வெள்ளிமலைக்கு ஓர் சுற்றுலா...

பயணங்களில் பல விதம் உண்டு. அதிலும் மலை வாசஸ்தலங்களுக்கு சுற்றுலா செல்வது மிகச் சிறந்த அனுபவத்தை நமக்கு கொடுக்கும்.
வெள்ளிமலைக்கு ஓர் சுற்றுலா...

பயணங்களில் பல விதம் உண்டு. அதிலும் மலை வாசஸ்தலங்களுக்கு சுற்றுலா செல்வது மிகச் சிறந்த அனுபவத்தை நமக்கு கொடுக்கும். காங்ரீட் காடுகளிலிருந்து தப்பி மரங்கள் சூழ்ந்த பசுமையான மலைப் பிரதேசங்களுக்கு வருடத்துக்கு ஒரு முறையாவது சென்று வர வேண்டும். அதன்படி அண்மையில் வெள்ளிமலைக்கு ஒரு சுற்றுலா சென்று வந்தேன்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளகுறிச்சியில் இருந்து சுமார் 40கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த  வெள்ளி மலை. மலைக்குன்றுகளில் சிறந்து விளங்கும் கல்வராயன் மலையும், வெள்ளிமலையும் கள்ளக்குறிச்சி நகருக்கு மிக அருகில் இருக்கிறது.
கள்ளகுறிச்சியில் இருந்து கச்சிராயபாளையம் வழியாக செல்லும்போது கோமுகி அணையும், தாகப்பாடி அம்மன் ஆலயமும் அமைந்திருகிறது. கோமுகி அணையில் இருக்கும் தண்ணீர் அருகில் இருக்கும் கிராமங்களில் விவசாய நிலங்களுக்குப் பயன்படுகிறது.
இதன் வழியே பயணித்தால் ஒரு சிறு கிராமத்தில் அமைந்திருக்கிறது மலை அடிவாரம். இங்கிருந்து தொடங்குகிறது திகில் பயணம். வளைந்து, வளைந்து செல்லும் குறுகிய சாலையில் பயணிப்பது சற்று திகில் அனுபவமாக இருந்தாலும், இயற்கையின் அழகை ரசித்துக் கொண்டே அந்த திகில் அனுபவத்தை ரசிக்க முடிகிறது.
பசுமையைப் போர்வையாக போர்த்தி இருக்கும் இக்கல்வராயன் மலை 2 பிரிவுகளால் பிரிக்கப்பட்டுள்ளது. வடபகுதி சின்ன கல்வராயன் மலை எனவும், தென் பகுதி பெரிய கலவராயன் மலை எனவும் பிரிக்கப்பட்டுள்ளது.சின்ன கல்வராயன் மலை சராசரியாக 2,700 அடி உயரமும்,பெரிய கல்வராயன் மலை 4,000 அடி உயரமும் கொண்டவை.  
குறிஞ்சி நிலத்தைச் சார்ந்தஇம்மக்கள் தேன் எடுப்பதையும், ஆடு,மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்ப்பதிலும் முக்கியத் தொழிலாகக் கொண்டுள்ளனர்.


சுமார் 1 மணி நேரப் பயணத்திற்கு பின்பு பெரியார் நீர்வீழ்ச்சி நம்மை வரவேற்கிறது. பறவைகளின் சப்தமும், அருவியின் ஓசையும் தவிர வேறு எந்த சப்தமும் இல்லாமல் அமைதியாக இருக்கிறது இந்த இடம்.மலை முகடுகளில் இருந்து ஆர்பரித்து வரும் இந்த மூலிகை தண்ணீரில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர். இதைக் கடந்து சென்றால் கரியாலூர் ஏரி படகு சவாரியும், தாழ் வெள்ளி மலையும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மையமும் அமைந்திருக்கிறது.
கள்ளக்குறிச்சியிலிருந்து வெள்ளிமலைக்கு பேருந்து வசதியும் உள்ளது. வெள்ளிமலையில் பெட்ரோல் பங்கும் உள்ளது. மேலும், உணவகங்களும், கடைகளும் உள்ளன.
குடும்பத்துடன் சுற்றுலா செல்ல சிறந்த இடமாக இம்மலை அமைந்திருக்கிறது என்பதில் சற்றும் சந்தேகமில்லை.
கொடைக்கானல், ஊட்டி, ஏர்காடு போன்ற மலைவாசஸ்தலங்களுக்கு செல்வது போல், இந்த வெள்ளிமலைக்கும் ஒருமுறை சென்று வரலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com