ஜெயலலிதாவுடன்
ஜெயலலிதாவுடன்

ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - 40: எளிமையாகப் பழகிய அப்துல் கலாம்!

புரட்சித்தலைவர் மறைவிற்குப் பிறகு அதுவும் 1998-க்குப் பின்னர் கட்சி அரசியலை விட்டு ஒதுங்கி இலக்கியத் துறையிலும் திரைத்துறையிலும்

புரட்சித்தலைவர் மறைவிற்குப் பிறகு அதுவும் 1998-க்குப் பின்னர் கட்சி அரசியலை விட்டு ஒதுங்கி இலக்கியத் துறையிலும் திரைத்துறையிலும் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருந்தேன். அப்படி இருந்த என்னை மீண்டும் கட்சியில் ஈடுபட வைத்தவர் வைகைச் செல்வன்தான்.

அவர் அமைச்சராகவும் சட்டப்பேரவை உறுப்பினராகவும் ஆவதற்கு முன்பு 2010}ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜெயலலிதா அம்மாவிடம் அழைத்துப் போய் கட்சியில் மீண்டும் இணைத்தார். அப்போது அம்மாவிடம் நான் எழுதிய மூன்று புத்தகங்களைக் கொடுத்தேன். அவர் பெற்றுக் கொண்டு, ""நேரம் கிடைக்கும் போது படிக்கிறேன்'' என்றார்.

""தலைவர் உங்களைப் பற்றியும் உங்கள் பாடல்களைப் பற்றியும் அவரைப் பற்றி நீங்கள் எழுதிய "எம்.ஜி.ஆர். பிள்ளைத்தமிழ்' பற்றியும் சொல்லி இருக்கிறார். நேர்மையான மனிதர் என்றும் சொல்லியிருக்கிறார். தொடர்ந்து கட்சிப் பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொள்ளுங்கள். வாழ்த்துகள்'' என்றார்.

""நன்றி அம்மா. நாளை நான் தில்லித் தமிழ்ச் சங்க விழாவில் கலந்து கொள்வதற்காக தில்லிக்குச் செல்கிறேன். வந்த பிறகு, அறிவிக்கின்ற கழகக் கூட்டங்கள் அனைத்திலும் கலந்து கொள்கிறேன்'' என்று சொல்லி அவரிடம் விடை பெற்றேன். வைகைச் செல்வனும் அவரிடம் விடைபெற்றார்.

தில்லித் தமிழ்ச் சங்க விழாவில் கலந்து கொள்ளப் பல மாநிலங்களில் இருந்தும் தமிழ் எழுத்தாளர்கள், அறிஞர்கள், கவிஞர்கள் பலரை அழைத்திருந்தார்கள். அதில் என்னையும் ஒருவனாக இணைத்து அழைத்துச் சென்றவர், சாகித்ய அகாதெமி குழு உறுப்பினர்களில் ஒருவராக இருந்த கவிஞர் ரவி சுப்பிரமணியம்.

"மரபுக் கவிதை மறக்கப்பட வேண்டியதா' என்ற தலைப்பில் நான் உரையாற்றினேன். அந்தக் கருத்தரங்கத்திற்குத் தலைமை வகித்தவர் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம்.

""இது புதுக்கவிதைகள் பூத்துக் குலுங்குகின்ற காலம். தமிழ் என்ற மரத்திலே பூத்துக் குலுங்குகின்ற மலர்கள் புதுக்கவிதைகள் என்றால் அந்தப் புதுக்கவிதை என்ற மலர்களையும் தமிழ் என்ற மரத்தையும் தாங்கி நிற்பதே மரபுக் கவிதை என்ற வேர்கள்தாம். ஆக மரபுக்கவிதை என்ற வேர்கள் இல்லையென்றால் தமிழ் என்ற மரமே இல்லை.

தமிழ் என்ற மரமே இல்லையென்றால் புதுக்கவிதை மலர்கள் அதில் எப்படிப் பூக்கும்? ஆக மரபுக் கவிதை மறக்கப்பட வேண்டியதா என்பதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள்'' என்றேன். இதுபோல் பல கருத்துக்களைக் கூறினேன். எல்லாரும் கையொலி செய்து வரவேற்றார்கள்.

