பிடித்த பத்து: தினமும் ஒரு வாசகம் எழுதுவது பழக்கம்

எனக்கு உடலும் உயிரும் கொடுத்தவர்களை நினைத்துப் பார்க்காமல் இருக்கமுடியாது. என்னுடைய முதல் தெய்வம் இவர்கள்தான்
பிடித்த பத்து: தினமும் ஒரு வாசகம் எழுதுவது பழக்கம்

தேசிய விருது பெற்ற  நடிகரும் திரைப்பட இயக்குநருமான தம்பி ராமையா தனக்கு பிடித்த பத்து பற்றி கூறுகிறார்:  

பெற்றோர்: எனக்கு உடலும் உயிரும் கொடுத்தவர்களை நினைத்துப் பார்க்காமல் இருக்கமுடியாது. என்னுடைய முதல் தெய்வம் இவர்கள்தான். நான் தினமும் இவர்களிடம் ஆசி பெற்ற பிறகே வெளியே செல்வேன். 

உடற்பயிற்சி: வாழ்க்கையில் இரண்டு விஷயங்கள் மிகவும் தேவை. அதில் ஒன்று நல்ல திடகாத்திரமான தேகம். அந்த திடகாத்திரமான தேகத்திற்கு தேவை தினமும் உடற்பயிற்சி. ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் உண்டு. There is no gain without pain  என்று. உடற்பயிற்சி செய்யும்போது உடம்பில் இருந்து வியர்வை வரவேண்டும். அப்போதுதான் நாம் செய்த உடற்பயிற்சிக்கு அர்த்தம் இருக்கும். சுவர் இருந்தால் தானே சித்திரம் எழுத முடியும்.


எம்.ஜி.ஆர் :
தன்னம்பிக்கையின் மொத்த வடிவம். எம்.ஜி.ஆர். மறைந்து சுமார் 30 ஆண்டுகள் ஆகின்றன. அந்த நிலையில் இன்றும் மக்கள் அவர் மேல் அபரிமிதமான அன்பை வைத்திருக்கிறார்கள் என்றால் அவரது நல்ல செயல்கள், மக்கள் மேல் அவர் வைத்திருந்த பாசம், அவரது வள்ளல் தன்மை இவையெல்லாம் தான். இன்று நினைத்தாலும் அவரது செயல்கள் ஒவ்வொன்றும் போற்றப்பட வேண்டியவை.  

சுய பரிசோதனை: தினமும் இரவு படுக்க போகும்போது, யாரையாவது தவறாக பேசியுள்ளோமா, யாரையாவது அவமதித்து உள்ளோமா என்று நினைத்துப் பார்த்து அவர்களிடம் தொலைபேசியிலாவது மன்னிப்பு கேட்டுவிடுவேன். 

மனதில் உள்ளதை எழுத்தில் வடிப்பது: தினமும் எதாவது ஒரு வாசகம் அல்லது ஒரு கவிதை அல்லது ஒரு பொன்மொழி என்று எனக்கு தோன்றிய ஒன்றை எழுதிய பிறகே உறங்கச்செல்வேன். நேற்று நான் எழுதியதை உங்களுக்காக மீண்டும் படிக்கிறேன்.

"இத்தனுண்டு கண்ணுக்கு குள்ளே,
எந்த தந்தி கடப்பாரை, 
பெத்து எடுக்கிரையே, 
நல்லா போன நாட்களுள்,
 நடுவிலேதான் நீ புகுந்து,
உத்து நோண்டுறையே, என்னை
உக்கிரம் அக்குறையே .

இப்படி ஏதாவது தோன்றுவதை எழுதிய பிறகே உறங்க செல்வேன்.  

ஆசிரியர்கள்: எனக்கு பாடம் கற்பித்த ஆசிரியர்களை மனக்கண் முன் கொண்டுவந்து தினமும் நன்றி சொல்வதும் என் பழக்கம். எனக்கு தமிழ் கற்றுக் கொடுத்தவர்கள் கண்ணதாசனும், டி.எம்.செளந்தர்ராஜனும்தான். இவர்களது பங்களிப்பில் வெளியான பாடல்கள், பார்க்கவும், கேட்கவும் வைத்தன. 

அரசியல்: ஒரு புகழ்பெற்ற தலைவர் தமிழ்நாட்டில் இல்லை என்று நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆங்கிலத்தில் "மாஸ் லீடர்'  என்று கூறுவார்கள். இன்னொன்றையும் நான் யோசித்து பார்த்தேன். எந்த விதமான எதிர்பார்ப்பும், கமிட்மெண்டும் இல்லாத தலைவர்தான் இன்றைய தேதியில் நம் நாட்டிற்கு தேவை என்று கூறலாம். உதாரணமாக, டாக்டர் அப்துல் காலம், பிரதமர் மோடி, ஜெயலலிதா, மம்தா பானர்ஜி, நவீன் பட்நாயக், ரங்கசாமி என்று இப்படி கூறிக்கொண்டே போகலாம். இவர்களுக்கு குடும்பம் இல்லை. அதனால் இவர்களுக்கு சேர்த்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் எழாது என்றும் நாம் நினைக்கலாம். இப்படிப்பட்ட தலைவர்கள்தான் தேவையோ என்றும் நினைக்க தோன்றுகிறது. 
 
ஒப்பீடு: ஒபாமா தனது 56 }ஆவது   வயதில் உலகின் மிக உயர்ந்த பதவியில் இருந்து சிறப்பாகப் பணியாற்றி ஒய்வு பெற்றார். ஆனால் டொனால்ட் டிரம்ப்  தனது 76-ஆவது வயதில், புகழின் உச்சியில் உள்ளார். பில்கேட்ஸ், உலகின் பணக்காரராக இருந்து தனக்கு போர் அடித்து விட்டது என்கிறார். இப்படி நாம் ஒப்பிட்டு பார்த்தால் பல விஷயங்கள் நமக்கு புலனாகும். 

சாதனை: விளையாட்டில் இன்றும் என் ஆதர்ச நாயகன் சச்சின்தான். பின்னர் தோனி வந்தார். அவர் மேல் என் விருப்பம் அதிகமாகியது. இன்று கோலி என்னை திக்குமுக்காட  செய்து வருகிறார். அதுவும் திருமணத்திற்கு பின் அவர் எந்தவிதமான பின்னடைவும் இல்லாமல் முன்னேறி வருகிறார். அது மட்டுமல்ல அவரது விளையாட்டும்  மிகவும் உயர்ந்துள்ளது. தலைவர் பதவி கொடுத்தாலும் சரி, திருமணமானாலும் சரி கோலி உயர்ந்து வருகிறார். 

உழைப்பு: இன்று உயர்ந்தவர்கள் அனைவரும் தங்களது உழைப்பால் உயர்ந்தவர்களே. உழைத்துக் கொண்டே இருங்கள். உயர்வும் புகழும் உங்களைத் தேடி ஓடி வரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com