கௌரியின் சிநேகிதன்

உடல் முழுவதும் வியர்வையில் ஊறித் திளைக்க, தன்னை கடந்துச் செல்லும் பேருந்துகளை எதையும் கவனியாதவனாய் பதற்றத்துடன் நின்றிருந்தான்
கௌரியின் சிநேகிதன்


உடல் முழுவதும் வியர்வையில் ஊறித் திளைக்க, தன்னை கடந்துச் செல்லும் பேருந்துகளை எதையும் கவனியாதவனாய் பதற்றத்துடன் நின்றிருந்தான் நாராயணன். அவனது கால்கள் ஓரிடமென்றில்லாமல் குறுக்கும் நெடுக்குமாக அலையோடியபடியே இருந்தன. கண்கள் தொலைவில் பேருந்து நிலையத்தின் மைய வாயிலில் நிலை கொண்டிருந்தது. தனது செல்பேசியை எடுத்து நேரத்தை ஒருமுறை சரி  பார்த்துக்கொண்டான். கௌரி வருவதாக சொல்லியிருந்த நேரத்திற்கு இன்னும் கால்மணி நேரம் மீதமிருந்தது. 

நாராயணன் வகுப்பில் பயின்றவள்தான் கௌரி. வயதில் நாராயணனுக்கு இரண்டு ஆண்டுகள் மூத்தவள் என்றாலும் சிறுவயதில் தாமதமாக பள்ளியில் சேர்க்கப்பட்டவள் என்பதால் அவளும் நாராயணனின் வகுப்பில் பயில வேண்டியதாயிற்று. பத்தாம் வகுப்பின் துவக்கத்தில்தான் அவள் அப்பள்ளியில் சேர்ந்திருந்தாள். 

கௌரியின் வீடும், நாராயணன் வீடும் அருகருகில் அமைந்திருந்ததால், பள்ளியிலும் அவளை அவன் மரியாதையாகவே அழைத்து வந்தான். தொடக்கத்தில் நாராயணனுக்கு கௌரியை மரியாதையாக அழைப்பதில் சங்கடங்கள் எதுவும் இருக்கவில்லை. ஆனால், காலம் முன்னுக்கு நகர நகர கௌரியின் அழகு பற்றிய ஏனைய பள்ளி மாணவர்களின் பேச்சுகளும், அவளது நெருங்கிவிட இயலாத தனிப்பெரும் அழகும் பள்ளி முழுவதையும் ஆள்கிறது என்பது உறைத்ததும் மெல்ல மெல்ல கௌரியின் மீதான அவனது அணுகுமுறையில் மாற்றமேற்படத் துவங்கியது.  நாராயணனின் காதுபடவே கௌரியின் அழகை வர்ணித்துக் கொண்டிருந்த சக மாணவர்களால், அவனது மனமும் கலங்கிப் போயிருந்தது.

""என்னடா ஒரு மாதிரியா இருக்கே?'' என்று அவள் நாராயணனை பார்த்து எப்போதாவது வினவுகையில், ""இல்லங்க...  வீட்ல அப்பா கொஞ்சம் கோபமாக பேசிட்டாரு... அதான். வேறொன்னுமில்ல'' என்று சமாளிப்பாக சாதாரணமாக சொல்வானே தவிர, உள்ளுக்குள் கௌரியின் நினைவு அவனுக்குள் நெடு நெடுவென வளர்ந்தபடியே தானிருந்தது. அவளது அருகாமையை அவன் வெகுவாக ரசிக்கத் தொடங்கியிருந்தான்.

மற்ற மாணவர்களை விடவும் நாராயணனால் எளிதில் கௌரியை நெருங்கிவிட முடியும். சிறுவயதிலே இருவருக்கும் அறிமுகமுண்டு அல்லவா? அதன் பின்னர் நாராயணன் தொடர்ச்சியாக கௌரியின் வீட்டிற்கு சென்று வருவதன் மூலமாக, அடுத்தடுத்த தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வந்தான். நாராயணனின் நினைவுகளில் ஒருபோதும் அழிக்கவியலாத மழை இரவொன்று இக்காலங்களில் வந்து சென்றதே... அடர் மழை சாலையெங்கும் நீர் நதியாக திரண்டு ஓடிக் கொண்டிருந்தது. பெருத்த மரங்கள் சாலையோரங்களில் வேரோடு வீழ்ந்து கிடந்தன. சாலையோர மண் அரிக்கப்பட்டு வாய்க்கால் நீரோடு கலந்து ஓடின. பாதை எது? பாய்ந்தோடும் நதி நீர் எது? என பிரிக்க முடியாதபடி ஒன்றுடன் மற்றொன்று பிணைந்து உருக்கொண்டிருந்தன. 

