டொனால்டு  டிரம்ப்: சமரசமும்,  வழக்கும்!

டொனால்டு டிரம்ப்  அமெரிக்க ஜனாதிபதியாக  பதவி ஏற்பதில்,  அந்தப் பதவியில் தொடர்வதில் பெரிய  சிக்கலை ஏற்படுத்தியிருப்பது டிரம்ப் பல்கலைக்கழக மோசடி  விவகாரம்.
டொனால்டு  டிரம்ப்: சமரசமும்,  வழக்கும்!

டொனால்டு டிரம்ப்  அமெரிக்க ஜனாதிபதியாக  பதவி ஏற்பதில்,  அந்தப் பதவியில் தொடர்வதில் பெரிய  சிக்கலை ஏற்படுத்தியிருப்பது டிரம்ப் பல்கலைக்கழக மோசடி  விவகாரம். இந்தப் பிரச்னை பூதாகரமாக  உருவாகும் முன்பு நஷ்ட ஈடு  தர  டிரம்ப்  சம்மதித்திருக்கிறார் என்பதுதான் புதிய செய்தி. 

டிரம்ப்  தொட்டதெல்லாம் பொன் ஆனதால் தன் பெயரில் ஒரு பல்கலைக்கழகம் தொடங்க வேண்டும் என்று விருப்பப்பட்டார். பல்லாயிரம் டாலர்கள் மதிப்புள்ள  சொத்துக்களுக்கு அதிபதியான டிரம்ப் கை  சொடுக்கும் நேரத்தில் பல்கலைக்கழகத்தை ஆரம்பித்தார். இந்தப் பல்கலைக்கழகத்தில் திறமையான பேராசிரியர்களைக் கொண்டு  வகுப்புகள் நடத்தப்படும். டிரம்ப் ரியல் எஸ்டேட்  துறையில் எப்படி வெற்றி பெற்றார்.. என்ன யுக்திகளைக்  கையாண்டார் என்பது பற்றியும்... ரியல் எஸ்டேட்  தொழில் ரகசியங்களும்  மாணவர்களுக்குக்  கற்றுத் தரப்படும் என்று டிரம்ப்  பல்கலைக் கழகம்  கவர்ச்சிகரமான  வாக்குறுதிகளை அள்ளி வீசியது.  

இந்த வாக்குறுதிகளினால் கவரப்பட்ட மாணவர்கள் டிரம்ப் மாதிரி நாமும் பணக்காரர் ஆகிவிடலாம்  என்ற நினைப்பில் போட்டி போட்டுக் கொண்டு சேர்ந்தனர். கேட்ட கல்விக் கட்டணத்தைக் கட்டினர். மாணவர் ஒருவருக்கு சுமார் முப்பத்தைந்தாயிரம் டாலர்கள்  (சுமார் இருபது லட்சம்) கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருந்ததாம்.       

ஆனால் பல்கலைக் கழகம் சொன்னது ஒன்று;  நடந்தது வேறொன்று.  பல்கலைக்கழகம்  சொன்ன வாக்குறுதியை  நிறைவேற்றவில்லை. அதிருப்தியடைந்த சுமார் ஆறாயிரம் மாணவர்களில் சிலர், டிரம்ப் பல்கலைக் கழகத்திற்கு எதிராக  வழக்குகள் தொடுத்தனர். 

வழக்குகளைத் தொடர்ந்து  2010-இல்  பல்கலைக்கழகம் மூடப்பட்டது. வழக்குகளை   விசாரித்த  நியூயார்க் நீதிமன்றம்  மாணவர்களும், டிரம்ப் பல்கலைக்கழகமும்  நீதிமன்றத்திற்கு வெளியே பிரச்னைக்கு தீர்வு காண பரிந்துரைத்தது.    

அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டொனால்ட் டிரம்ப் மீது பல்வேறு மோசடி வழக்குகள்  அமெரிக்க நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. டிரம்ப்பின் மீது பல்வேறு பாலியல்  குற்றங்கள் சொல்லப்பட்டதுடன், மோசடி வழக்குகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு  பிரச்சாரம் செய்யப்பட்டது. எல்லா குற்றச்சாட்டுகளையும்  மக்கள் காது கொடுத்து கேட்காததால், டிரம்ப்  தேர்தலில் வெற்றி பெற்று தற்போது அமெரிக்காவின்  நாற்பத்தைந்தாவது ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ளார்.

அமெரிக்க மாணவர்கள்}டிரம்ப் இடையில் உள்ள வழக்கில் பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. டிரம்ப் பல்கலைக் கழகம்  மூடப்பட்டதால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 270 லட்சம் டாலர் இழப்பீடு தருவதாக  டிரம்ப் அறிவித்திருப்பது பலரிடையே ஆச்சரியத்தை விதைத்துள்ளது. இந்த அறிவிப்பினால் வழக்கு  சமரச  முடிவிற்கு வரும்  என்ற எதிர்பார்ப்பு  உருவாகியுள்ளது.

