மீன்

நடுநிசியில் வீட்டுக்கு வந்து தன்னிடமிருந்த இன்னொரு சாவியால் கதவைத் திறந்து விளக்கைப் போட்டான் விஜயன்.
மீன்

நடுநிசியில் வீட்டுக்கு வந்து தன்னிடமிருந்த இன்னொரு சாவியால் கதவைத் திறந்து விளக்கைப் போட்டான் விஜயன். சாவியை ஹால் அலமாரி அருகேயுள்ள ஸ்டாண்டில் மாட்டப் போகும்போது அதைக் கவனித்து லேசாய் திடுக்கிட்டான். அலமாரியில் கண்ணாடிக் குடுவைக்குள் எந்த அசைவுமற்றிருந்தது அந்தக் கறுப்பு மீன். குடுவையின் அடியில் ஓர் அபாய கோணத்தில் நிலைகுத்தியிருந்தது.
 ஹெல்மெட்டையும் அலுவலக பேக்கையும் அவசரமாக சோஃபாவில் எறிந்துவிட்டு அதனருகே விரைந்தான். கண்களை மீனின் மேல் நிலைத்தான். தண்ணீருக்கு நடுவே ஒரு ப்ளாஸ்டிக் செடியினிடையே இயக்கமற்றிருந்தது அந்த மீன். ஹேமாவோ அஸ்வினோ இதைக் கவனித்திருப்பார்களா? என்று யோசித்தவாறே பெட்ரூமுக்குள் எட்டிப் பார்த்தான். இரவு விளக்கொளியில் இருவரும் தூங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது.  
 மீனுக்கு இன்று காலை உணவு போட்டோமா? என்று யோசித்துப் பார்த்தான். இல்லை. நேற்று காலையில் போட்டது ஞாபகம் வந்தது. ஹேமா அஸ்வின் தூங்குபவர்களை எழுப்பிக் கேட்க முடியாது. 
 மீன் செத்துவிட்டதா? இல்லை மயக்க நிலையா? என்று புரியாத பதட்டத்தில் சட்டைப் பாக்கெட்டிலிருந்து லக்ஸர் பேனாவை எடுத்துக் குடுவையைத் தட்டிப் பார்த்தான். அசைவில்லை. பிறகு குடுவைக்குள் கையை விட்டு ப்ளாஸ்டிக் செடியை லேசாக ஆட்டிப் பார்த்தான். மீன் மெதுவாக அசைந்தது. அதன் வால் மிக லேசாக நெளிந்தது.
உயிரோடுதான் இருக்கிறது. 
 விஜயன் அவசரமாகக் குடுவையின் அருகே இருந்த ஒரு குட்டி பெட் பாட்டிலை எடுத்து அதிலிருந்த மீன் உணவை விரல்களால் ஒரு சிட்டிகை எடுத்து குடுவைக்குள் போட்டான். தண்ணீரின் மேற்பகுதியில் துகள்களாக மிதந்தது அது.
 பிறகு இரண்டு மூன்று நிமிடங்கள் அவன் அசையாமல் மீனையே பார்த்துக் கொண்டிருந்தான். ஒன்றும் நடக்கவில்லை. ஒரு கணத்தில் மீன் தன் மோன நிலையிலிருந்து கலைந்து நீருக்குள் தனக்கு வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் நீந்தத் தொடங்கியது. மெதுவாக உயர்ந்து தண்ணீரின் மட்டத்துக்கு வந்து நின்றது. விஜயன் தலையை எக்கி குடுவைக்குள் எட்டிப் பார்த்தான். மீன் சாப்பிடுகிறதா? என்று நிச்சயமாகத் தெரியவில்லை.
 அப்படியே வந்து சோஃபாவில் சாய்ந்தான். ஒரு கனமான பெருமூச்செறிந்தான். மீன் குடுவையையே சிறிது நேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
 எதற்கு இத்தனை அவஸ்தை? என்று யோசித்தான்.

 அஸ்வினின் பிறந்தநாள் பரிசாக இதை நரேஷ் கொடுத்தபோது வேண்டாமென்று சொல்லி அப்போதே திருப்பிக் கொடுத்திருக்க வேண்டும் அஸ்வின். 