கௌரியிடம் குடை இருந்தது. அவள் நாராயணனையும் தன்னுடன் வருமாறு அழைத்தாள். லேடி பேர்ட் சைக்கிளில் நாராயணன் பின்னால் அமர்ந்திருக்க, முன்னால் அமர்ந்து கௌரி சைக்கிளை ஓட்டினாள். பள்ளியைத் தாண்டி அவர்களது சைக்கிள் நகர்ந்திருந்தது. 

சாலையெங்கும் மழை நீர் தேங்கியிருந்தது. முழங்கால் வரை உயர்ந்திருந்த நீர் திரளினுள் சைக்கிளை ஓட்டிக் கொண்டு கௌரி செல்ல முயல, சைக்கிளின் சக்கரங்கள் அசைய மறுத்து அவர்களைப் பின்னுக்கு இழுத்தபடியே இருந்தன. ஒருபுறம் குடை காற்றின் விசையில் பின்புறமாக புரண்டு வானத்திற்கு வாய் காட்டியபடி மழை நீரை விழுங்கத் தொடங்கிவிட்டது. நாராயணனால் சைக்கிளில் திடமாக அமர்ந்திருக்க முடியவில்லை. நீரின் அழுத்தத்தில் சைக்கிள் தத்தளித்துக் கொண்டிருந்தது. அதற்குள் சாலை ஒரு பெரும் குப்பைத் தொட்டியைப் போல, காகிதங்களாலும், பிளாஸ்டிக் குப்பைகளாலும் நிரம்பிவிட்டது. 

கௌரி முன்னுக்கு நகர தீவிரமாக முயற்சிக்கிறாள். ஆனால், சைக்கிள் அசைவதாகவே இல்லை. அது இருந்த இடத்திலே நிலைகொண்டுவிட்டது. கௌரி சைக்கிள் பெடலை அழுத்தமாக மிதித்து சுழற்ற சட்டென்று சைக்கிள் திரும்பி நீரின் மேல் சரிந்துவிட்டது. கௌரியும், நாராயணனும் நீரினுள் விழுந்துவிட்டார்கள். 
உடை முழுக்க நனைந்து, சைக்கிளை உருட்டிக்கொண்டு நாராயணனும், கௌரியும் வீடடைந்ததைப் பார்த்து, கௌரியின் அம்மா கோபத்தில் வெடித்துவிட்டாள். அவளது உதடுகளில் வசை சொற்கள் கிளம்பி கௌரியை பதம்பார்த்தன. நாராயணனுக்கும் தொடர் வசைகள் விழுந்தன. பத்திரமாக வீடு சேர்ந்தது நல்லவிதமான செயல்தானே, அதற்கு ஏன் கௌரியின் அம்மா தன்னையும் கௌரியையும் திட்டுகிறாள் என்பது புரியாமல் விழித்துக் கொண்டிருந்தான். 

மழை லேசாக விட்டிருந்தது என்பதால், கௌரியின் அம்மா நாராயணனை அங்கிருந்து போகும்படி சொல்லிவிட்டாள். நாராயணன் மெல்ல எழுந்து, சாலையில் தன் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினான். இருளும் மழை நீரும் பிணைந்து சூன்ய வெளியைப்போல அவன் முன்னால் நீண்டிருந்தன. நாராயணனின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து உதிர்ந்தது. என்னவிருந்தாலும், கௌரியின் அம்மா தன்னை திட்டியதில் துளியும் நியாயமில்லை என்பதாகவே அவனது எண்ணமிருந்தது. இருட்டு பாதையில் தன் திசைவழி நடந்து கொண்டிருந்த நாராயணன் அதன் பிறகு, ஒருபோதும் கௌரியின் வீட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

பள்ளியிலும் கௌரி அவனிடமிருந்து சற்று விலகி இருக்க முடிவு செய்திருந்தாள். ஒன்றிரண்டு சொற்களுக்கு மேல் அவர்களது உரையாடல் நீள கதியற்று சிறிது சிறிதாக முற்றிலுமாகப் பேச்சை இழக்கும் நிலைக்கும் குறுகிய காலத்திற்குள்ளாகவே சென்றுவிட்டது. 