""பதினெட்டாம் நூற்றாண்டு வரையிலும் நமக்கு இலக்கியங்கள் என்றால் அனைத்தும் செய்யுள் இலக்கியங்கள் தாம். உரைநடை இலக்கியங்கள் கிடையாது. ஆனாலும் ஒரே ஒரு உரைநடை இலக்கியம் இருந்தது. அது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் தோன்றிய இறையனார் களவியல் உரை. இதை இறையனார் அகப் பொருள் உரை என்றும் சொல்வார்கள்.

பெயர்தான் உரைநடையே தவிர இந்த உரைநடைக்கு ஓர் உரைநடை இருந்தால்தான் புரியும். அந்த உரைநடையும் கவிதை நடையில் தான் இருக்கும். அதில் சில பகுதிகள் எனக்கு மனப்பாடமாகத் தெரியும். அந்த உரைநடை இல்லையென்றால் நமக்கு மூன்று சங்கங்கள் இருந்த வரலாறே தெரியாமல் போயிருக்கும்.

காய்சின வழுதி முதலாக கடுங்கோன் ஈறாக எண்பத்தொன்பது பாண்டிய மன்னர்கள் காலத்தில் தலைச்சங்கம் தென்மதுரையில் நடந்ததென்றும், அது கடலில் மூழ்கிய பிறகு, வெண்டேர்ச் செழியன் முதலாக முடத்திருமாறன் ஈறாக ஐம்பத்தொன்பது பாண்டிய மன்னர்கள் காலத்தில் இடைச்சங்கம் கபாட புரத்திலே நடைபெற்றது என்றும், அதுவும் கடலில் மூழ்கிய பிறகு அதில் தப்பிப் பிழைத்த முடத்திருமாறன் முதலாகக் கானப் பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி ஈறாக நாற்பத்தொன்பது பாண்டிய மன்னர்கள் காலத்தில் இன்றைக்கிருக்கின்ற மதுரையில் கடைச்சங்கம் நடைபெற்றது என்றெல்லாம் படிக்கிறோமே அதற்கு ஆதாரமாக இருப்பதே இந்த உரைநடை நூல்தான்'' என்று தமிழின் வரலாற்றை சுருக்கமாகவும் விளக்கமாகவும் ஐம்பது நிமிடங்கள் வரை பேசினேன்.

எனக்குக் கொடுத்த நேரம் முப்பது நிமிடம்தான். சந்தக் கவிதைகள் பற்றியும் அதிலும் தமிழ் ஒளியின் கவிதைகள் பற்றியும் திரைப்படப் பாடல் பற்றியும் பேசியதில் நேரம் அதிகமாகிவிட்டது. ஆனாலும் நேரம் போனதே தெரியவில்லை. ""முத்துலிங்கம் பேச்சை நம்மால் மறக்க முடியாது'' என்று கருத்தரங்கிற்குத் தலைமை தாங்கிய கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் என்னை சிறப்பித்துக் கூறினார்.

விழாவின் இறுதியில் எங்களுக்கு நினைவுப் பரிசை குடியரசுத் தலைவராக இருந்து ஓய்வு பெற்ற அப்துல் கலாம் வழங்கினார். அப்போது நான் கழுத்தைச் சுற்றிப் போட்டிருந்த கறுப்பு நிற மப்ளரைத் தொட்டுப் பார்த்து, ""நன்றாக இருக்கிறது. எங்கே வாங்கினீர்கள்?'' என்றார். ""சென்னையில் வாங்கியது'' என்றேன் நான். உயர் பதவியில் இருந்தாலும் எளிமையாக எல்லாரிடத்திலும் பழகக் கூடிய பண்பாளர் அப்துல் கலாம் என்பதை அறிந்து கொண்டேன்.

அதன்பிறகு மற்றொரு முறை டில்லியில் இருக்கும் கவிஞர் ஜோதிப் பெருமாள் எழுதிய கவிதை நூல் வெளியீட்டு விழாவிற்குச் சென்ற போது அப்துல் கலாம் வீட்டிற்குச் சென்று என் புத்தகங்கள் சிலவற்றைக் கொடுத்தேன். அப்போது என்னுடன் "கவிதை உறவு' ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி ராதாகிருஷ்ணனும் வந்திருந்தார்.

