நல்ல ரசிகன் தான் சிறந்த கலைஞனாக முடியும்

நல்ல ரசிகன் தான் சிறந்த கலைஞனாக முடியும்

ஒரு படத்தினை முழுமையாக உருவாக்குவது படத் தொகுப்பாளர்தான். படத்தின் முதுகெலும்பாக இருந்து அந்த படத்தினை அதன் இயக்குநர்

ஒரு படத்தினை முழுமையாக உருவாக்குவது படத் தொகுப்பாளர்தான். படத்தின் முதுகெலும்பாக இருந்து அந்த படத்தினை அதன் இயக்குநர் விரும்பும் வண்ணம் மாற்றிக் கொடுப்பதும் அவர்களே. இயக்குநர் ஏ. பி. நாகராஜனின் வலது கரமாக இருந்தவர், அவரது படத் தொகுப்பாளர்  டி. துரைராஜ். தனது பட உலக அனுபவங்களை நம்முடன் இங்கு பகிர்ந்து கொள்கிறார் துரைராஜ்:

""கோவையில் இரண்டு ஸ்டுடியோக்கள் அன்று இருந்தன. அவை சென்ட்ரல் ஸ்டுடியோஸ், பட்சிராஜா ஸ்டுடியோஸ். சென்ட்ரல் ஸ்டுடியோவை லீசுக்கு எடுத்து ஒருவர் நடத்திக் கொண்டிருந்தார்.  பிலிம் மேக்கிங் இஸ் எ டெக்னிக் (Film Making is a technic)  தானே. நான் இந்த  படஉலகில் நுழைய விரும்பி, எந்த விதமான யோசனைகளும் இல்லாமல்  ஒரு ஸ்டூடியோவில் சேர்ந்தேன். ஒரு வருடம் படித்த பின்னர், எனக்கு உதவி படத் தொகுப்பாளர் என்று பதவியைக் கொடுத்து, என்னை வேலைக்கு சேர்த்துக் கொண்டார்கள்.

அன்று அங்கு இருந்த தலைமை படத் தொகுப்பாளர் யார் தெரியுமா?
மறைந்த தயாரிப்பாளர் எம்.எம். ஏ. சின்னப்ப தேவரின்  சகோதரர், எம்.ஏ.திருமுகம். அவரிடம் நான் உதவியாளனாக வேலைக்கு சேர்ந்தேன். இது எல்லாம் நடந்தது 1950 ஆண்டு முதல் 1955 வரை. லீசுக்கு எடுத்தவர்கள் ஸ்டுடியோவை மூடிவிட, எங்களில் சிலர் வேறு வழி இல்லாமல் சென்னைக்கு பயணமானோம்.

அங்கு படமெடுத்துக் கொண்டிருந்தவர்கள் எம். ஏ. வேணு மற்றும் அக்கம்மாபேட்டை   பரமசிவம் நாகராஜன். இதில் வேணு சேலம் சென்றார்.  நாகராஜன் சென்னைக்கு வந்தார். அவர் எடுத்த பல படங்களில் ஒன்று "மக்களை பெற்ற மகராசி'. அதற்கு நான் படத் தொகுப்பாளராக இருந்தேன்.

அந்தப் படத்தில் இருந்து "தில்லானா மோகனாம்பாள்' வரை அவர் எடுத்த எல்லா படத்திற்கும் நான் படத் தொகுப்பாளராக உழைத்திருக்கிறேன்.  ஒவ்வொரு படமும் ஒரு மைல்கல் என்பது போல் இருந்தன.  பெரிய நட்சத்திரங்கள் எல்லோரும்  அந்தப்  படங்களில் நடித்தார்கள். குறிப்பாக சிவாஜி கணேசன், பத்மினி, நாகேஷ், மனோரமா என்று பெயர்களை சொல்லிக் கொண்டே போகலாம். எல்லா படங்களும் வெற்றிப் படங்களாக அமைந்தன. 

சொந்தமாக ஒரு பட நிறுவனமும் அமைத்து படங்களை எடுத்தார்  ஏ.பி.என். அவர், தமிழை ஆழமாக படித்தவர். அதிலும் புராணங்களை நன்கு தெரிந்த மனிதர். இவை எல்லாம் விட ஒரு சிறந்த நடிகர். அவர்தான் "திருவிளையாடல்'  படத்தில்  நக்கீரர் பாத்திரத்தில் நடித்தவர். 