பிரிவில் அவள் மீதான அன்பு, பெரும் நேசிப்பாக வளர்ந்து, பின் அதுவே நோயாகவும் அவனுள் தோற்றம் கண்டுவிட்டது. ஆனால் அவள் அவனை அறவே தவிர்த்து வந்தாள். ஓராண்டு கடந்த நிலையில் பத்தாம் வகுப்பில் அவன் நல்ல மதிப்பெண்கள் பெற்ற செய்தியை அவளிடம் கூற முடிவு செய்தான். அப்போது அவளிடம் எப்படியும் தன் மனதில் அலையடித்துக்கொண்டிருக்கும் அனைத்தையும் சொல்லிவிட வேண்டுமென உறுதியாக தீர்மானித்திருந்தான். கௌரி குறித்த உணர்வுகள் குத்தீட்டியைப்போல அவனது மனதைக் கீறியபடியே இருந்தன. மனதை கட்டுப்படுத்த பெரும் சிரமப் பட வேண்டியிருந்தது. 

இனிப்பு எடுத்துக் கொண்டு அவள் வீடு நோக்கி ஓடினான். வியர்த்து வழிந்த வியர்வையை விரல்களால் வழித்தபடியே நாராயணன் வீட்டினை அடைந்தான். உள்ளுக்குள் உலக்கையால் குத்துவதைப்போல இருதயம் படபடத்துக் கொண்டிருந்தது. நாராயணன் அவ்வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினான். சில விநாடிகளுக்கு எந்த அசைவும் இல்லை. மீண்டுமொருமுறை அழுத்தினான். இந்த முறை லேசாக உடலில் உதறல் உண்டாக, அங்கிருந்து நகர்ந்து சில அடி தூரம் நடந்து சென்றான். அந்த சாலையின் முடிவில் நின்று இரண்டொரு நொடிகள் தன்னை அமைதிப்படுத்தி கொண்டான். 

சாலை அவன் முன்னால் நீண்டிருந்தது. ஓரிருவர் அவனைக் கடந்து சென்றபடி இருந்தனர். சந்தேகத்துடன் அவனை சில கண்கள் நோக்குகின்றன என்பதை உணர்ந்ததும் மீண்டும் திரும்பி கௌரியின் வீட்டை நோக்கி நடந்தான். இன்னமும் கதவு திறக்கப்படாமல் இருந்தது. 

நாராயணனுக்கு கோபம் பெருகியது. பையில் இருந்து ஒரு காகிதத்தை எடுத்தவன், "கௌரி நீ எனது பள்ளியில் இடையில் சேர்ந்தது சரியானதல்ல. உனது முகம் அதற்கு முன்பு எனது நினைவுகளில் மிகுந்த மரியாதையாக பதிந்திருக்கிறது. ஆனால் உனது வருகை அதனை அழித்தெறிந்து என்னை உன் அருகில் மீண்டும் நெருங்க செய்தது. உன் நிழல் மிதித்து நடக்கும் வரம் சில தினங்கள் எனக்கு கிடைத்தது. இனி பிற தினங்கள் அனைத்தும் உன்னோடே கழிக்கப் போகிறேன் என்று நம்பத் தொடங்கியபோது, மீண்டும் என்னை விலக்கி வைத்தாய். உன் பேச்சு, உன் பார்வை, உன் தொடுகை என ஒவ்வொன்றாக இழந்து தவிக்கிறேன். உன்னுடன் பேசாத இந்த தினங்களில் கிளைத்த சொற்கள் என்னுள் மிதக்கின்றன. இந்த சிறிய கடிதத்தை நீ படித்த பின்பு என்னிடம் பேசவிரும்பினால், வீரன் கோயில் அருகில் நாளை மாலை வரவும். அப்படி நீ வரவில்லையென்றால், இனி என் வாழ்க்கையில் என்றென்றும் நான் உன்னை சந்திக்க மாட்டேன் என்பதை உறுதியுடன் தெரிவித்துகொள்கிறேன். மறந்துவிட்டேன். தேர்வு முடிவுகளில் நல்ல மதிப்பெண்களை பெற்றிருக்கிறேன். அதற்கு நன்றி. நாளைய தினத்திற்காய் காத்திருக்கிறேன்'' என்று எழுதி விரல்கள் படபடக்க அதனை அவளது வீட்டின் கதவிடுக்கில் சொருகி வைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான். 

