சிந்தை கவர்ந்த திருவிழாக்கள்- 8: கோவா கார்னிவெல்! 

கோவாவிற்கு பலமுறை சென்றிருக்கிறேன். ஒவ்வொரு முறை செல்லும்போதும், "வா, வா' என்று இரு கரங்கள் நீட்டி அழைத்து கோவா, தன் பல
சிந்தை கவர்ந்த திருவிழாக்கள்- 8: கோவா கார்னிவெல்! 

கோவாவிற்கு பலமுறை சென்றிருக்கிறேன். ஒவ்வொரு முறை செல்லும்போதும், "வா, வா' என்று இரு கரங்கள் நீட்டி அழைத்து கோவா, தன் பல புதிய அழகிய வெளிப்பாடுகளை எனக்குக் காட்டி மகிழ்விக்கிறது.

அரபிக் கடலோரமாக அமைந்த அழகிய கடற்கரைகள், ஓங்கி வளர்ந்த தென்னை மரங்கள், முந்திரிக் காடுகள், சதுப்பு நிலங்கள், தேவாலயங்கள், கோயில்கள், உமிழ்நீரை அதிக அளவில் சுரக்க வைக்கும் கோவன் உணவு வகைகள், நீக்கமற எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கும் வெளிநாட்டினர் என அதிர வைக்கும் இடம் கோவா.

ஆண்டுக்கு இருபது லட்சம் உல்லாசப் பயணிகள் வந்து போகும் இடமாக கோவா திகழ்கிறது. இதில் 12 லட்சம் பேர் வெளிநாட்டினர். ஏன் இப்படி தேன் அடையை சூழ்ந்துக் கொள்ளும்  தேனீக்களாக வெளிநாட்டினர் கோவாவிற்கு வருகின்றனர் என்பதற்கு 450 ஆண்டுகள் போர்ச்சுகீசியர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்ததால், ஐரோப்பிய கலாசாரம் இன்றளவும் அங்கே அதிகமாக வேரூன்றி இருக்கிறது.

கோவா மக்கள் எப்போதும் இசையில் மூழ்கிக் கிடக்கிறார்கள். பாட்டு, நடனம் என்று தூள் கிளப்பி விடுவார்கள். சாதாரண ஹோட்டலில்கூட ஒரு ஸ்பானிஷ் கிடாராவது ஒலித்துக் கொண்டிருக்கும். இதைத் தவிர முந்திரி பழத்திலிருந்து தயாரிக்கப்பட்ட லோக்கல் டிரிங்  பென்னி (டங்ய்ய்ஹ்) அங்கே ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது.

கோவா மக்கள் மகிழ்ச்சியின் பிறப்பிடமாகத் திகழ்கிறார்கள். பொன்னையே கொட்டிக் கொடுத்தாலும் பகல் இரண்டு மணிக்கு மேல் வியாபாரத்தில் ஈடுபட மாட்டார்கள்.

நல்ல பகல் உணவு, அருமையான பகல் தூக்கம். ஆச்சரியம் என்னவென்றால், இந்தப் பழக்கம் அங்கே வாழும் நாய்களையும், சிறிது காலம் தங்கிவிட்டுப் போகும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளையும் தொற்றிக் கொண்டுள்ளது.

ஒருமுறை கோவாவிற்கு சென்றிருந்தபோது எங்களுடன் வந்த கைட் ஜோசப் சொன்னார், ""நீங்கள் அடுத்தமுறை வரும்பொழுது கட்டாயமாக எங்களுடைய கார்னிவெலில் கலந்துகொள்ளும் விதமாக உங்கள் பயணத்தை வடிவமையுங்கள்'' என்றார்.

"கரும்பு தின்னக் கூலியா!' என்று 2011-ஆம் ஆண்டு மார்ச் மாதம், 5-ஆம் தேதி தொடங்கி 8-ஆம் தேதி வரை நடக்க இருந்த கோவா கார்னிவெல் விழாவில் கலந்து கொள்வதற்காக என் கணவருடன் பயணப்பட்டேன்.

ஆதியில் கோவாவைப் படைத்தவர் "பரசுராமர்' என்று நம் புராணங்கள் எடுத்துரைக்கின்றன. நம்மை எல்லாம் காக்கும் மகாவிஷ்ணுவின் ஆறாவது அவதாரம்தான் பரசுராமர். கடவுள்களுக்கே மன அழுத்தம் அதிகமானால் புகலிடமாகத் தேடிவந்து தங்கிச் சென்றது கோவாதானாம். அதனால்தான் என்னவோ இன்றைக்கும் இயற்கை அழகை அள்ளித் தந்து இயந்திரமாகிப் போன மனிதனை தன் நிலைக்கு அழைத்து வந்து உற்சாகப்படுத்துகிறது.

இயற்கை அழகோடு, கார்னிவெல்லும் கைகோர்த்துக் கொண்டதால் என் நெஞ்சம் பலவிதமான எதிர்பார்ப்புகளால் நிரம்பி வழிந்தது. கோவாவில் எப்போதும் பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் கார்னிவெல், இம்முறை மார்ச் மாதத்தில் அரங்கேற இருந்தது. 