 சர்ப்ரைஸ் கிஃப்ட் என்று அறிவித்துவிட்டு அவன் கொண்டு வந்த ஓர் அட்டைப் பெட்டியைப் பிரித்து கண்ணாடிக் குடுவை, ப்ளாஸ்டிக் செடி, குடுவைக்கடியில் போட சிறு கூழாங்கற்கள், மீனுக்கான உணவு எல்லாவற்றையும் டேபிளில் பரப்பினான். குடுவையில் தண்ணீர் நிறைத்து, கற்களைப் பரப்பி, செடியை நட்டு
விட்டு பிறகு தன் பேக்கைப் பிரித்து அதிலிருந்து வாய் கட்டப்பட்ட, தண்ணீர் நிறைத்த ப்ளாஸ்டிக் பையை எடுத்தான். அதற்குள் சிறைபட்டிருந்த அந்த கறுப்பு மீனை ஜாக்கிரதையாக குடுவைக்கு மாற்றினான் நரேஷ். வெற்றிகரமாக சின்ன சிறையிலிருந்து கொஞ்சம் பெரிய சிறைக்கு மாறியது மீன்.
 "நரேஷ்.. இதையெல்லாம் வெச்சு யாரு மெயிண்டெய்ன் பண்றது? ரொம்ப கஷ்டம்'' என்றான் விஜயன்.
 "கஷ்டம்லாம் இல்ல அங்கிள்.. இது ஃபைட்டர் ஃபிஷ். எப்படி மெயிண்டெய்ன் பண்றதுன்னு நான் சொல்லித் தர்ரேன். எங்க வீட்ல பெரிய சைஸ் அக்வேரியம் வெச்சிருக்கேன். ஏகப்பட்ட மீன் இருக்கு'' என்று சொல்லிவிட்டு குடுவையை ஷெல்ஃபில் வைத்தான் நரேஷ்.
 விஜயன் அதைப் பார்த்தான். அடர் கறுப்பு நிறத்தில் அலை அலையான துடுப்புகளுடன் பார்ப்பதற்கு கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. புது இடத்தில் தன் வாழ்வாதாரத்துக்கான சந்தேகங்களுடன் இங்குமங்கும் நீந்திப் பார்த்து தன் இருப்பை உறுதி செய்து கொண்டிருப்பதுபோல் பட்டது அவனுக்கு.
 "எனக்கு இந்த மாதிரி மீனு தொட்டில வளக்கறது, பேர்ட்ஸ கூண்டுல வெச்சு அழகு பாக்கறதெல்லாம் அடியோடு புடிக்காது. இதெல்லாம் பாவம்'' என்றான் விஜயன் அஸ்வினிடம், நரேஷ் கிளம்பிப் போன பிறகு.
 அஸ்வினுக்கு அந்த மீனின் வருகை எந்தப் பரபரப்பையும் ஏற்படுத்தியதுபோல் தெரியவில்லை. "பாத்துக்கலாம்..'' என்றான்.
 "சரி.. வந்தது வந்துடுச்சு.. இதுக்கு சோறுபோட்டு வளக்குறதெல்லாம் நீதான் பாத்துக்கணும். யு ஹாவ் டு மெய்ண்டெய்ன் இட் ப்ராபர்லி..'' என்றான். 
 "சரீ'' என்றான் ரீ-யில் அழுத்தத்துடன். 
 "கிஃப்ட் குடுத்ததுதான் குடுத்தான். ரெண்டு மீனா குடுத்திருக்கலாமில்ல.. தனியா கிடந்து கஷ்டப்படுமே பாவம்'' என்றாள் ஹேமா கவலையுடன்.
 "இது ஃபைட்டர் ஃபிஷ்மா இதுகூட இன்னொண்ணை விட்டா கடிச்சுக் கொன்னுரும்..'' என்றான் அஸ்வின்.
 எது எப்படியோ அஸ்வினாயிற்று, அவன் மீனாயிற்று. நம் வேலையைப் பார்க்கலாம் என்று நினைத்தான். அன்றிரவு தூங்கப் போகும்முன் ஹால் விளக்கை அணைத்தபோது, இருட்டில் அந்த மீனுக்குக் கண் தெரியுமா? என்று அபத்தமாக நினைப்பு வந்தது. நடுராத்திரி பாத்ரூம் போக எழுந்தபோது ஹாலுக்கு வந்து குடுவையைப் பார்த்தான். அரையிருட்டில் சூழ்நிலை பழகிய நிதானத்துடன் சோம்பேறித்தனமாக நீந்திக் கொண்டிருந்தது.
 பிறகு ஒவ்வொரு நாளும் அஸ்வின் ஸ்கூலுக்குக் கிளம்பும்போது கேட்டான். 
"உன் மீனுக்கு சோறு வெச்சியா?''
 "போட்டுட்டேன்.. நீயும் மறுபடி போட்டுராத.. ஒரு நாளைக்கு ஃபிஷ் ஃபுட் இவ்ளோதான்..'' என்று பெருவிரலையும் ஆள்காட்டி விரலையும் சேர்த்துக் காண்பித்தான். 