இந்த  எதிர்பாராத  திருப்பம் குறித்து நியூயார்க் அட்டார்னி, ""டிரம்ப்பின் இந்த திடீர் முடிவு  பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.  இது  பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குக்  கிடைத்த மகத்தான  வெற்றி. மாணவர்கள் பல ஆண்டுகள் பொறுமையாக  இருந்ததற்குக்  காலம் தந்த  பரிசுதான்  இந்த  இழப்பீடு''  என்று கருத்து தெரிவித்திருக்கிறார். 

டிரம்ப்  270  லட்சம்  டாலர்  இழப்பீடு  தர முன் வந்திருப்பதில் உள்நோக்கம் இல்லாமல் இல்லை.  விரைவில், அமெரிக்க  ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ள காரணத்தினால்,  கோர்ட் வழக்கு என்று  வந்தால், அது அமெரிக்க ஜனாதிபதி  பதவியின்  கெüரவத்திற்கு களங்கம் ஏற்படுத்தும்.  பல நாடுகளில் இது குறித்து விமர்சிக்கப்படும்.  இந்த தர்ம சங்கடங்களைத் தவிர்க்கவே, டிரம்ப் நஷ்ட ஈடு  வழங்க முன்வந்துள்ளார். 

 நீதிமன்ற வழக்கை முடிவுக்குக் கொண்டு வர  டிரம்ப் ஒருபுறம்  நஷ்ட ஈடு தர முன்வந்தாலும், இன்னொருபுறம் முப்பத்தி மூன்று கோடி நஷ்ட ஈடு கேட்டு ஒரு  புதிய வழக்கையும் பதிவு செய்துள்ளார். 

அமெரிக்கத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நகைச்சுவை நிகழ்ச்சிகளை வழங்கி வரும்  பில் மகேர், சமீபத்தில்  தொலைக்காட்சியில் தெரிவித்த ஹாஸ்ய கமெண்ட் அவருக்கு  வில்லங்கத்தைப் பெற்றுத்  தந்திருக்கிறது.

பில் மகேர்  நடத்தும்  பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியின் பெயர் "இன்றைய இரவு'. இந்த  நிகழ்ச்சியில்,  பில் உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான டொனால்டு  டிரம்ப்  குறித்த நகைச்சுவை குறிப்பைச் சொன்னார். 
 ""டொனால்டு  டிரம்ப் தலையைச் சீவும் போதுள்ள தோற்றம், டிரம்ப்  தலை முடியின்    செந்நிறத் தோற்றம், ஒராங்குட்டான் மனிதக் குரங்கைப் போல் உள்ளது. ஒராங்குட்டான் மனிதக் குரங்கு அவரது தந்தையில்லையென்று டொனால்டு  டிரம்ப்  நிரூபித்தால்  நான்  ஐம்பது  லட்சம் டாலர்களை வழங்கத் தயார்''  என்று அறிவித்திருந்தார்.  இந்த அறிவிப்பில்  நகைச்சுவை எல்லையைத் தாண்டி  தனிநபர்  கெளரவத்தைச் சீண்டும்  சவால்  பலத்த குத்தும், நோகச்   செய்யும் விமர்சனமும்  இருந்தது.  

டிரம்ப்பை  தாமிர (செம்பு) நிற முடித் தலையர் என்று  பலரும்  அமெரிக்காவில்  குறிப்பிடுவதுண்டு.  ஆனால் பில்லின்  விமர்சனத்தில் கொஞ்சம்  காரம், கேலி   அதிகமாகிவிட்டது.

இந்த விமர்சனம் பரபரப்பாகப் பேசப்பட்டதும் டிரம்ப் பொங்கி எழுந்து விட்டார்.  தனது அப்பா அம்மா பெயர் இடம் பெற்றிருக்கும்  பிறப்புச் சான்றிதழை  நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.  ""பில்  தனது நிகழ்ச்சியில்  நான்  ஒராங்குட்டான்  மனிதக் குரங்கிற்குப் பிறந்தவன் இல்லை  என்பதை நிரூபித்தால், ஐம்பது லட்சம் டாலர் தருவதாகச்  சவால் விட்டார். அதை   என் தாய் தந்தையர் யார் என்பதை தெளிவாகச் சொல்லும் எனது  பிறப்புச் சான்றிதழ் மூலம் நிரூபித்துவிட்டேன். அதனால், பில் அவர் அறிவித்தபடி, எனக்கு ஐம்பது லட்சம் டாலர்கள்  தர  வேண்டும்''  என்று வழக்கையும் சூட்டோடு சூடாகத்   தொடுத்து விட்டார்.  டிரம்ப்  பதிவு செய்திருக்கும் வழக்கு,  விசாரணைக்கு விரைவில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.  
டிரம்ப்புன்னா சும்மாவா..! 

-பிஸ்மி பரிணாமன்   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com