இயக்குநர் ஏ. பி. என். எடுத்த பல படங்களில் சிவாஜி கணேசன் தான் அதிகமாக நடித்திருக்கிறார். அவர் நடிகர் திலகத்தின் ஒவ்வொரு அசைவையும் பார்த்துப் பார்த்து ரசிப்பார். அவர் இப்படி ரசிக்கும்போது அவர் விரும்பியதை படத் தொகுப்பாளன் என்ற முறையில் படத்தில் கொண்டு வரவேண்டியது எனது கடமையாக நினைத்து வேலை செய்வேன்.  

நடிகர் திலகத்திற்காகவே எடுக்கப்பட்ட படம் போல இருந்தது "நவராத்திரி'. இது ஏபி. என்.}னின்  கற்பனை கதை தான் என்றாலும், அது ஒரு வெற்றி படைப்பு. "நவராத்திரி'யை தெலுங்கில் எடுத்தபோது அதில் நாகேஸ்வரர் ராவ் நடித்தார்.

இந்தியில் எடுக்க முனைந்து நடிகர்  திலீப் குமாரை படக் குழுவினர் அணுகினார்களாம். படத்தை பார்த்த திலீப் குமார், நடிகர் திலகத்தை போல் தன்னால் நடிக்க முடியாது என்று  கூற, வேறு வழி இல்லாமல் சஞ்சீவ் குமாரை வைத்து எடுத்தார்கள். தமிழிலும் தெலுங்கிலும் சாவித்திரியே நடிக்க, இந்தியில் ஜெயபாதுரி நடித்தார். அந்த அளவிற்கு சிவாஜி மேல் ஏ.பி. என்.-னுக்கு அன்பும், பாசமும் அதிகம். சிவாஜிக்காகவே அவர் பல கதைகளை எழுதி இருக்கிறார். 
            
இதற்குப் பிறகு, நான் சென்னையில் இருந்த திரைப்படக் கல்லூரியில் விரிவுரையாளராக சேர்ந்தேன். இந்தக் கல்லூரி அன்று பிராட்வேயில் இருந்தது. பின்னர் தான், இன்றுள்ள தரமணிக்கு மாறியது. தரமணிக்கு வந்தவுடன் படத் தொகுப்பு, ஒளிப்பதிவு மற்றும், நடிப்பிற்கான வகுப்புகள் இணைந்தன. இது ஆரம்பமான வருடம் 1971 . நான் 1987 வரை இந்தக் கல்லூரியில் பணியாற்றினேன்.

அந்தக் கல்லூரியில் படித்து பலர், பெயர் பெற்றார்கள். அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால்  ஆபாவாணன், இயக்குநர்கள் ருத்ரையா, ஆர்.கே. செல்வமணி என்று கூறலாம்.  இவர்கள் எல்லோருமே படிக்கும் போதே பெரிய அளவில் வருவார்கள் என்பது போல் தோன்றினார்கள்.

அவர்களின் பழகும் தன்மை, தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம், அதற்கான உழைப்பு ஆகியவை எல்லாம் இருந்தன. எப்பொழுதுமே சூட்டிகையாக இருந்தாலே வாழ்க்கையில்  முன்னேறுவார்கள் என்று கணித்துவிடலாம். அது இவர்கள் அனைவரிடமும் இருந்தது.

நான் வேலை செய்த மற்றொரு படம், பல நாள் ஓடி வெற்றி பெற்ற "ஒருதலை ராகம்". இந்தப் படத்தின்போதே அதன் தயாரிப்பாளர் இப்ராகிம் மற்றும் ராபர்ட் ராஜசேகர் ஆகியோரிடம் நான் கூறியது இன்றும் எனக்கு நினைவில் உள்ளது.

அதன் இசையமைப்பாளரும், எழுத்தாளருமான டி. ராஜேந்தர்  பற்றி நான் ஒரு விஷயம் கூறினேன். அதை மட்டும் அவர்கள் அன்று கேட்டிருந்தால், குறிப்பாக இப்ராகிம் கேட்டிருந்தால், இன்று அவர் மிகப்பெரிய உயரத்திற்கு சென்றிருப்பார். நான் சொன்னதெல்லாம் ஒன்று தான். "இந்த ராஜேந்தருக்குள் திறமை இருக்கு.  

அவரை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என்றேன். அதற்கு அவர்கள் "நாம் சொன்னால் அவர் கேட்க மாட்டேன் என்கிறாரே', என்றார்கள்.

"மெல்ல சொல்லி புரிய வையுங்கள்' என்றேன். அன்று  நான் சொன்னது எவ்வளவு உண்மை என்று  இன்று தெரிந்திருக்கும். இப்படி பலர் இந்தத் திரைப்பட உலகில் என்னிடம் பழகி இருக்கிறார்கள். இன்று பார்த்தாலும் அவர்கள் என்னிடம் அன்பாக பேசுவார்கள்'' என்றார் படத் தொகுப்பாளர்  துரைராஜ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com