இதோ, வந்துவிட்டார் காந்தி!

முதன் முறையாக  மகாத்மா காந்தியை நான் கண்டது என் பிறந்த  ஊராகிய காசியில், பனாரஸ் இந்து பல்கலைக்கழக அடிக்கல் நாட்டு விழாவின்போது.
இதோ, வந்துவிட்டார் காந்தி!


(சென்னை ராஜதானி கவர்னராக இருந்தவர்)

முதன் முறையாக  மகாத்மா காந்தியை நான் கண்டது என் பிறந்த  ஊராகிய காசியில், பனாரஸ் இந்து பல்கலைக்கழக அடிக்கல் நாட்டு விழாவின்போது. அந்த சமயம் வைஸ்ராய் பதவியில் இருந்தவர், ஹார்டிஞ்ச் பிரபு.  அவர்தான் அடிக்கல் நாட்டினார். 1916- ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், இதற்காகவே காசிக்கு விஜயம்  செய்தார்.

அந்தப் பல்கலைக்கழகம் தோன்றுவதற்குக் காரணமானவர் மதன் மோகன் மாளவியா. அவரது அழைப்புக்கு இணங்கி, நாட்டின் பல பாகங்களில் இருந்தும் மகாத்மா காந்தி உட்பட ஏராளமான பிரமுகர்கள் அந்த விழாவில் பங்கு கொள்ள ஆஜராகியிருந்தனர்.  அடிக்கல் நாட்டிய பின், அங்கே வந்திருந்த பிரமுகர்களில்  ஒவ்வொருவரும், ஒவ்வொரு நாளும் மாலையில் சொற்பொழிவாற்றுவது என்று மாளவியா ஏற்பாடு செய்திருந்தார்.

பிரசங்கத்தைக் கேட்க திரளான மக்கள் தினமும் கூடினர்.

சுதேச  மன்னர்கள் பலர், மாளவியாவின் அழைப்புக்கு இணங்கி, விழாவுக்கு வந்திருந்தனர். பிரசங்கத்துக்கும் அவர்கள் ஆஜராகி இருந்தனர். மேடைக்கு எதிரே முதல் வரிசையில், விலையுயர்ந்த ஆடைகள் அணிந்து, ஆபரணங்கள் ஜொலிக்க அமர்ந்திருந்தனர்.

ஒருநாள், ஒரு மன்னரும் பிரசங்கம்  செய்தார். காந்திஜிக்கு ஒரு நாள் பிரசங்கம் செய்ய அழைப்பு விடுத்திருந்தனர். பிரசங்க ஏற்பாடுகளைக் கவனிக்க வேண்டியது, எனக்கு இட்ட பணி.  அப்போது தான், முதன்முதலாக காந்தியை நான் கண்டேன். தென்னாப்பிரிக்காவில் நம் நாட்டு மக்களுக்காக அவர் பட்டபாடும்,  அனுபவித்த கஷ்டங்களும் பற்றி பத்திரிகைகளில் நான் படித்திருந்தேன். 1915- ஆம் ஆண்டு அவர் நம் நாட்டுக்கு திரும்பி வந்துவிட்டார். 

அவர் பிரசங்கம் செய்ய வேண்டிய நாள் வந்தது. அன்று,  வடக்கு பீகாரைச் சேர்ந்த, தர்பங்கா சமஸ்தான மகாராஜா தலைமை வகித்தார்.
காந்திஜி தன் உரையில், மக்களின் ஏழ்மை நிலையையும், எண்ணிக்கையில் குறைவான பணக்காரர்களின் படோடோபத்தையும் பற்றிப் பேசினார்.  மன்னர்களின் பக்கம் நோக்கி, 

""மன்னர்களே!   உங்கள் ஆபரணங்களை எல்லாம் விற்றுவிடுங்கள். உங்கள் செல்வத்தை ஏழைகளுக்குப் பயன்படுத்துங்கள்'' என்றார்.

இந்த சமயம் மேடையில் கொஞ்சம் பரபரப்பு தோன்றியது. முன் வரிசையில் இருந்த மன்னர்கள் ஒருவருக்கொருவர் ரகசியமாகப் பேசிக் கொள்ளலாயினர். தலைமை வகித்தவர்,  காந்திஜியின் பேச்சை நிறுத்தச் சொன்னார். கேட்க  வந்த மக்கள் கூட்டமோ மேலும் பேசச் சொல்லிற்று.

காந்திஜி,  ""தலைவர்  சொல்படிதான் நடக்க வேண்டும். நான்  தொடர்ந்து பேசுவது அவர் கையில் இருக்கிறது'' என்றார்.

மேடையில் இருந்தவர்கள் கூடிப் பேசிய பின், தலைவர் தர்பங்கா மகாராஜா, காந்தியைத் தொடர்ந்து பேசும்படி  சொன்னார்.