 "நான் ஏன் போடப் போறேன்? அது உன் வேலை''
 அப்படிச் சொன்னானேயொழிய தினசரி காலையிலோ, மாலையிலோ அஸ்வினிடம் மீனுக்கு உணவளிக்கப்பட்டதா என்பதைக் கேட்டு உறுதி செய்துகொள்வது வழக்கமாகிவிட்டது விஜயனுக்கு.
 மூன்று நாள் கழித்து அஸ்வின் குடுவையைச் சுத்தம் செய்து வேறு தண்ணீரை மாற்றிக்கொண்டிருக்கும்போது விஜயன் சொன்னான்.
 "லோடு லோடா ஹோம்வொர்க்ஸ் வெச்சுட்டு.. நடுவுல இது வேற.. இதெல்லாம் அடிக்கடி பண்ணிக்கிட்டிருக்க முடியாது. பேசாம அவன்கிட்டயே குடுத்துரு. அவன் வீட்ல அக்வேரியம் இருக்குன்னு சொன்னானே.. அதிலயே கொண்டு போய் போட்டுறச் சொல்லு.''
 அஸ்வின் முறைத்தான். 
"உங்களுக்கு என்னப்பா ப்ரச்சனை?'' என்றான்.
 இந்த உரையாடல்களைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல் மீன் தனக்களிக்கப்பட்ட வாழ்வையும் ஒரே மாதிரியான உணவையும் அன்றாடம் தொடர்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தான். அது பாட்டுக்கு நீந்தியது. நின்றது. பார்த்தது. மீண்டும் நீந்தியது. எப்படிச் சுற்றி வந்தாலும் பதினைந்து சென்டிமீட்டர் விட்டத்திற்குள் அதன் எல்லை முடிந்துகொண்டிருந்தது. அந்தப் ப்ளாஸ்டிக் செடியாலும் கூட அதற்கு ஒரு பிரயோஜனமும் இல்லை. விஜயனுக்கு அதைப் பார்க்கும் போதெல்லாம் அலுவலகத்தில் தானும் ஒரு நாலுக்கு நாலு க்யூபிக்கிளில் உட்கார்ந்து நாள் முழுக்க வேலை செய்து கொண்டிருப்பது நினைவுக்கு வரும். 

 ஏதாவது ஒரு கடலிலோ, ஏரியிலோ, அல்லது குளத்திலோ இருந்திருக்க வேண்டியது. இப்போது உப்பு நிறைந்த நிலத்தடி நீரும், மினரல் வாட்டரும் கலந்த ஒரு கலவைக்குள் தனிமைப்படுத்தப்பட்டு நீந்திக் கொண்டிருக்கிறது என்று நினைத்தான் விஜயன். திடீரென அதன்மேல் ஒரு பரிதாப உணர்வு மேலிட்டது. அடிக்கடி நின்று குடுவைக்குள் உற்றுப் பார்த்தான். அருகில் நின்று அதன் அசைவுகளையே பார்த்துக் கொண்டிருந்தான். அது அசையாமல் நின்றிருக்கும்போது கண்ணாடியில் விரலால் தட்டி "சில்ங்' என்ற ஓசையில் அதனை உயிர்ப்பித்தான். அது எப்போது தூங்கும் என்று யோசித்தான். அஸ்வின் குடுவையைச் சுத்தம் செய்ய அதை தற்காலிகமாக தேநீர் வடிகட்டியின் மூலம் ப்ளாஸ்டிக் கப்புக்கு இடமாற்றம் செய்யும்போது வேடிக்கை பார்த்தான்.
 தான் இப்போதெல்லாம் அந்த மீனை ரொம்ப கவனிக்கிறோம் என்பது விஜயனுக்கு ஓர் ஓரத்தில் உறுத்திக் கொண்டிருந்தது. அஸ்வின்கூட முதலில் வேண்டாம் என்றாய்.  இப்போது என்ன கரிசனம் என்பதுபோல் பார்த்தான்.
 ஒரு ஞாயிறு மதியம் வஞ்சிரம் ஃப்ரை சாப்பிட்டுக் கொண்டே, "நம்ம வீட்டுக்குள்ள இது நாலாவது ஜீவனா வந்து சேந்திருக்கு இல்ல?'' என்றான் ஹேமாவிடம்.
 "அப்டியா அப்ப கிச்சன்ல ஏற்கெனவே இருக்கற கரப்பான்பூச்சி.. பல்லி எல்லாம்?'' 
