எழுத்தாளர்களால் கதை உருவாக்கப்பட வேண்டும்!

"கீ', "கொரில்லா', "ஜிப்ஸி' என அடுத்தடுத்து படங்கள் வந்துக் கொண்டே இருக்கும். இந்த ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். 2018-எனக்கு
எழுத்தாளர்களால் கதை உருவாக்கப்பட வேண்டும்!

""போன வருஷம் எனக்கு ஒரு படம்தான் ரிலீஸ் ஆனது. ஆனால், இந்த வருஷம் "கலகலப்பு 2',  "கீ', "கொரில்லா', "ஜிப்ஸி' என அடுத்தடுத்து படங்கள் வந்துக் கொண்டே இருக்கும். இந்த ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். 2018-எனக்கு ரொம்ப ஜோரான வருஷமாக இருக்கும்.'' - நம்பிக்கை வார்த்தைகளுடன் பேட்டியை ஆரம்பிக்கிறார் ஜீவா. 

* கடகடவென நிறையப் படங்கள் நடித்துக் கொண்டு இருந்தீர்கள்.... இப்போது ரொம்பவே தேர்வு செய்து நடிக்கிறீர்கள்...  குறிப்பாக "ராம்', "கற்றது தமிழ்' போன்று ஒரு படம் கூட நடிக்கவில்லை... ஏன் இந்த மாற்றம்?

சினிமாவில் எனக்கென ஒரு வேகம் வைத்து ஓடிக் கொண்டே இருப்பேன். அவ்வப்போது நடிக்கிற படங்களை பற்றி மட்டும்தான் மனசுல நினைப்பு ஓடிக் கொண்டு இருக்கும். ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து 20 வருடங்களாகி விட்டது என யாரோ சொன்ன போதுதான், "அட' என்று சின்ன ஆச்சரியமாக இருந்தது. ஆனால், ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் எதிர்பார்ப்பு என்னவென்று எனக்குத் தெரியும். ஆனால், எப்போதும் "ராம்', "கற்றது தமிழ்' மாதிரியான படங்களில் மட்டுமே நடித்துக் கொண்டிருக்க முடியாது. என் படங்கள் எல்லாமே நல்ல படங்கள்தான். ஆனால், மொத்த குடும்பத்துக்கான பேக்கேஜ் என்று சொல்லிக் கொண்டு, ஒருவிதமான பாணியில் செட் ஆகிவிட்டேன். இனிமேல் நடிக்கிற ஒவ்வொரு படமும் நமக்கே புதிதாக இருக்க வேண்டும் என எண்ணத்தில் அடுத்தடுத்து நடிக்க இருக்கிறேன். "சங்கிலி புங்கிலி கதவ தொற', இப்போது வந்திருக்கிற "கலகலப்பு 2' என எல்லா படங்களுக்கும் நல்ல வரவேற்புதான். ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது. "கற்றது தமிழ்', "ராம்' மாதிரியான படங்களுக்கு ஒருவிதமான ரசிகர்கள் இருப்பார்கள். காமெடி, கலாட்டா மாதிரி பாணி படங்களுக்கு ஒருவித ரசிகர்கள் இருப்பார்கள். அவர்களுக்காகவும் படங்கள் நடிக்க வேண்டியுள்ளது. அடுத்து  "கீ', "கொரில்லா', "ஜிப்ஸி' எல்லாமே வேறு ரகம். "ஜிப்ஸி'க்கு முழு மனசோடு தயாராக வேண்டியுள்ளது. உடம்பை ஏற்ற, இறக்க என வேறு மாதிரியாக ஏற்பாடுகள் நடக்கின்றன. வயசு இருப்பதால் சமாளிக்க முடிகிறது. படம் வரும் போது, அதற்கான கிரெடிட் கிடைக்கும் போது கவலை, வலி எல்லாமே மறைந்து விடும். 
 
* இப்படி எல்லா விதமான தளங்களிலும் பயணிப்பதுதான் திட்டமா...?
அப்படி இல்லை. என்னாலும் இன்னும் பிரமாதமான வேடங்களில் நடிக்க முடியும் என்று என்னை விட என் இயக்குநர்கள் நம்பினார்கள். இவன் காதலித்துக் கொண்டே இருந்தால் சரியாக வராது. அடுத்த இடத்துக்கு இவன் போக வேண்டும் என என் மேல் நம்பிக்கையும் அக்கறையும் வைத்த ஜனா சார், அமீர் அண்ணன், ராம் சார்... இவர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால் எந்தவிதத் திட்டமிடலும் இல்லாமல் சினிமாவுக்கு வந்தவன் நான். நடிக்க வந்ததே ஏதோ ஒரு  நம்பிக்கையில்தானே?

