திரைக் கொண்டாட்டம்: களவாணி மாப்பிள்ளை!

"நம்ம  ஊரு பூவாத்தா', "ராக்காயி கோயில்', "பெரிய கவுண்டர் பொண்ணு', "கட்டபொம்மன்', "நாடோடி மன்னன்', "மாப்பிள்ளை கவுண்டர்'
திரைக் கொண்டாட்டம்: களவாணி மாப்பிள்ளை!

"நம்ம  ஊரு பூவாத்தா', "ராக்காயி கோயில்', "பெரிய கவுண்டர் பொண்ணு', "கட்டபொம்மன்', "நாடோடி மன்னன்', "மாப்பிள்ளை கவுண்டர்' உள்ளிட்ட பல படங்களை தயாரித்த நிறுவனம் ராஜபுஷ்பா பிக்சர்ஸ். இந்த நிறுவனத்தின் தயாரிப்பாளரான மணிவாசகம்தான் இந்த அனைத்து படங்களையும் எழுதி இயக்கியவர். சுமார் 17 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் இந்த நிறுவனம் தயாரித்து வரும் படம் "களவாணி மாப்பிள்ளை'. 

இந்த படத்தை மணிவாசகத்தின் மகனான காந்தி மணிவாசகம் தயாரித்து இயக்குகிறார். கதாநாயகனாக அட்டக்கத்தி தினேஷ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அதிதி மேனன் நடிக்கிறார். ஆனந்த்ராஜ், தேவயானி, ரேணுகா, மனோபாலா, மகாநதி சங்கர், நான் கடவுள் ராஜேந்திரன், முனிஸ்காந்த் உள்ளிட்டோர் கதையின் முக்கிய வேடங்களை ஏற்று நடிக்கின்றனர். காதல் மற்றும் காமெடி கலந்து படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. 

கடந்த 15-ஆம் தேதி முதல் பொள்ளாச்சியில் முதற்கட்டப் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது. ஒளிப்பதிவு - சரவணன் அபிமன்யு. இசை   - என்.ஆர்.ரகுநந்தன்.

கலை- மாயா பாண்டி. எடிட்டிங்- பி.கே. நடனம்- தினேஷ். ஸ்டண்ட்- திலீப் சுப்பராயன். 

முழுக்க முழுக்க நகைச்சுவை

ராஜாமணி தியாகராஜன் முத்து விநாயகா மூவிஸ் நிறுவனம் தயாரித்து வரும் படம் "எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே'. ஜெகன், மோனிகா, கவிஞர் பிறைசூடன், சேரன் ராஜ், சாம்ஸ்,  நிகிதா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளித்து உருவாகி வரும் இப்படத்தை  காரைக்குடி நாராயணன் கதை வசனம் எழுதி தயாரிக்கிறார். முருகலிங்கம் இயக்குகிறார். படம் குறித்து காரைக்குடி நாராயணனிடம் பேசும் போது.... ""

"அச்சாணி', "மனைவி வந்த நேரம்' உள்ளிட்ட பல படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறேன். சிறிய இடைவெளிக்குப் பின் இப்போது இந்த படத்துக்கு கதை எழுதியிருக்கிறேன். முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளித்து கதை உருவாக்கப்பட்டுள்ளது.

இன்றைய சூழலில் ஒரு காதல் திருமணத்தில் நடக்கும் சுவாரஸ்யங்களை திரைக்கதை ஆக்கியிருக்கிறேன். ஒரு காவல் நிலையத்துக்கு வரும் சில கதாபாத்திரங்களும், அங்குள்ள காவல் நிலைய அதிகாரிகளுக்கும் இடையிலான பின்னணியாக திரைக்கதை இருக்கும்.