அப்துல் கலாம் அவர்களை தில்லியில் சந்தித்தபோது, "எல்லாவற்றிற்கும் ஆசைப்படுங்கள், கனவு காணுங்கள்' என்று சொன்ன கருத்துகள்தாம் என் நினைவுக்கு வந்தன. "கனவு காணுங்கள்' என்று அவர் சொன்னதை வைத்து "மாயக்கண்ணாடி'  படத்தில் நான் ஒரு பாடல் எழுதியிருந்தேன்.

"சினிமாவில் நுழைவதற்காக வந்த பலர் தோல்விகளையே அதிகம் சந்தித்திருக்கிறார்கள். சிலர் சினிமாவில் நுழைய முடியாமலே போய் விடுகிறார்கள்; சிலர்தான் வெற்றி பெறுகிறார்கள்' என்ற கருத்தை மையமாக வைத்து சேரன் இயக்கிய படம் அது. அதில் ஒரு சிறு வேடத்தில் நான் நடித்திருக்கிறேன். இளையராஜா இசையில் அந்தப் படத்தில் நான் எழுதிய பாடல் இது தான்.

பல்லவி
""காசு கையில் இல்லாட்டா - இங்கு
எதுவும் இல்லடா
உன் பேச்சு இங்கே செல்லாது - உலகம்
கண்டுக்காதுடா

காசு பணம் என்னும் ஒரு வட்டத்திலே
பூமியிது சுத்துதப்பா மொத்தத்திலே
எத்தனையோ ரூபமுண்டு ரொக்கத்துக்கு
ஏழை மக்கள் வாழ்க்கை மட்டும் துக்கத்துக்கு
அட - மதிப்புக் கிடைப்பதும் மதியைக்
கெடுப்பதும்
பணத்தில் வேலை தான்டா

சரணம் (1)
ஏகப்பட்ட ஆசையுடன் பட்டணத்தைத் தேடி 
சிறகை விரித்து விண்ணில் பறக்கப்  - பலர்
வந்து போகிறார்

ஆசைப்பட்ட அத்தனையும் மாறிவிடும்போது
அல்லல் அடைந்து உள்ளம் உடைந்து - சிலர் 
நொந்து போகிறார்

வாழ்க்கை என்பது பயணம் போன்றது
வளைவும் திருப்பமும் வழியை மாற்றுது
புத்தியுள்ளவன் தப்பிப் பிழைக்கிறான்
சிக்கிக் கொண்டவன் திகைத்து நிற்கிறான்
பட்டுப்பட்டுப் படிச்சவன்தான்
மற்றவர்க்குப் பாடம் ஆகிறான்

சரணம் (2)
எப்படியும் வாழ்க்கையிலே வெற்றிபெற எண்ணி
எந்தத் தொழிலும் செய்ய நினைத்து - சில 
உள்ளம் அலையுது

ஆயிரத்தில் ஒன்றுமட்டும் எண்ணியதைப் போல
வெற்றிப் படியை எட்டிப் பிடித்து - கொடி
நாட்டிச் செல்லுது

கனவு காணவே பலரும் சொல்கிறார்
கனவு மட்டுமே இளைஞர் காண்கிறார்
திறமை இன்றியே கனவு காண்பவன்
கானல் நீரிலே மீனுக் கலைபவன்
ஆசைக்கொரு எல்லைவச்சு
அறிவுக்கு வேலை கொடுங்கடா''

இதுதான் பாட்டு. ஆனால் இந்தப் படம் ஓடவில்லை.

சில படங்கள் ஓடுகின்றன. சில படங்கள் ஓடுவதில்லை. அதற்குக் கூட அண்ணன் மருதகாசி அந்தக் காலத்தில் ஒரு பாடல் எழுதியிருக்கிறார்.

எதுக்காக ஓடுதின்னும் தெரியலே - ரசிகன்
எதை ரசிச்சுப் பார்க்கிறானும் புரியலே
அதுக்காக ஓடுதின்னு அதையும் இதையும்
சேத்துப்புட்டு
அவஸ்தைப் படும் முதலாளிங்க தெருவிலே''

இந்த நிலையில்தான் இன்றைய பெரும்பாலான படங்கள் இருக்கின்றன.
(இன்னும் தவழும்)

படம் உதவி: ஞானம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com