* ஆர்யா, விஷால், ரவி  என உங்கள் மத்தியில் இருக்கிற நட்பு ரொம்பவே ஆரோக்கியமான விஷயம்...  அடிக்கடி சந்திப்பீர்களா..?
கார்த்தி, சிபிராஜ், ஆர்யா, விஷால், ரவி... ஏன் சிம்பு, தனுஷ் கூட என் நண்பர்கள்தான்.  ரவி அருமையான நண்பன். நாங்கள் சேர்ந்தால் அங்கே கலாட்டாதான்.  எங்கள் எல்லாரையும் அதட்டி மிரட்டி வழிக்குக் கொண்டு வருகிற பொறுப்பு  விஷாலுக்கு. ஆர்யா எப்போதும் செம சேட்டை. எதற்கும் பதட்டம் இல்லை. "தனி ஒருவன்' பார்த்து விட்டு ரவியை மனம் திறந்து பாராட்டினேன். நான் இன்னொரு படத்தில் நடித்த போது, ""ஏன்டா கதையே இல்லாத படத்தில் நடிக்கிறே...'' என்று அக்கறையாக பேசுவான். சினிமா பற்றி கொஞ்சம்தான் பேசிக் கொள்வோம். மற்ற எல்லா இடங்ளிலும் அரட்டை, சேட்டைதான் நிறைய. நான், ஆர்யா, விஷால், ஜெயம் ரவி என நான்கு பேரும் சேர்ந்து நடிக்கிற மாதிரி வெங்கட்பிரபு சொல்லியிருக்கிறார். அந்தப் படம் வந்தால் இன்னும் அழகாக மாறும் எங்கள் நட்பு. "எப்போது பசங்களைப் பார்ப்போம்' என்று துடிக்கிற அளவுக்கு நாங்கள் எல்லோரும் செம தோஸ்த்.  

* யார் இயக்கத்தில் நடிக்க ஆசை...?
எனக்கு என்ன? ஜனா சார், அமீர் அண்ணன், ராம் சார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், சசி சார், கே.வி.ஆனந்த் சார் என எனக்கு அமைந்த இயக்குநர்கள் வரிசை போல் யாருக்கு கிடைத்திருக்கிறது? இதுவரை நான் நடித்த படங்கள் எதுவுமே பெரிய திட்டமிடல்கள் இல்லாமல்தான் நடந்து வந்தது. இனி ஒவ்வொரு படத்தையும் அழகாக, அம்சமாக வடிவமைக்க வேண்டும் என நினைத்திருக்கிறேன். ராஜுமுருகனின் "ஜோக்கர்' அக்கறையான படமாக வந்திருந்தது. அந்தப் படத்தை பார்த்து அசந்து போயிருக்கிறேன். நல்ல இயக்குநர்... இப்போது அவர் கூட "ஜிப்ஸி' படத்துக்காக காத்திருக்கிறேன். உங்களை, என்னை, நாம் எல்லோரையும் கேள்வி கேட்கிற மாதிரி அந்தப் படம் இருக்கும். இந்தியா முழுக்க பயணிக்கிற மாதிரியான கதை. பெரிய உழைப்பு தேவைப்படுகிறது. நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். இன்னும் நல்ல இயக்குநர்கள் வந்தால் பார்க்கலாம். அதை விட நல்ல எழுத்தாளர்களால் கதை உருவாக்கப்பட வேண்டும் என நினைக்கிறேன். 

* சினிமாவில் என்னவெல்லாம் கற்றுக் கொண்டீர்கள்...?
கற்றுக் கொண்டே இருக்கிறேன். ஒவ்வொரு படத்திலும் என்னை உயர்த்தி வந்துகொண்டே இருக்கிறேன். உண்மையாக இருக்கிறவர்களை மதிக்க வேணடும் என நினைக்கிறேன். பொய்யானவர்களை விலக்கி வைக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. ஒவ்வொரு இயக்குநரும் நினைப்பதை விட, அந்த எதிர்பார்ப்புக்கும் மேல இருக்க வேண்டும் என ஓடிக் கொண்டே இருக்கிறேன். இருபது, முப்பது வருடங்களாக ஒரு நடிகனைத் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடுகிற ரசிகர்கள் திடீரென்று அவனை வெறுக்க ஆரம்பித்தால், அதற்கு முழுக் காரணமும் அந்த நடிகன்தானே தவிர, ரசிகர்கள் கிடையாது. இந்த உண்மையைத்தான் இப்போது மனதில் ஓட்டிப் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com