காவல் நிலையத்துக்கு வரும் காதல் ஜோடிக்கு கல்யாணம் நடப்பதில் உள்ள சிக்கல்கள்... அதனால் அங்கு நடக்கும் பிரச்னைகள்... என கதை போகும். இறுதியில் அந்த கல்யாணம் நடந்ததா... காவல்துறை அதிகாரிகள் அந்த காதலர்களுக்கு உதவி செய்தார்களா... என்பது கிளைமாக்ஸ். சிவகங்கை, சென்னை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது'' என்றார். 


மீண்டும் இணையும் கூட்டணி

"விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் தொடர்ச்சியாக மற்றொரு படம் உருவாக்கம் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வந்தது. தற்போது இந்தச் செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

"விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் சிம்புவின் கார்த்திக் கதாபாத்திரத்தை தொடர்ச்சியாக வைத்து அப்படத்தின் 2-ஆம் பாகத்தை உருவாக்க உள்ளார் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன். இப்படத்தில் சிம்புவுடன் தெலுங்கு, மலையாளம், கன்னட திரையுலகைச் சேர்ந்த பிரபல கதாநாயகர்கள் நடிக்கவுள்ளனர்.

"ஒன்றாக' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அனுஷ்கா நடிப்பது உறுதியாகியுள்ளது. முதல் பாகத்தில் "ஜெஸ்ஸி' கதாபாத்திரத்தில் நடித்த த்ரிஷாவும் இதில் கௌரவ வேடத்தில் நடிக்கிறார்.

விரைவில் சிம்புவுடன் நடிக்கவுள்ள இதர நடிகர்கள் மற்றும் நடிகைகள் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்று படக்குழுவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மார்ச் மாதத்துக்குப் பின் படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

விஷாலுக்கு எதிராக வியூகம்

மீண்டும் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பேரதிர்ச்சிகளை உண்டாக்கலாம் என்ற நிலையில், விஷால் தரப்பு நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டுக்களை முன் வைக்கத் தொடங்கியுள்ளனர் தமிழ் திரையுலகத்தினர். 

"சிவா மனசில புஷ்பா' என்ற படத்தை வாராகி இயக்கி, தயாரித்து, நடித்துள்ளார்.  இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கடந்த வாரம் நடைபெற்றது. எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.வி.சேகர், சுரேஷ் காமாட்சி, தருண் கோபி போன்ற பல சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இதில்  பலரும் தற்போதைய தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகத்தின் மீதும், விஷால் மீதும் புகார் கணைகளை தொடுத்து பேசினார்கள். இதில் எல்லோராலும் உற்றுக் கவனிக்கப்பட்டது  நடிகர் ஜே.கே.ரித்திஷீன் பேச்சு. ஏனென்றால் முன்பிருந்த சரத்குமார் தலைமையிலான நிர்வாகத்தை அகற்றுவதற்கு பல அம்சங்களிலும் விஷாலுக்கு துணை நின்றவர் ரித்தீஷ் என்ற பேச்சு பரவலாக உண்டு. அவரே இந்த முறை விஷாலுக்கு எதிராக தனது குரலை உயர்த்தியுள்ளார்.

அவர் பேசும் போது... ""நடிகர் சங்கத்தில் இந்த முறை விஷால் நிற்கட்டும். அவர் எப்படி பதவிக்கு வருகிறார் என்று பார்ப்போம். விஷாலை எதிர்த்து நிற்பவர்கள் கூட  நான் நிற்பேன். விஷால் என்ன சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ள யாருமில்லை. செங்கல்லை வைத்து கட்டடம் கட்டினால் மட்டும் புண்ணியம் வராது. சங்கத்தில் இருக்கிற உறுப்பினர்களை மதிக்கத் தெரிய வேண்டும். இந்தச் சங்கம் எங்களுடையது. இனி நாங்கள்தான் பதவியில் அமரப் போகிறோம்.  

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் விஷால் இனி நுழையவே முடியாது'' என்று பேசினார் ரித்திஷ். விழாவின் இறுதியில், 100 நலிவடைந்த கலைஞர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com