ஜிம்பாப்வே-ஷோனா நாடோடிக் கதை: நண்டுக்கு தலை போன கதை

கடவுள் உலகைப் படைத்தபோது எல்லா விலங்குகளிலும் பெரிய யானையை விலங்குகளின் அரசனாக்கினார். யானையும், அதன் குடிகளான
ஜிம்பாப்வே-ஷோனா நாடோடிக் கதை: நண்டுக்கு தலை போன கதை

கடவுள் உலகைப் படைத்தபோது எல்லா விலங்குகளிலும் பெரிய யானையை விலங்குகளின் அரசனாக்கினார். யானையும், அதன் குடிகளான மற்ற விலங்குகளும் தாகம் தீர்க்க அருமையான குளத்தையும் உருவாக்கினார். யானையும் அதன் குடிகளுடன் வனத்தை வளைய வந்தது. சந்தோஷமாக சிறு விலங்குகளிடம் சேர்ந்து விளையாடியது. ஆனால், யானை ராஜாவுக்கு தும்பிக்கை மீது வந்துவிடும் முன் கோபம் ஒரு பெரும்குறை. 

ஒருநாள் யானை சத்தமாகப் பிளிறி, தன் நண்பர்களான கழுகையும், நண்டையும் பார்த்து "நான் காட்டுக்கு வேட்டையாடப் போகிறேன். நீங்களும் என்னுடன் வர வேண்டும்' என்று சொல்லியது. உடனே கழுகு வேட்டைக்கு ஆயத்தமாகத் தன் வில், அம்பு, ஆகியவற்றை எடுத்துவர அதின் கூட்டிற்குச் சென்றது. 

ஆனால் நண்டோ தன்னால் வேகமாகச் செல்ல இயலவில்லையே என்ற வருத்தத்துடன் தன் வளைக்குத் திரும்பியது. அடுத்த நாள் யானை, கழுகு, நண்டு மூவரும் காட்டின் எல்லையில் வேட்டைக்குத் தயாராகும் வகையில் சந்தித்தன. யானையும் கழுகும் அம்பு வில் சகிதம் வேட்டைக்கு ஏற்ற இடம் தேடிச் செல்ல நண்டு தான் கொண்டு வந்த வலையை ஒரு மூலையில் விரித்து ஏதாவது ஏமாந்த விலங்கு மாட்டுமா என்று காத்திருந்தது. 

சற்று நேரத்தில், கழுகு, யானை விட்ட அம்புகளால் காயமுற்று குட்டி மான் ஒன்று வேகமாக ஓடி வந்து நண்டின் வலையில் மாட்டியது. நண்டு அந்த மானை ஒரு தடி கொண்டு அடித்து கொன்றது. மானின் மீது தைத்திருந்த அம்புகளை அகற்றிவிட்டு, மானின் உடலை ஒரு பக்கம் வைத்தது. இதுபோலவே மேலும் சில விலங்குகள் யானை, கழுகின் ஈட்டி, அம்புகளால் காயமுற்று ஓடிவந்து நண்டின் வலையில் விழுந்தன. அவற்றை தடி கொண்டு கொன்று வீழ்த்தியது. பல விலங்குகள் தப்பி ஓடியது என்றாலும் யானை நான்கு மான்களையும், கழுகு இரண்டு பன்றிகளையும் வேட்டையாடி கொன்றுவிட்டன. 

சரி, இனி வேட்டையாடியது போதும், போய் நண்டு எத்தனை விலங்குகளை வேட்டையாடியது எனப் பார்க்கலாம் என்று சொல்லி, நண்டு இருந்த இடத்திற்கு வந்தன. வந்து பார்த்தபோது நண்டு தன் கணக்கிற்கு ஆறு மான்களையும், நான்கு பன்றிகளையும் கொன்றதாகக் காட்டி பெருமையுடன் பேசியது. கழுகும் நண்டின் வேட்டை ஆடும் திறமையை வியந்து பாராட்டியது. 

அதனால் யானைக்கு பொறாமையால் கோபம் வந்துவிட்டது. ""கழுகே, அரசன் நானிருக்க என்னை விட அதிகமாக வேட்டையாடி இந்த நண்டு என்னை மட்டம் தட்டிவிட்டது. அதன் தலையை வெட்டிவிடு'' என்று சொல்ல, நண்டு நடுநடுங்கி ""வேட்டையாடிய எல்லா விலங்குகளையும் உனக்கே கொடுத்துவிடுகிறேன்'' என்று சொல்லி, உயிருக்கு மன்றாடியது. 