 விஜயன் ஒன்றைக் கவனித்தான். சில சமயம் குடுவைக்குள் அசையாமல் இருக்கும் மீன் இவன் அருகில் போனதும் வாலை, பக்கவாட்டு இறக்கைகளை அசைத்துக் கொண்டு இவன் பக்கமாக வந்தது. முதலில் அது தற்செயல் என்றுதான் நினைத்தான். ஆகவே அதை சோதித்துப் பார்க்க வேண்டும் என்று நினைத்தான். தூரத்திலிருந்து கவனித்து அது எப்போதெல்லாம் நீந்தாமல் நிலைபெற்றிருக்கிறதோ, அப்போதெல்லாம் குடுவைக்கு அருகில் போனான். ஆச்சரியப்படத்தக்க வகையில் ஒரு சில நொடிகளில் நகர்ந்து இவனருகில் வந்தது. அவனால் நம்ப முடியவில்லை.
 அப்படியாக விஜயனுக்கும் மீனுக்குமான தொடர்பு ஸ்தாபிக்கப்பட்டது. தினசரி காலையில் அவனாக மீனுக்கு உணவு போட ஆரம்பித்தான். அஸ்வினுக்கு வேலை குறைந்தது. 
"அப்டியே பெüலையும் க்ளீன் பண்ணீட்டீங்கன்னா?''
 ஒரு நாள் அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்தபோது கண்ணாடிக்குடுவையின் மேல் ஒரு வெண்ணிற ப்ளாஸ்டிக் ஸ்பூன் சாய்த்து வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தான். என்ன இது? என்று கேட்பதற்கு முன்னாலேயே ஹேமா சொன்னாள்.
 "அந்த ஸ்பூனை பெüல் மேல நகர்த்திப் பாருங்க.. மீனும் நகரும். இப்படித்தான் இதுகூட விளையாடிக்கிட்டிருக்கேன்..''
 விஜயன் ஒரு சின்ன நம்பிக்கையின்மையுடன் அந்த ப்ளாஸ்டிக் ஸ்பூனை எடுத்து மெதுவாக கண்ணாடிக்குடுவையின் மேல் வலதுபுறமாக ஓட்டிப் பார்த்தான். அது நகர்கிற திசையில் மீனும் அதைப் பார்த்தவாறே நகர்ந்தது. இடது புறம் நகர்த்தினான். அதுவும் இடதுபுறம் நகர்ந்தது. 
 "அட ஆமா..'' என்றான். அந்த மீன் புத்திசாலிதான். இதை எப்படி ஹேமா கண்டுபிடித்தாள் என்பது ஆச்சரியமாக இருந்தது. 
 இப்போது விஜயன் அருகில் போனதும் அவனை நோக்கி நீந்தி வருவதும், வெள்ளை ஸ்பூனை நகர்த்தினால் நகர்வதும் என தனது வழக்கமான ஆயாசமான தினசரிகளிலிருந்து தன்னை மீட்டெடுத்துக் கொண்டது.
 "பேசாம ஒரு பெரிய மீன் தொட்டியா வாங்கி இதை அதுக்குள்ள வளக்கலாமா?'' என்றான் விஜயன்.
 "அப்பா.. அதையெல்லாம் என்னால க்ளீன் பண்ண முடியாது.. கஷ்டம்.. பெளல் சின்னது..  ஈஸியா பண்ணிடலாம்..'' என்றான். மீனுக்கான வாழ்வியல் எல்லையை விரிவுபடுத்தும் எண்ணத்தை நசுக்கியபடி.
 "நீங்க பண்ணுவீங்கன்னா வாங்கிடலாம்?'' என்றாள் ஹேமா.
 விஜயன் பதில் சொல்லவில்லை. 
 ஹாலிலிருந்த காலண்டரிலும் கடிகாரத்திலும் காலம் நகர்வதைப் பார்த்தபடி தன் வாழ்க்கையைத் தண்ணீருக்குள் நகர்த்திக்கொண்டிருந்தது மீன்.
 விஜயன் ஃúஸôபாவிலிருந்து எழுந்து உடை மாற்றி முகம் கழுவிவிட்டு படுக்கையில் போய் விழுந்தான். மனதில் நெளிந்து நீந்தும் மீனுடன் கண்கள் செருகித் தூங்கிப் போனான்.
 
 வெகு புழுக்கமாக விடிந்த மறு நாள் காலையில் எழுந்தவுடன் மீனைத்தான் முதலில் வந்து பார்த்தான். அதன் இயக்கத்தில் மீண்டும் சுறுசுறுப்பு தவறியிருந்தது. மிக மெதுவாக நீந்தியது அல்லது அசையாமல் ப்ளாஸ்டிக் செடியில் ஒட்டி நிலைத்திருந்தது. விஜயன் குடுவையை மெதுவாக அசைத்துப் பார்த்தான். ப்ளாஸ்டிக் ஸ்பூனை விட்டுத் தண்ணீரைக் கலக்கினான். பெரிதாக இயக்கம் இல்லை. மீன் சோர்ந்து போயிருந்தது. ஹேமாவையும் அஸ்வினையும் கூப்பிட்டான்.  
