ஒன்ஸ்மோர்

வித்துவான் தியாகராசச் செட்டியாரிடம் படித்த மாணாக்கர்களும், பழகியவர்களும் அவர் உறையூரில் இருந்தபோதும் அடிக்கடி வந்து

வித்துவான் தியாகராசச் செட்டியாரிடம் படித்த மாணாக்கர்களும், பழகியவர்களும் அவர் உறையூரில் இருந்தபோதும் அடிக்கடி வந்து பார்த்துப் பேசி மகிழ்ச்சியடைந்து செல்வார்கள். நூல்களை இயற்றுபவர்கள் இவர்பால் வந்து சிறப்புப் பாயிரம் பெற்றுச் செல்வார்கள். தமிழ் சம்பந்தமான விசேஷ நிகழ்ச்சி எதுவும் இவருக்குத் தெரியாமல் நடைபெறாது.

 ஒருநாள் இவரை நாடி ஓர் ஐரோப்பியர் உறையூருக்கு ஒரு வண்டியில் வந்தார். இவருடைய வீட்டை விசாரித்துக் கொண்டு வந்து இறங்கினார். ""யாரோ வெள்ளைக்காரர் ஒருவர் செட்டியாரவர்களைத் தேடிக்கொண்டு வந்திருக்கிறார்'' என்ற செய்தி பரவவே அக்கம் பக்கத்திலிருந்து ஏராளமான பேர் அங்கு வந்து கூடிவிட்டனர்.

 அப்பொழுதுதான் செட்டியார் சிவபூஜையை முடித்து உணவுண்டு கையில் ஒரு விசிறியுடன் வந்து புறத்திண்ணையில் அமர்ந்திருந்தார். முழங்கால் வரையிலுள்ள ஒரு துண்டு மாத்திரம் இவர் இடையில் இருந்தது.

 வண்டியில் ஐரோப்பியக் கனவானுடன் வந்த ஒருவர் முதலில் இறங்கி வந்தார். செட்டியாரைக் கண்டவுடன் ""தியாகராச செட்டியாரவர்களென்பது நீங்களா?'' என்று கேட்டார். இவருடைய கோலத்தைக் கண்டபோது அவருக்குச் சந்தேகம் உண்டாயிற்று போலும்!

 ""ஆம். நான்தான்; என்ன வேண்டும்?'' என்றார் செட்டியார். இவருக்குக் கண்ணொளி மங்கிக் கொண்டு வந்த காலம் அது.

 வந்தவர், ""உங்களைத் தேடிக் கொண்டு துரையவர்கள் வந்திருக்கிறார்கள். நீங்கள் இப்படி இருக்கின்றீர்களே! வேறு உடை உடுத்தி வந்து சீக்கிரம் அவரை வரவேற்க வேண்டுமே. இங்கே நாற்காலி ஒன்றும் இல்லையா?'' என்று சற்று அதிகாரத் தொனியோடு கேட்டார்.

 செட்டியார் சிரம பரிகாரம் செய்து கொள்ளும் பொருட்டு வந்து அமர்ந்தவர். ஏதோ பெரிய கௌரவம் செட்டியாருடைய வாயிலில் காத்து நிற்பது போல அந்த மனிதர் பேசியதைக் கேட்டபோது இவருக்குக் கோபந்தான் வந்தது.

 ""துரையா! வரட்டுமே. இப்படியே பார்க்கக்

கூடாதோ! இந்தத் திண்ணையில் வந்து உட்காரச் சொல்லுங்கள்'' என்று அமைதியாக இவர் சொன்னார்.

 அவர் என்ன செய்வார்! துரை அவசரப்படுவாரென்று அறிந்து அவரை அழைத்து வந்து திண்ணையின் மேல் இருக்கச் செய்தார். செட்டியார் அவரை வரவேற்றார்.