யானையும் கோபம் தணிந்து ""சரி என் முன் நிற்காதே'' என்று கூற, நண்டு மெதுவாகப் பக்கவாட்டில் நகர்ந்து சேற்றுக்குள் மறைந்தது. தன்னை விரட்டியடித்த யானையை பழிக்குப்பழி வாங்க நினைத்து, நண்டு நேராக யானையின் மனைவியிடம் சென்றது. யானையின் மனைவியிடம், ""நான் யானை அரசனுடன் வேட்டைக்குச் சென்றேன். வேட்டையாடி களைத்த யானை என்னை முன்னேஅனுப்பி வைத்து, உன்னிடம் நல்ல காரமாக குழம்பு வைக்கச் சொன்னது என்றது.

"மறந்துவிடாதே அதிகமான காரம் கொண்ட மிளகாய் சேர்த்த காரக்குழம்பு' என்று சொல்லிவிட்டு நண்டு கடவுள் படைத்த குளத்திற்குச் சென்று குளத்தை நிரப்பியது. எல்லா மண்ணையும் குளத்தில் கொட்டியதால் குளத்தில் தண்ணீர் இல்லாமல் போய்விட்டது. கடைசியில் தான் மூடிய குளத்தில் சிறு வளை செய்து அதில் பதுங்கியது நண்டு.

யானையின் மனைவியோ, நண்டு சொன்னது போலவே, அதிக மிளகாய் இட்டு காரசாரமாக காரக்குழம்பு ஒன்றை செய்தாள். சமைத்து முடித்து சற்று நேரத்தில் யானையும் கழுகும் களைப்புடன் திரும்பி வந்தன. அவை பசியுடன் இருந்ததால் காரக்குழம்பை சோற்றுடன் உண்டு பசியாறின. காரமான குழம்பை உண்டதால்  அதிக தாகம் எடுக்க ""சரி வா, குளத்திற்குப் போய் தாகம் தீர்த்துக் கொள்ளலாம்'' என்று சொல்லி குளத்திற்கு வந்தன. 

குளம் வற்றிக் கிடப்பதைப் பார்த்து, "இது என்ன ஆச்சரியம், நேற்று வரை நீருடன் இருந்த குளம் வற்றிவிட்டதே, காரத்தால் தவிக்கும் வாய்க்கு தண்ணீர் இல்லாமல் போய்விட்டதே!' என்று சொல்லி யானையும், கழுகும் நிலத்தைத் தோண்ட ஆரம்பித்தன. ஆழமாகத் தோண்டியபோது நண்டு ஒளிந்திருந்த வளையை கண்டுபிடித்தது கழுகு. யானை தனது தும்பிக்கையை வளையில் இட்டுப் பிடிக்க, நண்டு பதறிப்போய், தான் குளத்தை மூடிய கதையைச் சொன்னது. 

கோபமுற்ற நண்டின் தலையைக் கிள்ளி எரிந்துவிட்டு, தலையில்லா நண்டை குளத்தில் வீசியது. வீசிய மாத்திரத்தில் குளத்தில் நீர் ஊறி, குளம் தளும்ப யானை, கழுகு மற்றும் எல்லா மிருகங்களும் மகிழ்ச்சியடைந்தன. மேலும் பொங்கி வந்த ஊற்று நீர் பெருக நீர் வழிந்து ஓடுமாறு யானை கால்வாய் வெட்டச் சொன்னது. வெட்டிய கால்வாய் வழியாக நீர் வழிந்து ஓடி, ஆறாக மாறி காடு மலை கடந்து சென்று கடலில் சங்கமமானது. இதுவே ஆறு தோன்றிய கதை.

தலையில்லா நண்டை குளத்தில் வீசியதால் நீர் பொங்கியது என்று நினைத்த யானை, நண்டை மேலும் துன்புறுத்தவில்லை. தலையில்லா நண்டு தன் நண்பன் இறால் மீனிடம் உதவி கேட்க, அதுவும் தன் கண்கள் இரண்டை நண்டின் தோள் மீது பொருத்தியது. நண்டும் மீண்டும் குளத்தில் வசித்தால் ஆபத்து என்று ஆற்றின் போக்கில் சென்று கரையில் வாழ ஆரம்பித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com