தலைநகரில் வெப்பநிலையில் மாற்றம்: நீர்ச்சத்துக் குறைபாடு அதிகரிப்பு

தில்லியில் பல்வேறு மருத்துவமனைகளில் பேதி, நீர்ச்சத்துக் குறைபாடு போன்ற உடல் பாதிப்புகளுக்காக சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது.
தலைநகரில் வெப்பநிலையில் மாற்றம்: நீர்ச்சத்துக் குறைபாடு அதிகரிப்பு

தில்லியில் பல்வேறு மருத்துவமனைகளில் பேதி, நீர்ச்சத்துக் குறைபாடு போன்ற உடல் பாதிப்புகளுக்காக சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது.

தில்லியில்  ஒரு வாரமாக வெப்பநிலை, காற்றில் ஈரப்பதம் ஆகியவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, பேதி, நீர்ச்சத்துக் குறைபாடு, வெப்பச் சோர்வு ஆகிய உபாதைகளால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

குறிப்பாக, சஃப்தர்ஜங், சர் கங்கா ராம், ராம் மனோஹர் லோஹியா, லோக் நாயக் போன்ற மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவில் இந்நோய்களுக்கு சிகிச்சை வருவோரின் எண்ணிக்கை 20 முதல் 30 சதவீதம் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து சஃப்தர்ஜங் மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் ஏ.கே . ராய் கூறுகையில்,  "மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவில் பேதி, தலைச்சுற்றல், நீர்ச்சத்துக் குறைபாடு ஆகிய உடல் பாதிப்புகளுக்காக சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  வெப்பம், ஈரப்பதமான வானிலையில் நுண்ணுயிர்களின் செயல்பாடு அதிகரிக்கும். இது வயிறு உபாதைகள், இரப்பைக்குடல் அழற்சி ஆகியவை ஏற்படக் காரணமாகின்றன. இதனால், இக்காலங்களில் சாலையோரம் விற்கப்படும் உணவு, பழச்சாறுகள் ஆகியவற்றை உண்பதைத் தவிர்க்க வேண்டும். நீர்ச்சத்துக் குறைபாடு பிரச்னையைத் தீர்க்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்' என்றார்.

சர் கங்கா ராம் மருத்துவமனையின் மருந்தியல் துறையின் தலைவர் டாக்டர் எஸ்.பி. பையோத்ரா கூறுகையில், "பேதி, உணவு ஒவ்வாமை உபாதைகள் காரணமாக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நீர், உணவு மூலம் வரக்கூடிய நோய்களான மஞ்சள்காமாலை, டைபாய்டு, பேதி ஆகியவை இதுபோன்ற காலங்களில் வழக்கமாக வருகின்றன. இதைத் தடுக்கும் வகையில் தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்' என்றார்.   ஆர்எம்எல் மருத்துவமனையின் மருத்துவர் கூறுகையில், "உணவு, நீரின் மூலம் வரக்கூடிய நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் உடனுக்குடன் தயாரிக்கப்பட்ட, சூடான உணவுகளை உட்கொள்ள வேண்டும். கடும் வெயிலில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com