கௌரியிடம் தன் மனக்குறைகளை சேர்ப்பித்துவிட்ட உள்ளூக்கத்துடன் தன் வீட்டை நோக்கி நடந்தான். அவனது மனம் சாந்தமடைந்திருந்தது. அடுத்த தினத்திற்காய் அவன் காத்திருக்க துவங்கினான். இரவு உறக்கம் சரியாக பிடிபடவில்லை.  விடியற்பொழுதை எதிர் நோக்கி தரையில் படுத்துக்கிடந்தான். 
கௌரியிடம் சேர்ப்பிக்க வேண்டுமென குருவிக்கூடு ஒன்றை தன் வீட்டில் பத்திரப்படுத்தி வைத்திருந்தான் நாராயணன். பெற்றோருக்குத் தெரியாமல் அய்யனார் ஏரிக்கு சென்றபோது, வழியில் கண்டெடுத்து கொண்டுவந்தது அந்த குருவிக்கூடு. அந்தரத்தில் தொங்கியபடியே காற்றிலாடும் அந்த குருவிக்கூட்டினை கொடுத்தால் கௌரி மகிழ்ச்சிகொள்வாள் என நாராயணன் நம்பியிருந்தான். கௌரிக்கு இதெல்லாம் ரொம்பவும் விருப்பமானவை என்பதை அவன் புரிந்துவைத்திருந்தான். 

மறுநாள் வீரன் கோயிலில் நாராயணன் காத்துக் கிடந்தது தான் மிச்சம். கௌரியின் வருகை அன்றைக்கு ஏற்படவில்லை. தனியனாக கோயிலை ஒட்டிய மண் சாலையில் அழுகையுடன் நடந்து சென்றான்.

கௌரியைத் திரும்பவும் அவன் இரண்டு வாரங்களுக்கு முன்பு சென்னையில் வைத்துப் பார்த்தபோது அவனுக்கு துளியும் அவளை அடையாளம் கண்டுக்கொள்ள முடியவில்லை. கோயம்பேடு பேருந்து நிலையத்தின் எதிரில் இருந்த பூங்காவில் தனது நண்பன் ஒருவனை சந்திக்க காத்திருந்தபோது, வெகு இயல்பாக அந்த சந்திப்பு நிகழ்ந்தது. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு பிறகு கௌரியின் குரலை அவன் கேட்டான். பூங்காவுக்கு தனது ஆண் நண்பன் ஒருவனுடன் வந்திருந்த அவள், நாராயணனை கடந்து செல்கையில் அவளுக்கு எதுவோ தட்டுப்பட்டிருக்கிறது. சட்டென நின்று அவன் முகத்தை உற்றுப் பார்த்தவள், ""ஏய்.. நீ நாராயணன் தான..?'' என்றாள்.  

""ஆமாங்க நான் நாராயணன்தான். நீங்க..?'' என்றான்.

""ஹே... எவ்ளோ வருஷம் கழிச்சு இப்படி உன்ன பாப்பேன்னு நினைக்கவே இல்லை.. என்னைத் தெரியல.. நான்தான் கௌரி'' 

நாராயணனுக்கு அந்த பெயரை கேள்வியுற்ற தருணத்தில் உள்ளுக்குள் ஒரு திடுக்கிடல் உண்டானது.  

நாராயணன் தனக்கெதிரில் ஆண் ஒருவனின் கைவிரலைப் பற்றியபடி நின்றிருக்கும் அவளை உற்று நோக்கினான். கண்களில் ஓரு கண்ணாடி. உதட்டுச் சாயம் சிவப்பு நிறத்தில் மினுங்கிக் கொண்டிருந்தது. முழுக்கை சட்டை, ஜீன்ஸ் பேண்ட் என ஆளே உருமாறியிருந்தாள். நாராயணனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. முதலில் அவளை நம்பவே அவனுக்கு தயக்கம் இருந்தது. 

