21ஆம் நூற்றாண்டு தமிழ் வகுப்பறை!

மலேசிய நாட்டின் ஜோகூர் மாநிலம், தேசா ஸ்கூடாய் பகுதி இடைநிலைப் பள்ளியின் தமிழாசிரியர் வாசுதேவன் இலட்சுமணன்.
21ஆம் நூற்றாண்டு தமிழ் வகுப்பறை!

மலேசிய நாட்டின் ஜோகூர் மாநிலம், தேசா ஸ்கூடாய் பகுதி இடைநிலைப் பள்ளியின் தமிழாசிரியர் வாசுதேவன் இலட்சுமணன். அவர் பிறந்தது மலேசியா
என்றாலும், அவரது மூதாதையர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். 

உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) அண்மையில் திண்டுக்கல் காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் நடத்திய மாநாட்டில் "21ஆம் நூற்றாண்டு தமிழ் வகுப்பறை: கற்பித்தலில் அதிநவீன இலத்திரனியல் அலை (new digital wave)' என்ற தலைப்பில் கட்டுரை சமர்ப்பித்துப் பேசியுள்ளார் வாசுதேவன் இலட்சுமணன்.

நம்முடைய பள்ளி வகுப்பறைகள் எப்படி இருக்க வேண்டும் என்ற விவாதம் தமிழ்நாட்டில் மெல்ல மெல்ல நடந்து கொண்டு இருக்கும் இச் சூழலில்,
வாசுதேவன் இலட்சுமணன் கூறும் தகவல்கள் அரிதானதாகவும், அவசியமானதாகவும் கருதப்படுகின்றன.

ஆங்கிலத் தொழில்நுட்பச் சொற்களுக்கு அவர் பயன்படுத்தும் தமிழ்ப் பதங்கள் நம்மை வியக்க வைக்கின்றன. என்ன மாற்றமெல்லாம் முன்வைக்கிறீர்கள்?
என்ற கேள்வியுடன் தொடங்கினோம்.  மடைதிறந்த வெள்ளம்போல மலேசியத் தமிழ் கொட்டுகிறது. இதோ...:
21ஆம் நூற்றாண்டு தமிழாசிரியர்கள், தகவல் தொழில்நுட்ப மாற்றங்களின் வேகத்துக்கேற்ப ஈடு கொடுக்க இயலாமல் தடுமாறும் நிலைக்குத்
தள்ளப்படுகிறார்கள். இந்தச் சூழலை மாற்றியமைக்க தமிழாசிரியர்கள் முனைய வேண்டும்.

மொழிப்பாடத்துக்கு உகந்த புதிய கற்றல் துணைக் கருவிகளாக ஒத்துழைப்பு (collaboration), பேச்சுக்கலை (communication), ஆக்கச் சிந்தனை (creativity), விமர்சனச் சிந்தனை (critical thinking), மறுமொழி (feed back), புத்தாக்கம் (innovation), படைப்பு (presentation), சிக்கல் களைதல் (problem solving), உற்பத்தி (productivity), மீட்டுணர்தல் (reflection), சமூக வலைத்தளங்கள் (social networking) போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும். இதுவரை கற்றலில் பயன்படுத்தப்பட்டு வரும் Reading, Writing, Arithmetic ஆகியவை மட்டும் போதாது. இன்றைய கற்பித்தல் சூழலில்  4-Cகள் (Communication, Critical thinking, Creativity, Collaboration) ஆகியவை தேவைப்படுகின்றன. வாழ்வியல் திறன்களாக குடியுரிமை, வாழ்க்கை மற்றும் தொழில், சமூகப் பொறுப்பு போன்றவற்றையும் மாணவர்களுக்குக் கற்றுத் தர வேண்டும்.

தற்போதுள்ள நிரல் கற்பித்தலுக்கு எதிர்மாறாக அதிர்மாற்ற வகுப்பறைகள் (Flipped class room) உருவாக்கப்பட்டு, கலந்துரையாடல், விவாதித்தல் முறைகளில் சிக்கல்களுக்குத் தீர்வு காண வேண்டும்.

இவற்றை நடைமுறைப்படுத்திட தொழில்நுட்பத் திறன்களை வகுப்பில் பயன்படுத்த அனுமதியளிக்க வேண்டும். குறிப்பாக மகிழ்ச்சியான கற்றல் சூழலுக்குத் துணைபுரியும் அட்டைக்கணினி (tablet), கற்றலுக்கு உகந்த செயலிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி கற்றல் நடவடிக்கைகளை இலகு வாக்கலாம்.

ஆசிரியர், மாணவர் உறவை வலுப்படுத்த மாணவர் குழுவுக்கென சமூக வலைக் கட்டமைப்புகளான வலைப்பூ, முகநூல், புலனம் (வாட்ஸ்ஆப்), சிட்டி
(டுவிட்டர்) போன்ற ஊடகச் செயலிகளைப் பயன்படுத்தலாம். ஆசிரியர்களுடனான மடலாடற்குழு (groups), கலந்துரையாடல், திறன்களை வளர்க்கும் தொழில்நுட்பப் பயிலரங்குகளில் கலந்து கொள்வது போன்றவை யாவும் இன்றைய சவால்கள்.

இவற்றில் 99 சதவிகிதமானவற்றை மலேசியாவில் அந்த நாட்டரசு பள்ளிக் கல்வியிலேயே அமலாக்கிவிட்டது.  ஒரு புத்தாக்கச் சிந்தனை கொண்ட
ஆசிரியரிடமிருந்துதான் புத்தாக்கச் சிந்தனை கொண்ட மாணவர்கள் உருவாக முடியும். தமிழாசிரியர்கள் தங்களை அந்த அளவுக்குத் திறன் உயர்த்திக் கொள்ள
வேண்டும்'' என்கிறார் வாசுதேவன் இலட்சுமணன்.

- சா. ஜெயப்பிரகாஷ்
படம்: யு.கே. ரவி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com