திருச்சி மலைக்கோட்டை குகைக் கோயில்

பூமிக்கு கங்கை வந்த வரலாற்றை நாவுக்கரசர் பெருமான் சொல்லோவியமாகச் சொல்லியதை,
திருச்சி மலைக்கோட்டை குகைக் கோயில்

அஞ்சையும் அடக்கி ஆற்றல்
உடையனாய் அனேக காலம்
வஞ்சமில் தவத்துள் நின்று
மன்னிய பகீரதற்கு
வெஞ்சின முகங்களாகி
விசியோடு பாயுங்கங்கை
செஞ்சடை ஏற்றார் சேறை
செந்நெறிசெல்வனாரே

பூமிக்கு கங்கை வந்த வரலாற்றை நாவுக்கரசர் பெருமான் சொல்லோவியமாகச் சொல்லியதை, அவர் காலத்திலேயே வாழ்ந்த மகேந்திரவர்மன் கல்லோவியமாகப் படைத்தமையை என்னவென்று சொல்வது.

திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை என்பது ஒரு தொல்பழங்கால மலைப்பாறை ஒன்றன் மீது கட்டப்பட்ட கோட்டை மற்றும் கோயில்களைக் கொண்ட ஒரு தொகுதி. நடுவில் ஒரு மலையும், அதைச்சுற்றி கோட்டையும் கொண்டு அமைந்துள்ளதால், மலைக்கோட்டை என்று அழைக்கப்படுகிறது.

இது அமைந்துள்ள மலைப்பாறை 273 அடி உயரம் கொண்டது. நிலவியல் அடிப்படையில், இப்பாறை 100 கோடி ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையானது. இம்மலைக் கோட்டைக்குள் உச்சிப் பிள்ளையார் கோயிலும் சிவன் கோயிலும் உள்ளன.

மலைக்கோட்டை என பொதுவாகச் சொல்லப்படும் இந்த மலையில் இரு குகைக் கோயில்கள் உள்ளன. மேலே இருப்பது மகேந்திரவர்மனின் குகைக் கோயில் ஆகும். கீழே இருப்பது அவரது மகன் மாமல்லன் அமைத்த கோயில். திருச்சியின் அருகில் உள்ள பல்லாபுரம் எனும் ஊர் பல்லவ அரச குடும்பத்தினர் வாழ்ந்த பல்லவபுரம் ஆகும்.

இந்த குகைக் கோயில் 30 x 15 அடி என்ற நீள அகலத்திலும், உயரம் 9 அடி உயரமும் கொண்டது. இதில் கருவறை மேற்கு பார்த்தது. 7 x 7 என்ற அளவுடையது. இங்கு லிங்கம் இருந்ததற்கான குழி அடையாளங்கள் உள்ளன. லிங்கத்தின் அருகிலேயே மற்றொரு குழி உள்ளது. இந்த இடத்தில மகேந்திரவர்மனின் சிலை இருந்ததாக ஆராய்ச்சியாளர் கூறுவர். இரு துவார பாலகர்கள் கருவறைக்கு இருபுறமும் அணி செய்கின்றனர்.

இங்குள்ள மகேந்திரனின் சாசனம் கூறுவதாவது - "வயல்களாகிய மாலையை அணிந்தவளும், விரும்பத்தக்க தன்மையையும் இனிய நீரையும் உடையவளுமாகிய காவிரியைக் கண்டு, ஆறுகளை தமது முடியிலே சூடுகிற சிவபெருமான் எங்கே இவள் மேல் விருப்பம் கொண்டுவிடுவானோ என மலைமகள் அச்சம்கொண்டு இறைவனுடன் தங்கி, இந்த காவிரியானவள் பல்லவனின் காதலி என கூறிக்கொண்டே இருக்கிறாள்".

அப்படிப்பட்ட பல்லவனின் காதலியை இன்று சித்தராமையா கட்டிப்போட்டிருகிறார்.

கருவறையின் எதிரில் உள்ள சுவற்றில் கங்காதர மூர்த்தியின் சிலை ஏழு அடி உயரமுள்ள சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது.

சிவன் தனது வலது காலை பூதகணத்தின் மேல் வைத்து, இடது கையை இடுப்பிலே ஊன்றி, உடலை சற்று சாய்த்து எழில் காட்சி தருகிறார். தமது சடாமுடியில் இருந்து ஒரு புரியை மட்டும் எடுத்து அதனில் சிக்கியிருக்கும் கங்கையை விடுவிக்கும் காட்சியும், கங்கை ஆணவம் அடங்கி அமைதியாகப் பூமியில் பரவுதலும் அழகு.

சாதாரண மாவாட்டும் குழவி கொத்துவதே எவ்வளவு சிரமம்! அதற்கு அவர்கள் போடும் அளவுக் கோடுகளை அளந்து, அளவுக் குச்சி கொண்டு செய்வதை அருகிருந்து பார்த்தவர்களுக்கே புரியும்.

ஒரு பெரும் பாறையைக் கண்டுபிடித்து அது விரிசல் இல்லாத ஒன்றா எனக் கணித்து அதனைக் குடைந்தால், அதன் தாங்கு திறனுக்கு எத்தனை தூண்கள் தேவை என வடிவமைத்து, குகைக் கோயிலும் அதனுள் கருவறைச் சிற்பங்கள் செய்வது எவ்வளவு சிரமம்?

அதனால், கோயில்களுக்குச் செல்வோர் தமது கிறுக்கல் கைங்கரியங்களை அங்கே செய்யாமலும், அப்படிச் செய்வோரை தடுக்கவும் வேண்டும். நம் மூதாதையர் சொத்துகளுக்கு நாம்தான் காவலர்களாக இருத்தல் வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com