அவள் அவசரமாக கிளம்பியதால் கௌரியிடம் தனது செல்பேசியின் நம்பரை கொடுத்துவிட்டு அறை திரும்பதும், உள்ளுக்குள் அவனுக்கு மகிழ்ச்சி அரும்பியது. 

கௌரியிடமிருந்து இரண்டு தினங்களுக்கு முன்பு "சந்திக்கலாமா?' என குறுஞ்செய்தி வந்ததும், அவனது மகிழ்ச்சி மேலும் இரட்டிப்பானது. 

"இப்பவே தயார்தான். நீ சொன்னால் உடனடியாக கிளம்பி விடுவேன்' என்று பதில் செய்தி அனுப்பினான். தனக்கு இரு தினங்களுக்கு வேலை இருப்பதாகவும், ஞாயிறு அன்று மதியத்தில் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வருமாறும் அவள் அவனிடம் கேட்டிருந்தாள்.

நிமிடங்கள் சில கரைந்ததும், கௌரியிடமிருந்து அவனுக்கு செல்பேசியில் அழைப்பு வந்தது. நாராயணன் விறுவிறுவென அவளை நோக்கி நடக்கத் தொடங்கினான். வழியில் எதிர்பட்ட எந்தவொரு முகமும் அவனது மனதில் பதியவில்லை 

தொலைவில் கௌரி இவனைப் பார்த்து கையசைத்தபடி நின்றிருந்தாள். இன்னும் பத்தடிகள்தான் கௌரிக்கும் அவனுக்கும். நாராயணன் கௌரியை நெருங்கிவிட்டான். சொற்களில் உருக்கொண்டிருக்கும் தேவதையின் சிறகசைப்பில் மின்மினியாக மின்னி திரியும் வரம் எய்தும் துடிப்புடன் கௌரியை அடைந்தான் நாராயணன். 

""ரொம்ப நேரத்துக்கு முன்னாடியே வந்துட்டியா..? நான் ஒன்ன எக்ஸாட்டா இந்த டைம்முக்கு வந்தாப்போதும்ன்னு சொன்னன்ல''  

""சரி அத விடு. நான் இப்போ நெய்வேலிக்குதான் போறேன். என்னோட பையனுக்கு ரெண்டாவது பிறந்த நாள். அத கொண்டாடத்தான் போயிட்டு இருக்கேன்''

கௌரியின் வார்த்தைகள் நாராயணனுக்குப் புரியவில்லை. குழப்பத்துடன், ""எந்த பையன்?'' என்று கேட்டதுதான் தாமதம், விருட்டென  ""எந்த பையனுக்கா.,. என்னோட பையனுக்குதான். பின்ன என்ன ஊருல உள்ளவங்க பசங்களுக்காக கொண்டாட்டம் போடுவாங்க...?''

""உனக்கு கல்யாணம் ஆகிருச்சா கௌரி...?'' அதிர்ச்சி அவனது உடல் உறைந்த நிலையினை எட்டிக்கொண்டிருக்க, மேலும் அவளிடம் அதனை உறுதி செய்து கொள்ளும் தீர்மானத்தில் இருந்தான்.

""ஐய்யே...  கல்யாணம் ஆகாமலா குழந்தை பெத்துப்பாங்க... எனக்கு மூன்று வருஷம் முன்னாடியே காலேஜ் முடிச்ச கையோட கல்யாணம் பண்ணிட்டாங்க... ஆனா எங்களுக்குள்ள டேர்ம்ஸ் ஒத்து வரல... சோ லாஸ்ட் இயர் ரெண்டு பேரும் மியூட்சுவலா சைன் பண்ணிட்டு அவங்க அவங்க பாதையை தேர்ந்தெடுத்துட்டோம்''

நாராயணனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தது. அவளது தலையசைப்பு, இடுங்கிய மூக்கு, அகண்ட நெற்றி, தலைகேசம், கண்களில் துளிர்க்கும் கருணை எதுவும் இத்தனை வருடங்களில் மாற்றம் கொண்டிருக்கவில்லை எனும் நிலையில், அவளில் இருந்து ஓர் உயிர் கிளைத்திருக்கிறது என்பதே அவனுக்கு வியப்பாக இருந்தது. 

