புதிய நட்சத்திரம் கருண் நாயர்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் கருண் நாயர் பேட்டை விளாசு விளாசு என்று விளாசி முச்சதம் குவித்து சாதனை படைத்துள்ளார்.
புதிய நட்சத்திரம் கருண் நாயர்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் கருண் நாயர் பேட்டை விளாசு விளாசு என்று விளாசி முச்சதம் குவித்து சாதனை படைத்துள்ளார்.

இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கும் இரண்டாவது நபர் அவர்.
இதற்கு முன்பு முச்சதம் இரண்டு முறை அடித்த இந்திய முன்னாள் வீரர் ஷேவாக்குடன் இவர் அணி சேர்ந்திருக்கிறார்.

கருண் நாயர் முச்சதம் அடித்ததும் ஷேவாக் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.
"முச்சதம் அடித்தவர்கள் கிளப்பிற்கு கருணை வரவேற்கிறேன். கடந்த 12 வருடம், 8 மாதம் இங்கே தனிமையில் கிடந்துவிட்டேன். இப்போது கருண் என் துணைக்கு வந்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. வாழ்த்துகள்'' என்று வழக்கமான பாணியில் வாழ்த்த... கவுதம் கம்பீர், ஹர்பஜன், கிறிஸ் கெய்ல், இந்திய பிரதமர் மோடி என்று வாழ்த்துவோர் பட்டியல் நீண்டு போனது. கருண்ணும் இந்திய கிரிக்கெட்டின் தலைப்புச் செய்தியானார்.

கருண் நாயர் 381 பந்தில் 32 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 303 ஓட்டங்கள் குவித்து இறுதி வரை அவுட்டாகாமல் இருந்த இன்னொரு சிறப்பு. இந்த சென்னை சாதனைக்கு முன் இவரைப் பற்றி யாருக்கும் அதிகம் தெரியாது.

இருபத்தைந்து வயதாகும் கருண், சென்ற நவம்பர் மாதம் மொஹாலியில் நடந்த டெஸ்ட் மேட்சில் காயமுற்ற ராகுலுக்குப் பதிலாக கையில் பேட்டுடன் மைதானத்தில் இறங்கினார். சென்னை மேட்சிலோ ரஹானேக்குப் பதிலாக களம் இறங்கி தூள் கிளப்பியிருக்கிறார். சென்னை மைதானத்தில் அவரது விளாசல், அதகளமாக அமைய, கருணுக்கு இந்திய அணியில் ஒரு நிரந்தர இடத்தைப் பெற்றுத்தரும் வாய்ப்பாக மாறியிருக்கிறது.

ஐபிஎல் 2016 போட்டிகளின் போது, டெல்லி டேர்டெவில்ஸ் அணி கருண் நாயருக்கு நான்கு கோடி கொடுத்து வாங்கியுள்ளது. இதற்கு முன் ராஜஸ்தான் ராயல் அணியிலும் கருண் விளையாடியுள்ளார். ரஞ்சித் போட்டி மேட்சுகளில், தொடர்ந்து மூன்று ஆட்டங்களில் சதம் அடித்தவர்.

கருணுக்கு பேட்டை விளாசத் தெரிந்தாலும், நீச்சல் தெரியாது. சில மாதங்களுக்கு முன் சொந்த மாநிலமான கேரளத்திற்கு வந்த போது நண்பர்களுடன் படகுப் பயணம் செய்திருக்கிறார். படகு ஆற்றில் மூழ்க... அதிர்ஷ்டவசமாக கருணை சிலர் காப்பாற்றியுள்ளனர். இருவர் நீரில் மூழ்கி விட்டனர்.

கருணின் தந்தை கலாதரன் கூறுகிறார்:

"கருண் குறை மாதத்தில் பிறந்தவன். அதனால் சில உடல்நல பிரச்னைகள் அவனது சிறு வயதில் இருந்தன. சுவாசிக்கும் திறன் குறைவாக இருந்தது. உடல் பயிற்சிகள் செய்தால் இந்த பிரச்னைகளுக்கு எளிதாக தீர்வு கிடைக்கும் என்றார்கள். அதனால் அவனால் ஓடச் செய்ய விளையாட்டு மைதானத்திற்கு கொண்டு சென்றோம். ஓடினான். கீழே விழுந்தான். சிறு சிறு காயங்கள் ஏற்பட்டன. நாங்கள் பயந்து போனாலும், அவன் ஆரோக்கியத்திற்காகத் தொடர்ந்து ஓட ஊக்குவித்தோம். ஒன்பது வயதில் கிரிக்கெட் ஆடத் தொடங்கினார் கருண். பெங்களூருவில் கோரமங்களா அணிக்காக விளையாடத் தொடங்கிய கருண், இப்போது கர்நாடக அணிக்காக விளையாடி வருபவர். கிரிக்கெட் அணியில் சேர பத்து வயதில் பயிற்சிக்காக சேர்ந்த போது கோச் கருணை சுமார் ஒரு வருடம் ஓடச் சொல்லியிருக்கிறார். 2002 ஜனவரி 6 ஆம் நாள்தான் கோச் கருண் கையில் பேட்டை பிடிக்கச் சொன்னார்.

எங்களுக்குச் சொந்த ஊர் கேரளத்தில் செங்கண்ணூர் என்றாலும் நாங்கள் வசிப்பது பெங்களூரில். 2015 ரஞ்சி டிராபி இறுதிப் போட்டியில் தமிழ்நாட்டு அணியுடன் விளையாடியபோது 328 ஓட்டங்களை கருண் எடுத்த போதுதான் கிரிக்கெட்டில் அவனது திறமை நிரூபணமானது. பொதுவாக கருண் ஆடுவதை நாங்கள் நேரடியாக மைதானத்திற்கு வந்து பார்ப்பதில்லை. முதல் தடவையாக சென்னையில் வந்து பார்த்தோம். கருண் ஆடுவதை நேரடியாகப் பார்ப்பது இதுதான் முதல் தடவை. அது சொல்லிக் கொள்கிற மாதிரி அமைந்ததில் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி'' என்கிறார் அறுபத்திரண்டு வயதாகும் கலாதரன் நாயர்.

அம்மா பிரேமா பள்ளி ஆசிரியை. "சொர்க்கத்தில் இருக்கும் அனுபவத்தை கருண் எனக்குத் தந்திருக்கிறான்'' முகம் மலருகிறார் பிரேமா.

"இதுவரை விளையாடியதில் மிக முக்கியமான தருணம் சென்னை மைதானத்தில் அமைந்ததுதான். சக ஆட்டக்காரர்கள் ஒத்துழைப்பும் பெரிதும் உதவியாக அமைந்தது. முதல் நூறு ஓட்டங்கள் எடுப்பது தான் முக்கியம். அந்த இலக்கினை அடைந்ததும் பந்து வருவதற்கேற்ப விளையாடினேன். அது என்னை 303 ஓட்டங்களில் கொண்டு வந்து நிறுத்தியது'' என்கிறார் கருண்.

- பிஸ்மி பரிணாமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com