மலேசியாவில் தமிழ்க் கல்வி - 200 ஆண்டுகள்!

"மலேசியாவில் தமிழ் மொழி என்றும் வாழும்'' இதை யார் வேண்டுமானாலும் சொல்லலாம்.
மலேசியாவில் தமிழ்க் கல்வி - 200 ஆண்டுகள்!

"மலேசியாவில் தமிழ் மொழி என்றும் வாழும்'' இதை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் அதைச் சொல்பவர் சொன்னால் நாம் கண்டிப்பாக நம்பலாம். அதை சொல்பவர் சாதாரண மலேசியர் அல்ல, அவர், மலேசிய கல்வி அமைச்சகத்தின் துணை அமைச்சர்  என்றால் நம்பாமல் இருக்க முடியுமா? மலேசியாவின் கல்வித் துறையின் துணை அமைச்சர் பி.கமலநாதன், 18 வயதில் அரசியலுக்கு வந்தவர். தற்போது 51 வயதாகிறது. மலேசியாவில் தமிழ்மொழிக் கல்வி பற்றியும், அதன் வளர்ச்சி குறித்தும் தெளிவாகத் தெரிந்தவர். தன்னைப் பற்றியும் தன் அமைச்சகத்தின் செயல்பாடுகள் குறித்தும் கூறுகிறார்:

"நான் தஞ்சாவூரைப் பூர்வீகமாகக் கொண்டவன். என் தகப்பனார் பெயர் பஞ்சநாதன். என்னைப் பொறுத்தவரை எல்லாருக்கும் கல்வி இன்றி அமையாதது. என்னுடைய இளம் வயதினிலே அரசியலுக்கு வந்தேன். என்னுடைய நண்பர்கள் மற்றும் எங்கள் தெரு மற்றும் எனது நண்பர்களின் நண்பர்களுடன் இணைந்து கல்வி பணியாற்றுவோம். அதாவது கல்விக் கூடம் பழுதடைந்திருந்தால் செப்பனிடுவோம். கல்விக் கூடத்தின் அருகில் நிலம் இருந்தால் அதை அந்த கல்விக்கூடத்திற்கு  தர அதன் உரிமையாளருக்கு வேண்டுகோள் விடுப்போம். அல்லது அதை உபயோகித்துக் கொள்ள உரிமை வழங்க முறையிட்டு பெற்று தருவோம். இப்படி செய்து கொண்டிருந்த போதுதான் பட்டப்படிப்புகாக ஆஸ்திரேலியாவில் உள்ள எடித் காவ்ன் (உக்ண்ற்ட் இர்ஜ்ய் மய்ண்ஸ்ங்ழ்ள்ண்ற்ஹ்) பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். பின்னர் அங்கிருந்து மலேசியா வந்து எங்கள் பல்கலைக்கழகத்தில் இணைந்து பொலிடிகல் சயின்ஸ் படித்து தேர்ச்சி பெற்றேன். என்னுடைய நாற்பத்தி நாலாவது வயதில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். திரும்பவும் 2013 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் வென்றேன். அந்த வருடம் எனக்கு துணை அமைச்சர் பதவி கிடைத்தது. சுமார் 57 ஆண்டுகளாக ஒரு தமிழருக்கு கல்வித்துறையில் துணை அமைச்சர் பதவி கிடைத்தது, எங்கள் பிரதமர் தமிழ் மொழி மீதும், தமிழர்கள் மீதும் வைத்துள்ள மரியாதை என்றே சொல்வேன். சாதாரணமாகவே பள்ளிகளுக்கும் அங்கு படிக்கும் குழந்தைகளுக்கும் ஏதாவது செய்து கொண்டே இருக்கும் எனக்கு, இந்தப் பதவி நல் வாய்ப்பாக அமைந்தது.
 மலேசியாவின் கல்வித்துறையில் மூன்று மொழிகள் முக்கியமானவை. அவை மலாய், தமிழ் மற்றும் சீன மொழி. இதில் தமிழுக்காக இந்த அரசு எதுவும் செய்யாது என்று கூறும் எதிர்க்கட்சிகளுக்குப் பதில் அளிக்கும் விதத்தில் இந்த ஆண்டும் தமிழ் பள்ளிகளுக்கு 50 மில்லியன் ரிங்கிட் மானியமாக வழங்கியுள்ளார் பிரதமர். என்னைப் பொருத்தவரை மட்டுமல்ல, இந்த அரசைப் பொறுத்தவரை தமிழ்,  இங்கு வாழ்வதுடன் வளமும் பெற்று வருகிறது. 
 ஆரம்பகாலத்தில் தோட்டத்  தொழிலாளர்களுக்காக தமிழ்ப் பள்ளிகளை அவர்களது அருகாமையிலேயே ஆரம்பித்தனர். பின்னர்  தோட்டத்தில் வேலை செய்வது குறைய, மக்கள் நகரங்களுக்கு செல்லத் தொடங்கினர். எங்கள் அரசு வரும் வரை பேப்பரில் இருந்த விஷயங்கள் பேப்பரிலேயே இருந்தன. நாங்கள் ஒவ்வொரு தமிழ் பள்ளிக்கும் மானியம் வழங்கி, புதிதாக கட்டடங்கள் கட்ட, நல் ஆசிரியர்களைப் பணி அமர்த்த, மற்றும் அந்தப்  பள்ளிகள் நல்ல முறையில் நடக்க எல்லாவிதமான உதவியும் செய்கிறோம். மலேசியாவில் சுமார் 524 தமிழ் பள்ளிக் கூடங்கள் உள்ளன. 10 ஆயிரம் ஆசிரியர்கள் இங்கு பணியாற்றுகிறார்கள். சுமார்  90 ஆயிரம் மாணவர்கள் இங்கு படிக்கிறார்கள். இதில் 193 ஆரம்ப தமிழ் பள்ளிகள் உள்ளன. அதில் 5119 குழந்தைகள் படிக்கிறார்கள். 
 எங்கள் நாட்டில் தமிழ்ப் படித்தவர்களுக்கு தமிழ் நாட்டில் அங்கீகாரம் கிடைத்தால், அதுவும் அரசின் அங்கீகாரம் கிடைத்தால் நங்கள் மிகவும் மகிழ்வோம். அப்படிக் கிடைத்தால் அவர்களின் வேலை வாய்ப்பு மட்டுமல்ல; மற்றவசதிகளும்   தானாகவே அமைந்துவிடும்.
இப்பொழுது நாங்கள் "மலேசியாவில் தமிழ் மொழிக் கல்வி 200 ஆண்டுகள்' கொண்டாட்டத்தைக் கொண்டாடி வருகிறோம். அவற்றில் ஒன்று தான் பன்னாட்டு தமிழாசிரியர் மகாநாடு. நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த மகாநாடு சிறப்பாக நடந்தேறியது. 50 வெளிநாட்டு தமிழ் அறிஞர்கள் மற்றும் 200 உள்நாட்டு அறிஞர்கள் கலந்து கொண்ட இம்மாநாட்டில் பல்வேறு பரிந்துரைகளை செய்துள்ளனர். அதில் முக்கியமான ஒன்று தமிழ் மொழி இந்த நாட்டில் இன்னும் அதிகம் பள்ளிகளில் போதிக்கப்பட வேண்டும் என்பதுதான். ஆரம்ப தமிழ் பள்ளிகள் அவர்களின் விருப்பம் போல் மேலும் 50 பள்ளிகள்  அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். தமிழ் மொழி இங்கு வாழும். தொடர்ந்து கற்றுக் கொடுக்கப் படும். இதில் எந்த மாற்றமும் இல்லை. இதில் உள்ள சிறப்பு என்னவென்றால், எல்லா பள்ளிகளிலும் கல்வி இலவசம் தான்'' என்கிறார் கமலநாதன்.
 கமலநாதன் ஓர் அமைச்சரைப் போன்று இல்லாமல் மக்களோடு மக்களாகப் பழகுபவர். அதனாலேயே அவர் "தி நெக்ஸ்ட் டோர் மினிஸ்டர்' என்று பெயர் பெற்றவர்.

- சலன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com