 காந்திஜி, ""ஆங்கிலேயர்கள்  அவர்களுடைய நாட்டில் கண்ணியமாக, எவ்வளவு நல்லவிதமாக நடந்து வருகின்றனர். அவர்கள் இங்கே வந்ததும், முரட்டுத்தனமாக, அகம்பாவத்துடன் நடப்பது ஏன்?'' என்று கேட்டார்.

அடுத்து வந்தது, பெரிய வெடிகுண்டு!  வைஸ்ராய் காசிக்கு வருவதையொட்டி, பெரிய அளவில் பந்தோபஸ்து ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காசி நகரமே முற்றுகைக்கு உள்ளானது போலாயிற்று. அனுமதிச் சீட்டு இல்லாமல், மக்கள் தெருவில் வரக்கூடாது.  மக்களுடைய வீட்டுக்கூரை மேல் போலீஸ்காரர்கள் நிறுத்தப் பட்டிருந்தனர். மக்களின் அன்றாட வாழ்க்கை, சமூக உறவுகள் எல்லாம் நெருக்கடிக்கு ஆளாயிற்று.  மக்கள் நடமாடவே அஞ்சிக் கிடந்தனர்.

இதுபற்றி காந்திஜி குறிப்பிட்டு,  ""இந்தக் கெடுபிடிகள் வைஸ்ராயின் பாதுகாப்புக்காகவே நடந்திருந்தாலும், இவை வருந்தத்தக்கவை. ஒரு  நகரத்து மக்கள் அனைவரையும் அச்சுறுத்தி, பாதுகாப்புத் தேடுவதை விட, வைஸ்ராய் எவனோ ஒரு பித்தனின்  துப்பாக்கிக்  குண்டுக்கு இரையாவது மேல்'' என்றார்.

இதனால், மேடையில் இருந்தவர்களின் மனதில் உண்டான கலவரம் எத்தகையதாக இருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ளுங்கள்.

அந்தக் கூட்டத்தில் டிவிஷன் கமிஷனரான எஸ்.பி. மற்றும் நகரத்தின் பல அதிகாரிகள் இருந்தனர். அவர்கள் எல்லோரும் வெளியேற எழுந்து விட்டனர், மன்னர்கள் எழுந்து வெளியேறத் தொடங்கினர். மக்களோ,  பிரசங்கத்தை மேலும்  தொடரும்படி கூச்சலிட்டனர்.

காந்திஜி கீழே இறங்கி அந்த இடத்தை விட்டுப் போகலானார். வாசல் வரை நான் அவருடன் சென்றேன். நடந்தவற்றைப் பற்றி அவர் ஆச்சரியப்பட்டதாகத் தெரிந்தது.

""நான் என்ன சொன்னேன்? தவறாக ஒன்றும்  சொல்லவில்லையே!'' என்று, சுற்றி இருந்தவர்களைக் கேட்டார், காந்திஜி.

கூட்டம் கலவரத்துடன் கலைந்தது. பண்டித மாளவியா, ""இதன் விளைவு என்ன ஆகுமோ'' என்று அஞ்சினார். கமிஷனரிடம் சென்றார். அங்கே அந்த அதிகாரி,  மாவட்ட  மாஜிஸ்திரேட்டுக்கு ஒரு குறிப்பு எழுதுவதைக் கண்டார். காந்திஜி உடனே காசியைவிட்டு வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கச் சொன்னது அந்த குறிப்பு.

அந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டாம் என்று மாளவியா கேட்டுக்கொண்டார். தாமே காந்தியைக் காசியை விட்டுப் போகச் சொல்வதாகக் கூறி, கமிஷனரையும் சம்மதிக்க வைத்தார்.

மாளவியாவின் மனதைத் தெரிந்துகொண்டு மறுநாள் அதிகாலையிலேயே காந்திஜி  வெளியேறினார். தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பி வந்த பின்,  இதுதான் முதல் முறையாக ஒரு பொது நிகழ்ச்சியில் காந்திஜி பேசிய பேச்சு! அந்தப் பிரசங்கம் ஒரு புது யுகத்தின் ஆரம்பம்.  அந்தப் பிரசங்கத்தின் வாயிலாக மகாத்மா ஏற்றி வைத்த விளக்கு, அடிமை இருளை விரட்டத் தொடங்கிய முதல் ஒளிச்சுடர்.

அவரைப் பின்பற்றுகிறவர்கள் என்று சொல்லிக் கொள்ள நமக்கு அருகதையில்லாத போதிலும், நாட்டு மக்களின் பிதா என்று, பக்தியுடன் நாம் அவரைப் போற்றுவது மிகச் சரியே.   

 தகவல்: ஆர்.சி.சம்பத்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com