல வகையான வெளிநாட்டுப் பறவைகளும் வலசை வருகின்றன. ஏரியைச் சுற்றி பல கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

ஈ.வெ.ரா பெரியார் நினைவு இல்லம்


ஈரோடு மாநகரில் தந்தை பெரியார் பிறந்து வளர்ந்த அவருடைய இல்லம் தமிழக அரசால் நினைவு இல்லமாக பராமரிக்கப்படுகிறது. நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த இல்லத்தில் பல புகைப்படங்கள், பெரியார் பயன் படுத்திய பொருட்கள் போன்றவை பாதுகாக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றன. 

தீரன் சின்னமலை நினைவு மண்டபம்
கிழக்கிந்திய கம்பெனியாரை எதிர்த்து ஆரம்ப கால சுதந்திரப் போர்களில் போர் புரிந்தவர்.திருநெல்வேலி பாளயக்காரர்களுக்கும், கிழக்கிந்தியக் கம்பெனியாருக்கும் இடையே 1799 முதல் 1805 வரை நடந்த தொடர் போர்களில் தீரன் சின்னமலை முக்கிய தளபதியாகச் செயல்பட்டவர்! இவர் நினைவாக அரசனூரில் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. 
மலைகளையும், வனங்களையும், பசுமையான விவசாய நிலங்களையும் விரும்பாதார் யார்? ஈரோடு மாவட்டம் ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாகும்!

மேலும் சில தகவல்கள்
தொல்லியல் துறையின் அகழ்வு ஆய்வில் நொய்யல் ஆற்றின் கரையில் கொடுமணல் என்னும் இடத்தில் பண்டைய மக்கள் வசிப்பிடம் கண்டறியப்பட்டது. சென்னிமலைக்கு 15கி.மீ. தூரத்தில் உள்ள இவ்விடத்தில் கி.மு. 12ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 4ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் மக்கள் வாழ்ந்திருக்கலாம் என கருதப்படுகிறது. சங்க இலக்கிய நூலான பதிற்றுப் பத்தில் இவ்வூர் "கொடு மணம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 
இங்கு பண்டைய தமிழ் பிராமி எழுத்து கொண்ட பானைகள், முதுமக்கள் தாழிகள், பாசி மணிகள், பல வகையான வண்ணக்கற்கள் (நீலமணி, மரகதம், வைடூர்யம் போன்றவை) இரும்பில் செய்யப்பட்ட வாள், ஈட்டி போன்ற பொருட்களும் கிடைத்துள்ளன. மேலும் இங்கு கண்டெடுக்கப்பட்ட ரோமாபுரி நாணயங்கள் மூலம் இவர்களுக்கு பிற நாடுகளுடன் வணிகத் தொடர்பு இருந்துள்ளதையும் அறிந்து கொள்ள முடிகிறது. 

இசைக் கல்வெட்டு
அரசனூர் அருகே தலவு மலை என்ற சிறுமலையில் கி.மு. 4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்தில் செதுக்கப்பட்டுள்ள இசைக்குறிப்புகள் காணப்படுகின்றன. 

தொகுப்பு: கே.பார்வதி, 
திருநெல்வேலி டவுன். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com