தமிழ் கற்றுத் தந்த முதல் பள்ளிக்கு வயது இருநூறு! 

மலேசியாவில் முதன் முதலில் தமிழ் கற்றுக் கொடுத்த ஒரு பள்ளி இன்றும் தொடர்ந்து அதன் சேவையைச் செய்து வருகிறது.
தமிழ் கற்றுத் தந்த முதல் பள்ளிக்கு வயது இருநூறு! 

மலேசியாவில் முதன் முதலில் தமிழ் கற்றுக் கொடுத்த ஒரு பள்ளி இன்றும் தொடர்ந்து அதன் சேவையைச் செய்து வருகிறது. மலேசிய நாட்டில் உள்ள பெனாங் நகரில் அமைந்துள்ள பெனாங் பிரீ ஸ்கூல் (Penang Free School), சுமார் 200 ஆண்டுகளாக தமிழ் கற்றுக் கொடுக்கும் சேவையைச் செய்து வருகிறது என்றால் அது தமிழர்களுக்கு மகிழ்ச்சியும் பெருமையும் மிகுந்த செயல். 

பெனாங் பிரீ ஸ்கூல் தனது  தமிழ் கல்விச் சேவையை 21-10-1816  ஒரு சிறிய அறையில் தொடங்கியது. இந்த பள்ளியின் முதல் ஆசிரியர் அல்லது தலைமை ஆசிரியர், சென்னையில் இருந்து சென்ற வில்லியம் காக்ஸ் (William Cox). அன்று இவருக்கு தரப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா? 80 ஸ்பானிஷ் டாலர்கள். சில மாதங்களுக்குப் பிறகு இவரது மனைவியும் இதே பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்தார். அவருக்கு சம்பளம் 50 ஸ்பானிஷ் டாலர்கள். அன்று ஆரம்பித்த தமிழ் கற்றுக் கொடுக்கும் பயிற்சி, இன்று வரை தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் பள்ளியில் இரண்டு தமிழர்களும் தலைமை ஆசிரியர்களாக இருந்துள்ளனர். அவர்களில் ஒருவர் ஆர். விஸ்வநாதன் (1979-1983). மற்றொருவர் ஜி. கிருஷ்ணா  ஐயர் (1983-1988). சிறிய கொட்டகையில் இருந்து ஆரம்பித்த இப்பள்ளி, இன்று பல ஏக்கர்களில் விரிந்து பரந்து இருக்கிறது. ஆரம்பத்தில், அதாவது 21-11-1816 அன்று 25 சிறுவர்களுடன் தொடங்கப்  பட்ட இந்த பள்ளி இன்று 1800 மாணவர்களுடன் வளர்ந்துள்ளது.

தனது 200ஆவது வருடத்தைக் கொண்டாடி வரும் இப்பள்ளி பல புகழ் பெற்றவர்களை தனது மாணாக்கர்களாக பெற்றிருக்கிறது என்றால்  அது மிகை இல்லை. மலேசிய நாட்டின் முதல் பிரதம மந்திரி துங்கு அப்துல் ரஹ்மான், இந்தப் பள்ளியில் படித்தவர்தான். இவரைப் போலவே, மலேசியாவின் புகழ் பெற்ற நடிகர், பாடகர், டைரக்டர் மற்றும் தயாரிப்பாளர் ராம்லீ, அன்றையத் தொழில்துறையின் ஆணி வேராக திகழ்ந்த ஜி.ராம ஐயர் என்று பல பெயர்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.  

இன்று இந்தப் பள்ளி தனது 200ஆவது ஆண்டை வெகு விமரிசையாக கொண்டாடியது. முதலில் ஒரு சர்வதேச தமிழ் ஆசிரியர்கள் மாநாட்டை அதே 21-11-2016இல் நடத்தியது. மலேசிய கல்வித்துறையின் துணை அமைச்சர் கமலநாதன் பல்வேறு திட்டங்கள் வைத்துள்ளதாகக் குறிப்பிட்டார். "சர்வதேச  மாணவர் பேச்சுப் போட்டி நடத்த இருக்கிறோம். பல நாடுகளுடன் இணைந்து மாணவர் ஆசிரியர் பரிவர்த்தனையும் செய்ய இருக்கிறோம். சென்னையில் மலேசிய நாட்டின் கலாசாரம், பண்பாடு பற்றிய புகைப்படக் கண்காட்சியும் நடத்த முடிவு செய்திருக்கிறோம். இவை எல்லாவற்றிற்கும் எங்கள் பிரதம மந்திரியும், கல்வி அமைச்சரும்   முழு ஒத்துழைப்பையும், அனுமதியையும் நல்கியுள்ளனர்''  என்றார். 

ஒரு பெரிய பெட்டகத்தை அமைத்து, அதில் 1816 இல் தொடங்கப்பட்ட இந்தப் பள்ளியின்  சரித்திரத்தை முழுமையாக படங்களுடன் வைத்து, மண்ணில் புதைத்து விட்டார்கள். இந்தப் பெட்டகத்தை ஐம்பது  ஆண்டுகளுக்கு பின்னர்தான் எடுக்கப் போகிறார்களாம். இது இந்தப் பள்ளியிலேயே ஓர் இடத்தில் பத்திரமாக இருக்கிறது.

இந்தப் பள்ளி 200 வருடங்கள் நிறைவு பெற்றதையொட்டி மலேசிய அரசாங்கம் ஒரு தபால்  அஞ்சல் உறையை வெளியிட்டுள்ளார்கள்.  பள்ளியில் இன்றைய தலைமை ஆசிரியராக இருக்கும்  உமர் பின் அப்துல் ரஷீத் (Omar Bin Abdul Rashid) மிகவும் சந்தோசமாக இருக்கிறார். "நான் சமீபத்தில்தான் இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றேன். சென்னையில் உள்ள மலேசிய கவுன்சில் ஜெனரல் அஹ்மத் பாஜராசம் அப்துல் ஜலீல் (Ahmad Fajarazam Abdul Jalil), இன்று மலேசியா மும்மொழி பாடத்திட்டத்தில் சிறப்பாக செயல் பட்டு வருகிறது. ஆம், மலாய், தமிழ், மற்றும் சீன மொழி இங்கு கற்பிக்கப் படுகின்றன. தமிழ் இந்த நாட்டில் சிறப்பாக கற்றுக் கொடுக்க மலேசியாவின் பிரதம மந்திரி இந்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் 50 ஆயிரம் ரின்கட் அளித்து தமிழ் வாழ, வளர தனது  ஒத்துழைப்பை அளித்துள்ளார். இப்படி பெனாங்  பிரீ ஸ்கூல் மூலம் ஆரம்பித்த தமிழ் வளர்ச்சி இன்று மிகப் பெரிய அளவில் இருக்கிறது'' என்றார்.
-சலன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com