""நீ ஸ்கூல் மாறி போயிட்டதுக்கு அப்புறம், நான் உன்ன பாக்கவே இல்ல. அதுக்கப்புறம் சில தடவ உன்னோட நினைவு எனக்கு வந்திருக்கு. அதுவும் மழை நாளான போதும், உன் முகம்தான் எனக்கு நினைவுக்கு வரும். உடம்பு முழுக்க நனைஞ்சு ரெண்டு பேரும் வீட்டுக்கு போய் அம்மாகிட்ட திட்டு வாங்குனது நினைவுக்கு இருக்கா...?''

நாராயணன் உயிரற்ற தன்மையில் தலையசைத்தான். 

""அன்னைக்கு நைட் எங்க அம்மா உன் கூட பேசக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. இப்போ நினச்சா ரொம்ப சிரிப்பா இருக்கு. அதக்கேட்டு நானும் உன்ன அவாய்ட் பண்ண ஆரம்பிச்சிட்டேன். அது எவ்ளோ முட்டாள்தனமானதுன்னு இப்போ புரியுது. உன்ன எதுனா ஹேர்ட் பண்ணி இருந்தன்னா என்னை மன்னிச்சிடு...''

""அய்யோ அதெல்லாம் வேணாங்க. எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும். உங்களாலதான் எனக்கு படிப்பு மண்டையில ஏறுச்சு. அதான் நீங்க சட்டுன்னு என்கிட்ட பேசுறத நிறுத்திட்டதும் என்னால அத தாங்க முடியல...''

""ஐ நோ தட். தவிர, நீ என்கிட்ட ரொம்ப உரிமையா பழகிட்டு இருந்த. உன்னோட சொந்த அக்கா மாதிரி. எனக்கு உன்னோட பாசம் அந்த வயசுல ரொம்ப பிடிச்சிருந்துச்சு. சரி அதெல்லாம் விடு. இப்போ என்ன பண்ற...? ஜாப் போறியா?''
நாராயணனுக்கு உள்ளுக்குள் பெருத்த ஏமாற்றமாக இருந்தது. கனம் குறைந்து எடையற்று நின்றிருப்பதைப்போல தன்னை உணர்ந்தான். அவனது மனம் காற்றில் மிதந்துக் கொண்டிருந்தது. நாராயணன் கண்கள் கலங்க தொடங்கின. 

""எவ்ளோ சந்தோஷம் தெரியுமா? உன்ன பாத்தது. உன்ன பாத்ததுக்கு அப்புறம் நம்ம ஸ்கூல் டேய்ஸ் நினைவுகள் எல்லாம் எனக்கு தொடர்ந்து வந்துட்டே இருக்கு. அந்த மரத்தடி கிளாஸஸ். சந்திர மோகன் ஐயா, பேபி டீச்சர், என்னோட பிரெண்ட்ஸ், அப்புறம் அந்த மழை எல்லாமே ஒவ்வொன்னா நினைவுக்கு வருது. ரொம்ப லைட்டா உணருறேன். சரி என்னோட வாட்ஸ் அப்ல டச்ல இரு. நாம திரும்ப இன்னொரு நாள் சந்திக்கலாம்... சரியா?'' என்று கேட்டுவிட்டு, அவனுக்கு கையசைத்து நெய்வேலி செல்லும் பேருந்து ஒன்றில் ஏறியமர்ந்து கொண்டாள். 

நாராயணன் செய்வதறியாமல் அவளையே அவ்விடத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்தான். அவனது உடல் முன்னிலும் அதிகமாக நடுங்கியபடி இருந்தது. அந்த கடிதத்தை கௌரி படித்திருப்பாளா? என அவளிடம் கேட்க வேண்டும் போலவும் இருந்தது. ஆனால், அவள் அதனை அலட்சியப்போக்குடன் கேளிக்கை கடிதமென தன்னிடம் உரைத்துவிட்டால் அதனை எப்படி ஏற்றுக்கொள்வதென அவனுக்கு அவஸ்தையாக இருந்தது. 

கண நேரத்திற்கு முன்பு அவன் சந்தித்தது கௌரியே அல்ல எனும் பிரேமையை திடீரென வளர்ந்துக்கொண்டான். இவள் காலத்தால் தனக்கு பிந்தி பிறந்தவள். கௌரியின் மாற்று. நகல் அல்லது நிழல். இவள் ஒருபோதும் தனது கௌரியாக இருக்க முடியாதென நிச்சயம் கொண்டான். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com