பேல்பூரி

ஒரு திருமண மண்டபத்தில்)நீ தேடிச் செல்லும் அன்பு நிலையற்றது
பேல்பூரி


கண்டது
(திருத்தணியில் ஒரு திருமண மண்டபத்தில்)
நீ தேடிச் செல்லும் அன்பு நிலையற்றது
உன்னைத் தேடி வரும் அன்பே நிலையானது.
அ.பூங்கோதை,  செங்கல்பட்டு.
(மதுரை சிம்மக்கல்லில் உள்ள 
ஓர் இடியாப்பக் கடையின் பெயர்)
இந்தியன் இடியாப்பக் கடை
பிரியா ஆனந்த், விருதுநகர்.
(சாக்கோட்டையில் ஒரு கரும்பலகையில் கண்ட வாசகம்)
செல்லும் பாதை சரியாக இருந்தால்,
வேகமாக அல்ல, மெதுவாக  ஓடினாலும் வெற்றிதான்.
சோம.தேவராசன், கும்பகோணம்.

யோசிக்கிறாங்கப்பா!
வாழ்வில் நாளைக்கு செய்யலாம் என்று 
தள்ளிப் போடாத ஒரே விஷயம்...
செல்போனுக்கு சார்ஜ் போடுவதுதான்.
ப.சரவணன், ஸ்ரீரங்கம்.

கேட்டது
(திருச்சி பொன்மலை பேருந்து நிறுத்தத்தில் கணவனும் மனைவியும்)
மனைவி : நம்ப பிள்ளைங்க ஸ்கூல்ல நடக்கிற பேரண்ட்ஸ் மீட்டிங்குக்கு நான் போறதுக்குப் பதிலா, நீங்க போனீங்களே... எப்படியிருந்துச்சு?
கணவன்:  ஆமாமாம்... ஒரு டீயும், மூணு பிஸ்கெட்டும் குடுத்தாங்க...
ஆர்.தனம், திருச்சி -2

(கொள்ளிடம் - குட்டியாவெளி தெருவில் உள்ள ஒரு வீட்டில் கணவனும், மனைவியும்)
கணவன்: குழந்தை அழறதைக் கூட கவனிக்காம ஏன்டி சீரியல் பார்த்துக்கிட்டிருக்க?

மனைவி:  சும்மா தெரியாமல் பேசாதீங்க.  குழந்தை சீரியல் பார்த்துட்டுதான் அழுதுக்கிட்டு இருக்கு.
அ.ப.ஜெயபால், கொள்ளிடம்.

(தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷனில் RUNNING STAFF REST ROOM என்பது இப்படித் தமிழில் எழுதப்பட்டுள்ளது)
ஓடும் தொழிலாளருக்கு ஓய்வறை
மு.தாஜுதீன், தஞ்சாவூர்.


மைக்ரோ கதை
கணவன் ராசு  இரவில் வந்து வீட்டுக் கதவைத் தட்டினான்.  மனைவி மரகதம் ரொம்ப நேரம் ஆகியும் கதவைத் திறக்கவில்லை. பலமுறை அவள் பெயரைச் சொல்லிக் கூப்பிட்ட பின்புதான் கதவைத்  திறந்தாள்.

""வீட்டுக்கு வெளியே நாய் மாதிரி கத்திக்கிட்டிருக்கேன்.  ஏன் கதவைத் திறக்கலை?''  என்று கோபமாகக் கேட்டான். 

மரகதம் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல், ""கையிலே செல்போன் இருக்குல்ல... போன்ல கூப்பிட்டிருக்கலாம்ல?'' என்றாள். "அவள் சொல்றதும் சரிதான். நான் ஒரு மடையன்' என்று நினைத்துக் கொண்ட  ராசு,  ஒரு வாரம் கழித்து அதேபோல் இரவு 12 மணிக்கு வந்து மனைவிக்கு செல்போனில் கால் செய்தான்.  போன் ரிங் போய்க் கொண்டே இருந்தது. அவள் எடுக்கவேயில்லை.

நீண்ட நேரம் முயற்சி செய்தும் அவள் போனை எடுக்காததால், கதவைத் தட்டினான். கதவைத் திறந்த அவளிடம், "" ஏன் போனை எடுக்கலை? எத்தனை தடவை போன் பண்ணுவது?'' என்று எரிந்து விழுந்தான்.  

அதற்கு அவள் சிறிதும் அலட்டிக் கொள்ளாமல், ""போனை சைலண்டில் போட்டிருந்தேன். அதான் எடுக்கலை. ரெண்டு தடவை கால் பண்ணிப் பார்த்துட்டு  கதவைத் தட்ட வேண்டியதுதானே?''  என்றாள் கூலாக. 
சு.ஆறுமுகம், கழுகுமலை.

அப்படீங்களா!

"மின்விசிறி இல்லாமல் தூங்க முடியாது'  என்ற நிலை எப்போதோ வந்துவிட்டது.  நெரிசலான வீடுகள், காற்றோட்டமில்லாத சூழ்நிலை, அதிகரிக்கும் வெப்பம் இவையெல்லாம்  தூக்கத்துக்கு எதிரிகள். 
ஏர்கண்டிஷன் வாங்கி வைத்துக் கொள்ள வசதியில்லாதவர்களுக்கு மின்விசிறிதான் தூங்க உதவும் துணை. 

ஆனால் நியூயார்க் நகரில் உள்ள லெனக்ஸ் ஹில் மருத்துவமனையின் டாக்டர் ஒருவர் மின்விசிறி உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் என்கிறார். 

மின்விசிறியின் காற்று நேரடியாக நம் உடலில் படுவதால் அது நம் உடலில் அதிலும் குறிப்பாக,  உதடு, மூக்கு பகுதியில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சிவிடு
கிறதாம். அது மட்டுமல்ல, காற்று சுழன்று அடிப்பதால்,  காற்றில் உள்ள கண்ணுக்குத் தெரியாத தூசிகள் சுழற்றியடிக்கப்பட்டு நாம் சுவாசிக்கும்போது  மூக்குக்குள் சென்று பல்வேறு உடல் நலப் பிரச்னைகளை ஏற்படுத்துகிறதாம்.  ஏற்கெனவே சைனஸ்,  ஆஸ்துமா போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு  இது அதிக பாதிப்பை ஏற்படுத்திவிடுமாம். 

மின்விசிறிக்குப் பதிலாக ஏர் கூலரை பயன்படுத்துவது  நல்லது என்கிறார்கள்.
என்.ஜே., சென்னை-116

எஸ்எம்எஸ்
மொபைல் போன் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக
ஸ்கிராட்ச் கார்டு  ஒட்டும் நாம்
தலையில் அடிபடக் கூடாது என்பதற்காக
ஹெல்மெட் அணியத் தயங்கலாமா?
அ.செல்வகுமார், சென்னை-19

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com