 ""தங்களை நான் தெரிந்து கொள்ளவில்லையே. காலேஜ் பிரின்ஸிபாலாக இருந்து துரையை யாரேனும் அனுப்பினார்களோ?'' என்று கேட்டார் செட்டியார்.

 ""இல்லை; நானேதான் தங்களைத் தேடி வந்தேன். மதுரையிலிருந்து வருகிறேன். தமிழ் படித்து வருகிறேன்''.

 அந்தத் துரை குழறிக் குழறித் தமிழிலே பேசினார். அந்தப் பேச்சிலிருந்தே அவர் ஒரு பாதிரியாராக இருக்க வேண்டுமென்பதைச் செட்டியார் ஊகித்துக் கொண்டார்.

 ""சந்தோஷம். படிக்கப் படிக்க இனிமை தரும் பாஷை தமிழ்'' என்றார் இவர்.

 "நான் யாப்பிலக்கணம் படித்தேன். திருக்குறள் படித்தேன். அந்த இலக்கணத்தின்படி குறளைச் சில இடங்களில் திருத்தியிருக்கிறேன். தங்களிடம் காட்ட வந்தேன்''.

 இந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் செட்டியார் திடுக்கிட்டார்.

 ""என்ன, குறளையா திருத்தினீர்கள்?'' என்று படபடப்போடு கேட்டார்.

 ""ஆமாம். எதுகை, மோனை சில இடங்களில் சரியாக அமையவில்லை...''

 செட்டியாருக்குக் கோபம் மூண்டது.

 ""தக்கார் தகவில ரென்ப தவரவர் எச்சத்தாற் காணப்படும் என்றிருக்கிறதே; இதில் எதுகை நன்றாக அமையவில்லையே. இரண்டாவது அடியை மக்களாற் காணப்படுமென்று திருத்தினேன். அந்தத் திருத்தம் எவ்வளவு நேர்த்தியாகப் பொருந்துகிறது பார்த்தீர்களா?''

 அவரை மேலே பேசவொட்டாமல் செய்தது செட்டியாரின் செய்கை. எழுந்து நின்றார். தலையிலே அடித்துக் கொண்டார். காதைப் பொத்திக் கொண்டார். துரை ஏதோ சொல்ல வாயெடுப்பதற்குள் ""திருவள்ளுவரை

விடப் புத்திசாலியாகி விட்டீரோ? குறளைத் திருத்த வேண்டுமென்ற இந்த ஞானம் உமக்கு எப்படி ஏற்பட்டது? திருக்குறள் எப்படிப்பட்ட நூல்! உம்முடைய கையில் சிக்கிச் சீர்குலையவா அதைத் திருவள்ளுவர் இயற்றினார்? எச்சத்தாலென்பதை மக்களாலென்று திருத்தினாராம்! எச்சமென்பதும் மக்கள் என்பதும் ஒன்றாகுமா? இந்த வித்தியாசம் தெரியாதவருக்குக் குறளைக் கையாலே தொடுவதற்குக்கூட யோக்கியதை இல்லையே! இந்த மகாபாதகச் செயலைச் செய்தவர் முகத்தில் விழிப்பதே பாவம்!'' என்று சொல்லிக்கொண்டே உள்ளே போய் இவர் கதவை அடைத்துக்கொண்டு விட்டார்!

 துணையுடன் வந்தவர் செட்டியாரை சமாதானப்படுத்த எவ்வளவோ முயன்றார். பலனில்லை. திருவள்ளுவருக்கு இப்படி அவமதிப்பு ஏற்படுத்திய அவர் சக்ரவர்த்தியாக இருந்தாலும் மீண்டும் அவர் முகத்தில் விழிக்க மாட்டேன் என்று செட்டியார் கடைசிவரை கதவைத் திறக்கவேயில்லை! துரை வேறு வழியொன்றும் காணாராய் வந்த வழியே திரும்பிச் சென்றார்.

"வித்துவான் தியாகராச செட்டியார்' என்ற நூலில் தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே.சா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com