நீலகிரியில் அடிக்கடி பூக்கிறது குறிஞ்சி மலர்!

நீல வானம், நீல மலைத்தொடர், நீல நிறப்பூக்கள் என கடந்த சில நாட்களாக நீலகிரி மலையே நீல மயமாக காட்சியளிக்கிறது.
நீலகிரியில் அடிக்கடி பூக்கிறது குறிஞ்சி மலர்!

நீல வானம், நீல மலைத்தொடர், நீல நிறப்பூக்கள் என கடந்த சில நாட்களாக நீலகிரி மலையே நீல மயமாக காட்சியளிக்கிறது. இதற்கு முக்கிய காரணம் நீலகிரி மலையின் பல்வேறு பகுதிகளிலும் பூத்துள்ள நீலக்குறிஞ்சி மலர்களேயாகும்.

 குறிஞ்சி மலர்கள் பொதுவாக நீல நிறத்தில்தான் இருக்குமென்றாலும் வேறு பல நிறங்களிலும் குறிஞ்சி மலர்கள் காணப்படுகின்றன. நீல நிறத்தினாலானவை நீலக்குறிஞ்சி எனவும், வெண்மை நிறத்தினாலானவை வெள்ளைக்குறிஞ்சி எனவும், மற்றொரு நிறம் செங்குறிஞ்சி எனவும் அழைக்கப்படுகின்றன.

 குறிஞ்சி மலர்களைக் குறித்து ஆய்வு செய்தவரும், ஓய்வு பெற்ற தோட்டக்கலைத்துறை இயக்குநருமான டாக்டர் வி.ராம்சுந்தர் நம்மிடம் பகிர்ந்து கொண்ட தகவல்களாவன:
 
 ""குறிஞ்சி அல்லது நீலக்குறிஞ்சி என அழைக்கப்படும் இம்மலர்கள் தாவரவியலில் ஸ்டிரொபிலான்தஸ் குந்தியானஸ் என அழைக்கப்படுகின்றன. அகாந்தாசியே என்ற தாவரவியல் குடும்பத்தைச் சேர்ந்த இம்மலர்கள் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் உயரமான மலைப்பகுதிகளான நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு மற்றும் கேரள மாநிலத்தின் இடுக்கி போன்ற பகுதிகளிலேயே காணப்படுகின்றது. குறிஞ்சி மலர்கள் 12 ஆண்டுகளுக்கொருமுறையே பூப்பவை என்றாலும் இதிலுள்ள பல்வேறு ரகங்கள் உலக வெப்ப மயமாதலின் காரணமாகவும், பருவநிலை மாற்றத்தின் காரணமாகவும் இப்போதெல்லாம் அடிக்கடி பூக்கின்றன. இதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரி பகுதியில் குறிஞ்சி மலர் பூத்தது.

 இம்மலர்கள் பூக்கும்போது அந்த பரப்பளவு முழுதும் ஒட்டுமொத்தமாக பூப்பதால் இந்த மலைக்கு நீலகிரி என பெயர் வர இதுவும் ஒரு காரணமாக இருக்குமென கூறப்படுகிறது. கிரி என்றால் மலையாகும். நீல நிறத்தினாலான மலையே நீலகிரி என அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

 நீலகிரி மலையில் வசிக்கும் தோடரினப் பழங்குடியினர் தங்களது வயதைக் குறிஞ்சி மலர்கள் பூக்கும் காலத்தை வைத்து கணக்கிட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன.

 ஒருவர் தனது வாழ்நாளில் எத்தனை முறை குறிஞ்சி மலர்கள் பூத்துள்ளதைக் கண்டுள்ளாரோ, அதற்கேற்றாற்போலவே அவரது வயதும் கணக்கிடப்படும். அவர் தனது வாழ்நாளில் 5 முறை குறிஞ்சி மலர் பூத்துள்ளதைக் கண்டிருப்பாரானால் அவருக்கு 60 வயதிற்கு மேலிருக்கும் என்பது கணக்காகும்.

 பிரபல தாவரவியல் ஆராய்ச்சியாளர்களான நீஸ் மற்றும் ஆண்டர்சன் ஆகியோரால் 19 ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டதுதான் குறிஞ்சி மலர்களாகும். குறிஞ்சி மலர்கள் சர்வதேச அளவில் 250 ரகங்களிலானவை. இவற்றில் 45 ரகங்கள் இந்தியாவில் காணப்படுகின்றன. அதில் 36 ரகங்கள் நீலகிரி மலையில் உள்ளன. சில ரகங்கள் அழியும் தறுவாயிலும், அழிவின் பிடியிலும் உள்ளதால் அவற்றைப் பாதுகாக்க தற்போது குறிஞ்சி மலர்களுக்கான டிஎன்ஏ வங்கியும் உருவாக்கப்பட்டுள்ளது.

 இதைத் தவிர, 12 வருடங்களுக்கொருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் ஒரே நேரத்தில் எவ்வாறு ஒரு மலைப்பகுதி முழுக்க பூக்கின்றன என்பதைக் குறித்த ஆய்வும் நடத்தப்பட்டு வருகிறது. காட்டுக்கோழிகளுக்கு மிகவும் பிடித்தமான குறிஞ்சி மலர் விதைகள் அக்கோழிகளாலேயே அதிகளவில் பரப்பப்படுவதாலேயே மலைப்பகுதி முழுக்க இவ்விதைகள் பரவி குறிஞ்சி செடிகள் முளைப்பதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் வனப்பகுதிகளையொட்டியுள்ள பகுதியில் தேயிலைத் தோட்டங்கள் விரிவாக்கத்திற்காக குறிஞ்சி மலர் செடிகள் அழிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. எனவே, சார்லஸ் டார்வினின் கோட்பாட்டின்படி நிலைத்திருப்பதற்கான போராட்டத்திலேயே குறிஞ்சி செடிகள் இருக்கின்றன'' என்கிறார் ராம்சுந்தர்.
 -ஏ. பேட்ரிக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com