லென்ட் (lent) தொடங்குவதற்கு முன் நான்கு நாட்கள் இந்த வைபவம் நடைபெறுகிறது.

இயேசு கிறிஸ்து 40 நாள்கள் பாலைவனத்தில் விரதமிருந்து, சாத்தானின் சோதனைகளிலிருந்து விடுபட்டு மீண்ட அந்த நாள்களை கிறிஸ்தவர்கள் புனிதமாகக் கருதி தாங்களும் அவ்விதமே தீமைகளில் இருந்து விடுபட பிரார்த்தித்து விரதம் இருக்கிறார்கள்.

கார்னிவெல் என்றாலே "மாமிசத்தை ஒதுக்கு' என்று அர்த்தம். அதன்படி அந்த நாற்பது நாள்களும் மாமிசத்தை சாப்பிட மாட்டார்கள். கோவாவில் பல ஹோட்டல்களில் மீனை மட்டுமே சமைப்பார்களாம்.

இப்படிப்பட்ட விரதத்தை அனுஷ்டிப்பதற்கு முன்பு நான்கு நாள்கள் கும்மாளம் இட்டு மகிழ்கிறார்கள்.

கார்னிவெலின் அரசன் "மோமோ' (Momo) சொல்லும் வார்த்தைகள் என்ன தெரியுமா!

சாப்பிடு, குடி, கும்மாளம் அடி (Eat. drink, make merry). 
 
கோவாவில் பானாஜியில் (Panaji) நடைபெறும் கார்னிவெல் மிகவும் முக்கியமானது என்பதால் அங்கு சென்று தங்கினோம். ஏற்கெனவே எங்களுக்கு பழக்கப்பட்ட கைட் ஜோசப் வந்து எங்களை அழைத்துக் கொண்டு சென்றார்.

""ஜோசப், கார்னிவெல் கோவாவில் எப்போது தோன்றியது என்று சொல்ல முடியுமா?'' என்றேன்.

""மேடம், கோவா போர்ச்சுகீசியர்களின் ஆட்சியின் கீழ் இருந்தபொழுது அவர்களால் கார்னிவெல் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனால் இந்த கார்னிவெலின் தோற்றம் 500 ஆண்டுகளாக இருக்கிறது.

முதன்முதலில் ரோமானியர்களும், கிரேக்கர்களும் இப்படிப்பட்ட கார்னிவெலைக் கொண்டாடினர். பிறகு ஸ்பானியர்களும், போர்ச்சுகீசியர்களும் (Colonies) தாங்கள் கைப்பிடித்து குடியேறிய பகுதிகளில் கார்னிவெலைக் கொண்டாட ஆரம்பித்தனர்.

நாங்கள் சென்ற காரை ஒர் இடத்தில் நிறுத்திவிட்டு, சாலைகளில் நடக்கத் தொடங்கினோம். சூரியன் அஸ்தமனம் முடிந்திருந்ததால் எங்கும் இருள் சூழத் தொடங்கி இருந்தது. சாலையின் இருபக்கங்களிலும் இருந்த கட்டடங்களிலும், வீடுகளிலும், வண்ண வண்ண மின்சார விளக்குகள் சரங்களாகத் தொங்கி அழகூட்டிக் கொண்டிருந்தன. தாற்காலிகக் கூடாரங்கள் காளான் செடிகளாய் ஆங்காங்கே முளைத்திருந்தன. அவைகளில் நாட்டுப்புற நடனங்களும், பாடல்களும் அரங்கேறி மக்களைக் குஷிப்படுத்திக் கொண்டிருந்தன. நெருப்பு வளையங்களைக் கொண்டு பலர் சாகசங்களை செய்ய, கழைக்கூத்தாடிகள் தங்கள் திறமைகளைக் காட்டிக் கொண்டிருந்தனர். 

மற்றொரு புறம் ஜாஸ் இசைகளும், பேண்டின் முழக்கங்களும் கேட்க அங்கே ஆவலோடு சென்றோம். தெருக்களிலேயே மக்கள் கைகோர்த்து ஜாஸ் இசைக்கு ஏற்ப ஆடிக்கொண்டிருந்தனர்.

கார்னிவெலின் கொண்டாட்டங்கள் சூடு பிடிக்கத் தொடங்கியிருந்தன. ""சூப்பர்!'' என்றேன். ""இதுக்கே இப்படி மலைக்கிறீர்களே, நாளை மாலை நான்கு மணிக்கு பட்டோ பிரிட்ஜ் Patto Bridge) அருகே தொடங்க இருக்கும் கோவா கார்னிவெலின் ஊர்வலத்தைப் பார்த்தால் என்ன சொல்வீர்களோ'' என்றார் ஜோசப். 
பட்டோ பிரிட்ஜ் அருகே நடந்தது என்ன?

அடுத்த இதழில்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com