 "யாராவது கவனீச்சீங்களா... இல்லையா?''
 "நேத்தே பாத்தேன். எய்ட் மன்த்ஸ்தான் இதோட லைஃப் டைம்னு நரேஷ் சொன்னான்..'' என்றான் அஸ்வின்.
 "என்னடா சொல்ற..?'' ஹேமா கவலையடைந்தாள் என்பதை அவள் முகம் காட்டியது.. "நவம்பர்ல வந்தது.. இப்ப ஜூன்..'' என்றவாறே விஜயனைப் பார்த்தாள். பாட்டிலிலிருந்து கொஞ்சம் உணவை எடுக்கப் போனாள்.
 "நேத்து போட்டதே இன்னும் சாப்பிடலம்மா?'' என்றான் அஸ்வின். 
 அன்று முழுக்க மீன் தனது இயக்கத்தில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் அப்படியே இருந்தது. அதற்கடுத்த நாள் அஸ்வின் ஸ்கூலுக்குப் போனபிறகு மீன் தனது மிகச்சிறு அசைவுகளையும் நிறுத்திக் கொண்டு உயிரற்று மிதந்து கொண்டிருப்பதைக் கவனித்தான் விஜயன்.
 "செத்துருச்சா?'' என்றாள் ஹேமா.
 அவ்வளவுதான். எட்டே மாதங்களில் அதன் வாழ்வு முடிந்துவிட்டது. குடுவையில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த ப்ளாஸ்டிக் ஸ்பூன் தண்ணீரில் உயிரற்று மிதக்கும் மீனையே பார்த்துக் கொண்டிருப்பது போலிருந்தது. பிறகு அந்த வீட்டில் கொஞ்ச நேரம் ஒரு கனத்த மெüனம் நிலவியது.
 "சரி.. நான் ஆஃபீஸ் கிளம்பறேன்.. அஸ்வின் வந்ததும் இந்த மீனை எடுத்து ஒரு கர்ச்சீஃப்ல சுத்தி அந்த வேப்ப மரத்தடில கொஞ்சம் மண்ணைத் தோண்டி புதைச்சிடச் சொல்லு இறுதி மரியாதையைப் பண்ணுவோம்..''  என்றான் ஹேமாவிடம். சொல்லும்போது குரலில் இனம்புரியாத சோக உணர்வொன்று சுற்றிப் பிணைந்திருப்பதை உணர்ந்தான்.
 சைதாப்பேட்டையைத் தாண்டும் வரை அந்த மீனைப் பற்றியே நினைத்துக் கொண்டு போனான். ஹேமா லேசாய் கண் கலங்கியது ஞாபகத்துக்கு வந்தது. அஸ்வினுக்கு எப்படியிருக்குமோ என்று நினைத்தான். அலுவலகத்தை அடைந்த பிறகு அவனது க்யூபிக்கிள் கலவரங்களில் மீனை மறந்து போனான்.
 சாயங்காலம் வீட்டுக்கு வந்தவுடன் முதலில் குடுவையைத்தான் பார்த்தான். தண்ணீரும், ப்ளாஸ்டிக் செடியும், கூழாங்கற்களும் மட்டும் இருந்தன.
 "மரத்தடில பொதச்சியா?'' என்றான் அஸ்வினிடம்.
 "இல்ல.. பக்கத்து காலி லேண்ட்-ல வீசிட்டேன்''
 விஜயனுக்குக் கோபம் தலைக்கேறியது.. "பர்ட்டிக்குலரா அம்மாகிட்ட சொல்லிட்டுப் போனேன். இவ்ளோ நாள் கவனிச்சு வளத்தினோம்ல... இப்படியாடா பண்றது? ஹேமா.. நீ சொன்னியா இல்லையா இவன்கிட்ட? நரேஷ் கேள்விப்பட்டான்னு வெச்சுக்கோ.. ரொம்ப வருத்தப்படுவான்..''
 "அவன்கிட்டதாம்ப்பா ஃபோன் போட்டு மீன் செத்துருச்சு. என்ன பண்றது?ன்னு கேட்டேன். எங்கயாச்சும் தூக்கிப் போட்ருன்னான்..'' என்றான் அஸ்வின்.
சித்ரன் ரகுநாத்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com